Tuesday, October 27, 2026
Blog

விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் – MLA கனிமொழி சந்தோஷ் உறுதி

கோவை:

கோவை மாவட்டம், துடியலூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை திறப்பு விழாவுக்கு முன்பே சேதமடைந்த சம்பவம் தொடர்பாக, கவலை தெரிவித்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ் மேற்கொண்ட துரித நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, சேதமடைந்த மேற்கூரை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. மேலும், பேருந்து நிலையம் விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என்றும் அவர் உத்தரவாதம் அளித்துள்ளார்.

துடியலூர் பேருந்து நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது குறித்து கருத்து தெரிவித்த கனிமொழி சந்தோஷ், “ கடந்த கால ஆட்சியின் அவலங்களை நினைத்தால் வேதனையாக உள்ளது ” என்று குறிப்பிட்டார்.

பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகள் தரமானதாகவும், நீண்ட காலம் பயன்படும் வகையிலும் அமைய வேண்டும். ஆனால், திறப்பு விழாவுக்கு முன்பே பேருந்து நிலையத்தின் மேற்கூரை சேதமடைந்தது கட்டுமானப் பணிகளின் தரம் குறித்து கவலையை ஏற்படுத்துவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

பேருந்து நிலையத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, சேதமடைந்த மேற்கூரையை உடனடியாகச் சீரமைக்கவும், பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவரவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் வலியுறுத்தினார்.

 MLA-வின் துரித நடவடிக்கை – சீரமைக்கப்பட்ட மேற்கூரை!

பொதுமக்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை அளித்து, அதிகாரிகளிடம் தொடர்ந்து வலியுறுத்தியதன் விளைவாக, சேதமடைந்த மேற்கூரை தற்போது சீரமைக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையத்தைப் பாதுகாப்பான முறையில் மக்கள் பயன்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், அது விரைவில் பொதுமக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்படும் என கனிமொழி சந்தோஷ் உத்தரவாதம் அளித்துள்ளார்.
பொதுமக்களின் வரிப்பணத்தில் உருவாக்கப்படும் கட்டமைப்புகள் தரமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ள அவர், கட்டுமானப் பணிகளின் தரத்தில் அலட்சியம் இருக்கக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 பொதுமக்களின் பாதுகாப்பே முக்கியம்!

பிரச்சினையை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டுசென்றதுடன் நின்றுவிடாமல், சேதமடைந்த மேற்கூரையைச் சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டு, பேருந்து நிலையத்தை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவர உறுதியளித்துள்ள MLA கனிமொழி சந்தோஷின் நடவடிக்கை, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கும் அணுகுமுறையை வெளிப்படுத்துகிறது.

  • கோவை நிருபர் P.பிரேமா

சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்- அன்பில் மகேஸ்

திமுக ஆட்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருந்தபோது, தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக ரூ. 100 கோடிக்கு மேல் லஞ்சம் பெற்றதாக அன்பில் மகேஸ் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தொடர்ந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து சென்னை அமைந்தகரையில் உள்ள இல்லத்தில் அன்பில் மகேஸை காவல் துறையினர் இன்று மாலை கைது செய்தனர். சென்னை வேப்பேரி காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். காவல் ஆணையர் அலுவலகத்தில் சுமார் 3 மணிநேரம் நடந்த விசாரணைக்குப் பிறகு மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு காவல் துறையினர் அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அன்பில் மகேஸ் பேசியதாவது:

”என் தரப்பில் கோரப்பட்ட முன் ஜாமீன் மனு தள்ளுபடியாகிவிட்டது என்ற நினைப்பில் என்னை கைது செய்துள்ளார்கள். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசுப் பள்ளிகளில் வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்கி உள்ளேன். சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன்” எனக் குறிப்பிட்டார்.

நீரில் மூழ்கிய நெற்பயிர்கள் – ஆட்சியர் நேரில் ஆய்வு

தஞ்சாவூர்:
 
தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு வட்டம் விளாங்குடி பகுதியில் வடகிழக்கு பருவமழையால் தாழ்வான பகுதிகளில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. இரா. ரேவதி, ஐ.ஏ.எஸ்., அவர்கள் 26.10.2026 அன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட நெற்பயிர்கள் மற்றும் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை ஆய்வு செய்து, நிலைமை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

