ட்ரெயின் படத்தின் இசை வெளியீட்டு விழா!
கொட்டாமல் அரிசி போட்ட முதல்வர்! வியந்த விற்பனையாளர்!!
தமிழக முதல்வர் விஜய், எங்கு சென்றாலும் அவரின் செயல்கள், இணையத்தில வைரலாகி வரும் நிலையில், இன்று அவர் தனது சொந்த தொகுதியான பெரம்பூரில், புதிய ரேஷன் அட்டை வழங்குவது மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வுகள் மேற்கொண்ட நிலையில், ரேஷன் கடைசியில், அவர் மக்களுக்கு பொருட்கள் வழங்கியது குறித்து ரேஷன் கடை ஊழியர் ஒருவர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
தமிழக முதல்வரும் த.வெ.க தலைவருமான விஜய், இன்று, தனது சொந்த தொகுதியான பெரம்பூருக்கு சென்றிருந்தார். அங்கு புதிய ரேஷன் அட்டை வழக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற விஜய், 50-க்கு மேற்பட்டோலுக்கு தனது கையால் ரேஷன் அட்டை வழங்கினார். தொடர்ந்து ரேஷன் கடைசியில், பொருட்கள் எப்படி எடை போடுகிறார்கள் என்பதை ஆய்வு செய்த விஜய், தனது கையால் மக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது அவர் காரில் வருவதை பார்த்து அப்பகுதி மக்கள் அனைவரும் அவரை வரவேற்க குவிந்தனர். சாலையின் இரு பக்கமும் மக்கள் நின்றுகொண்டு மலர் தூவி அவருக்கு வரவேற்பு அளித்தனர். பெரம்பூர் மட்டும் இல்லாமல், மற்ற பகுதிகளில் இருந்து மக்கள் முதல்வர் விஜயை பார்க்க திரண்டிருந்தனர். இந்த சந்திப்பில் விஜய் நடந்துகொண்ட விதம் குறித்து பலரும் மகிழ்ச்சியாக பாராட்டி வரும் பலரும் அவரை பார்ப்பதற்காக வந்ததாக கூறியுள்ளனர்.
அருகில் இருந்து பார்த்தது பெரிய மகிழ்ச்சியாக உள்ளது என்றும் பலரும் தெரிவித்துள்ள நிலையில், ரேஷன் கடைசியில், விஜய் மக்களுக்கு பொருட்கள் வழங்க, எடை போட்டு கொடுத்த பெண் ஊழியர் ஒருவர்
இது குறித்து பேசுகையில், அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. எடை போட்டோம். அதை அவர் எடுத்து மக்களுக்கு கொடுத்தார். முதலில் சர்க்கரை போட்டோம். அதடுத்து பருப்பு, அதன்பிறகு ஆயில் அவர் கையில் கொடுத்து கொடுக்க சொன்னோம். அதன்பிறகு இறுதியாக அரிசி எடை போட்டோம்.
அந்த அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களையும் கீழே கொட்டாமல், மக்களுக்கு அழகாக வழங்கினார். அவர் கொட்டும்போது சிறிதளவு கூட கீழே சிந்தவில்லை. இது எதிர்பார்க்காமல் நடந்த நிகழ்வு. அவர் பக்கத்தில் இருக்கும்போது பதற்றம் அதிகமாக இருந்தது. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது என்று கூறியுள்ளார்.
சூடு பிடிக்கும் கரூர் சம்பவம்! விடாமல் துரத்தும் திமுக!!
கரூர் சம்பவம் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதால், முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே பொறுப்பு என்றும், அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தவெகவினரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே உயிரிழப்புக்கு காரணம் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதே உள்துறையைத் தற்போது தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் முற்றிலும் முரணாக பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளதாக திமுகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது குறித்து சிபிஐ தனியாக புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என பிணைப் பத்திரம் எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
சிறையில் விசாரணை கைதி உயிரிழப்பு!
