Thursday, June 18, 2026
Blog

தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓம்’ என தலைப்பு

யக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்துக்கு ‘ஓம்’ என தலைப்பு வைத்துள்ளது படக்குழு. பிரத்யேக டைட்டில் டீசர் மூலம் இந்த தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை வுண்டர்பார் ஸ்டூடியோஸ் மற்றும் ஆர் டேக் ஸ்டூடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றுகிறார். இதில் தனுஷ் உடன் மம்முட்டி, ஸ்ரீலீலா, சாய் பல்லவி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘அமரன்’ பட வெற்றியை தொடர்ந்து இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, இந்த படத்தை இயக்குகிறார். இதில் அவருடன் ஏற்கெனவே அமரன் படத்தில் இணைந்து பணியாற்றிய சாய் பல்லவி நடிக்கிறார். தனுஷ், சாய் பல்லவி இணைந்து ‘மாரி 2’ படம் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சுமார் 2.25 நிமிடம் ரன் டைம் கொண்ட டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படம் மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களை குறித்த கதை அம்சத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. அதை பிரதிபலிக்கும் வகையில் காடும் காடு சார்ந்த இடமும் இதில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் அக்டோபர் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாகிறது. இந்தப் படம் வெவ்வேறு பாகங்களாக வெளியாகும் என தெரிகிறது. அதை குறிப்பிடும் வகையில் ‘உதிரம்: தி பிளேட் வுட்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

TVK அரசை விமர்சனம் செய்யும் படமா?! ‘மக்கள் தலைவா’விமர்சனம் RATING 2/5

யக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மக்கள் தலைவா’ திரைப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கர்மவீரரை நினைவுபடுத்தும் தர்மராஜர் என்ற தமிழக முதல்வர், கல்வியறிவை உணவிட்டு ஊட்டிய நிகழ்வைச் சொல்லி, அவரது தொண்டராக இருக்கும் கோடீஸ்வரர் பச்சமுத்து பழனிமாணிக்கம் என்ற ராதாரவியை அறிமுகப்படுத்தித் தொடங்குகிறது படம்.

இன்னொரு பக்கம் உழைப்புக்கு வேலை கொடுக்காமல், பிழைப்பு நடத்தும் விதமாக மக்கள் பிரச்சினை தீர்க்கவென்று போராட்டம் நடத்தி அதன் மூலம்.சம்பந்தப்பட்டவர்களிடம் பணம் பெற்று வாழ்க்கை நடத்தி வருகிறார் தமிழ்க் குடிமகன் என்ற பெயர் கொண்ட ரவி மரியா. அவரை வைத்து ஒரு அரசியல் சதுரங்கத்தை ஆடிப் பார்த்துவிட, தொழிலதிபர் ராதாரவி முடிவு செய்கிறார்.

அதற்கு ஒத்துக்கொண்டு, முதலில் நடிகராகி பின்னர் அரசியலுக்கு வரும் ரவி மரியா அதிரடித் திட்டங்களை அறிவித்து தேர்தலில் நிற்கிறார். இதற்குப் பின்புலமாக ராதாரவியும் அவரது ‘உள்ளே வெளியே,’ கட்சியில் இணைகிறார். வானவில் நிறத்துடன் களம் இறங்கும் உ.வெ கட்சியில் தேர்தலுக்கு முன் ரவி மரியா விபத்தில் சிக்கி, சிகிச்சைக்காக வெளிநாடு போய்விடுகிறார்.

எனவே தேர்தலில் உவெ கட்சி வென்றால் முதல்வர் யார் என்ற கேள்வி வர, மக்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து முதல்வராக்கும் ‘நீங்களும் ஆகலாம் சி எம்…’ என்ற பிரச்சாரதத்தை முன்வைக்கிறார்கள். தேர்தலில் உவெ கட்சி வெற்றியடைய, யார் முதல்வர் ஆனார்கள், இயல்பில் கர்மவீரர் தர்மராஜர் தொண்டரான ராதாரவி இப்படி மக்களை ஏமாற்றும் அரசியல் வேலையில் ஏன் ஈடுபட்டார்? என்பதே கதை….

தொழிலதிபராக நடித்திருக்கும் ராதாரவி தன் அனுபவ நடிப்பால் கவர்கிறார். இவர்களுடன் நிஜ அரசியல்வாதிகள் பழ.கருப்பையா, நாஞ்சில் சம்பத் போன்றோரும் நடித்திருப்பது படத்துக்கு நிஜ அரசியல் நிறத்தைக் கொடுத்திருக்கிறது. கதை அரசியல் இன்றைய TVK அரசை கிண்டலடித்து விமர்சனம் செய்வது போல் இருக்கிறது. கார்ப்பரேட்கள் நினைத்தால் ஒரு முதல்வரை உருவாக்கவும் முடியும் அவரை காணாமல் போகவும் செய்ய முடியும் என்பதை கதை கூறுகிறது. கதை ஒன்னும் பெரிய அளவில் இல்லை. இந்த படம் வர போகிறது என்பதை  சரியாக பத்திரிகையாளர்களிடம் கொண்டு செல்லவில்லை என்றே சொல்லலாம். 

நமது சினிமா நிருபர்: திரு. ராஜ்குமார் 

 

‘எங்கள் தங்கம்’ படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு!

மந்தா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஆக்ஷன் படமான ‘மா இண்டி பங்காரம்’ ஜூன் 19-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தை அவரே தயாரிக்கவும் செய்திருக்கிறார். கடைசியாக சமந்தா நடிப்பில் ‘குஷி’ திரைப்படம் கடந்த 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. அந்தத் திரைப்படத்திற்குப் பிறகு சமந்தா நடித்திருக்கும் இப்படம், ஜூன் 19-ம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படம் ‘எங்கள் தங்கம்’ என்கிற தலைப்பில் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. சென்னையில் இன்று இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பும் நடைபெற்றது.

சமந்தா பேசுகையில், “ரொம்ப நாளைக்குப் பிறகு சென்னைக்கு வந்திருக்கிறேன். அதுவும் சத்யம் தியேட்டருக்கு வந்திருக்கேன். என்னுடைய கல்லூரி நாட்கள்ல இங்குதான் அதிகமாக இருந்திருக்கேன்.

நான் தமிழில் அதிகமான படங்கள் பண்ணலைனு எப்போதும் வருத்தப்படுவேன். ஆனா, இன்னும் எனக்கு நேரம் இருக்கு, பார்த்துக்கலாம்! ‘எங்கள் தங்கம்’ படத்தில் நடிகராக மட்டுமல்ல, தயாரிப்பாளராகவும் இருந்து இப்படியான படத்தை உருவாக்குவது எவ்வளவு கடினம் என்பதையும் தெரிஞ்சிருக்கேன்.

படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் எங்களுக்கு ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸானதாகத்தான் இருந்திருக்கு. ஒரு படத்தை ரிலீஸ் பண்றது எவ்வளவு கஷ்டம்னு எனக்கு இப்போ புரியுது. ஆனா, இந்தப் படத்தை எடுத்ததை எண்ணிப் பெருமைப்படுறேன்.

நாங்க நல்ல படத்தை எடுத்திருக்கோம்னு நம்புறோம். இதுதான் என் வீடு. இந்தப் படத்தின் மூலமாக நிச்சயமா உங்களைப் பெருமைப்பட வைப்பேன்.” என்றவர், “தமிழில் நிறைய நல்ல படங்கள் பண்ணனும்னு பசியோடு இருக்கேன். இதன் மூலமாக இயக்குநர்களுக்குக் கோரிக்கையையும் முன்வைக்கிறேன். தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் இல்லாத சமயத்திலும் என்னுடைய ரசிகர்கள் என்னைப் பற்றி பேசிக்கிட்டேதான் இருக்காங்க.

இந்தப் படம், என் ரசிகர்களைப் பெருமைப்பட வைக்கும். இந்தக் கதைக்குச் சாய் பல்லவி நோ சொன்னாங்க. ஏன்னா, அவங்களும் ரொம்ப பிஸியாக இருக்காங்க. அவர் அற்புதமான நடிகை. அவர் நடிச்சால் நல்லாயிருக்கும்னு நினைச்சோம். அவர் நோ சொன்னதுக்குப் பிறகு எனக்காகச் சில விஷயங்களை மாற்றினோம்” எனக் கூறியிருக்கிறார்.

ராசி இல்லாத மகன் என்று கூறி துடிதுடித்து கொலை….!