HOPE – தமிழ் திரை விமர்சனம் RATING 3.8/5

இயக்கம்: நா ஹாங்-ஜின்
நடிப்பு: ஹ்வாங் ஜங்-மின், ஜோ இன்-சங், ஜங் ஹோ-யோன், அலிசியா விகாண்டர், மைக்கேல் ஃபாஸ்பெண்டர்…
 
அமைதியான கடலோரப் பகுதியில் மர்மமான உயிரினம் தோன்றுவதிலிருந்து தொடங்குகிறது Hope. அதன் தாக்குதலால் ஒரு சிறிய நகரமே அச்சத்திலும் குழப்பத்திலும் சிக்க, காவல்துறை அதிகாரி, அவரது உதவியாளர் மற்றும் ஒரு வேட்டைக்காரர் மக்களை காப்பாற்ற போராடுகின்றனர். படத்தின் முதல் பாதி மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. உயிரினத்தை முழுமையாகக் காட்டாமல் அதன் தாக்கத்தையும், மக்களின் அச்சத்தையும் காட்சிகளின் மூலம் உருவாக்கியிருப்பது படத்தின் மிகப்பெரிய பலம். திடீர் தாக்குதல்கள், துரத்தல்கள் மற்றும் வன்முறைக் காட்சிகள் பதற்றத்தை அதிகரிக்கின்றன.
 
ஆனால் இரண்டாம் பாதியில் கதை வேற்றுக்கிரகப் பின்னணியை நோக்கி விரிவடையும் போது திரைக்கதையின் வேகம் சற்று தடுமாறுகிறது. பல புதிய தகவல்கள் சேர்க்கப்படுவதால் கதை கொஞ்சம் குழப்பமாகத் தோன்றுகிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் சில இடங்களில் நீளமாக உணரப்படுகிறது. ஹ்வாங் ஜங்-மின் மற்றும் ஜோ இன்-சங் சிறப்பான நடிப்பை வழங்கியுள்ளனர். ஜங் ஹோ-யோனின் கதாபாத்திரமும் கவனம் ஈர்க்கிறது.
 
ஒளிப்பதிவு மற்றும் பின்னணி இசை படத்தின் பதற்றத்தை மேலும் அதிகரிக்கின்றன. மொத்தத்தில், வழக்கமான ஏலியன் அல்லது மான்ஸ்டர் படங்களிலிருந்து வித்தியாசமான அணுகுமுறையைக் கொண்ட Hope, முதல் பாதியில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சில நீளமான பகுதிகள் இருந்தாலும், வித்தியாசமான சயின்ஸ் ஃபிக்ஷன் த்ரில்லர் விரும்புபவர்கள் பார்க்கக்கூடிய படம்.
 
-M.கிரிஜா (சினிமா நிருபர்)

சட்டமும் நீதியும் 2 – வெப் சீரிஸ் விமர்சனம் RATING 3.1/5

இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
நடிப்பு: பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா மற்றும் பலர் 
 
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையில் குற்றவாளியா? அல்லது சூழ்நிலையின் காரணமாக சிக்கியவரா? இந்தக் கேள்வியை மையமாக வைத்து நீதிமன்றப் போராட்டத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது சட்டமும் நீதியும் 2. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழக்கிறார். அந்தக் கொலை வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஒருபுறம், கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர் சந்திரா மறுபுறம் கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி. இந்த இரு தரப்பினரின் சட்டப் போராட்டமே தொடரின் முக்கிய பலம்.சரவணன் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார்.
 
ஆர்ப்பாட்டம் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதிடும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பாக கவனம் ஈர்க்கிறது. வரலட்சுமி சரத்குமார் கம்பீரமான வழக்கறிஞராகவும், கணவனை இழந்த மனைவியாகவும் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இருவருக்கும் இடையிலான நீதிமன்ற வாதங்கள் தொடருக்கு நல்ல விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. திரைக்கதையின் முக்கியமான பலம், உண்மை என்ன என்பதை உடனடியாக சொல்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய தகவல்களை வெளிப்படுத்துவதுதான். கொலையா? தற்கொலையா? உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்விகள் தொடரை தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
 
பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் நீதிமன்றக் காட்சிகளும் தொடரின் தரத்தை உயர்த்துகின்றன. அதே நேரத்தில் சில லாஜிக் குறைகள், சில காட்சிகளின் அழுத்தம் குறைவாக இருப்பது மற்றும் கிளைமாக்ஸுக்குப் பிறகு கதை சற்று நீளுவது போன்ற குறைகளும் உள்ளன. பெரிய ஆக்ஷன் காட்சிகளை நம்பாமல் சட்டம், நீதி, குற்றம், அதிகாரம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சுவாரசியமான கோர்ட் ரூம் கிரைம் திரில்லர். சட்டம் மற்றும் நீதியின் வித்தியாசத்தை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதால், நீதிமன்றக் கதைகளை விரும்புபவர்கள் பார்க்கலாம்.
 
