சென்னை எழும்பூருக்கு வந்தடையும் விரைவு ரயிலில் போதை பொருள் கடத்தப்படுவதாக எழும்பூர் ஆர்.பி.எஃப் (ரயில்வே பாதுகாப்பு படை) ஆய்வாளர் செபாஸ்டினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆர்.பி.எஃப் ஆய்வாளர் செபாஸ்டின் தலைமையில் ஆர்.பி.எஃப் உதவி துணை ஆய்வாளர்கள் அன்புசெல்வம், முகமது அஸ்லாம், கதிரவன், தலைமை காவலர்கள் ராஜேஷ், குமாரவேல், கண்ணன் மற்றும் ரயில்வே போலீஸார் திங்கள்கிழமை இரவு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில் நிலையத்தின் 7-வது நடைமேடைக்கு மேற்கு வங்கம் மாநிலம் ஹவுராவில் இருந்து சென்னை எழும்பூர் வழியாக திருச்சிக்கு செல்லும் விரைவு ரயில் வந்தது. இந்த ரயிலில் இருந்து இறங்கி வந்த பயணிகளில் ஒருவர் மீது ஆர்.பி.எஃப் போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை மறித்து, அவரிடம் பேசியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தார்.

தொடர்ந்து, அவரது டிராலி பையை வாங்கி, திறந்து பார்த்தபோது, அதில் 10 உலர்ந்த கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. மொத்தம் 20 கிலோ எடை கொண்ட உலர்ந்த கஞ்சாவின் மதிப்பு சுமார் ரூ.10 லட்சம். இதையடுத்து அவரை ஆர்.பி.எஃப் அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

அதில் அந்த நபர், திரிபுரா மாநிலம் செப்பாஹிஜாலு, ஊர்மாய் பகுதியைச் சேர்ந்த சாஹின் மியா (28) என்பதும், ஹவுராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here