குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு இன்று பிற்பகல் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் விமானப் பணியாளர்கள் உள்பட 242 பேர் பயணித்த நிலையில், இதுவரை 200-க்கும் மேற்பட்ட சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. ஒருவர் மட்டுமே காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே, விமானம் எப்படி விபத்துக்குள்ளாகி இருக்கும் என்ற பல்வேறு யூகங்கள் எழுந்தன. இந்த நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது முதல் கீழே விழுந்து வெடித்துச் சிதறியது வரை பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த காணொலியில், சரியாக இன்று பிற்பகல் 1.38 மணிக்கு ஓடுதளத்தில் இருந்து புறப்படும் விமானம் சில விநாடிகளில் பறக்கத் தொடங்குகிறது. அடுத்த 20 விநாடிகளில் மேலே பறக்க முடியாமல் தள்ளாடியபடி தரையை நோக்கி வரும் விமானம், மருத்துவக் கல்லூரியின் கட்டடத்தில் மோதி வெடித்துச் சிதறுகிறது. அங்கிருந்த மாணவர்கள் பலர் கவலை கிடமாக இருக்கிறார்கள் என கூறப்படுகிறது.
இதில், பயணித்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 200-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். மொத்தம் 242 பேர் பயணித்த நிலையில், ஒருவர் மட்டுமே இதுவரை உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், போயிங் நிறுவனத் தலைவரை தொடர்புகொண்டு சிறந்த நிபுணர்களை ஆய்வுக்கு அனுப்ப கோரியுள்ளதாகவும், விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சரியாகத் தெரியவில்லை, அரசின் அறிவிப்புக்கு காத்திருப்பதாகவும் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
முன்னதாக விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ஒரு கோடி ரூபாய் நிவாரணம் அளிப்பதாகவும், காயமடைந்தவர்கள் மருத்துவச் செலவு மற்றும் அனைத்து உதவிகளையும் டாடா குழுமம் மேற்கொள்ளும் என அவர் தெரிவித்திருந்தார்.
இதன்மூலம் விமானம் பறக்கத் தொடங்கியவுடன் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானி கட்டுப்பாட்டு அறைக்கு ’மே டே’ அறிவித்திருப்பது தெரியவருகின்றது. இதனிடையே, விமான விபத்து குறித்து உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாக விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா நடந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்ட விளக்கத்தில் ” அகமதாபாத்தில் இருந்து லண்டன் கேட்விக் செல்லும் AI171 விமானம் இன்று புறப்பட்ட பிறகு விபத்தில் சிக்கியதை ஏர் இந்தியா உறுதிப்படுத்துகிறது.
அகமதாபாத்தில் இருந்து மதியம் 13.38 (1.38) மணிக்கு புறப்பட்ட இந்த போயிங் 787-8 விமானத்தில் 242 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இருந்தனர். இவர்களில் 169 பேர் இந்தியர்கள், 53 பேர் பிரிட்டிஷ் நாட்டவர்கள், 1 கனடா நாட்டவர் மற்றும் 7 பேர் போர்த்துகீசிய நாட்டவர்கள். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் தகவல்களை வழங்க 1800 5691 444 என்ற பிரத்யேக பயணிகள் ஹாட்லைன் எண்ணையும் நாங்கள் அமைத்துள்ளோம். இந்த சம்பவம் குறித்து விசாரிக்கும் அதிகாரிகளுக்கு ஏர் இந்தியா முழு ஒத்துழைப்பையும் அளிக்கிறது. ஊடகங்கள் தொடர்பான ஏதேனும் கேள்விகளுக்கு, அவர்கள் ஏர் இந்தியாவின் ஊடகத் தொடர்பு எண்ணை +91 9821414954 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்” என ஏர் இந்தியா தரப்பு கூறியுள்ளது.
மே டே கால் என்றால் என்ன தெரியுமா?!
ஒரு விமானமோ, கப்பலோ ஆபத்தில் இருப்பதை உணர்த்தும் வகையில், அதனை இயக்குபவரால், கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பப்படும் சமிக்ஞையாகும். இது மிக ஆபத்தான நிலையில் இருக்கிறோம் என்பதை சொல்லும் தகவலாகும். எனவே விபத்துக்குள்ளான விமானத்திலிருந்து அவசர அழைப்பு விடுக்கப்பட்டதால், விமானத்தின் கருப்புப் பெட்டி கிடைத்தால்தான், கடைசி நேரத்தில் என்னவானது என்பது தெரிய வரும் எனக் கூறப்படுகிறது.