கன்னியாகுமரி மாவட்டம் வடக்கு தாமரைகுளம் அருகே நாராயணன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் அப்பகுதியில் கடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி மதியம் 1.30 மணியளவில் இவரது கடையில் தென்தாமரகுளம் போலீஸார் சோதனை நடத்தினர். அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இவரது கடையில் இருந்ததாகக் கூறி, சபரிவர்மனை கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.
கடந்த 4 நாட்களாக அவர் விசாரணை கைதி என்ற நிலையில் இருந்துள்ளார். சிறை அறையில் நேற்று அதிகாலையில் சபரிவர்மன் மயங்கிய நிலையில் கிடந்ததாகக் கூறப்படுகிறது. போலீஸார் அவரை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது சபரிவர்மன் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது. இத்தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டதும் அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
சபரிவர்மனை போலீஸார் பலமாக தாக்கி உள்ளதாகவும், அவருக்கு எந்தவித நோய் பாதிப்பும் கிடையாது எனவும் உறவினர்கள் குற்றம்சாட்டினர். மருத்துவமனை வளாகத்தில் திரண்டு அவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் எஸ்.பி. ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.
2 கோடி ஏமாற்றிய கில்லாடிகள்! எதற்கு தெரியுமா?!
சென்னை பெருங்குடி பகுதியைச் சேர்ந்த பிரதீப்ராஜா (27), முதுநிலை அறிவியல் பட்டம் பெற்றவர். இவர் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், மதுரவாயல் பகுதியில் தனியார் நிறுவனம் நடத்தி வந்த திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலம்பரசன் (35), சென்னை மதுரவாயலைச் சேர்ந்த பிரபு (41) மற்றும் அவர்களது கூட்டாளிகள், முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் அதிக சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறியுள்ளனர்.
இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள வேலைவாய்ப்பு மோசடி புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், வேலை வாங்கித் தருவதாக போலி வாக்குறுதி அளித்து பலரிடம் பணம் வசூலித்தது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியான திருவண்ணாமலையைச் சேர்ந்த சிலம்பரசனை அவரது மாவட்டத்திலேயே நேற்று முன்தினம் கைது செய்தனர். மேலும், சென்னை மதுரவாயலில் பதுங்கியிருந்த பிரபுவும் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள் மற்றும் வழக்கு தொடர்பான முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
முதல் கட்ட விசாரணையில், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களின் அவசரத்தை பயன்படுத்தி, பிரபல நிறுவனங்களில் நேரடி நியமனம் செய்து தருவதாகக் கூறி பலரிடம் லட்சக்கணக்கில் பணம் வசூலித்தது தெரியவந்துள்ளது.
இந்த மோசடியில் மேலும் சிலருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. கைது செய்யப்பட்ட இருவரும் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவின்படி சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்டவர்கள் வேறு யாரேனும் இருந்தால் முன்வந்து புகார் அளிக்குமாறு மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
மெட்ரோவில் பயணம் செய்யும் போது சத்தமாக பேசினால் அபராதம்!
மெட்ரோ ரயில்கள், ரயில் நிலைய வளாகங்களில் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செல்போனில் சத்தமாகப் பேசுவது, காதில் ஹெட்ஃபோன் பொருத்தாமல் செல்போனில் பாட்டு கேட்பது போன்ற பயண ஒழுங்குமுறை விதிமீறல்களுக்கான அபராதம் ரூ.500-ல் இருந்து அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை:
மெட்ரோ ரயில் பயண ஒழுங்குமுறைகளைப் பின்பற்றி, சக பயணிகளின் வசதிக்கும், அமைதிக்கும் மதிப்பளிக்குமாறு அனைத்து பயணிகளையும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கேட்டுக் கொள்கிறது.
மெட்ரோ ரயில் (இயக்கம், பராமரிப்பு) சட்டம் 2002 பிரிவு 59-ன்கீழ், சக பயணிகளுக்குத் தொந்தரவு விளைவிப்பதோ, அவர்களது வசதிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதோ தண்டனைக்குரிய குற்றம் ஆகும்.