-M.கிரிஜா (சினிமா நிருபர்)

418 – திரை விமர்சனம் RATING 3.2/5

‘418’ திரைப்படம் கீர்த்தன் நடகௌடா இயக்கத்தில் உருவாகியுள்ள ஹாரர் – மிஸ்ட்ரி – த்ரில்லர் திரைப்படம். மருத்துவக் கல்லூரி விடுதியில் 15 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருக்கும் Room No. 418-ஐச் சுற்றியே கதை நகர்கிறது.
 
மருத்துவக் கல்லூரி விடுதியில் மர்மமான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் 418-ம் அறையின் பின்னணி என்ன? அங்கு நடந்தது என்ன? அறிவியலால் விளக்க முடியாத விஷயங்களுக்கும் மூடநம்பிக்கைக்கும் இடையிலான மோதல் படத்தின் முக்கிய கருவாக அமைந்துள்ளது. 
 
சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்யா ராஜ், பிரீத்தி பகடலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சைத்ரா ஆச்சாரின் கதாபாத்திரம் படத்தின் மர்மத்தை முன்னெடுத்துச் செல்லும் முக்கிய அம்சமாக தெரிகிறது. 
 
ஹாரர் & த்ரில்லர் வழக்கமான காமெடி கலந்த பேய் படமாக இல்லாமல், சீரியஸ் ஹாரர் மற்றும் சஸ்பென்ஸ் பாணியில் படம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழில் A வழங்கப்பட்டிருப்பதும் படத்தின் தீவிரமான ஹாரர் காட்சிகளுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 
 
418 படத்தின் மிகப்பெரிய பலம் அதன் மர்மமான கதைக்களம். ஒரு மூடப்பட்ட அறையை மையமாக வைத்து அறிவியல், அமானுஷ்யம், மூடநம்பிக்கை ஆகியவற்றை இணைத்திருப்பது சுவாரஸ்யமான முயற்சி. குறிப்பாக ஹாரர் ரசிகர்களுக்கு அறை 418-ன் பின்னணியை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை படம் உருவாக்குகிறது. ஆனால் இப்படத்தின் வெற்றி, அந்த மர்மத்தை எவ்வளவு வலுவாக திரைக்கதையில் அவிழ்க்கிறது என்பதில்தான் இருக்கிறது. ஹாரர் + மிஸ்ட்ரி + சைக்கலாஜிக்கல் த்ரில்லர் விரும்புபவர்களுக்கு படம் சுவாரஸ்யமான அனுபவமாக அமைய வாய்ப்புள்ளது.
 
– M. கிரிஜா (சினிமா நிருபர்) 
 

‘சிங்காரம்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா

ராக் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில், யோகி பாபு கதாநாயகனாக நடித்துள்ள ‘சிங்காரம்’ திரைப்படத்தை இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ளார். ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். ஏற்கெனவே இப்படத்தின் டீசர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், தற்போது இசை வெளியீட்டு விழாவை முன்னிட்டு டிரெய்லரும் வெளியிடப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 30-ஆம் தேதி இப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
 
நரிக்குறவர் சமூகத்தின் வாழ்வியல், வரலாற்றுப் பின்னணி, சமூகத்தில் அவர்கள் எதிர்கொள்ளும் புறக்கணிப்புகள் மற்றும் உரிமைக்கான குரல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ‘சிங்காரம்’ உருவாகியுள்ளது. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்டுள்ள இப்படம், சமூக விழிப்புணர்வுடன் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துப் பேசுகிறது.
 
இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக இயக்குநர், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் படத்தின் உருவாக்க அனுபவங்களையும், அதன் பின்னணியையும் பகிர்ந்துகொண்டனர்.
 
