Thursday, May 7, 2026
Blog

இப்படி ஒரு கள்ளகாதலா? வியந்த போலீசார்!

ன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த தேரேகால்புதூர்,எஸ்.பி காலணி 13வது தெருவை சேர்ந்தவர் 23 வயதுடைய சுபாஷினி. இவருக்கு இன்னும் திருமணமாகாத நிலையில் டிப்ளமோ நர்சிங் படித்து முடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார். அப்போது சுபாஷினிக்கு தனது உறவுக்கார சகோதரியின் கணவரான 43 வயதுடைய மதன்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் தொடர்ந்து பழகி வந்த நிலையில், இவர்களது பழக்கமானது நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியுள்ளது.


தொடர்ந்து இருவரும் அடிக்கடி வெளியில் சென்று தனிமையில் இருந்து வந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுபாஷினி கர்ப்பமடைந்த நிலையில், நேற்று வீட்டில் இருந்த அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து தன்னுடன் பணிபுரியும் செவிலியரை வீட்டிற்கு அழைத்து பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் கள்ளக்காதலால் பிறந்த இந்த குழந்தை வெளியில் தெரிந்தால் அவமானம் என நினைத்து பிறந்த சில மணி நேரத்திலேயே அந்த குழந்தையை முட்புதரில் வீசிவிட்டு வீட்டில் இருந்து தப்பி சென்றிருக்கிறார்.


பின்னர் வீட்டின் சுற்றுப்புற சுவர் அருகே உள்ள புதரில் ஒரு பச்சிளம் குழந்தையின் உடல் கிடப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட சுசீந்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பச்சிளம் குழந்தையின் உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது சம்பந்தமாக சுசீந்திரம் போலீசார் அப்பகுதியில் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வரும் சுபாஷினி, மதன்குமாருடன் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் கர்ப்பமானது தெரியவந்தது.


தொடர்ந்து அவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது, நேற்று சுபாஷினிக்கு ஆண் குழந்தை பிறந்த நிலையில் வெளியே தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று நினைத்து, மூடி மறைக்க திட்டமிட்டு பச்சிளம் குழந்தையை வீட்டு முன்பு தூக்கி வீசி விட்டு எதுவும் தெரியாமல் சென்று விட்டது தெரியவந்தது. இதனால் குழந்தை துடிதுடிக்க இறந்தது என சுசீந்திரம் போலீசார் விசாரணையில் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து இளம்பெண்ணை கர்ப்பமாக்கிய வழக்கில் மதன் குமார் முதல் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து குழந்தையை வீசி கொன்ற சுபாஷினியை கைது செய்து மருத்துவமனையில் அனுமதித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இளம்பெண் ஒருவர் தான் பெற்ற குழந்தையை வீட்டு அருகே தூக்கி வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் உயிருக்கு ஆபத்தா?!

மிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை இதுவரை ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்காததால் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் விஜய்க்கு அளிக்கப்பட்ட போலீஸ் பாதுகாப்பு வாகனங்கள் திரும்ப பெறப்பட்டன. இந்த நிலையில் விஜய்க்கு உச்சப்பட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வடசென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழக காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த டில்லி பாபு:

“தமிழ்நாட்டின் அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நடந்து முடிந்த சட்ட பேரவை தேர்தலில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இந்த வெற்றியானது மக்கள் அனைவரும் எதிர்பார்த்தது போல் உள்ளது. இந்த வெற்றி தமிழ்நாட்டின் மக்களின் வெற்றி. இந்த வெற்றியை உறுதி செய்து ஆட்சி அமைக்கும் தருவாயில் உள்ள சூழ் நிலையில் ஆர்எஸ்எஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி இணைந்து பல்வேறு நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.