குறிப்பாக, மெட்ரோ ரயில்கள் மற்றும் வளாகங்களில் செல்போன் ஒலிபெருக்கியைப் பயன்படுத்துவது, காதில் ஹெட்போன் (Headphone) பொருத்திக் கொள்ளாமல் இசை, வீடியோக்கள் பார்ப்பது, செல்போனில் உரத்த குரலில் பேசுவது ஆகிய செயல்கள் மூலம் அதிக இரைச்சலை ஏற்படுத்தும் வகையில் செல்போன்களைப் பயன்படுத்துவதும், மற்றவர்களுக்கு இடையூறு விளைவிப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும்.
மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் கடந்த ஜூன் 19-ம் தேதி வெளியிட்ட அரசிதழ் அறிவிப்பின்படி, ‘ஜன் விஸ்வாஸ் சட்டம் 2026’-ன் கீழ் ஒரு புதிய திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன்படி, மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் மற்ற பயணிகளுக்கு இடையூறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவோருக்கான அபராத தொகை ரூ.500-ல் இருந்து தற்போது அதிகபட்சமாக ரூ.2,500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், விதிகளை மீறும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளால் மெட்ரோ வளாகத்தில் இருந்து உடனடியாக வெளியேற்றப்படவும் வாய்ப்பு உள்ளது.
எனவே, சக பயணிகளின் பயணச் சூழலைக் கருத்தில் கொண்டு, அனைவரும் மெட்ரோ ரயில் மற்றும் அதன் வளாகங்களில் உரத்த குரலில் பேசுவது, ஒலிபெருக்கி பயன்படுத்துவது (ஸ்பீக்கர் மோடு) ஆகியவற்றை தவிர்த்து, காதில் பொருத்திக் கொள்ளும் ஹெட்போன்களை பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாடகி எஸ்.ஜானகி அம்மா இன்று காலமானார்! அவரை பற்றி பார்ப்போம்
இந்திய திரையுலகின் மகத்தான பாடகர் எஸ்.ஜானகி இன்று காலமானார். அவருக்கு வயது 88. வயது முதிர்வு காரணமாக அவர் மறைந்த தகவலை, சமூக வலைதளத்தில் அவரது குடும்பத்தினர் பகிர்ந்தனர். ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள பள்ளபட்லா என்ற ஊரில் (1938) பிறந்தவர். மூன்று வயதில் தொடங்கி 10 வயது வரை இசை கற்றார். முதல் மேடை நிகழ்ச்சியில் பாடியபோது இவருக்கு 9 வயது.
‘விதியின் விளையாட்டு’ (1957) என்ற படத்தில் ‘பெண் என் ஆசை பாழானது’ என்பதுதான் இவர் பாடிய முதல் பாட்டு. அடுத்த நாளே ஒரு தெலுங்குப் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்து. கண்டசாலாவுடன் இணைந்து பாடினார்.
‘மௌன கீதங்கள்’ படத்தில் ‘டாடி… டாடி… ஓ மை டாடி உன்னைக் கண்டாலே ஆனந்தமே…’ பாடலை, அந்த மழலைக் குரலில் கேட்கும்போது சந்தோஷம் பொங்கும். காரணம், காற்றை கவுரவப்படுத்தும் அந்தக் குரல் எஸ்.ஜானகினுடையது!
குழந்தையின் குரலா, குமரியின் குரலா, காதலியின் ஏக்கமா, காதலனோடு கிறக்கமா, ‘பழைய நெனப்புடா பேராண்டி… பழைய நெனப்புடா…’ எனப் பாடும் கிழவியின் விசனமா? – இப்படி எந்த உணர்ச்சியையும் குரலில் வடிக்கும் திறனைப் பெற்றிருந்த எஸ்.ஜானகியே, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனத் தென்னிந்திய இசையமைப்பாளர்களின் ஏகோபித்த முதல் தேர்வாக இருந்தார்.
