அனிஷ் அஷ்ரப் இயக்கத்தில் நடிகர் வெற்றி, ஷில்பா மஞ்சுநாத், தம்பி ராமையா, அறிமுக நடிகர் மகேஷ் தாஸ் மற்றும் பலர் நடித்துள்ள படம் தான் ’சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’
விமர்சனம்:
படத்தின் தொடக்கத்தில் ஒரு கோணி சாக்கில் ஒரு சடலம் முகமூடியுடன் கண்டெடுக்கப்படுகிறது. மதுரையை சார்ந்த குற்ற புலனாய்வு தொடர்பான நாவலை எழுதி பிரபலமான எழுத்தாளர் ஜீவன் குமாரின் வாரிசு பிரபாகரன் – அவருடைய தந்தையை பற்றி பத்திரிகையாளர் சுவாதி ‘மனிதம்’ என்ற அச்சு ஊடகத்திற்கு பத்து வாரத்திற்கு தொடர் ஒன்றை எழுதுகிறார். இதற்காக பிரபாகரனும், சுவாதியும் சென்னையில் சந்தித்துக் கொள்கிறார்கள். இந்நிலையில் சென்னையில் உள்ள காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரியாக ராமையா பணியாற்றி வருகிறார்.
இந்த தருணத்தில் தமிழகத்தின் வெவ்வேறு பகுதியில் பாடசாலையில் பயிலும் மாணவர்களும், மாணவிகளும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். இதனை கண்டறிவதற்காக காவல்துறை விசாரணை நடைபெறுகிறது. இதற்கு ராமையா தலைமை ஏற்கிறார். அவருக்கு உதவியாக பிரபாகரன் இணைகிறார்.
துப்பு துலக்குவதில் நிபுணரான பிரபாகரன் அந்த கொலை தொடர்பான தடயங்களை சேகரித்து காவல்துறைக்கு கொலையாளி யார் என்பதை கண்டுபிடிப்பதற்கு உதவுகிறார். இதனைத் தொடர்ந்து காவல்துறை மகேஷ் தாஸ் என்ற குற்றவாளியை நெருங்குகிறது. இதற்கிடையே காவல்துறை அதிகாரியான ராமையாவின் மகள் எதிர்பாராவிதமாக தற்கொலை செய்து கொள்கிறார். இதனால் மனதளவில் சோர்வடையும் ராமையா- அந்த தற்கொலைக்கு காரணத்தை பிரபாகரனிடம் பகிர்ந்து கொள்ள, அந்த குற்றவாளிகளை பிரபாகரன் கண்டுபிடிக்கிறார். பிறகு என்ன நடந்தது? என்பதே கதை….
இசையமைப்பாளர் ஏ.ஜே.ஆர் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. சுவாதி எனும் பத்திரிகையாளர் வேடத்தில் நடித்திருக்கும் நடிகை ஷில்பா மஞ்சுநாத் இயக்குநர் சொன்னதை கச்சிதமாக செய்திருக்கிறார். நடிகர் வெற்றி புலனாய்வு செய்யும் தருணங்களில் வலது காதை நீவி விடும் உடல் மொழி வித்தியாசமாகவும், பொருத்தமானதாகவும் இருக்கிறது.
மைனஸ்: படத்தில் சில்பா மஞ்சுநாத்துக்கு சரியான காட்சிகள் கொடுக்கவில்லை…. காமெடிகள் கொடுமையாக இருக்கிறது….
மொத்தத்தில் இந்த ‘சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்’ அருவை கலந்த விசாரணை.

