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த மேல்பட்டி பகுதியை சேர்ந்த ராஜேஷ் – ஆஷா தம்பதியினர் திருமணமாகி கடந்த 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் இரண்டு மாதமாக இருவரும் சேர்ந்து  திருப்பூரில் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் 6 வயது மகன் முகிலன் கடந்த 5 ஆண்டாக பேரணாம்பட்டு டி.டி. மோட்டூரில்  உள்ள ஆஷாவின் தாய் விஜயா வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 40 நாட்களாக மேல்பட்டி பகுதியில் உள்ள ராஜேஷின் தாய் விஜயா (இவரின் பெயரும் விஜயா தான்) வீட்டில் அத்தை மற்றும் பாட்டி பராமரிப்பில் இருந்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சிறுவன் உயிரிழந்துவிட்டதாக கூறி இறந்தவர்களை வைக்கும் பிரீசர் பாக்ஸில் வைத்திருந்துள்ளனர்.  இதனை அறிந்த ஊர் மக்கள் மற்றும் உறவினர்கள், குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக மேல்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர்.மேலும் குழைந்து இங்கு உள்ளதா இப்போது தன தெரியும் என்றும் அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் சிறுவனின் பாட்டி விஜயா மற்றும் அவரது மகள் ரேவதி (ரேவதி கணவனை பிரிந்து தனது 14 வயது மகனுடன் தாய் வீட்டில் வசித்து வந்துள்ளார்) இவர்கள் இருவரும் மாந்திரீகம் போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும், வீடு முழுவதும் மாத்திரீகம் தொடர்பான பொருட்கள், தெருவில் உள்ள பொது கிணற்றில் மாத்திரீக பொருட்களை வீசுவது போன்ற தொடர் செயலில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்னர். இந்நிலையில் அமாவாசை அன்று பலி கொடுத்திருக்கலாம் என அப்பகுதி மக்கள் அச்சமடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

இதுகுறித்து மேல்பட்டி போலீசார் குழந்தையின் அத்தை ரேவதியிடம் மேற்கொண்ட தொடர் விசாரணையில் தனது அண்ணன் மகன் முகிலனை அவரது அத்தை ரேவதி கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அந்த குழந்தை பிறந்த பின்பு தான் எனது தம்பி அவரது மனைவி இருவருக்கும் சண்டை வந்து பிரிந்து வாழ்ந்ததாகவும் கூறி கொடுமைப்படுத்தி உள்ளார். இதேபோல் ஜூன் 14ம் தேதி விளையாடிக் கொண்டிருந்த சிறுவனை ரேவதி தோசை கரண்டியால் சரமாரியாக  அடித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்து சிறுவன் முகிலன் உயிரிழந்தது போலீசார் மேற்கொண்ட முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. 

இதனையடுத்து ரேவதியை கைது செய்த மேல்பட்டி போலீசார் மேலும் இது குறித்து பாட்டி விஜயாவிடம்  தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொந்த சகோதரனின் மகனை அத்தை அடித்து கொலை செய்த சம்பவம் மேல்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும்  ஏற்படுத்தி உள்ளது.

ஹார்ட்டின் இசை வெளியீட்டு விழா!

டிரைடன்ட் ஆர்ட்ஸ் R. Ravindran மற்றும் ஸ்டெப் ஒன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் கிஷோர் குமார் இயக்கத்தில் நடிகர் சனந்த் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

ரொமான்டிக் என்டர்டெய்னராக உருவாகியுள்ள ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தில் சனந்த், மடோனா செபாஸ்டியன், இமயா டி , வாட்ஸப் மணி , டெப்னிதா கர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். முகேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள கலை இயக்கத்தை துரைராஜ் கவனித்திருக்கிறார்.

ஜூன் 26ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் சாரதி பேசுகையில், ” ‘அயோத்தி’ படத்திற்குப் பிறகு அதே நிறுவனம் தயாரித்த இந்த படத்தில் இரண்டு பாடல்களை எழுதியிருக்கிறேன். இரண்டுமே துள்ளலான பாடல்கள். வாய்ப்பளித்த இயக்குநருக்கும், இசையமைப்பாளருக்கும் நன்றி. இப்படத்தில் பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாதது. கடவுளை மறந்தாலும் காதலை மறக்காமல் இருக்க ஒரு மனம் வேண்டும் என்பதை நோக்கிய பயணம் தான் இப்படத்தின் கதை,” என்றார் .

நடிகர் வாட்ஸப் மணி பேசுகையில், ”இது என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பு. கல்லூரியில் படித்து முடித்த பிறகு 2014 -15களில் கிஷோர் குறும்படங்களை உருவாக்கும் போது எனக்கு அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன் என்னுடைய பயணமும் தொடர்ந்தது. அதன் பிறகு இணைய தொடர், மியூசிக் ஆல்பம் ஆகியவற்றை இயக்கினார். தற்போது அவர் ‘ஹார்ட்டின்’ திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நானும் நடித்து நடிகராக அறிமுகமாகிறேன். இது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இப்படத்தின் கதையை எமோஷனலாக கிஷோர் நன்றாக எழுதியிருக்கிறார். இந்தப் படம் ஒரு பீல் குட் மூவியாக இருக்கும். ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும்,” என்றார்.

நடிகை டெப்னிதா கர் பேசுகையில், ”என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. இப்படத்தை 26ம் தேதி முதல் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகர் வர்கீஸ் மேத்யூ பேசுகையில், ”இந்தப் படத்தில் காவல்துறை சீருடையில் நடிக்கவில்லை என்றாலும், பணக்கார அப்பாவாக நடித்திருக்கிறேன். ஆனால் அதிலும் சில சுவாரசியமான விஷயங்கள் இருக்கின்றன. ஊறுகாயும், வத்தலையும் பார்சல் செய்து அனுப்புகிற அப்பாவாக நடித்திருக்கிறேன். இது எனக்கு வித்தியாசமானதாக இருந்தது, ரசிகர்களுக்கும் பிடிக்கும்,” என்றார்.

படத்தொகுப்பாளர் பரத் விக்ரமன் பேசுகையில், ”ஹார்ட்டின் என்னுடைய ஃபேவரிட் படங்களில் ஒன்று. நான் இதில் பணியாற்றியதால் இப்படி சொல்லவில்லை. கடந்த வாரம் தான் நானும், இயக்குநரும் படத்தை முழுவதுமாக பார்த்தோம். ரேஸியான ஃபிலிமாக மட்டும் இல்லாமல், ஒரு எக்ஸ்பீரியன்ஸ் கொடுக்கக்கூடிய படமாக இருக்கிறது. இந்த படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இயக்குநர் எழுதி இருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அழுத்தமும்.. தனித்துவமும் இருக்கிறது. அதிலும் கதையில் இருக்கும் பெண் கதாபாத்திரங்களுக்கான எழுத்து ஆழமாக இருக்கிறது. இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்கள் இருக்கின்றன. அதனை ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமாக வித்தியாசப்படுத்தி காட்சிப்படுத்தி இருக்கிறார். இதனுடன் ராஜேஷ் முருகேசனின் இசையும் இணையும் போது ஒரு மேஜிக் நடந்துள்ளது. இந்த மேஜிக்கை திரையரங்குகளில் பார்க்கலாம்,” என்றார்.

இசையமைப்பாளர் ராஜேஷ் முருகேசன் பேசுகையில், ”இந்த மேடையில் நிற்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.‌ இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். நான் அதிக சுதந்திரமாக பணியாற்றிய படம் இது. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. இவற்றை பாடலாசிரியர்கள் சாரதி, விவேக், மோகன் ராஜன் ஆகியோர் எழுதி இருக்கிறார்கள். இந்தப் படம் இளமையான படம். இதனை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்து கொண்டாடுங்கள்,” என்றார்.

நடிகை இமயா டி பேசுகையில், ” இது என்னுடைய முதல் படம். முதல் படம் என்பதாலேயே இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். இந்தப் படத்தில் எனக்கும் என்னைப் போன்ற பல புது முகங்களுக்கும் நடிக்க வாய்ப்பு அளித்த தயாரிப்பாளர் ரவீந்திரனுக்கு நன்றி. இந்தப் படம் அழகானது. அனைவருடனும் எளிதாக தொடர்பு கொள்ளும் இந்தப் படத்தில் இடம் பிடித்திருக்கும் ஏதேனும் ஒரு விஷயம் உங்களை கவர்ந்து விடும்.