அரசியல் சூழ்ச்சி செய்து வருகிறார்கள். எனவே தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க முடியாததற்கு இக்கட்டான சூழ் நிலையை ஏற்படுத்துகின்றனர். பாஜக, ஆர்எஸ்எஸ் செய்யும் சூழ்ச்சியின் வாயிலாக அவருடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என கருதுகிறோம். இந்த சூழ்நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு கொடுக்கப்பட்ட பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்க்கும் தமிழக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அவர்களுக்கும் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்களுக்கும் உரிய உச்சகட்ட பாதுகாப்பை காவல்துறை அளிக்க வேண்டும்”

என்று டில்லி பாபு கூறினார்.

கலக்கத்தில் விஜய்! ஆளுநர் அப்படி என்ன சொன்னார்?

வெக தலைவர் விஜய், ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை ஆளுநர் மாளிகைக்குச் சென்று நேற்று சந்தித்தார். அப்போது, ஆட்சி அமைக்க உரிமை கோரும் கடிதத்தை அவரிடம் வழங்கினார். இந்நிலையில், இன்று மீண்டும் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்குச் சென்று சந்தித்தார்.

இந்த சந்திப்பு 30 நிமிடங்களுக்கு மேலாக நடந்தது. இதனால் தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஆளுநர் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்தார் என்றும் பின்னர் இல்லை என்றும் மாறி மாறி செய்திகள் வெளியாகின. தவெக தரப்பும் சந்திப்பு பற்றி ஏதும் சொல்லவில்லை.

இந்நிலையில், இந்த சந்திப்பு தொடர்பாக ஆளுநர் மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்: “தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், இன்று தவெக தலைவர் விஜய்யை ஆளுநர் மாளிகைக்கு அழைத்திருந்தார்.

அந்தச் சந்திப்பின்போது, தமிழக சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். ஆட்சியமைக்க தேவையான அந்த பெரும்பான்மை எண்ணை விஜய் காட்டவில்லை.” என்று ஆட்சியமைக்க அழைப்பு விடுக்காதது குறித்து ஆளுநர் எடுத்துரைத்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளுநர் மாளிகையில் நடந்தது என்ன என்ற எதிர்பார்ப்பு குறித்து தவெக தரப்பில் இன்னும் மவுனம் கலைக்கப்படாத நிலையில், ஆளுநர் தரப்பு விளக்கம் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாநிலத்தில் ஒரு நிலையான அரசு அமைய வேண்டும் என்பதையே ஆளுநர் விரும்புகிறார். பெரும்பான்மை பலம் உறுதிப்படுத்தப்பட்ட உடனேயே, விஜய் பதவியேற்கலாம்.” என்றும் அரசியல் வட்டாரங்கள் கூறுகிறது.

விஜய் போட்ட டிவிட்! ரசிகர்கள் உற்சாகம்!!

VIJAY TWITTER MESSAGE:
 
என் நெஞ்சில் குடியிருக்கும் அனைவருக்கும் வணக்கம்.
 
கட்சி ஆரம்பித்ததில் இருந்தே நம்மை ஏளனமாகப் பார்த்தவர்களும் பேசியவர்களுமே அதிகம். அரசியலில் இது இயல்பே என்றுதான் நாமும் அதைக் கடந்து வந்தோம். எவரையும் சாராமல், மக்களை மட்டுமே நம்பி, தேர்தல் களத்திலும் தில்லாக நின்றோம்.
 
நடுநிலை என்ற பெயரிலும் விமர்சனம் என்ற பெயரிலும் முகமூடி அணிந்த அவமானங்களும் அவதூறுகளுமே நமக்குப் பரிசளிக்கப்பட்டன. ஆனால், நாம் யாருக்கு நன்றிக் கடன் செலுத்த அரசியலுக்கு வந்தோமோ அவர்கள்… நம் சொந்தங்களாகிய நம் தமிழ்நாட்டு மக்கள் நம்மை எப்போதும் தாயன்போடு தாங்கியே பிடித்து வந்தனர் – வருகின்றனர்.
 
