கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்ற 19 வயது இளைஞர், மதுரவாயல் பகுதியில் உள்ள கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமான 21 வயதான ரித்திகா என்ற இளம்பெண்ணை காதலித்து, சென்னையின் பல்வேறு இடங்களில் அவருடன் சுற்றித்திரிந்துள்ளார். இதற்கிடையே தான் பிசினஸ் தொடங்குவதாகக் கூறி காதலன் சசிகுமாரிடமிருந்து சிறுக சிறுக ஒரு லட்சத்து 87 ஆயிரம் ரூபாயை, ரித்திகா கேட்டு வாங்கியுள்ளார்.
இதனால் கல்லூரிக்குக் கட்டணம் செலுத்த முடியாமல் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு, சசிகுமார் வேலைக்கும் சென்றுள்ளார். அதில் வரும் மாத சம்பளப் பணத்தையும் ரித்திகா கறந்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் ரித்திகா வேறு ஒரு நபரை காதலிப்பது தெரியவந்து அதிர்ச்சி அடைந்த சசிகுமார், அது தொடர்பாகக் கேட்டபோது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இனி உன்னுடன் பேச விருப்பமில்லை “நீ யாரோ நான் யாரோ..” எனக்கூறி காதலைத் துண்டித்துள்ளார்.
அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் தவித்த சசிகுமார் “உனக்காகத்தான் கல்லூரியைக் கூட பாதியில் நிறுத்தி விட்டு வேலைக்குச் சென்றேன். ஆனால் என்னுடன் பழகி கொண்டே வேறு ஒருவனை காதலித்து விட்டாயே” என கண்ணீருடன் சண்டை போட்டுள்ளார். பின்னர் “நீ எப்படியோ போ, ஆனால் என்னிடம் ஏமாற்றி வாங்கிய 2 லட்சத்தை எடுத்து வைத்து விட்டு போ ” என அழுத்தம் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் ஒன்றாம் தேதி பணத்தை திரும்ப தருவதாகக் கூறி கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே வருமாறு, சசிகுமாரிடம் ரித்திகா தெரிவித்துள்ளார். அங்கு சென்றதும் காரில் தனது தோழி உட்பட நான்கு பேருடன் காத்திருந்த ரித்திகா தாம்பரம் அருகே பணம் இருப்பதாகவும் அங்கு சென்றதும் பணத்தை தருவதாகவும் கூறி சசிக்குமாரையும் அழைத்து சென்றுள்ளார். பின்னர் தாம்பரம் சென்றதும் அங்கு ஆட்கள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று, அங்கு ஏற்கனவே பதுங்கி இருந்த ஐந்து நபர்களும், காரில் இருந்த ரித்திகா உட்பட நான்கு பேரும் சேர்ந்து சசிகுமாரை கட்டையால் தாக்கி காயப்படுத்தி, கால்வாய் அருகே வீசி சென்றனர்.
சிறிது நேரத்தில் சுயநினைவு திரும்பிய சசிகுமார் தனது தந்தையிடம் ஃபோன் செய்து தகவல் கூறிவிட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சைக்காகச் சேர்ந்தார். அங்கு போலீசாரிடம் சசிகுமார் அளித்த புகாரின் பேரில் விசாரணையைத் தொடங்கிய கோயம்பேடு கே11 போலீசார் சசிகுமார் கடத்தி தாக்கப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.
அதில் கடத்தலில் ஈடுபட்ட தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா, சஞ்சய், சரவணன், சேலையூரை சேர்ந்த தர்ஷினி ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அத்துடன் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட ஐபோன் மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் 4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதனிடையே சசிக்குமாரை மட்டும்தான் ரித்திகா ஏமாற்றி உள்ளாரா? அல்லது வேறு யாரேனும் இவர்களால் பாதிக்கப்பட்டுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

