1957-ல் இருந்து தமிழ் மொழியில் பாடி வந்தவர். தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி, சிங்களம், வங்காளம், சமஸ்கிருதம், ஒடியா, குஜராத்தி, ஆங்கிலம், கொங்கணி, துளு, சவுராஷ்டிரம், ஜெர்மன், படுகா, பஞ்சாபி ஆகிய 17 மொழிகளில் பாடியிருக்கிறார்.
17 மொழிகளில் பாடிய ஒரே பாடகி என்ற பெருமை பெற்றவர். அனைத்து இசையமைப்பாளர்களின் இசையிலும், அனைத்து பின்னணிப் பாடகர்களுடனும் இணைந்தும் பாடியுள்ளார். ‘இளையராஜா – எஸ்.பி.பாலசுப்ரமணியம் – எஸ்.ஜானகி’ கூட்டணி தென்னிந்திய இசைத் துறையில் தனி முத்திரை பதித்தது.
பாடலில் பொதிந்துள்ள உணர்ச்சி மற்றும் நடிகைகளுக்கு ஏற்ற வகையில் குரலை மாற்றிப் பாடக்கூடியவர். குழந்தைக் குரலில் பாடுவதிலும் வல்லவர். இவர் பாடிய ‘தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே’, ‘செந்தூரப் பூவே’, ‘காற்றில் எந்தன் கீதம்’, ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’, ‘ராதைக்கேற்ற கண்ணனோ’, ‘அம்மா.. அம்மா..’ போன்றவை காலத்தால் அழியாதவை.
திரைப்படப் பின்னணிப் பாடல்கள், தனிப் பாடல்கள் என பல்லாயிரக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். தமிழ், தெலுங்கு மொழிகளில் பல பக்திப் பாடல்களை தானே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஒரு தெலுங்குப் படத்துக்கு இசையமைத்துள்ளார்.
கலைமாமணி, கேரள மாநில சிறப்பு விருது பெற்றவர். சிறந்த பாடகிக்கான தேசிய விருது 4 முறை, கேரள அரசு விருது 14 முறை, ஆந்திர அரசு விருது 10 முறை, தமிழக அரசு விருது 7 முறை பெற்றவர். இலங்கையில் 1992-ல் இவருக்கு ‘ஞான கான சரஸ்வதி’ என்ற பட்டம் வழங்கப்பட்டது.
2013-ல் மத்திய அரசு பத்மபூஷண் விருது அறிவித்தது. மிகவும் தாமதமாக கிடைக்கும் கவுரவம் என்று கூறி அதை ஏற்க மறுத்து விட்டார். ‘காற்றில் ஜானகியின் கீதம்…’ எப்போதும் உலகோடு இரண்டறக் கலந்திருக்கும். எங்கோ, எவர் செவியிலோ கேட்டுக்கொண்டே இருக்கும்.
எஸ்.ஜானகி பாடிய பல தனிப்பாடல்கள் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளன. இப்பாடல்கள் மகிழ்ச்சி, சோகம், ஏக்கம், பிரிவு, கொண்டாட்டம், ஆசை, தாய்மை எனப் பல விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தாலும் என்றென்றும் கேட்கக்கூடிய செவ்வியல் தன்மையைப் பெறுகின்றன.
“எனது ரசிகர்கள்தான் எனக்குப் பெரிய விருது” என்று ஜானகி சொன்னது போல ரசிகர்களின் மனங்களில் என்றைக்குமே அவருக்கு இடமிருக்கும். தென்னிந்திய மொழிகள் இருக்கும் வரை இவ்வுலகில் ஜானகியின் குரல் ஒலித்துக்கொண்டேதான் இருக்கும்.