இந்தப் படத்தின் மூலம் சனந்த் ஹீரோவாக அறிமுகமாகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற கேரக்டரில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும்,” என்றார்.

நடிகை மடோனா செபாஸ்டியன் பேசுகையில், ”இந்த கதையை கேட்டு மிகவும் பிடித்து போய் தான் நடிக்க ஒப்புக்கொண்டேன். இது ஒரு லவ் ஸ்டோரி. ஏராளமான காதல் கதைகளை பார்த்திருப்பீர்கள். ஆனால் இதில் ஒரு வித்தியாசம் இருக்கிறது. அதை நீங்கள் ஃபீல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். ‘ஹார்ட்டின்’ படத்தை இதயப்பூர்வமாக 26ம் தேதியன்று தியேட்டருக்கு குடும்பத்துடன் சென்று பார்த்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுங்கள்,” என்றார்.

கிரியேட்டிவ் கன்சல்டன்ட் மணிமேகலை பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய ஒட்டுமொத்தக் குழுவினரும் கிரியேட்டர்கள் தான். அவர்களுடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. ஒருத்தரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேரை லவ் பண்ணனுமா, அல்லது இரண்டு பேர்ல் ஒருவரை மட்டும் லவ் பண்ணனுமா அப்படிங்கிற ஒரு சாய்ஸ் இல்லாமல்… லவ் பண்ணனுமா என்ற ஒரு சாய்ஸ் இந்தப் படத்தைப் பார்த்தால் வரும் என்று நினைக்கிறேன். இதுதான் இந்த படத்தை பார்க்கும்போது தோன்றியது. இந்தப் படத்தை இதயத்தின் மூலமாக பார்க்க வேண்டும். அப்போதுதான் புரியும், பிடிக்கும்,” என்றார்.

இயக்குநர் கிஷோர் குமார் பேசுகையில், ”இது என்னுடைய முதல் மேடை. இப்படத்தை இயக்குவதற்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. ஒவ்வொரு பாடலையும் இசையமைப்பாளர் ராஜேஷ் உணர்வுப்பூர்வமாகவும், இதயப்பூர்வமாகவும், ஜீவனுள்ளதாகவும்.. இசையமைத்திருக்கிறார். இந்தப் படத்தில் இரண்டு வெவ்வேறு உலகங்களை காண்பித்திருக்கிறோம். அதனை இரண்டு மணி நேரத்திற்கு காட்சிப்படுத்தி இருக்கிறோம்.

என்னுடன் குறும்படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய முதல் படத்தில் இடம்பெற வேண்டும் என்று விரும்பினேன். அதனால் தான் அஜித் கோஷி, வர்கீஸ் மேத்யூ போன்றவர்களை சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் நடிகை இமயாவின் பங்களிப்பு அதிகம். இப்படத்தில் பெண் கதாபாத்திரங்கள் சிக்கலானதாகவும் உணர்வுப்பூர்வமானதாகவும் இருப்பதற்கு அவர்களின் பங்களிப்பும் ஒரு காரணம்.

‘காதலும் கடந்து போகும்’ படத்தை பார்த்தவுடன் மடோனா செபஸ்டியனுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பினேன். இப்படத்தின் கதையை அவர்களிடம் ஒரு நாற்பது நிமிடம் விவரித்தேன். அவர்களுக்கு நான் சொன்ன ஐடியா பிடித்திருந்தது. அவருடைய திரையுலக பயணத்தில் நினைவில் நிற்கத்தக்க அளவிற்கு ஒரு அற்புதமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ரசிகர்களாகிய உங்களுக்கும் பிடிக்கும்.

இந்தப் படத்தில் சனந்த் கேரக்டருக்கு ரெண்டு வெவ்வேறு வடிவங்கள் இருக்கிறது. இதனை அவருடைய அற்புதமான நடிப்பு திறனால் வித்தியாசப்படுத்தி காட்டியிருக்கிறார். இந்தப் படத்தை அவர் தன்னுடைய தோளில் சுமந்திருக்கிறார்.‌

இன்றைய சூழலில் காதலில் சுச்சுவேஷன்சிப், வெக்கேஷன்ஷிப் என எத்தனையோ ‘டேர்ம்ஸ்’ வருகிறது. ஆனால் லவ் என்ற ஒரு எமோஷன் எப்போதும் மாறாது. அந்த எமோஷன் எப்போதும் எவர்கிரீனாக இருக்கும். இதற்கு முன் எத்தனையோ காதல் கதைகள் வந்திருந்தாலும் ஹார்ட்டின் இவை எல்லாவற்றிலிருந்தும் தனித்து இருக்கும்,” என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில், ” ஹார்ட்டின்… பெயருக்கு ஏற்றார் போல் க்யூட்டான பிரீஸியான படம். இந்தப் படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது நானும் இது ஒரு வழக்கமான காதல் கதை என்று தான் நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது இந்த கதையில் பல அடுக்குகள் உள்ளதை பார்த்தேன். அதில் ஆழமான உணர்வுகள் இருந்தது. படத்தை பார்க்கும்போது ஒரு ஆழமான உணர்வு ஏற்பட்டது.

இந்தப் படத்தின் ஹீரோ டெக்னீஷியன்ஸ் தான். அதிலும் ஒளிப்பதிவாளர் முகேஷ்அற்புதமான விஷூவல்களை வழங்கி இருக்கிறார். ஹீரோவாக நடிக்கும் முதல் படம் என்பதால் ஒரு ஹீரோயின் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் எனக்கு இரண்டு ஹீரோயின். படத்தில் இரண்டு ஹீரோயினையும் நேசித்திருக்கிறேன். படம் பார்க்கும் போது ரசிகர்களுக்கும் இது பிரதிபலிக்கும். இந்தப் படம் நிஜமாகவே ஆத்மார்த்தமாக இருக்கும்,” என்றார்.

3 வயது பெண் குழந்தை பாலியல் வன்கொடுமை!  நடந்தது என்ன?

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் வடமாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் அருகேயுள்ள புதுப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், புதுப்பேட்டை பகுதியில் நேற்று முன்தினம் மாலை, வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பிஹார் மாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை காணாமல் போனது.
நீண்டநேர தேடுதலுக்கு பிறகு, அந்தக் குழந்தை, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு அங்குள்ள முட்புதரில் வீசப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டபின், மேல் சிகிச்சைக்காக சென்னை, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை சிகிச்சை பலனின்றி அந்தக் குழந்தை உயிரிழந்தது. இந்த பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை தொடர்பாக கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

இந்நிலையில், பெண் ஒருவர் அளித்த தகவலின் பேரில், புதுப்பேட்டை பகுதியில் தங்கியிருந்த பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த பிப்பின் மான்ஜி(19) என்ற இளைஞரை பொதுமக்கள் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை அந்த இளைஞர் பிஸ்கட் கொடுத்து அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போக்சோ, தாக்குதல், கொலை உள்பட பல்வேறு சட்டப்பிரிவுகளின்கீழ் போலீஸார் வழக்குப்பதிந்து பிப்பின் மாஞ்சியை நேற்று கைது செய்தனர்.

இந்நிலையில், குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவத்தைக்கண்டித்து புதுப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர், சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்த போலீஸார் தடுத்தும், அதை மீறி பேரணியாக கும்மிடிப்பூண்டி சிப்காட் காவல் நிலையம் சென்று முற்றுகை போராட்டம் நடத்தினர்.

அதைத்தொடர்ந்து, சிப்காட் பிரதான சாலையில் மறியல் போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர். அவர்களிடம் கும்மிடிப்பூண்டி (பொறுப்பு) டி.எஸ்.பி. ராஜா தலைமையிலான போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள், ‘‘சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு உடனடியாக தூக்கு தண்டனை வாங்கித்தர வேண்டும்.
பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் போலீஸார் ரோந்து பணிகளை அதிகப்படுத்த வேண்டும்’’ என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்ததோடு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து, எங்கள் கோரிக்கைளை ஏற்பதாக உறுதியளிக்கும் வரை போராட்டம் தொடரும்’’ என கோஷமிட்டனர்.

போக்குவரத்து பாதிக்கப்பட்டதால், பொதுமக்களை கலைக்க முயன்ற போலீஸாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, பொன்னேரி சார் ஆட்சியர் அப்துல் ராசிக், சம்பவ இடம் விரைந்து, பொதுமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கைஎடுக்கப்படும் என உறுதியளித்தார்.