இயக்குநர் கே.வி. கதிர்வேலு பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தினரின் வரலாறு மற்றும் பின்னணியை அறிந்துகொள்வதற்காக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளதாகத் தெரிவித்தார். சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகள், அதிகாரம் கொண்டவர்களுக்கு அளிக்கப்படும் மரியாதை, மற்றவர்கள் புறக்கணிக்கப்படுவது போன்ற பிரச்சினைகளையும் இப்படம் பேசுவதாகக் குறிப்பிட்டார். நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றுடன் அரசியல் சார்ந்த அம்சங்களும் இடம்பெற்றுள்ளதாகவும், சமூகக் கருத்துகளுடன் குடும்பத்துடன் இணைந்து ரசிக்கக்கூடிய படமாக ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும் கூறி, அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
நடிகர் யோகி பாபு பேசுகையில், இப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு, ரமண பாலாஜி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்து ஆகியோரை நினைவுகூர்ந்த அவர், மனோபாலா தனக்கு எப்போதும் ஆதரவாக இருந்தவர் என்று குறிப்பிட்டார். தன்னை நம்பி வாய்ப்பளித்த படக்குழுவினரின் ஊக்கமும் நம்பிக்கையும் முக்கியமானவை என்று தெரிவித்ததுடன், வரும் அக்டோபர் 30-ஆம் தேதி வெளியாகும் ‘சிங்காரம்’ திரைப்படத்தைத் திரையரங்குகளில் பார்த்து ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
 
தயாரிப்பாளர் ஏ.எஸ். ரமண பாலாஜி பேசுகையில், நடனக் கலைஞராகவும் நடன இயக்குநராகவும் 27 ஆண்டுகளாகத் திரைத்துறையில் பயணித்து வருவதாகக் குறிப்பிட்டார். அந்தப் பயணத்தில் தனக்குத் துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், பலரது உழைப்பும் ஒத்துழைப்பும்தான் ராக் புரொடக்‌ஷன்ஸ் வளர்ச்சிக்குக் காரணம் என்றார். ஒரு படைப்பின் நோக்கம் மிகவும் முக்கியமானது என்றும், கலைஞர்களுக்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். ஒரு படைப்பு பார்வையாளர்களின் மனநிலையை மாற்றி, அவர்களின் வாழ்க்கைப் பயணத்திற்கு ஊக்கமளிக்கக்கூடும் என்று குறிப்பிட்டார். பல சவால்களைக் கடந்து ‘சிங்காரம்’ உருவாகியுள்ளதாகவும், இயக்குநர், நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றும் தெரிவித்தார். குறிப்பாக, யோகி பாபு பல தருணங்களில் தமக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறி, இப்படத்தின் வெற்றியில் முழு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.
 
நடிகை சபிதா ராய் பேசுகையில், தயாரிப்பாளர்கள் ஏ.எஸ். ரமண பாலாஜி மற்றும் பத்மாவதி காந்தி ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இயக்குநர் கே.வி. கதிர்வேலுவுடன் இணைந்து பணியாற்றுவது தனக்கு இரண்டாவது முறை என்று குறிப்பிட்டார். யோகி பாபுவுடன் ஏற்கெனவே நான்கு படங்களில் நடித்துள்ளதாகவும், அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த கதாபாத்திரத்தில் நடித்தபோது, அதன் மொழி மற்றும் பேச்சு வழக்கு தன்னுள் ஆழமாகப் பதிந்துவிட்டதாகவும், படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்குச் சென்ற பிறகும் அந்தப் பேச்சு வழக்கின் தாக்கம் இருந்ததாகவும் பகிர்ந்துகொண்டார். மறைந்த நடிகர்கள் மனோபாலா மற்றும் மாரிமுத்துவிடமிருந்து பல விஷயங்களைக் கற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், படக்குழுவினருக்கு நன்றி தெரிவித்ததுடன், அனைவரும் திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
நடிகர் என்.ஜே. சத்யா பேசுகையில், தொழில்நுட்பக் கலைஞராகப் பணியாற்றிய தாம் நடிப்பிலும் முயற்சி செய்து வருவதாகக் குறிப்பிட்டார். தனக்கு நடிப்பதற்கான வாய்ப்பை வழங்கிய யோகி பாபுவுக்கு நன்றி தெரிவித்த அவர், பிற கலைஞர்களுக்கும் வாய்ப்புகளைப் பெற்றுத்தருவதில் யோகி பாபு காட்டும் ஆதரவைப் பாராட்டினார். அனுபவமிக்க மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடித்தது பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள உதவியதாகக் கூறினார். நகைச்சுவையுடன் உணர்வுபூர்வமான தருணங்களும் நிறைந்த ‘சிங்காரம்’ திரைப்படத்திற்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
நடிகர் டி.எஸ்.ஆர். ஸ்ரீனிவாசன் பேசுகையில், குறவர் கதாபாத்திரத்தில் யோகி பாபு சிறப்பாக நடித்துள்ளதாகப் பாராட்டினார். அவரது நடிப்பைப் பார்க்கும்போது, நீண்ட காலத்திற்குப் பிறகு எம்.ஜி.ஆரை மீண்டும் பார்ப்பது போன்ற உணர்வு ஏற்படுவதாகக் குறிப்பிட்டார். இயக்குநர் கே.வி. கதிர்வேலு இந்த நிலையை அடைய 15 ஆண்டுகள் உழைத்துள்ளதாகக் கூறிய அவர், அனுபவமுள்ள கலைஞர்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும், கலைஞர்களின் உழைப்புக்கு உரிய ஊதியமும் அங்கீகாரமும் கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கலைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டால் தமிழ் சினிமா உலக அளவில் மேலும் சிறந்து விளங்கும் என்றும் தெரிவித்தார்.
 