அந்தத் தாயன்போடுதான் இந்தத் தேர்தலிலும் நமக்கு அளப்பரிய அன்புடன் அமோகமான வாக்குகளை அள்ளித் தந்துள்ளனர். இந்திய அரசியல் களத்தையே அதிர வைத்திருக்கும் இந்தத் தேர்தல் ஓர் அதிசயத் தேர்தல் என்றோம். அது பல்வேறு வகைகளிலும் நிரூபணமானது.
 
ஏராளமான காரணிகள் இருந்தாலும், குடும்பத்தையே தங்கள் அடரன்பால் வழிநடத்திய குழந்தைச் செல்வங்கள்தான் அதிசயத் தேர்தலுக்கான ஆழமான காரணிகளில் ஒன்றாக மாறி நிற்கின்றனர்.
 
ஒரு மாபெரும் மாற்றத்துக்கான இந்தத் தேர்தல் அரசியல் போரில் வென்றது நம் தமிழக வெற்றிக் கழகம் மட்டுமன்று. தமிழக மக்களின் மனங்களில் ஆசை ஆசையாக வளர்த்தெடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான ஜனநாயகமும்தான். அதனால்தான் தமிழகத்தில் ஓர் அரசியல் கலாசாரமாகவே மாறி அச்சுறுத்திக்கொண்டிருந்த பணநாயகம் ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட்டது.
 
தமிழக வெற்றிக் கழகம், மாற்றத்திற்கான மாபெரும் முதன்மைச் சக்தியான அரசியல் இயக்கம் என்பது, இதன் மூலம் ஆழமாகவும் அழுத்தமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. நியாயமான, நேர்மையான பார்வை கொண்ட அனைவரும் இதை அப்படியே ஏற்பர் என்பதே அடர் உண்மை.
 
எக்காலத்திலும் நிகழவே நிகழாது என்றிருந்த மாற்றத்திற்கான அரசியல் வெற்றியை நிகழ்த்திக் காட்டிய தமிழ்நாட்டு மக்களாகிய என் சொந்தங்களுக்கு என் வாழ்நாள் நன்றியைக் காணிக்கை ஆக்குகிறேன்.
 
நம் சொந்தங்களுக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில், நம் கழகத் தோழர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள், Virtual Warriors என உங்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக என் நெஞ்சார்ந்த நன்றியறிதலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
 
இவ்வேளையில், நமக்கு இந்தத் தேர்தலில் வாக்களிக்க மறந்தாலும், எதிர்வரும் காலங்களில் நம்மை அதிகமாக நேசிக்கப் போகும் நம் சொந்தங்களுக்கும் என் அன்பைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தொகுதியில் TVK விஜய் கட்சி தோல்வி!

மிழகம் முழுவதும் தவெக தலைவர் விஜய்யின் அலை சுற்றிச் சுழன்று அடித்துள்ள நிலையில், நாகையில் அது எடுபடவில்லை. விஜய் அலையை வீழ்த்தி திமுக கூட்டணி 2 தொகுதிகளையும், அதிமுக கூட்டணி ஒரு தொகுதியையும் தக்க வைத்துள்ளன.

நாகை சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் விசிக போட்டியிட்டு வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, அதன் தலைவர் ஜவாஹிருல்லா வேட்பாளராக போட்டியிட்டார்.

இதில், அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 9,781 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். மமக வேட்பாளர் ஜவாஹிருல்லா 56,305 வாக்குகளும், தவெக வேட்பாளர் சுகுமாரன் 46,524 வாக்குகளும், அதிமுக வேட்பாளர் தங்க.கதிரவன் 41,586 வாக்குகளும், நாதக வேட்பாளர் பாத்திமா பர்ஹானா 5,348 வாக்குகளும் பெற்றனர்.

நோட்டாவுக்கு 479 வாக்குகள் கிடைத்தன. இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. கீழ்வேளூர் சட்டப்பேரவைத் தொகுதியில் 2021 தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்றது.