இதையடுத்து, பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதற்கிடையே, சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்குப் பின் குழந்தையின் உடல் பெற்றோரிடம் நேற்று மாலை ஒப்படைக்கப்பட்டது. புதுப்பேட்டை கிராமத்தில் அசம்பாவிதம் ஏற்படாமல் இருக்க நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அரசு ஸ்டான்லி மருத்துவமனை டீன் அரவிந்த் கூறியதாவது: குழந்தை சிகிச்சைக்காக இரவு 10.30 மணிக்கு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. மயக்க நிலையில் இருந்த குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. பிறப்பு உறுப்பு மற்றும் மலம் கழிக்கும் இடம் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தது.

அதிக ரத்தப்போக்கும் ஏற்பட்டிருந்தது. அதுவும் குழந்தையின் இறப்புக்கு காரணம். அதிகாலை 4.30 மணிக்கு பிறகு குழந்தையின் உடல்நிலை மிகவும் மோசமடைய தொடங்கியது. 7.30 மணியளவில் குழந்தை உயிரிழந்தது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதற்கிடையே, கைதான பிப்பின் மான்ஜி தங்கி இருந்த அறையில் மேலும் 3 பேர் தங்கியிருந்ததால், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘குழந்தை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவர் மட்டுமே ஈடுபட்டுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது. குற்றம்சாட்டப்பட்டவரும், பாதிக்கப்பட்ட குழந்தையும் பிஹார் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.

 

பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி! தொடருமா?!

கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.75,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிகளுக்கு 100 சதவீதம் முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழக முதல்வர் விஜய் 2026 மே 25-ம் தேதியில் ரூ.50,000 வரை பயிர்கடன் பெற்ற குறு, சிறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மாநிலம் முழுவதிலும் இருந்து இவ்விவசாய கடன் தள்ளுபடி குறித்து மறு பரிசீலனை செய்ய பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கைகள் பெறப்பட்டன. தமிழக முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்ய உத்திரவிட்டதற்கு இணங்க மேற்கண்ட பயிர்க்கடன் தள்ளுபடி திட்டத்தினை மறு ஆய்வு செய்திட ஜூன் 15-ம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் மறு ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது.

இம்மறு ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தலைமையில் விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை – உழவர் நலத்துறை, கூட்டுறவுத் துறை, நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர்கள் மற்றும் அலுவலர்களுடன் மறு பரிசீலனை செய்யப்பட்டது.

இந்திய ரிசர்வ் வங்கியின் 2025-ம் ஆண்டு நவம்பர் 28ம் தேதியிட்ட அரசு கடன் தள்ளுபடி திட்டங்களுக்கான மாதிரி செயல்பாட்டு நடைமுறைகளின்படி, பயிர்க்கடன் தள்ளுபடிக்கான முழுத் தொகையையும் அரசானது 45 முதல் 60 நாட்களுக்குள் முழுமையாக செலுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதலின்படியும், தமிழ்நாடு அரசின் இன்றைய நிதி நிலை மற்றும் நிதி ஆதாரங்கள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், கூட்டுறவு வங்கிகளில் 2025-ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி வரை பயிர் கடன் பெற்ற 14.43 லட்சம் விவசாயிகளுக்கு சுமார் ரூ.6,000 கோடி வரை கீழ்க்கண்டவாறு தள்ளுபடி செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தள்ளுபடி விவரம் வருமாறு:

குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கான தள்ளுபடி (ரூபாயில்) 75,000 வரை பெற்றவர்களுக்கு கடன் தொகை முழுவதும் (100%) தள்ளுபடி.

ரூ.75,000-க்கும் மேல் கடன் தொகை பெற்ற குறு, சிறு மற்றும் இதர பெரு விவசாயிக்கு ரூ.35 ஆயிரம் தள்ளுபடி.

இதன் மூலம் கடந்த நிதியாண்டில் பயிர்க்கடன் பெற்ற அனைத்து விவசாயிகளுக்கும் அதிகபட்சமாக ரூ.75,000மும் குறைந்தபட்சமாக ரூ.35,000மும் பணப்பயன் கிடைக்கும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடி, எதிர்வரும் சாகுபடி பருவத்திற்கு கடன் பெற விரும்பும் விவசாயிகளுக்கு பெருமளவில் பயன்தரும்.

· 8,33,773 குறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.3,599.67 கோடி

· 5,16,183 சிறு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.1,995.42 கோடி

· 93,548 இதர பெரு விவசாயிகளுக்கான தள்ளுபடித் தொகை ரூ.337.15 கோடி

ஆக கூடுதல் 14,43,504 விவசாயிகளுக்கு உத்தேச பயிர்க் கடன் தள்ளுபடித் தொகை ரூ.5,932.23 கோடி ஆகும்.

இந்தப் பயிர்க்கடன் தள்ளுபடித் திட்டத்தின் கீழ் 2025ம் ஆண்டு மே 1ம் தேதி முதல் 2026 பிப்ரவரி 28ம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் பயிர்க்கடன் பெற்றுள்ள 14,43,504 விவசாயிகள் பயனடைவார்கள். இதனால் அரசுக்கு ரூ.5,932.23 கோடி கூடுதல் செலவினம் ஏற்படும்.” என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தள்ளுபடி தொடருமா? என அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

அனிருத் புதிய திட்டம்!

மியூசிக் சென்சேஷன் அனிருத் ரவிச்சந்தர், தனது சுயாதீன இசை நிறுவனமான அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம் யுனிவர்சல் மியூசிக் இந்தியாவுடன் கூட்டணி அமைத்து முதல் வெளியீடாக ’அரவிந்த்’ என்ற பாடலை வெளியிட்டுள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகியுள்ள இந்தப் பாடல், திரைப்பட இசையைத் தாண்டி பாப் மற்றும் ஹிப்-ஹாப் இசை வழியே தனித்துவமான கதைகளைச் சொல்லும் புதிய முயற்சியை அனிருத் மேற்கொண்டிருப்பதையும் காட்டுகிறது.

2012 ஆம் ஆண்டு வைரலான ’வொய் திஸ் கொலவெறி டி?’ பாடல் மூலம் அனிருத் நாடு முழுவதும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து ’ஜெயிலர்’, ’கூலி’, ’விக்ரம்’, ’லியோ’ மற்றும் ’தேவரா: பார்ட் 1’ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். ஷாருக்கான் நடிப்பில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘ஜவான்’ படத்தின் மூலம் பாலிவுட்டிலும் இசையமைப்பாளராக அறிமுகமானார். ரசிகர்களும் திரையுலகினரும் அவருடைய இசை திறமைக்கு ‘ராக்ஸ்டார்’ என்ற பட்டம் கொடுத்து கொண்டாடினர். வேகமாக மாறிவரும் இன்றைய டிஜிட்டல் இசை சூழலில் நிலைத்திருக்கப் போராடும் ஒரு சுயாதீனக் கலைஞரின் சவால்களை ‘அரவிந்த்’ படைப்பின் மூலம் அனிருத் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறார்.

இப்பாடலின் நாயகனான அரவிந்த் இசையமைப்பாளர் அனிருத்தின் மற்றொரு வடிவம். பல சவால்கள் மற்றும் தடைகள் இருந்தபோதிலும் தனது வாழ்வையே இசைக்காக அர்ப்பணித்த ஒரு தீவிர இசைக்கலைஞர் அரவிந்த். இன்றைய சூழலில் இசை வெளியிடுவது முன்பைவிட எளிதாகி விட்டது. ஆனாலும் ஒரு சுயாதீனக் கலைஞராக நீண்ட காலம் நிலைத்திருப்பது, குறிப்பாகத் தென்னிந்திய இசைச் சூழலில் இன்றும் மிகப்பெரும் சவாலாகவே உள்ளது. இருப்பினும், தனது இசை அதற்கான சரியான ரசிகர்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கை அரவிந்துக்கு வலுவாக உள்ளது.

இந்தப் பாடல் குறித்து அனிருத் பகிர்ந்து கொண்டதாவது, “ஏதோவொரு விதத்தில் நம் அனைவரையும் பிரதிபலிக்கும் ஒருவன் தான் அரவிந்த். நம் வாழ்க்கையில் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ‘அரவிந்த்’ இருக்கிறார். ஆனால் இந்தப் பாடல், தனது திறமையை உலகுக்கு நிரூபித்து வாய்ப்புக்காக ஏங்கும் ஒரு சுயாதீன இசைக் கலைஞரைப் பற்றி பேசுகிறது. இணையத்தில் எண்ணற்ற உள்ளடக்கங்கள் நிரம்பியுள்ள இந்தக் காலத்தில், ஒரு தனித்துவமான கலைஞர் வெற்றி பெற முயற்சிக்கும் போது எதிர்கொள்ளும் சவால்களை நகைச்சுவை மற்றும் நையாண்டியுடன் இதில் சொல்லியிருக்கிறோம்” என்றார்.