திவாகர் தனது நன்றி உரையில், இப்படம் உருவாகக் காரணமாக இருந்த மாமா கார்த்திகேயன், குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் கே.வி. கதிர்வேலு உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார். தயாரிப்பாளர் ரமண பாலாஜி அளித்த ஊக்கமும் ஆதரவும் இப்படத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்கு வகித்ததாகக் குறிப்பிட்டார். மறைந்த நடிகர்கள் மாரிமுத்து, மனோபாலா ஆகியோர் படப்பிடிப்பின்போது வழங்கிய ஆலோசனைகளையும் ஆதரவையும் நினைவுகூர்ந்தார். நடிகர் எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட கலைஞர்களின் அர்ப்பணிப்பையும், இசையமைப்பாளர் சாம் சி.எஸ்., ஒளிப்பதிவாளர் பிரசன்னா எஸ். குமார், படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோர் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் உழைப்பையும் பாராட்டினார். யோகி பாபு இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் உறுதுணையாக இருந்ததாகக் கூறி, பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட அனைவரும் படத்தின் வெற்றிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
 
நடிகர் படவா கோபி பேசுகையில், ஒரு திரைப்படத்தை உருவாக்குவதைவிட அதைச் சரியான முறையில் வெளியிட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது சவாலானது என்று குறிப்பிட்டார். நடனத் துறையில் கலைஞர்களுக்கு போதிய அங்கீகாரம் கிடைக்காத காலகட்டத்திலிருந்து, ரமண பாலாஜி அத்துறையை ஒரு முறையான நிறுவனமாக வளர்த்தெடுத்த விதத்தைப் பாராட்டினார். தாம் திரைப்படத் தயாரிப்பில் எதிர்கொண்ட அனுபவங்களையும் பகிர்ந்துகொண்ட அவர், ‘சிங்காரம்’ படத்தைத் தயாரிப்பாளர்கள் முறையாக வெளியீட்டிற்குக் கொண்டு வந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார். நரிக்குறவர் சமூகத்தின் வாழ்க்கைப் பின்னணியையும் அக்காலச் சமூகச் சூழலையும் இயக்குநர் கே.வி. கதிர்வேலு அழகாகப் பதிவு செய்துள்ளதாகப் பாராட்டியதுடன், படம் வெற்றிபெற வாழ்த்தினார்.
 
நடிகர் ஜாவா சுந்தரேசன் பேசுகையில், இதுவரை அதிகம் பேசப்படாத உணர்வுபூர்வமான கதையைத் தேர்ந்தெடுத்து உருவாக்கிய தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநருக்குப் பாராட்டுத் தெரிவித்தார். இயக்குநர் கே.வி. கதிர்வேலுவின் ‘ராஜவம்சம்’ திரைப்படத்தைப் பார்த்து வியந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், யோகி பாபுவின் நடிப்புத் திறமையையும் பிறருக்கு உதவும் குணத்தையும் பாராட்டினார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். வழங்கியுள்ள பாடல் உணர்வுபூர்வமாக அமைந்துள்ளதாகக் கூறியதுடன், படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 
நடிகர் கே.எம். கணேஷ்கர் பேசுகையில், நரிக்குறவர் சமூகத்தினரின் தோற்றத்தைத் தத்ரூபமாக வெளிப்படுத்தும் வகையில் ஆடை மற்றும் அணிகலன்களுடன் படக்குழுவினர் தங்களைத் தயார்படுத்திக்கொண்டு நடித்ததாகக் கூறினார். கதாபாத்திரங்களுடன் ஒன்றிப்போய் நடித்த அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். எம்.எஸ். பாஸ்கர் உள்ளிட்ட கலைஞர்களின் அர்ப்பணிப்பைப் பாராட்டிய அவர், யோகி பாபு உடன் நடிக்கும் கலைஞர்களுக்கு ஆலோசனைகளையும் ஊக்கத்தையும் வழங்கியதாகக் குறிப்பிட்டார். இயக்குநர் நரிக்குறவர் சமூகத்தின் வரலாற்றையும் பின்னணியையும் படத்தில் தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகக் கூறி, படத்தின் வெற்றிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
 
