சென்னை சந்தோஷபுரத்தைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம். இவர் வேப்பேரி காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்தார். அதில், சிந்தாதிரிப்பேட்டை ராஜகோபால் தெருவைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் (42) என்பவரது அறிமுகம் கிடைத்தது. அவர் சென்னை மாநகராட்சியில் உயர் அதிகாரிகள் பலரை தெரியும் என்றும், தான் நினைத்தால் சென்னை மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி உள்பட பல்வேறு பணிகளை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார். எனக்கு மாநகராட்சியில் இன்ஸ்பெக்டர் பணி பெற்றுத் தருவதாக கூறினார்.

இதை உண்மை என நம்பி 3 தவணைகளாக ரூ.12 லட்சம் கொடுத்தேன். இதையடுத்து, எனக்கு பணிநியமன ஆணை, அடையாள அட்டை வழங்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் உள்ள குப்பை தொட்டிகளை செல்போனில் படமெடுத்து அவர் கூறிய செயலியில் பதிவிட்டேன். இதையடுத்து மாதம் ரூ.42 ஆயிரத்தை சம்பளமாக கையில் கொடுத்தார். ஏன் வங்கி மூலமாக சம்பளம் வழங்கவில்லை என கேட்டபோது, பணி நிரந்தரம் ஆன உடன் வங்கி மூலம் கொடுப்பதாக உறுதி அளித்தார். இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகள் என கூறி சிந்தாதிரிப்பேட்டை, கலவை செட்டித் தெரு ஜோஷிதா (28), அதே பகுதி குட்டித் தெரு ரேவதி (45) ஆகியோரை ஜெயச்சந்திரன் அறிமுகம் செய்து வைத்தார்.

இவர்கள் 3 பேரும் அடுத்த 10 மாதங்களில் எனக்கு தற்போது செய்து வரும் வேலையை விட, உயர்ந்த பதவி காலியாக உள்ளதாக கூறி மேலும் ரூ.4 லட்சம் கேட்டனர். நான் கொடுத்தேன். இதையடுத்து, மாதம் ரூ.56 ஆயிரம் சம்பளம் வைத்து 6 மாதங்கள் கொடுத்தனர். பின்னர், கூடுதலாக ரூ.10 லட்சம் கொடுத்தால் மாநகராட்சியில் உதவி ஆணையர் பதவி பெற்றுத் தருவதாக கூறினர். அதன்படி, கொடுத்தேன். ஆனால், அவர்கள் சொன்னபடி தரவில்லை.

சந்தேகம் அடைந்த நான் சென்னை மாநகராட்சி அலுவலகம் சென்று விசாரித்தபோது எனக்கு இதுவரை கொடுக்கப்பட்ட பணிநியமன ஆணை, அடையாள அட்டை அனைத்தும் போலி என தெரியவந்தது. இவர்கள் என்னைப்போல் 23 பேருக்கு மாநகராட்சியில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.1.35 கோடி பெற்று மோசடி செய்துள்ளது தெரியவந்தது. எனவே, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து நான் அவர்களிடம் கொடுத்த பணத்தை மீட்டுத் தர வேண்டும்” என புகாரில் தெரிவித்து இருந்தார்.

அதன்படி, போலீஸார் நடத்திய விசாரணையில் வெங்கடாச்சலம் அளித்த புகார் உண்மை என தெரியவந்தது. இதையடுத்து, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஜோஷிதா, ஜெயச்சந்திரன், ரேவதி ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here