இயக்குனர் பா. விஜய் இயக்கத்தில் நடிகர் ஜீவா, செந்தில், ராக்ஷி கண்ணா, ஆக்சன் கிங் அர்ஜுன் , நிகழல் ரவி , வி டிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, ரோகிணி , விவேக் பிரசன்னா, சிறப்பு தோற்றத்தில் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘அகத்தியா’
விமர்சனம் :
கையில் ரத்தக்கரையோடு பியானோ வாசித்துக் கொண்டு கழுத்தை பின் திருப்பி பார்த்து பார்ப்பவர்களை மிரள வைக்கும் துவக்கத்துடன் தொடர்கிறது கதை. பாண்டிச்சேரியில் உள்ள ஒரு மாளிகையில் தன் திரைப்பட அரங்கத்தை அமைத்துக் கொண்டிருக்கிறார் ஜீவா. படத்தின் தயாரிப்பாளர் ஜீவாவை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திரைப்படத்தின் கதாநாயகன் கதாநாயகி வந்துவிட்டதாக தொலைபேசியில் கூறுகிறார். அதற்கு ஜீவா இன்றுடன் அரங்கம் அமைக்கும் பணி நிறைவடையும் என்று கூறுகிறார். மறுபடியும் தயாரிப்பாளர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கதாநாயகனும் கதாநாயகியும் கிளம்பி விட்டதாகவும் படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாகவும் அறிவித்துவிட்டு தொலைபேசியை துண்டித்து விடுகிறார்.
இதனால் மனமுடைந்த நமது கதாநாயகன் ஜீவா தன் தாயிடம் சென்று அடுத்து என்ன செய்வது நான் இதில் பணம் போட்டதெல்லாம் வீணாகிவிட்டதே… என்று புலம்புகிறான். அவரது தாய் ஒரு கேன்சர் நோயாளி. பிறகு தனது தோழி ராஷி கன்னா அந்த திரைப்பட அரங்கை பேய் வீடாக ’ஸ்கேரி ஹவுஸ்’ மாற்றினால் நன்றாக சம்பாதிக்கலாம் என்று கூறுகிறாள். ஜீவாவும் இந்த யோசனை நன்றாக இருக்கிறது என்று நினைத்து ’ஸ்கேரி ஹவுஸ்’ சாக மாற்றுகிறார் . இதில் அங்கு ஒரு பழங்கால பியானோ ஒன்று இவர்களுக்கு கிடைக்கிறது. அங்கிருந்து படத்தின் ஓட்டம் அதிகரிக்கிறது. அமானுஷ சக்திகள் தனது வேலையை செய்ய தொடங்குகிறது. பிறகு என்ன நடந்தது? என்பதே கதை…
நம் தமிழின் பெருமையை காக்கும் சித்த மருத்துவத்தை வைத்து திரைக்கதை உருவாகி உள்ளது. ஆங்கில மருந்துக்கு மட்டுமே ஆயுட்காலம் சித்த மருத்துவத்திற்கு எதிர்காலம் மட்டுமே என்பதே படத்தின் தத்துவம். பிரெஞ்சு அதிகாரி எட்வின் டூப்ளெக்ஸுக்கும் சித்த மருத்துவர் சித்தார்த்தனுக்கும் நடக்கும் மோதலும் நட்பும் இறுதியில் எதிர்பாராத அந்த திருப்பமும் கதைக்குள் நம்மை இழுத்துச் செல்கின்றன.
பழங்கால பியானோவை வீணா வாசிக்கும்போது, அங்கு ஏற்படும் மாற்றங்களும் அதன் பிறகு என்ன நடக்குமோ என்கிற எதிர்பார்ப்பும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. ஜீவா ஹீரோ என்றாலும் சித்த மருத்துவராக வரும் அர்ஜுன் சர்ஜா, ஸ்கோர் செய்கிறார். நமது நாட்டில் உள்ள மலைகளையும் அந்த மலைகளில் வளரும் மூலிகைகளையும் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் இதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கவனத்துடன் திரைக்கதையை கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பா. விஜய். இளையராஜாவின் ‘என் இனிய பொன் நிலாவே’ பாடல் ரசிக்க வைக்கிறது.
கதை நீளமாக செல்கிறது…. கிளைமேக்ஸ் கிராபிக்ஸ் காட்சிகள் சலிப்பை ஏற்படுத்துகிறது…. எமோஷனல் காட்சிகள் பெரிய அளவில் மனதை பாதிக்கவில்லை…
மொத்தத்தில் இந்த ‘அகத்தியா’ சித்த மருத்துவ விழிப்புணர்வு.
ராஜ்குமார் (சினிமா நிருபர்)