கலை இயக்குநர் குருராஜ் பேசுகையில், இயக்குநர் ‘சிங்காரம்’ திரைப்படத்தை அழகாக உருவாக்கியுள்ளதாகவும், படத்தின் டிரெய்லரைப் பார்த்து மகிழ்ச்சியடைந்ததாகவும் தெரிவித்தார். இப்படத்தில் பங்காற்றியிருப்பது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறி, திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்தினார்.
 
சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட ஆர்.வி. உதயகுமார் பேசுகையில், கம்யூனிஸ்ட் குடும்பப் பின்னணியைச் சேர்ந்த இயக்குநர் கே.வி. கதிர்வேலு இயக்கியுள்ள ‘சிங்காரம்’ திரைப்படம் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார். நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் அரசியலில் ஈடுபட்டு சட்டமன்ற உறுப்பினராக உயர்வதை மையமாகக் கொண்ட கதைக்களத்தைப் பாராட்டினார். கதாநாயகனாக உயர்ந்த பிறகும் எளிமையைத் தக்கவைத்துக்கொண்டு யோகி பாபு சிறப்பாக நடித்து வருவதாகக் கூறினார். இசையமைப்பாளர் சாம் சி.எஸ். மற்றும் தயாரிப்பாளர்கள் ரமண பாலாஜி, திவாகர் உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டியதுடன், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் சார்பில் இயக்குநர், நடிகர் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
 
‘சிங்காரம்’ திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், சமூகப் பின்னணியையும் நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகளையும் இணைத்துள்ள இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் நிலையத்தில் வருகை பதிவு மோசடி! செய்தது யார்?!

சென்னை கொளத்தூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு, இடம் பற்றாக்குறையால் M3 புழல் காவல் நிலையத்தில் செயல்பட்டு வருகிறது. அதில் நிலைய எழுத்தாளராக SSI S.ஞானசேகரன் பணிபுரிந்து வருகிறார்.  காவலர்கள் யாராவது விடுப்பு கேட்டால் SSI ஞானசேகரன் அவர்கள் காரணத்தை எழுதி காவல் ஆய்வாளரிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்குவது வழக்கம். இப்படி இருக்க M. முத்துக்கனி (WHC-43420) என்ற பெண் காவலர் 2026 மே மாதம் 23 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை CL விடுப்பு கேட்டுள்ளார். அதற்கு பெண் ஆய்வாளர் M.சுகிலா அவர்கள் கையெப்பம் போட்டு ஒப்புதலும் அளித்துள்ளார். ஆனால் வருகை பதிவேட்டில் பார்த்தால் சரியாக சிகப்பு நிற பேனாவால் ABSENT போடாமல் 27 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி பணி செய்தது போல் மாற்றியுள்ளார் SSI S ஞானசேகரன். மேலும் பணியில் இருப்பது போல் மாற்றி M.முத்துக்கனி அவர்களுக்கு அரசாங்கத்திடம் உணவு படி FEEDING  & மிகை ஊதியம் EDR பணம் கிடைக்க வழி செய்துள்ளார். இந்த ஒப்புதலுக்கு ஆய்வாளர் M.சுகிலா அவர்கள் எப்படி கையெப்பம் போட்டார்? மற்றும் அனைத்து வருகை  பதிவேடுகளையும், வங்கிப் பரிவர்த்தனை (Bank Transactions) விவரங்களையும்  காவல் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தினால் தான் பல்வேறு உண்மை தெரியவரும்.


தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாப்பதிலும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சென்னை மாநகரக் காவல் துறையினர் முக்கியப் பங்கு வகிக்கின்றனர். கடினமான பணிச்சூழலில் பணியாற்றும் இவர்களது மாதச் சம்பளம், தமிழ்நாடு அரசு வழங்கும் 7-வது ஊதியக் குழுவின் (7th Pay Commission) விதிமுறைகளின்படி கணக்கிடப்படுகிறது. சென்னை காவலர்களின் சம்பளம் முழுக்க முழுக்க அரசு நிதியிலிருந்து நேரடி வங்கிப் பரிமாற்றம் (Direct Benefit Transfer) மூலமாக வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாளிலும் அல்லது அதற்கு முந்தைய நாளிலும் காவலர்களின் வங்கி கணக்கில் (Bank Account) சம்பளம் நேரடியாகச் செலுத்தப்படுகிறது. ஒரு காவலரின் மொத்தச் சம்பளம் என்பது வெறும் அடிப்படை ஊதியம் மட்டுமல்ல. அதனுடன் பல்வேறு கூடுதல் படிகளும் (Allowances) சேர்க்கப்படுகின்றன.

சென்னையில் பணிபுரிவதால், மற்ற மாவட்டங்களை விட சில படிகள் இவர்களுக்குக் கூடுதலாகக் கிடைக்கின்றன. அடிப்படை ஊதியம் (Basic Pay), அகவிலைப்படி (Dearness Allowance – DA), வீட்டு வாடகைப்படி (House Rent Allowance – HRA), மருத்துவப் படி மற்றும் காப்பீடு (Medical Allowance), சீருடைப் படி (Uniform Allowance), இடர் காலப் படி (Risk Allowance), பயணப்படி மற்றும் உணவுப்படி இவை அனைத்தும் காவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சென்னை காவலர்களின் சம்பளம் என்பது அவர்களின் கடின உழைப்பு மற்றும் 24 மணி நேர அர்ப்பணிப்புள்ள பணிக்கு அரசு வழங்கும் ஊதியமாகும். அரசு விதிகளின்படி மிகச் சரியான முறையில் கணக்கிடப்பட்டு, மாதந்தோறும் தங்கு தடையின்றி இவர்களது வங்கிக் கணக்கிற்குச் சம்பளம் சென்றடைகிறது. இது போன்ற முறையான ஊதியக் கட்டமைப்பு, காவல்துறையினர் நேர்மையுடனும் ஊக்கத்துடனும் பணியாற்றப் பெரும் துணையாக நிற்கிறது. இப்படி அரசாங்கம் சலுகை கொடுக்க சில காவலர்களால் அந்த துறைக்கே அவப்பெயர் ஏற்படுகிறது. (முழு ஆதாரம் இறுதி தீர்ப்பு புலனாய்வு மாத இதழ் பத்திரிகையில்….) 

– இறுதி தீர்ப்பு செய்தி குழு 

Registered News Paper in RNI/PRGI

36 ஆண்டுகளைக் கடந்தும் தொடரும் கதிர்பாலுவின் கலைப்பயணம்!

தமிழில் திரைப்பட உலகில் உதவி இயக்குநர், மற்றும் நடிகர், டப்பிங் கலைஞர், மேடை நாடகக் கலைஞர், டப்பிங் கலைஞர்கள் சங்க நிர்வாக பொறுப்பாளர், என திரைத்துறையின் பல்வேறு தளங்களில் பயணித்து, தற்போது தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்கள் மூலம் நடிகராக தனது பயணத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்கிறார் கதிர் என்கிற கதிர்பாலு.

1968ஆம் ஆண்டு “எழுத்தாளர் தயாரிப்பாளர் இயக்குநர் திரு. டி. என். பாலு” – பிரேமா தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் கதிர் என்கிற கதிர்பாலு. சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ. சைக்காலஜி படித்த இவர், சிறு வயது முதலே திரைத்துறை மீது கொண்டிருந்த தீராத ஆர்வத்தின் காரணமாக, திரைப்பட இயக்குநர் பி. வாசு அவர்களிடம் உதவி இயக்குநராக 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணைந்தார்.

நடிகர் அருண்பாண்டியன், கவுதமி நடிப்பில் உருவான ‘அதிகாரி’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகத் தொடங்கிய இவரது திரைப்பயணம், அடுத்த நான்கு ஆண்டுகளில் சுமார் 13 திரைப்படங்களில் தொடர்ந்தது. அதன்பின்னரும் ‘பொண்ணு வீட்டுக்காரன்’, ‘வாய்மையே வெல்லும்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பணியாற்றி, தனது திரை அனுபவத்தை மேலும் விரிவுபடுத்தினார்.

உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில், இயக்குநர் பி. வாசு அவ்வப்போது, “கதிர்… நீ இந்தக் கேரக்டரை பண்ணிடு” என்று கூறி, அவருக்கு சிறுசிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்புகளை வழங்கியுள்ளார். அப்படித்தான் ‘இது நம்ம பூமி’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் கதிர்பாலு.