இந்த தேர்தலிலும் அக்கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டு, வேட்பாளராக லதா நின்றார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளரைவிட 2,131 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் லதா 55,668 வாக்குகளும், தவெக வேட்பாளர் செந்தில் பாண்டியன் 53,537 வாக்குகளும், பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன் 31,561 வாக்குகளும், நாதக வேட்பாளர் கார்த்திகா 8,040 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 483 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை திமுக கூட்டணி தக்கவைத்துள்ளது. வேதாரண்யம் சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் கடந்த 2 தேர்தல்களிலும் வெற்றி பெற்ற ஓ.எஸ்.மணியன் மீண்டும் போட்டியிட்டார்.

அவர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தியைவிட 7,331 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் 59,172 வாக்குகளும்.

திமுக வேட்பாளர் மா.மீ.புகழேந்தி 51,841 வாக்குகளும், தவெக வேட்பாளர் கிங்ஸ்லி ஜெரால்ட் 38,347 வாக்குகளும், நாதக வேட்பாளர் இடும்பாவனம் கார்த்தி 10,396 வாக்குகளும் பெற்றனர். நோட்டாவுக்கு 548 வாக்குகள் கிடைத்தன.

இதன் மூலம் தொகுதியை அதிமுக தக்கவைத்துக் கொண்டது. நாகை மற்றும் கீழ்வேளூரில் தவெக இரண்டாம் இடமும், வேதாரண்யத்தில் மூன்றாம் இடமும் பிடித்துள்ளது.

ஆர்.பி.சவுத்ரி சாலை விபத்தில் மரணம்!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் அருகே இன்று (மே 5) நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத் துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் உட்பட பல்வேறு மொழிகளில் தனது ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ சினிமா தயாரிப்பு நிறுவனம் மூலம் திரைப்படங்களை ஆர்.பி.சவுத்ரி தயாரித்துள்ளார். கடைசியாக இந்த நிறுவனத்தின் தயாரிப்பாக ‘மாரீசன்’ படம் வெளியானது. இதில் வடிவேலு மற்றும் ஃபஹத் பாசில் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

தமிழில் புது வசந்தம், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, செங்கோட்டை, மிஸ்டர் ரோமியோ, லவ் டுடே (1997), சூர்யவம்சம், சொல்லாமலே, துள்ளாத மனமும் துள்ளும், பூமகள் ஊர்வலம், நீ வருவாய் என, ஆனந்தம், திருப்பாச்சி, ஈ, ஜில்லா உள்ளிட்ட படங்கள் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் வெளியானது.

ஆர்.பி.சவுத்ரியின் மகன்கள் ஜித்தன் ரமேஷ் மற்றும் ஜீவா ஆகியோர் நடிகர்களாக சினிமா படங்களில் நடித்து வருகின்றனர். கடந்த 1980-களில் அவரது திரைப்பட தயாரிப்பு பணியை அவர் தொடங்கினார். சுமார் 40+ ஆண்டுகள் திரைத்துறையில் அனுபவம் கொண்டவர். இதில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களுக்கு முதல் படம் இயக்கும் வாய்ப்பை அவரது சினிமா தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

விஜய் மாஸ் காட்டியிருக்கிறார்! அடுத்த நடவடிக்கை என்ன?!

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் தவெக-வுக்கு சாதகமாக அமைந்துள்ளது. தனிப்பெரும்பான்மை பெறாவிட்டாலும் கூட தனித்துப் போட்டியிட்ட முதல் தேர்தலில் 105+ இடங்களை வசமாக்கியதே தவெகவுக்கு இமாலய சாதனைதான்.

ஆனாலும் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வேண்டுமென்ற நிலையில், அடுத்ததாக தவெக பக்குவமாகக் காய் நகர்த்த வேண்டிய மிகப்பெரிய சவால் எழுந்துள்ளது.