இந்தப் பாடல் அனிருத்தின் வாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைப் பிரதிபலிக்கிறது. தனது சொந்த அனுபவங்கள், போராட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பாதையை இதில் பிரதிபலித்துள்ள அவர், இதே போன்ற பயணத்தில் இருக்கும் பல கலைஞர்கள் மற்றும் படைப்பாளர்களுடன் இந்தப் பாடல் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் என நம்புகிறார். அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மூலம், வரும் மாதங்களில் பல்வேறு வகையான சுயாதீன இசைத் திட்டங்கள் மற்றும் புதிய கருத்தாக்க இசைப் படைப்புகளை உருவாக்கி வெளியிட அனிருத் திட்டமிட்டுள்ளார்.
 

‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா!

‘டாடா’ புகழ் இயக்குநர் கணேஷ் கே பாபு கதை எழுதியுள்ள இந்த படத்தில் அஜய் கார்த்தி, அஞ்சனா நேத்ரன், நட்டி நட்ராஜ், கே. பாக்யராஜ், சிபி சக்கரவர்த்தி, விடிவி கணேஷ், அரவிந்த், சாகுல், நரேன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ரவி சக்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைத்திருக்கிறார். ஹாரர் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் ஏ பி வி மாறன், கணேஷ் கே. பாபு, கே. செந்தில் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

அனைத்து பணிகளும் நிறைவடைந்து விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டு வரும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக் குழுவினருடன் இயக்குநர்கள் பா. ரஞ்சித், கார்த்திக் யோகி, விக்னேஷ் கார்த்திக், மாறன் கார்த்திகேயன், நடிகர்கள் கௌதம் கார்த்திக், ரியோ, கலையரசன், டி. சிவா, ஃபைவ் ஸ்டார் கதிரேசன், கமலக்கண்ணன், ஃபைவ் ஸ்டார் கல்யாணம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் மணிமாறன் பேசுகையில், ”டார்க் ஒரு சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படம். மலையாளம் மற்றும் வெளிநாட்டு மொழிகளில் வெளியாகும் திரில்லர் திரைப்படங்களை பார்த்துவிட்டு.. இதுபோன்ற படங்கள் தமிழில் வெளியாக வேண்டும் என நினைப்போம். அப்படி ஒரு திரைப்படமாகத்தான் இந்த ‘டார்க்’ திரைப்படம் இருக்கும்.

இந்த வருடத்தில் தமிழ் சினிமாவிலிருந்து பத்து முதல் பதினைந்து ஹீரோக்கள் உருவாகிறார்கள். அதில் ஒரு முக்கியமான இடத்தில் இப்படத்தின் ஹீரோவான அஜய் இருப்பார்.‌

இந்தப் படத்தில் யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் ஒரு பாடலை பாடியுள்ளனர் அந்த பாடலுக்கு எஸ். தமன் இசை அமைத்திருக்கிறார் இந்தப் பாடலை நாங்கள் படத்தின்  புரோமோவிற்காக உருவாக்கியுள்ளோம். இந்த படத்தில் பணியாற்றிய நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.  

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு ஒருநாள் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் உடன் பயணிக்கும் போது, அவர் என்னிடம் உங்களின் ஆசை என்ன என கேட்டபோது, நான் சினிமாவில் தயாரிப்பாளராக வேண்டும் என சொன்னேன். உடனடியாக அவர் எழுதிக் கொடுத்த கதை தான் ‘டார்க்’. இப்படத்தின் மூலம் என்னை தயாரிப்பாளராக உயர்த்தியவர் இயக்குநர் கணேஷ். அவருக்கும் நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், ”இந்தப் படத்தின் டிரைலர் வழக்கமானதாக இல்லாமல் சற்று புதிதாக இருந்தது. இன்றைய தேதியில் ரசிகர்கள் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்று தான் பார்க்கிறார்கள். ஏனெனில் புதிதாக கதை சொன்ன படங்கள் எல்லாம் வெற்றி பெற்று வருகின்றன. அந்த வகையில் ‘டார்க்’ திரைப்படத்திலும் புதிதாக ஏதேனும் ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌

இந்தத் திரைப்படம் ஒரு லாபகரமான திரைப்படமாக இருக்க வேண்டும். ஒரு ட்ரெண்ட் செட்டிங் ஃபிலிமாக அமைந்து, எல்லோருடைய வாழ்க்கையிலும் வசந்தத்தை கொடுக்க வேண்டும். இப்படத்தின் ஹீரோவான அஜய் கார்த்திக்கும் இந்தப் படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் ரியோ பேசுகையில், ”டார்க் படத்தின் டிரைலர் நன்றாக இருந்தது. பொதுவாக சைக்காலஜிகல் திரில்லர் படங்களுக்கு என ரசிகர்கள் உள்ளனர் என்பார்கள். ஆனால் என்னுடைய ஒப்பினியன் வேறு. இது போன்ற சைக்காலஜிக்கல் திரில்லர் திரைப்படங்களுக்கென ஃபேமிலி ஆடியன்ஸ் இருக்கிறார்கள். பயந்து பயந்து ஒரு படத்தை பார்ப்பது ஒரு குடும்பத்திற்கே பிடிக்கும். அதற்கான மொமென்ட்ஸ் ட்ரெய்லரில் இருந்தது. ரீசன்டா ‘அப்சஷன்’ என்ற ஒரு பத்து கோடியில் எடுத்த படம், 1300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழில் இது போன்றதொரு படங்கள் வராதா என்ற ஏக்கம் நமக்கும் இருக்கும். அந்த வகையில்  ஒரு படத்தை உருவாக்கி இருக்கும் ‘டார்க்’ படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

‘டாடா’ படத்தின் மூலமாக மிகப்பெரிய வெற்றியை பார்த்தவர் அப்படத்தின் இயக்குநரான கணேஷ் கே பாபு. இந்தப் படத்தில் அவர் தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். அதுவும் அவருடைய திறமைக்கு பொருத்தமானது தான். தயாரிப்பாளராகவும் அவர் மிகப்பெரிய வெற்றிகளை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், ”டாடா படத்தின் இயக்குநரான கணேஷ் பாபு என்னிடம் வந்து கதை சொன்னார். நான் ஃபேமிலி சென்டிமென்ட் சம்பந்தமான கதையாக இருக்கும் என்று எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவர் ‘டார்க்’ படத்தின் கதையை சொன்னார். கேட்டதும் இப்படத்தின் ஹீரோ யார் ? என்று கேட்டேன். அஜய் கார்த்தி நடிக்கிறார் என்றார். இந்த கேரக்டரை அவர் ஏற்று நடித்து விடுவாரா..? புதுமுகமாச்சே..! என்று கேட்டேன். ஆனால் இப்படத்தினை டப்பிங் செய்யும் போது பார்த்தேன். அஜய் கார்த்தி அற்புதமாக நடித்திருக்கிறார்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் கமர்சியல் படங்களை வெளியிட்டாலும், கன்டென்ட் உள்ள படங்களையும் வெளியிடுகிறார். இதற்காக அவருக்கும் நன்றி.

இப்படத்தினை திரையில் பார்த்தபோது குழுவினரின் உழைப்பை தெரிந்து கொண்டேன். இந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் பா. ரஞ்சித் பேசுகையில், ”அஜய் கார்த்திக்கின் இரண்டாவது திரைப்படம் இது. இதன் ட்ரெய்லர் இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. திரையில் அவரது லுக் அண்ட் பிரசன்ஸ் ஸ்ட்ராங்காக இருக்கிறது.‌ அவருக்கு வாழ்த்துகள்.

இந்தப் படம் திரில்லராக இருப்பதால் அனைவருக்கும் நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன். யுவன் ஷங்கர் ராஜாவின் குரலில் உருவான பாடல் நன்றாக இருந்தது.

இயக்குநராக இருந்து தயாரிப்பாளராகி இருக்கிறார் நண்பர் கணேஷ் கே பாபு. தற்போது நிறைய படங்களை தயாரிக்கிறார். தன்னுடைய உதவியாளர்களை இயக்குநர்களாக அறிமுகம் செய்வது மிகவும் முக்கியமான விஷயம். அதனால் அவருக்கும் என் வாழ்த்துகள்.