‘லவ் ஓ லவ் விமர்சனம்’ RATING 2.9/5
ஹீரோ பவிஷ் படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பெண்ணை காதலித்து ஏமாற்றிவிட்டு துபாய் தப்பி செல்வதாக போலிஸ் ஆபிசர் செல்வராகவன் பவிஷை கைது செய்து வைக்க, அங்க வந்த மாதர் சங்கம் பவிஷுக்கு கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என போராட, பவிஷ் தன் கதையை செல்வராகவனிடம் சொல்கிறார்.
பவிஷ், நாக துர்காவை பார்த்துவுடன் காதல் அவருகாக என்ன வேண்டும்னாலும் செய்யலாம் என காதலித்து வருகிறார். நாக துர்காவோ பவிஷ் தகுதிக்கு மீறி செலவு வைக்கிறார். அவரும் கடன் வாங்கி தன் ஆசை காதலிகாக செலவு செய்கிறார். கடன்காரராகவும் மாறுகிறார்.
ஒரு கட்டத்தில் நாக துர்கா ஒரு சில காரணத்தால் உடனே திருமணம் செய்ய வேண்டும் என சொல்ல, அதற்குள் நாக துர்கா அம்மா வந்து பவிஷ் ஒரு கடன்காரர் இவர் எப்படி என் பெண்ணை பார்த்துகொள்வார் என பவிஷ் அப்பா கே எஸ் ரவிகுமார் போலிஸ் ஸ்டேஷனில் எல்லோர் முன்னிலையும் அசிங்கப்படுத்துகிறார்.
இதனால் மனமுடைந்து கே எஸ் ரவிகுமார் மற்றும் குடும்பமே பவிஷ் மீது கோபம் கொள்ள, அதே நேரத்தில் பவிஷ் வேலையும் போக, காதலால் தன் வாழ்க்கை சந்தோஷம் எல்லாம் போக, பவிஷ் வாழ்க்கை என்ன ஆனது, இவர்கள் காதல் என்ன ஆனது என்பதே மீதிக்கதை….
பவீஷ், நாக துர்கா என இருவரும் கதாபாத்திரத்திற்கு தங்களால் முடிந்த அளவுக்கு நியாயம் சேர்த்துள்ளார்கள். காதலிக்காக பர்ஸ் முழுவதும் கரைந்து, குடும்பம் சமூகம் என அசிங்கப்பட்டு அதிலிருந்து அவர் நாக துர்காவுக்கு போடும் கண்டிஷன் அப்போது அவர் செய்யும் சேட்டை என இந்த ஜென் தனுஷாகவே கண்முன் ஜொலிக்கிறார், சிறப்பாகவும் செய்துள்ளார்.
இந்த படம் காதல் மோதல் பிரிவு அதை தொடர்ந்து ஒரு ரிவெண்ச் என்பது போல் செல்கிறது, அதில் ஒரு சில இடங்கள் ரசிக்க வைத்தாலும் பல இடங்கள் சோதிக்கிறது தான். எந்த காலத்தில் இருக்கிறோம், இன்னும் பசங்களா காதலுகாக செலவு பண்றாங்க, பொண்ணுங்க செலவு வைக்கிறாங்க என்பது போல் 90ஸ் சினிமா வசனங்கள் வந்தால் பரவாயில்லை காட்சிகளும் அப்படியே உள்ளது.
மைனஸ்: கிளைமேக்ஸ் பெரிய அளவில் இல்லை…. கதை மனதை தொடும் அளவில் இல்லை…
மொத்தத்தில் இந்த ‘லவ் ஓ லவ்’ குழப்பமான காதல்.