ஏற்கெனவே உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கம் தான் என்று விஜய் சொன்னதால், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் வெற்றி எம்எல்ஏக்களோடு அங்கே தாவுமா அல்லது அதிமுக கூட்டணியில் இருந்து பாமக நழுவுமா என்பதே இப்போதைய பேசுபொருள். அப்படியான கணக்கு வழக்குகள் எல்லாம் ஒர்க் அவுட் ஆன பின்னர், தவெக மைனாரிட்டி அரசாக ஆட்சியில் அமரக் கூடும். தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் முதல்வராகக் கூடும். இதுவரையிலான முடிவுகள் அடிப்படையிலான சாத்தியக் கூறுகள் இவையே.

தவெக ஆட்சிக்கு வந்த கதையை சற்றே துரிதமாக நாம் திரும்பிப் பார்ப்போம். பிப்ரவரி 2, 2024-ல் தான் தவெக தொடங்கப்பட்டது. சரியாக 2 ஆண்டுகள் 3 மாதங்கள் நிறைவு செய்த கட்சிக்கு தமிழக மக்கள் பேராதரவை வழங்கியிருக்கிறார்கள்.

இந்தச் சூழலில் இது தவெகவின் எழுச்சியா இல்லை தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் சறுக்கலா என்பது ஆழமான விவாதப் பொருள்.

அதன் அடிப்படையில், தவெகவின் வெற்றிக்கான காரணங்கள் சிலவற்றை பட்டியலிட்டால், அதில் தமிழகத்துக்கும் திரைக் கவர்ச்சிக்குமான பந்தம் முதலிடம் பெறும். “திரை நட்சத்திர வழிபாட்டில் ஊறிப் போன தமிழகத்தை நன்கு புரிந்து வைத்திருந்தாலேயே திரைவாழ்வில் உச்சத்தில் இருந்த விஜய் கட்சி, அரசியல் என்ற பயணத்துக்கு முதலில் தன்னை தயார்படுத்திக் கொண்டிருக்க வேண்டும். அவருடைய நம்பிக்கை சோரம் போகவில்லை.” என்கின்றனர் தேர்ந்த அரசியல் நிபுணர்கள்.

அடுத்ததாக அரசியலில் பெரிதும் அனுபவம் இல்லாத விஜய்க்கு தோதாக, தோளாடு தோளாக நிற்க விசிகவில் இருந்து விலகிய எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் ஆதவ் அர்ஜூனா வந்து சேர்ந்தார். அவர் செய்த கிரவுண்ட் ஒர்க், அவர் வகுத்துக் கொடுத்த ஸ்ட்ராடஜிகளையும் விஜய் ஒரு ‘மாணவ ஒழுக்கத்தோடு’ கடைப்பிடித்திருப்பார் என்றே நாம் கருத வேண்டியிருக்கிறது என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

திரைக் கவிர்ச்சி, எலக்‌ஷன் ஸ்ட்ராடஜிஸ்ட் துணையோடு விஜய்க்கு இன்னும் அதிகமாக பலன் கொடுத்தது அவர் கையிலெடுத்த எதிர்ப்பு அரசியல். தமிழகம் கடந்த 59 ஆண்டுகளாக திராவிடக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு, மாறி மாறி திராவிடக் கட்சிகளை அரியணை ஏற்றிய பூமி. அப்படியிருக்க ஆளும் திமுக எதிர்ப்பு அரசியலை விக்கிரவாண்டி தொடங்கி தனது கடைசி நாள் பிரச்சாரம் வரை ஆக்ரோஷமாக பழகினார் விஜய்.

ஆனாலும் அதிலொரு சூட்சமத்தை தன்வசம் வைத்துக் கொண்டார். அதன்படி, திராவிட முன்னேற்றக் கழகத்தை எதிர்த்தாலும் திராவிடக் கொள்கைகளை விமர்சிக்கவில்லை. தனது கொள்கைத் தலைவர்களில் பெரியாரையும் சேர்த்தே வைத்திருந்தார். திமுகவுக்கு எதிராக கூரான வாளைச் சுழற்றிக் கொண்டே ‘அதிமுக பலவீனமாகிவிட்டது; அதற்கு தலைமை சரியில்லை’ என்று மீண்டும் மீண்டும் மேடைகளில் சொல்லி அதிமுக வாக்குகளுக்கும் வேட்டு வைத்துக் காட்டியிருக்கிறார்.