நம்முடன் இருப்பவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கி அவர்களை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பது நல்ல விஷயம்தான். ஆனால் இதில் ரிஸ்க் அதிகம். இது சாதாரண விஷயமும் அல்ல. படத்தை தயாரிப்பது என்பது எளிதானது அல்ல. கதையை நம்பி முதலீடு செய்து அந்த பணம் திரும்ப வருமா… வராதா… என்ற தவிப்பு ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் இருக்கும். தயாரிப்பாளர் என்பதால் அது எனக்கும் தெரியும்.

ஃபைவ் ஸ்டார் செந்தில் போன்றவர்கள் படங்களை தயாரித்து வெற்றி பெற வேண்டியது முக்கியம் என நான் நினைக்கிறேன். அதிலும் சின்ன பட்ஜெட்டில் படங்களை தயாரித்து வெற்றி பெறுவது ரொம்ப அவசியம் என்று நினைக்கிறேன். எப்படி தமிழக சூழலில் அரசியலில் மாற்றம் வந்ததோ அதேபோல் தமிழ் திரை உலகத்திலும் சின்ன படங்கள் வெளியாகி, தியேட்டர்களை நோக்கி மக்களை வரவழைத்துக் கொண்டிருக்கிறது. ‘பிளாஸ்ட்’, ‘சிறை’ போன்ற படங்கள் தியேட்டர்களில் வெளியாகி நல்ல வசூல் செய்திருக்கிறது. பெரிய பட்ஜெட் படமான ‘கருப்பு’ திரைப்படமும் வெற்றி பெற்று இருக்கிறது. அண்மையில் வெளியான ‘ஹபீபி’ திரைப்படத்திற்கு கூட ஏராளமானவர்கள் வருகை தந்து பல காட்சிகள் ஹவுஸ் ஃபுல்லாகி இருந்தது.


தியேட்டரை நான் ஜனநாயகம் மிக்க இடமாக பார்க்கிறேன். மக்கள் மீது நம்பிக்கை வைத்து நாம் நல்ல படங்களை உருவாக்கினால்.. நிச்சயமாக நல்ல லாபத்துடன் கூடிய வெற்றி கிடைக்கும். அந்த வகையில் டார்க் திரைப்படமும் நிச்சயமாக பெரிய வெற்றியை பெறும் என்று வாழ்த்துகிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசுகையில், ”நான் இந்த திரைப்படத்தை பார்த்து விட்டேன். மிக நன்றாக இருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

நடிகை அஞ்சனா நேத்ரன் பேசுகையில், ”டார்க் படத்தின் மூலம் நான் அறிமுகமாகிறேன். முதல் படத்திலேயே கே பாக்யராஜ், நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் போன்ற பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவே எனக்கு கிடைத்த ஆசியாக கருதுகிறேன். ஹீரோ அஜய் கார்த்திக் கடும் உழைப்பாளி. மிகவும் இனிமையானவர். அப்பாவி.  என்னைவிட அவர் ரொம்ப அப்பாவி.  அவருடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க முடியாததாக இருந்தது.

என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கும், இயக்குநருக்கும் நன்றி. என்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் தயாரிப்பாளர் கணேஷ் பாபு வழங்கி இருக்கிறார். இந்தப் படம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள்,” என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், ”இந்த படத்தின் குழுவினர் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். இவர்களுடன் தான் என்னுடைய அடுத்த படத்தில் இணைந்து பணியாற்றுகிறேன்.  அதனால் இந்த விழாவிற்கும் எனக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு உண்டு.

டார்க் திரைப்படத்தின் ட்ரெய்லர் நன்றாக இருந்தது. அதிலும் விஷுவல்ஸ் அட்டகாசமாக இருந்தது. எழுத்து நன்றாக இருக்கிறது. அதனால் இந்த படம் நிச்சயமாக பெரிய வெற்றியைப் பெறும். இதற்காக படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அஜய் கார்த்தி இந்த படத்தில் நன்றாக வேற லெவலில் நடித்திருக்கிறார். தமிழ் திரை உலகிற்கு நல்லதொரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் நியூ சாக்லேட் பாய். அவருடைய சிரிப்பு.. கவர்ச்சிகரமானதாக இருக்கும்.

நட்டி நட்ராஜ் உடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. விரைவில் நடைபெறும் என நம்புகிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளர்களான கணேஷ் கே பாபு மற்றும் மணிமாறன் ஆகிய இருவரும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானவர்கள்,” என்றார்.

நடிகர் அஜய் கார்த்தி பேசுகையில், ”இது எனக்கு மிகவும் ஸ்பெஷலான மேடை. டார்க் ஒரு படம் என்பதை கடந்து எனக்கு ஒரு பாடம் என்றும் சொல்லலாம். சினிமாவைப் பற்றி முறையாக கற்றுக் கொண்டதே இந்த படத்தின் படப்பிடிப்பில் தான். இந்தப் படத்தின் பணிகள் தொடங்குவதற்கு காரணமான ஏ பி வி மாறன் மற்றும் கணேஷ் கே பாபு ஆகிய இரண்டு பேருக்கு நான் நன்றி சொல்கிறேன்.

‘டாடா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் கணேஷ் கே பாபு வேறொரு பிரபலமான நடிகரை வைத்து படம் இயக்கியிருக்கலாம். ஆனால் இது போன்றதொரு எக்ஸ்பிரிமென்டல் படத்தை புது முகங்களை நம்பி தயாரிக்க முன் வந்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் மூலம் அவர் தயாரிப்பாளராக மட்டுமல்லாமல் பாடலாசிரியராகவும் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கும் எங்களது வாழ்த்துக்கள்.‌

அவரும் நானும் சில வருடங்களாக இணைந்து பயணித்திருக்கிறோம். அதில் பல சுவாரசியமான சம்பவங்கள்- வேடிக்கையான நிகழ்ச்சிகள் நடந்துள்ளது.

படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் பைவ் ஸ்டார் கே செந்தில். என் அப்பா. அவருக்கு எத்தனை மேடைகளில் எத்தனை முறை நன்றி சொன்னாலும் போதாது. அவரிடம் தொடக்கத்தில் பேய் படம் என்று சொன்னதும் அவர் பின்வாங்கினார். மகனை இப்படி ஒரு சீரியஸான பேய் படத்தில் அறிமுகப்படுத்த வேண்டுமா..! என யோசித்தார்.  அதன் பிறகு எங்களது குழுவினரின் நோக்கத்தை புரிந்துகொண்டு அனைத்து வகையிலும் உதவி செய்து வருகிறார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகனுடன் மூன்றாண்டுகளாக பயணித்திருக்கிறேன். அவருடைய சமயோஜித புத்தி எனக்கு மிகவும் பிடிக்கும். படப்பிடிப்பு தளங்களில் எத்தகைய கட்டுப்பாடுகள் இருந்தாலும் அதனை எல்லாம் தன்னுடைய திறமையால் சீர் செய்து பட குழுவினருக்கு நல்லதொரு அனுபவத்தை வழங்க கூடியவர்.‌ எதற்கும் டென்ஷன் ஆகவே மாட்டார்.

படப்பிடிப்பு தளத்தில் என்னுடைய சின்ன சின்ன அசைவுகளையும் துல்லியமாக கவனித்து அதனை எப்படி மேம்படுத்த வேண்டும் என்ற விசயங்களை நட்டி நட்ராஜ் எனக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார். அவரது இந்த அணுகுமுறை எனக்கு உற்சாகத்தை அளித்தது.

டார்க் ஒரு எக்ஸ்பிரிமென்டல் சைக்காலஜிக்கல் ஹாரர் திரில்லர் திரைப்படமாகத்தான் உருவாகி இருக்கிறது. தியேட்டருக்கு வருகை தரும் ரசிகர்களுக்கு புது வகையான அனுபவத்தை வழங்க வேண்டும். அடுத்து என்ன? என்பதை யூகித்தாலும் அதிலிருந்து மாறுபட்டு பொழுது போக்கு அம்சங்களுடன் ஒரு படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்து ,இதனை உருவாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் தியேட்டருக்கு சென்று பாருங்கள். பார்த்த பிறகு உங்களுடைய விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பதிவிடுங்கள். உங்கள் அனைவருக்கும் படம் பிடிக்கும் என்று நம்புகிறேன்,” என்றார்.

