முருகேசன், தனது மகனுக்காக காவல் தெய்வம் ஒண்டிமுனிக்கு கிடாய் பலி கொடுப்பதாக வேண்டிக் கொள்கிறார். அவரது வேண்டுதல் நிறைவேறி விட, ஒரு கிடா குட்டியை வாங்கி வளர்க்கிறார். கிடாவும், மகனும் வளர்ந்து நிற்க, கிடாயை ஒண்டிமுனிக்கு காணிக்கையாக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்காமல் போகிறது. காரணம், அந்த ஊரில் இருக்கும் இரண்டு பன்னாடிகள் தங்களுக்கு இடையே இருக்கும் மோதலால், கோவில் நிகழ்வுக்கு வராமல் இருப்பது தான்.
இருவரையும் சமாதானப்படுத்தி கோவில் நிகழ்வில் பங்கேற்க வைக்க பரோட்டா முருகேசன் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார். இதற்கிடையே, பரோட்டா முருகேசனின் மகள் சித்ரா பேசிய நகை போடாததால் மாமியார் வீட்டில் இருந்து விரட்டியடிக்கப்படுகிறார். மறுபக்கம், அவரது மகன் தன் காதலுக்காக மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்குவதற்கு ஆட்டு கிடாயை விற்க முடிவு செய்கிறார். இப்படி பல பிரச்சனைகளுக்கு மத்தியில், பரோட்டா முருகேசன், தனது வேண்டுதலை நிறைவேற்றிய காவல் தெய்வத்திற்கு தனது ஆட்டு கிடாயை பலி கொடுத்தாரா? இல்லையா? என்பதே கதை…
ஒண்டிமுனி என்ற சிறுதெய்வத்தை குலதெய்வமாக வழிபடும் மக்கள், தாங்கள் கொண்ட கடவுள் நம்பிக்கையின் காரணமாக, தங்கள் உழைப்பைச் சுரண்டும் ஆதிக்க சக்திகளின் அராஜகத்தை எப்படி வேரழிக்கிறார்கள் என்பதை கொங்கு வட்டார பின்னணியில் யதார்த்தமாக சொல்லியிக்கும் படம் இது. அராஜக பண்ணையார்களின் உழைப்புச் சுரண்டல்களுக்கு எதிராக, நல்லபாடன் என்ற பரோட்டா முருகேசன் நடத்தும் எளிய போராட்டங்கள் வலிமையாக இருக்கிறது. கேரக்டராகவே மாறிய அவருக்கு விருதுகள் கிடைக்கும்.
அவரது மகனாக விஜயன் தியா, மகளாக சித்ரா நாகராஜன், மருமகனாக விஜய் சேனாதிபதி, விஜயன் தியாவின் காதலியாக வித்யா சக்திவேல் மற்றும் தமிழினியன், கவுசிகா, விகடன் உள்பட அனைவரும் யதார்த்தமாக நடித்துள்ளனர். ‘தெய்வங்கள் முன்னால் பலியிட வேண்டியது ஆடுகளை அல்ல, சமூகத்தை சுரண்டி பிழைக்கும் கேடுகெட்ட மனிதர்களை’ என்ற வசனம், படத்தின் கருத்தை உறுதி செய்துள்ளது.
மைனஸ்: உருவாக்கம் சரியாக இல்லை…. பாடல்கள் வைத்திருக்கலாம்…
மொத்தத்தில் இந்த ’ஒண்டிமுனியும் நல்லபாடனும்’ நல்லபாடன்.

