‘லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ விமர்சனம் RATING 3.4/5
படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்காததால், வருமையில் சிக்கித்தவிக்கும் நாயகன் வெற்றி திருடுகிறார். வேலை கிடைக்கும் வரை அதையே தொழிலாக வைத்துக்கொண்டு பயணிக்கும் அவர் சந்தர்ப்ப சூழ்நிலையால் கொலை குற்றவாளியாகிறார். வழக்கை விசாரிக்கும் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதிக்கிறது. தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை தன் குற்றத்திற்கான தண்டனையாக இருந்தாலும், அதன் மூலம் தனக்கான நீதி மறுக்கப்பட்டிருக்கும் வாதத்தை வெற்றி முன் வைக்கிறார். அவரது வாதம் சரியா? தவறா? என்பதே கதை…
இறுக்கமான மனநிலையோடு இருந்தாலும், தனது கருத்துகளை தெளிவாக எடுத்துக்கூறும் வெற்றி, படம் முழுவதும் பேசிக்கொண்டு இருந்தாலும், அந்த காட்சிகளை சரியான முறையில் கையாண்டு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து விடுகிறார்.
நாயகியாக வருகிறார் பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக சிரிக்கும் கண்களுடன் அந்த கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார்.காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும் என்று தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.
வெற்றியின் நண்பராக வரும் லொள்ளு சபா மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியைத் தூக்கிலிடும் ‘ஹேங்மேன்’ பணி செய்பவராக வரும் சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது எல்லை தாண்டாத நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்கள்.
தர்புகா சிவாவின் இசையும், பாடல் வரிகளும்கதையின் தன்மை உணர்த்தும் வகையில் உள்ளன. முதல் பாதியில் நிறைய பேசிக் கொண்டிருப்பதாக தோன்றினாலும் அந்த சலிப்பு தெரியாத அளவிற்கு சரளமாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.
சிறைச்சாலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக வருகிறார் ரங்கராஜ் பாண்டே.கண்டிப்பும் அதே நேரம் கருத்துகளைக் கவனிக்கிற நுண்ணுணர்வும் கொண்டவராக வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்த அவர் இதில் கைதியுடன் ஆன கருத்து மோதலில் தனது பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.
மைனஸ்: படத்தில் ரெட்டியார் என்ற சமூக பெயர் எதற்கு? என்றே தோணுகிறது….. கதையில் கூடுதல் கவனம் தேவை…
மொத்தத்தில் இந்த ‘லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு’ மனித துடிப்பு.
காவேரி மருத்துவமனையின் ‘ஹைபிரிட் கேத் லேபில்’
சென்னை:
ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனை, பழுதடைந்த இரண்டு இதய வால்வுகளுக்கு மீண்டும் ஒரு திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை இன்றி வெற்றிகரமாக சிகிச்சையளித்து சாதனை படைத்துள்ளது. பெருந்தமனி வால்வு நோய்க்காக செய்யப்பட்ட திறந்தநிலை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உலகிலேயே முதல்முறையாக முழுமையாக கதீட்டர் வழியில் மேற்கொள்ளப்பட்ட சிகிச்சை இதுவெனக் கருதப்படுகிறது.
ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு சிக்கலான இதய வால்வு அறுவை சிகிச்சை செய்துகொண்ட 58 வயது நபருக்கு இந்த நவீன சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. நோயாளியின் சொந்த நுரையீரல் தமனி வால்வை (Pulmonary valve) எடுத்து, பழுதடைந்த பெருந்தமனி வால்வுக்குப் (Aortic autograft) பதிலாகப் பொருத்தும் சிகிச்சையே ‘ராஸ்’ (Ross) செயல்முறை என அழைக்கப்படுகிறது. அதேசமயம், எடுக்கப்பட்ட நுரையீரல் தமனி வால்வுக்குப் பதிலாக தானமாகப் பெறப்பட்ட மனித வால்வு பொருத்தப்படும். ராஸ் சிகிச்சை நீண்டகாலத்திற்குச் சிறந்த பலன்களை அளித்தாலும், நாளடைவில் இரண்டு வால்வுகளும் தேய்மானம் அடைந்து, பிற்காலத்தில் மாற்று சிகிச்சை தேவைப்படலாம்.