இயக்குநர் கல்யாண் கே. ஜெகன் பேசுகையில், ”எனக்கும் இது முதல் மேடை. இந்த மேடையில் நிற்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த எங்களது மாஸ்டர் இயக்குநர் கணேஷ் கே. பாபுவிற்கு நன்றி. அவர் ஒரு குறும்படத்தில் நடித்த போது என்னை முதல் முதலில் மானிட்டரில் பார் என்று சொன்னார். அதன் பிறகு அவருடைய தயாரிப்பில் முதல் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை எனக்கு அளித்தது மிகவும் சந்தோஷம்.

தயாரிப்பாளர் மணிமாறன்- மிகவும் இன்ட்ரஸ்டிங்கான மனிதர். படத்தை வணிகம் செய்வதில் தேர்ந்தவர். இந்த படத்தில் நட்சத்திரங்களை நடிக்க வைத்ததில் அவருடைய பங்களிப்பும் உண்டு. முதல் படத்தில் இந்த இருவர்களின் ஒத்துழைப்பும் கிடைத்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. இதுவே இந்தப் படம் உருவாக காரணமாகவும் இருந்தது.

இந்தப் படத்தில் அஜய் கார்த்தி தான் ஹீரோ. அவரும் புதுமுகம். நானும் புதுமுகம். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருப்போம். அதைத்தொடர்ந்து ஹீரோயின் அஞ்சனா. அவர்களும் புதுமுகம். நாங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் மாற்றி பார்த்துக் கொண்டே எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை திரையில் செய்திருக்கிறோம்.

நட்டி நட்ராஜ் பேசும்போது படப்பிடிப்பு தளம் அமைதியாக இருக்கும் என்று சொன்னார். அவர் வரும்போது நாங்களே படப்பிடிப்பு தளத்தை அமைதியாக்கி விடுவோம். எங்களுடன் நீண்ட நாள் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்தப் படத்தின் ஒட்டுமொத்த கதையையும் அஜயை மையப்படுத்தி தான் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் சொன்னதை அவர் புரிந்து கொண்டு நடித்தார்.

இந்தப் படத்தில் நடித்த ஏனைய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் தங்களின் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். அதற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்றார்.

தயாரிப்பாளர் கணேஷ் கே. பாபு பேசுகையில், ”டாடா படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நிறைய பேச முடியவில்லை. பெரும் மன அழுத்தத்தில் இருந்தேன். அந்தத் தருணத்தில் டாடா படத்தின் வெற்றியையும் என்னால் சுவைக்க முடியவில்லை. அதே சமயத்தில் நான் மேடையில் அதிகமாக பேசும் நபரும் கிடையாது. ஆனால் இந்த மேடையில் நிறைய பேச வேண்டும் என நினைத்திருக்கிறேன்.

13 வயதில் திரைப்பட இயக்குநராக வேண்டும் என்று முடிவெடுத்தேன். அதற்காக  என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும் என்று எண்ணினேன். அதற்காக படிக்க வேண்டும் என்றார்கள்… படித்தேன். உதவி இயக்குனராக பணியாற்ற வேண்டும் என்று சொன்னார்கள்… உதவி இயக்குனராக பணியாற்றினேன். நிறைய இடங்களுக்குச் சென்று நிறைய பேரை சந்திக்க வேண்டும் என்றார்கள்… சந்தித்தேன். அதன் பிறகு குறும்படம் எடுக்க வேண்டும் என்று சொன்னார்கள்… குறும்படத்தை இயக்கினேன். மியூசிக் வீடியோ செய்ய வேண்டும் என்றார்கள்… அதையும் செய்தேன். எல்லாவற்றையும் செய்தேன் ஆனால் என்னால் இயக்குநராக முடியவில்லை. எங்கோ ஒரு சிறிய தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. கோவிட் காலகட்டத்தில் அனைவரும் முடங்கி விடுகிறோம். கோவிட் முடிந்த பிறகு நமக்கு சினிமா வராது என்று நினைத்து.. பத்து வருடமாக நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டிருக்கிறோமோ..! என நினைத்தேன். அதனால் இதனை விட்டுவிட்டு, வேறு வேலைக்கு சென்று விட்டேன். அந்த தருணத்தில் ஒரு போன் வருகிறது. டாடா படத்தின் கதையை சொல்கிறேன். அந்த கதையை சொல்லி முடித்தவுடன் ஒரே நாளில் அதனை படமாக உருவாக்க வேண்டும் என்ற பணிகள் நடைபெற தொடங்குகிறது.

தயாரிப்பாளரும் இந்தப் படத்தை குறிப்பிட்ட பட்ஜெட்டுக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்கிறார். தயாரிப்பாளராக மட்டுமல்ல ஒரு இயக்குநராகவும் நானும் அந்த வேலையை செய்ய வேண்டி இருந்தது. பட்ஜெட்டில் எங்கெல்லாம் தயாரிப்பாளருக்கு செலவை குறைக்க முடியும் என்பதை பார்த்து பார்த்து செய்தேன்.

கல்யாண் என்னுடைய நண்பர். நானும் அவனும் பள்ளிக்கூடத்தில் இருந்து நண்பர்களாக இருக்கிறோம். என்னுடன் இணைந்து பயணித்தான். எப்போது அவன் என்னுடைய உதவியாளராக மாறினான் என்று எனக்குத் தெரியாது. அவன் நல்ல வேலையை பார்த்துக் கொண்டு, நன்றாக சம்பாதித்துக் கொண்டிருந்தான். அவனது வேலையை நான் தான் கெடுத்தேன்.

அவரிடம் நான் வேலை செய்வதற்கு ஒரு ஆபீஸ் வேண்டும் என்று கேட்டேன். உடனே அவனுடைய ஆபீஸில் ஒரு பக்கத்தை ஒதுக்கி கொடுத்தான். நாளடைவில் அது என்னுடைய ஆபீஸ் ஆக மாறிவிட்டது. சிறிது நாளில் அவனும் என்னுடன் சேர்ந்து வேலை பார்க்க தொடங்கி விட்டான். இது பற்றி கேட்டபோது நீ முதலில் இயக்குநர் ஆகு. மற்றவற்றை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார்.

கல்யாணின் மனைவியிடம், ‘இவன் ஒரு நாள் நிச்சயம் பெரிய ஆளாகி விடுவான்’ என்று சொன்னேன். இன்று அது நடந்து விட்டது.

டாடா படத்தின் ரஃப் கட் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது செந்தில் சார் வந்தார். அந்தத் தருணத்தில் அவர் யார் என்று கூட எனக்குத் தெரியாது.‌ அவரை தயாரிப்பாளர் அழைத்து வந்தார். நான் சினிமாவை பற்றி படித்திருக்கிறேன் ஆனால் ஒரு சினிமாவுக்குள் எப்படி இருக்க வேண்டும் என்பது தெரியாது.‌ செந்தில் சார் வந்து படத்தை பார்த்துவிட்டு சென்ற அடுத்த நாள்… என் வாழ்க்கை மாறிவிட்டது. அது என்ன மேஜிக் என்று எனக்குத் தெரியவில்லை. இவர் வந்து சென்ற அடுத்த நாள் என்னிடம் எல்லோரும் வேறு மாதிரியாக நடந்து கொள்ள தொடங்கி விட்டனர். முதன்முதலாக டாடா படத்தை அங்கீகரித்தவர் செந்தில் சார் தான்.‌ இந்த செந்தில் சார் இருக்கும் தைரியத்தில் தான் நான் தொடர்ந்து படங்களை தயாரிக்கிறேன். அவருக்கும் நன்றி.

இந்தப் படத்தில் பணியாற்றியவர்கள் அனைவரும் என்னுடைய நண்பர்கள்தான். இன்று நான் திரைத்துறையில் நல்லதொரு இடத்தில் இருக்கிறேன். நான் இன்று இவர்களுக்காக டார்க் படத்தை தயாரிப்பது பெரிய விஷயம் இல்லை. எந்த பலனையும் எதிர்பார்க்காமல் எனக்காக டாடாவில் பணியாற்றினார்கள். அதனால் தான் டார்க் என்பது ‘டாடா’ படத்திற்கான தேங்க்ஸ் தான்.    

இந்தப் படத்தின் கதையை நான் தனுஷ் சாரை மனதில் நினைத்து எழுதினேன். ஆனால் இதில் நடிப்பதற்கு அஜய் முன் வந்து நிற்கிறார். நான் கல்யாணிடம் கேட்கிறேன் அஜய் ஓகேவா என்று.

நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் ..எனக்கு அஜய் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருந்தது. படப்பிடிப்பு முடிந்ததும் அன்றைய காட்சிகளை பார்த்துக் கொண்டே இருப்பேன். ஒரு நாள் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் படப்பிடிப்பு என்றார்கள். நான் கிளைமாக்ஸை படமாக்குவதை பார்க்க வேண்டும் என்று விரும்பினேன். அந்த காட்சியை படமாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது நான் படப்பிடிப்பு தளத்திற்குள் செல்கிறேன். மிகவும் அமைதியாக இருக்கிறது. அனைவரும் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். அஜய் நடித்துக் கொண்டிருந்தார். இயக்குநர் எதிர்பார்த்த அந்த ஷாட் கிடைத்துவிட்டது. கல்யாணும் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அஜய் அலறி அடித்துக்கொண்டு ஓடி வந்து ஒன் மோர் இன்னொரு டேக் போகலாமா என்று கேட்டார். எனக்கு புரியவில்லை. அஜயிடம் நேரம் ஆகிறது. இயக்குநர் எதிர்பார்த்தது கிடைத்துவிட்டது. போதும் என்றேன். இறுதியில் இயக்குநரை சமாதானப்படுத்தி அதே  காட்சியை மீண்டும் ஒரு முறை நடிப்பதற்காக அவர் செல்கிறார். நான் அப்போது கோபத்துடன் தனியாக சென்று அமர்கிறேன். அந்தக் காட்சியில் மீண்டும் நடித்து முடித்துவிட்டு இயக்குநர் ‘கட் ‘சொன்னவுடன் என் முகத்தில் செருப்பால் அடித்தது போல் இருந்தது. எனக்கு படத்தில் மிகவும் பிடித்தது அந்த ஷாட் தான். இந்த சம்பவத்திற்கு பிறகு என்னுடைய படப்பிடிப்பில் நடிகர்கள் யாராவது நம்பிக்கையுடன் இன்னொரு டேக் கேட்டால் நான் அதை அனுமதிக்கிறேன். இந்த விஷயத்தை நான் அஜயிடம் கற்றுக் கொண்டேன்.

இந்தப் படமே அஜய் தான். அவர் கேரக்டர் மேல் ட்ராவல் ஆகும் கதை இது. இந்தப் படம் அஜயின் முதல் படம் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.  

இந்த மாதம் ‘டார்க்’ வெளியாகிறது. அடுத்த மாதம் ‘கராத்தே பாபு’ வெளியாகிறது. அதற்குப் பிறகு ‘ப்ளடி பாலிடிக்ஸ்’ படம் வெளியாகிறது. தொடர்ந்து மூன்று மாதங்களில் வெளியாகும் அனைத்து படங்களுக்கும் ஆதரவு தாருங்கள்,” என்றார்.

‘டார்க்’ திரைப்படத்திற்கு மனு ரமேசன் இசையமைக்க, ரவி சக்தி ஒளிப்பதிவை கையாண்டுள்ளார். படத்தொகுப்பிற்கு கதிரேஷ் அழகேசன் பொறுப்பேற்க, கலை இயக்கத்தை சண்முகராஜா கையாள சண்டைப் பயிற்சியை நைஃப் நரேன் வழங்க, நடன இயக்கத்தை சதீஷ் மேற்கொண்டுள்ளார். பாடல்கள்: யுகபாரதி, விவேக், கணேஷ் கே. பாபு; ஒலி வடிவமைப்பு: அருணாச்சலம் சிவலிங்கம்; ஒப்பனை: முகம்மது; உடைகள் வடிவமைப்பு: காயத்ரி பாலசுப்பிரமணியன்; நிர்வாக தயாரிப்பு: மீனா அருணேஷ்; சவுண்ட் மிக்சிங்: B. முத்துக்கிருஷ்ணன்; டி ஐ: லிக்சோ பிக்சல்ஸ்; கலரிஸ்ட்: ஜி. எஸ். முத்து; ஸ்டில்ஸ்: குமரேசன்: தயாரிப்பு மேலாளர்: பாலாஜி பாபு எஸ்; கோ டைரக்டர்: சதீஷ் சுகுமார்; இணை ஒளிப்பதிவு: கண்ணதாசன் செழியன்; இணை படத்தொகுப்பு: தீபன் சந்திரசேகரன்; இசை லேபிள்: திங்க் மியூசிக்.

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா!

காதல் நகைச்சுவை திரைப்படங்களுக்கு தமிழ் சினிமாவில் எப்போதும் தனி ரசிகர் பட்டாளம் உண்டு. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரையும் கவரும் இந்த வகை படங்கள், சமீப காலங்களில் தொடர்ந்து வெற்றிப் படங்களாக உருவெடுத்து வருகின்றன. அந்த வரிசையில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள புதிய திரைப்படம் ‘லவ் ஓ லவ்’.

ஜினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மென்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் மற்றும் கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் & டிஸ்ட்ரிப்யூட்டர்ஸ் சார்பில் ஜி. தனஞ்ஜெயன் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை மகேஷ் ராஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.

இன்று நடைபெற்ற இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் சுப்பிரமணிய சிவா, நடிகர் தர்ஷன் மற்றும் நடிகர் கேபிஒய் பாலா ஆகியோர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

இப்படத்தில் பவிஷ் நாராயண், நாகா துர்கா, இயக்குநர் செல்வராகவன், இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இன்று வெளியான இப்படத்தின் டீசர் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. வெறும் 80 வினாடிகளில் காதல், நகைச்சுவை, இளமைத் துள்ளல் மற்றும் சுவாரஸ்யமான சம்பவங்களின் கலவையை அழகாக பதிவு செய்திருக்கும் இந்த டீசர், சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
உறவுகள் மீது அதிக ஈடுபாடு கொண்ட ஒரு இளைஞனின் வாழ்க்கையில் நிகழும் எதிர்பாராத திருப்பங்களையும், அதனால் உருவாகும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான தருணங்களையும் படத்தின் டீசர் சுவாரஸ்யமாக வெளிப்படுத்துகிறது. மேலும், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் வழங்கப்பட்டுள்ள தனித்துவமான அறிமுகம் டீசரின் பலமாக அமைந்துள்ளது.

குறிப்பாக இயக்குநர் செல்வராகவன் ஏற்றுள்ள நகைச்சுவை கலந்த கதாபாத்திரம் ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. அவரது இயல்பான நடிப்பும், வித்தியாசமான திரைப்பிரசன்னமும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. சென்னை நகரின் பல்வேறு அழகிய இடங்களில் பெரும்பாலும் படமாக்கப்பட்டுள்ள இப்படம், நகர்ப்புற காதல் கதைக்கு ஏற்ற தனித்துவமான காட்சியமைப்பைக் கொண்டுள்ளது.

 மேலும் சில முக்கிய காட்சிகள் ஊட்டியிலும் படமாக்கப்பட்டுள்ளன.
படம் வெளியாகும் முன்பே அதன் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் பிரைம் வீடியோ நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் உள்ளடக்கம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களில் நம்பிக்கை கொண்டு இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், இசைத்துறையின் முன்னணி நிறுவனமான திங்க் மியூசிக் இப்படத்தின் இசை வெளியீட்டு நிறுவனமாக இணைந்துள்ளது. ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற பவிஷ் நாராயண், தமிழில் அறிமுகமாகும் பிரபல தெலுங்கு யூடியூப் நட்சத்திரமான நாகா துர்காவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

படத்திற்கு இசையமைத்திருப்பவர்கள் வடசென்னையைச் சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஜோடியான FOXn (பிரதீப் பி.ஜே. – வேய்ன் பேவி). இவர்களின் இசையில் உருவான பாடல்கள் விரைவில் வெளியாக உள்ளன.
ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா, தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர் என்.பி. ஸ்ரீகாந்த், கலை இயக்குநர் பா. மகேந்திரன் ஆகியோர் இடம்பெற்றுள்ள தொழில்நுட்பக் குழுவும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்துள்ளது.
இறுதிக்கட்ட பின்னணிப் பணிகளில் இருக்கும் ‘லவ் ஓ லவ்’, ஜூலை 2026-ல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இளைய தலைமுறையின் காதல், உறவுகள் மற்றும் வாழ்க்கையை நகைச்சுவையுடன் சொல்லும் இந்த திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் என்ற நம்பிக்கையில் படக்குழு உள்ளது.