அத்தனைக்கும் முத்தாய்ப்பாக தனது பிரச்சார வாகனத்தில் தனது படத்துக்குப் பின்னணியில் அண்ணாவையும், எம்ஜிஆர் படத்தையும் பொறித்துக் கொண்டார். ஆக பெரியார், எம்ஜிஆர், அண்ணா என யாரையும் விஜய் விட்டுவைக்கவில்லை.

உங்களுக்கு அண்ணா, எம்ஜிஆர் பிடிக்கும் ஆனால் அதிமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள், உங்களுக்கு பெரியார், அண்ணா பிடிக்கும் திமுக மேல் அதிருப்தியா என்னிடம் வாருங்கள் என்று விசாலமான கதவைத் திறந்து வைத்தார்.

மூன்றாவதாக தமிழ் தேசியம் என்று சீமான் பேசிக் கொண்டிருக்க திராவிடமும் – தமிழ் தேசியமும் ஒன்று தான் என்று நாதக அதிருப்தியாளர்களையும் தன் பக்கம் வரவு வைத்துக் கொண்டார்.

கூடவே, ”நான் எந்த மத நம்பிக்கைக்கும் எதிரானவன் இல்லை” என்று கூறி பல்வேறு தரப்பு வாக்குகளையும் தன் பக்கம் மடைமாற்றும் வேலையையும் பக்குவமாக செய்து வந்திருக்கிறார் என்றே நாம் புரிந்து கொள்ள வேண்டும் என அரசிய விமர்சகர்கள் சிலர் கூறுகின்றனர்.

ஆனால், இன்னொரு தரப்பினர் இதையெல்லாம் திட்டவட்டமாக மறுக்கின்றனர். விஜய்யின் வெற்றி முழுக்க முழுக்க திரை பிம்ப வழிபாட்டின் வெளிப்பாடு என்று அடித்துக் கூறுகின்றனர். விஜய் ஒரு ‘கல்ட் பாலிடிக்ஸை’ உருவாக்கி தமிழகத்தை ஆபத்தான பாதைக்கு இட்டுச் செல்லப் போகிறார் என்று ஆவேச ஆரூடம் கூறுகின்றனர்.

இன்னொரு தரப்பினர், “இது மக்கள் தீர்ப்பு. அதை ஏற்கத் தான் வேண்டும். 5 ஆண்டுகால அரசு சலுகைகளுக்குப் பிறகும். கல்வி வளர்ச்சி, மகளிர் மேம்பாடு என பல்வேறு திட்டங்களுக்குப் பிறகும், அதே மாதிரியான திட்டங்கள் எங்கள் ஆட்சி அமைந்தால் நிச்சயம் தருவோம் என்று ஏற்கெனவே பலமுறை ஆட்சியில் இருந்த அதிமுக சொல்லியும், இளைஞர்கள் மட்டுமல்லாது பெண்கள், வயதானவர்கள், பாரம்பரியமாக திமுக, அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் எனப் பலரும் தவெகவுக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்றால் மக்கள் ஏதோ ஒரு மாற்றம் வேண்டுமென விரும்பியிருக்கிறார்கள் என்றே அர்த்தம்.

மாற்றத்தை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அரசியல் வரலாற்றில் கட்சி ஆரம்பித்த மிகக் குறுகிய காலத்தில் ஆட்சி அமைத்தோர் பட்டியலில் தவெக தனக்கும் ஓரிடத்தைப் பெற்றுக் கொண்ட நிலையில், இனி அதன் வாயிலாக மக்களுக்கான ஆட்சியாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பதும், அவ்வாறு நடக்காத போது இடித்துரைப்பதே மாற்றத்தை தேர்ந்தெடுத்த மக்கள் சக்தியின் வேலையாக இருக்க வேண்டும்” எனக் கூறுகின்றனர்.