நோயாளியின் பின்னணி மற்றும் சவால்கள்
இந்நோயாளிக்கு கடுமையான அயோர்டிக் பின்னொழுக்கு, மிதமான நுரையீரல் சுருக்கத்துடன் கூடிய கடுமையான நுரையீரல் பின்னொழுக்கு, தீவிர நுரையீரல் உயர் இரத்த அழுத்தம் மற்றும் மிதமான மிட்ரல் பின்னொழுக்கு ஆகிய பாதிப்புகள் இருந்தன. கால்கள் மற்றும் வயிற்றில் கடுமையான வீக்கம், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல்பாட்டில் குறைபாடு, தீவிர மூச்சுத்திணறல் உள்ளிட்ட இதயச் செயலிழப்புப் பிரச்சனைகளால் அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரால் நிம்மதியாக உறங்க முடியாத நிலை இருந்தது. மேலும், நியூயார்க் ஹார்ட் அசோசியேஷன் (NYHA) அளவுகோலின்படி, இதயச் செயலிழப்பில் மிகத் தீவிரமான III-IV நிலையில் அவர் இருந்தார்.
அவர் பல்வேறு மருத்துவமனைகளை அணுகியபோதும், இரண்டாவது முறையாக திறந்தநிலை இதய அறுவை சிகிச்சை செய்வது மிகச் சிக்கலானது மற்றும் அதிக ஆபத்து நிறைந்தது எனத் தெரிவிக்கப்பட்டது. கதீட்டர் அடிப்படையிலான சிகிச்சையை மேற்கொள்வது கூட சவாலானது என்றே மருத்துவ நிபுணர்களால் கருதப்பட்டது.
காவேரி மருத்துவமனையின் நவீன சிகிச்சை முறை காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டின் பன்முக மருத்துவ நிபுணர் குழு, முப்பரிமாண எக்கோ கார்டியோகிராபி மற்றும் கார்டியாக் சிடி ஸ்கேன் மூலம் நோயாளியின் நிலையை விரிவாக ஆய்வு செய்தது. அதன் முடிவில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை இன்றி, முழுமையாகக் கதீட்டர் மூலமாகவே பழுதடைந்த இரண்டு வால்வுகளுக்கும் சிகிச்சையளிப்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டன.
மருத்துவத் துறையில் இதுவரை இதுபோன்றதொரு சிகிச்சை பதிவு செய்யப்படாததால், சிகிச்சையைத் தொடங்குவதற்கு முன்பு, ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ் பிரிவின் இயக்குநர் டாக்டர் ராஜாராம் அனந்தராமன் தலைமையிலான மருத்துவக் குழுவும், சர்வதேச வல்லுநர்கள் குழுவும் இச்சிகிச்சை முறையை விரிவாக ஆய்வு செய்தன.
முதலில் பல்மனரி ஹோமோகிராஃப்ட் பகுதியில் கவர்டு ஸ்டெண்டுகள் மற்றும் பலூன் விரிவாக்கம் மூலம் தயார்படுத்தப்பட்டு, பின்னர் மெட்ரானிக் மெலடி ட்ரான்ஸ்கதீட்டர் பல்மனரி வால்வு பொருத்தப்பட்டது. அதன்பின் பழுதடைந்த அயோர்டிக் ஆட்டோகிராஃப்டில் (Aortic autograft), எட்வர்ட்ஸ் சேபியன் 3 அல்ட்ரா ரெசிலியா பலூன்-விரிவாக்கக்கூடிய வால்வு மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. புதிய வால்வை நிலைநிறுத்த உதவுவதற்கு வால்வில் கால்சியப் படிமங்கள் இல்லாததால், இச்சிகிச்சைக்கு மிக நுணுக்கமான திட்டமிடலும், துல்லியமான செயல்பாடும் தேவைப்பட்டது. செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப உதவியுடன் ‘விர்ச்சுவல் வால்வ் இம்ப்ளான்ட்’ கணிப்பு மாதிரிகள் பயன்படுத்தப்பட்டன. முழு மயக்கவியலின் கீழ், உணவுக்குழாய் வழியாக தொடர்ச்சியான எக்கோ கார்டியோகிராபி வழிகாட்டுதலுடன் ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கில் இச்சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது.
முழுமையாக குணமடைந்த நோயாளி
தீவிர சிகிச்சைப் பிரிவில் சில நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளி, எவ்விதச் சிக்கலுமின்றி குணமடைந்து வீடு திரும்பினார். இரண்டு வாரங்களுக்குப் பிறகான பரிசோதனையில் அவரது உடல்நிலையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. வீக்கம் முழுமையாகக் குறைந்து, NYHA Class I இயல்பு நிலைக்கு அவர் திரும்பியிருந்தார். தற்போது அவரால் நிம்மதியாக உறங்க முடிவதுடன், எவ்விதச் சிரமமுமின்றி தினமும் 20-30 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சியும் மேற்கொள்ள முடிகிறது.
டாக்டர் ராஜாராம் அனந்தராமன் (இயக்குநர் – ட்ரான்ஸ்கதீட்டர் ஹார்ட் வால்வ் தெரபிஸ், காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட், ஆழ்வார்பேட்டை) கூறியதாவது:
“ராஸ் சிகிச்சைக்குப் பிறகு அயோர்டிக் மற்றும் பல்மனரி ஆகிய இரண்டு வால்வுகளும் பழுதடைந்தால், அதற்கான சிகிச்சைத் தேர்வுகள் மிகவும் குறைவு. ஏனெனில், மீண்டும் ஒரு திறந்தநிலை அறுவை சிகிச்சை செய்வது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். துல்லியமான ஸ்கேனிங், மிகச் சரியான திட்டமிடல் மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் மூலமாகவே, மார்பைத் திறக்காமல் கதீட்டர் முறையிலேயே பழுதடைந்த இரண்டு வால்வுகளையும் எங்களால் வெற்றிகரமாக மாற்ற முடிந்தது. எங்கள் அறிவுக்கு எட்டியவரை, உலக மருத்துவ வரலாற்றில் முழுமையாக கதீட்டர் மூலம் ‘டபுள் ட்ரான்ஸ்கதீட்டர் ராஸ் ரெஸ்க்யூ’ சிகிச்சை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். வேறு வழியின்றி தவிக்கும் அதிக ஆபத்துள்ள நோயாளிகளை கவனமாகத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மாற்று வழியில் மறுவாழ்வு அளிக்கும் சாத்தியக்கூறுகளை இந்த வெற்றிகரமான சிகிச்சை வெளிப்படுத்தியிருக்கிறது.”
காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் இணை நிறுவனரும் மற்றும் செயல் இயக்குநருமான டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்,
“இதயக் கட்டமைப்பு சார்ந்த நவீன சிகிச்சை முறைகள், சிக்கலான வால்வு நோய்களுக்கான சிகிச்சைகளை முற்றிலும் மாற்றி வருகின்றன. இவ்வளவு சிக்கலான ஒரு சிகிச்சையை மேற்கொள்வதற்கு அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழு, அதிநவீன ஸ்கேனிங் வசதிகள், ஹைபிரிட் அறுவை சிகிச்சை அரங்கு மற்றும் பல்வேறு மருத்துவப் பிரிவுகளின் தடையற்ற ஒருங்கிணைப்பு ஆகியவை அவசியம். இந்தச் சாதனை, காவேரி ஹார்ட் இன்ஸ்டிடியூட்டில் உள்ள உயர்தர மருத்துவ நிபுணத்துவம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளைப் பிரதிபலிக்கிறது. மேலும், இந்தியாவில் உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ ஆதாரங்களின் அடிப்படையிலான அதிநவீன சிகிச்சைகளை வழங்குவதில் உள்ள எங்களது தொடர் அர்ப்பணிப்பையும் இது எடுத்துரைக்கிறது.”

