“இந்தத் தேர்தல் முடிவுகளின் வெளிப்பாடு மக்கள் வாரிசு அரசியலையும், டெல்லியில் இருந்து இயக்கி நடக்ககூடிய ‘ப்ராக்ஸி அரசியலை’-யும் வெறுக்கின்றனர் என்பது உறுதியாகியிருக்கிறது. கூடவே, தமிழக தேர்தல் வரலாற்றின் மிகப் பெரிய கரும்புள்ளியாக இருந்த ஓட்டுக்குப் பணம் கொடுக்கும் பழக்கத்துக்கு பலத்த அடி தவெகவால் வழங்கப்பட்டிருக்கிறது” என்று மூத்த பத்திரிகையாளர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார்.

இனி தவெக தலைமையிலான ஆட்சி தான் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், விஜய் அரசியல்மயமாக்கப் பட்டிருக்கிறாரா, அவரது தொண்டர்கள் அரசியல்மயமாக்கப்பட்டிருக்கிறாரா, தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இருக்கிறதா என்பதெல்லாம் விவாதப் பொருளாகவே இருக்க முடியாது.

அதேபோல் இனியும் ஹீரோ ஒர்ஷிப்பை ஊக்குவிக்காமல், மாநில உரிமைகளை சமரசம் செய்துவிடாமல், சமூகத்தின் விளிம்பு நிலை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்பவராக, அரசியல் முன்னோர் வகுத்த பாதைகளில் மக்கள் நலன் சார்ந்தவற்றை தழுவிக் கொண்டு விஜய் இருக்கட்டும் என்ற ஆதங்கக் குரல்களும் தமிழக அரசியல் களத்தில் ஒலிக்கின்றன.

TVK தொடர்ந்து முன்னிலை!

முன்னிலை நிலவரம் தமிழகம்: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. அதன்படி தவெக: 63, திமுக: 49, அதிமுக: 42 தொகுதிகளில் முன்னிலை வகிக்கின்றன.

சென்னையில் பெரம்பூர், ராயபுரம், வேளச்சேரி ஆகிய 3 தொகுதிகளில் தவெக முன்னிலை வகிக்கிறது.

புதுச்சேரி முன்னிலை நிலவரம்: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 30 தொகுதிகள் வாக்கு எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி ஆளும் என்டிஏ கூட்டணி: 22 தொகுதிகளிலும், இண்டியா கூட்டணி: 6 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.

மேற்கு வங்க முன்னிலை நிலவரம்: மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. திரிணமூல் காங்கிரஸ்: 106, பாஜக: 105, காங்கிரஸ்: 3 என முன்னிலை வகிக்கின்றன.

கேரளா முன்னிலை நிலவரம்: கேரள சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், தற்போதைய நிலவரப்படி ஆளும் எல்டிஎஃப் கூட்டணி: 59, யுடிஎஃப் கூட்டணி: 74, என்டிஏ கூட்டணி: 3 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன.

அசாம் முன்னிலை நிலவரம்: அசாம் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக: 69 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ்: 9 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

திருச்சியில் விஜய் முன்னிலை! KN நேரு பின்னடைவு!

திருச்சி மேற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 9,105 வாக்குகளும், திமுகவின் கே.என்.நேரு 8,523 வாக்குகளும், அமமுக வேட்பாளர் ராஜசேகரன் 432 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதன் மூலம் தவெக வேட்பாளர் ராமமூர்த்தி 864 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

மக்களின் தீர்ப்பு யாருக்கு?!

யந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 வாக்கு எண்ணும் மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர். மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.

வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

4 முனைப் போட்டி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தவெகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காகது என்றே கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் தவெக ஒரு கேம் சேஞ்சர் என்ற வகையில் அணுகப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சியைத் தக்க வைக்குமா?, கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை யாரும் எதிர்பாராத பலத்துடன் தவெக அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்பகல் 11 மணியளவில் விடை தெரிந்துவிடும்.