இதனை தொடர்ந்து ‘அம்மா வந்தாச்சு’, ‘வாலிபர் வெற்றிவேல்’, ‘உழைப்பாளி’, ‘பத்தினி’, ‘புலிவேஷம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தார். இயக்கத்தின் பின்னணியில் இருந்து நடிப்பின் முன்களத்திற்கு வந்த கதிர்பாலுவுக்கு, ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைத்துறையில் ஒரு புதிய அனுபவமாக அமைந்தது.

டப்பிங் கலைஞராக தனி அடையாளம் 1998ஆம் ஆண்டு முதல் டப்பிங் கலைஞராக தனது மற்றொரு பயணத்தைத் தொடங்கிய கதிர்பாலு, கதாபாத்திரங்களின் உணர்வுகளுக்கு ஏற்ற குரல் வெளிப்பாட்டின் மூலம் தனக்கென்று ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.

2004ஆம் ஆண்டு வெளியான ‘ஜனனம்’ திரைப்படத்திற்காகவும், 2006ஆம் ஆண்டு பல திரைப்படங்களுக்காகவும், 2012ஆம் ஆண்டு வெளியான ‘பாண்டிய நாடு’ திரைப்படத்திற்காகவும், 2018ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்திற்காகவும் சிறந்த பின்னணிக் குரல் கலைஞருக்கான தமிழ்நாடு அரசு விருதுகளை பெற்றுள்ளார்.

டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் முக்கியப் பொறுப்பு: திரைத்துறையில் கலைஞராக மட்டுமல்லாமல், டப்பிங் கலைஞர்களின் அமைப்பிலும் தொடர்ந்து பங்களித்து வரும் கதிர்பாலு, 2006ஆம் ஆண்டு முதல் டப்பிங் யூனியனின் செயற்குழு உறுப்பினராகவும், 2018ஆம் ஆண்டு முதல் பொதுச் செயலாளராகவும் இருந்து வருகிறார்.

கலைப் பயணத்துடன், சக கலைஞர்களுக்கான அமைப்புப் பணியையும் தொடர்ந்து முன்னெடுத்து வருவது அவரது திரைப்பயணத்தின் மற்றொரு முக்கியமான அத்தியாயமாக அமைந்துள்ளது.

மேடை நாடகத்திலும் முத்திரை!

2016ஆம் ஆண்டு டப்பிங் கலைஞர்கள் ஒருங்கிணைந்து அரங்கேற்றிய ‘ராகவேந்திரர்’ மேடை நாடகத்தில் சித்திக் மசூத்கான் கதாபாத்திரத்தில் நடித்த கதிர்பாலு, தனது மேடை நடிப்புத் திறமையையும் வெளிப்படுத்தினார்.

வெப் சீரிஸ் முதல் வெள்ளித்திரை வரை!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘வெள்ளை ராஜா’ வெப் சீரிஸில் நடிகரும் டப்பிங் கலைஞருமான அருண் அலெக்சாண்டருடன் இணைந்து நடித்த கதிர்பாலு, தொடர்ந்து நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ‘மாஸ்டர்’ திரைப்படத்திலும் நடித்தார்.

அதன் பின்னர் ‘ஜே பேபி’, ‘மாமன்னன்’, ‘ருத்ரன்’, ‘டிடி ரிட்டர்ன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் தோன்றி, தனது நடிப்புப் பயணத்தை தொடர்ந்து கொண்டிருந்தார். இதனை தொடர்ந்து தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களில் நடித்து வரும் கதிர்பாலு, ‘ரிவால்வர் ரீட்டா’ திரைப்படத்தில் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சிறிய கதாபாத்திரமாக இருந்தாலும், கதையின் போக்கில் தனது திரை இருப்பை அழுத்தமாகப் பதிவு செய்யும் வகையில் கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

‘அன்பில் அவன்’… வில்லன் கதாபாத்திரம் கவனம் ஈர்த்த கதிர்பாலு!

இந்த நிலையில், நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படத்தில் “எம்.எல்.ஏ. ராஜநாயகம் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கதிர்பாலு.

இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் தோன்றியிருந்தாலும், இந்தப் திரைப்படத்தில் வில்லன் எம் எல் ஏ ராஜநாயகம் கதாபாத்திரத்தில் நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்த கதாபாத்திரம் அவரது நடிப்புப் பயணத்தில் குறிப்பிடத்தக்க ஒரு புதிய பரிமாணமாக அமைந்துள்ளது. ‘அன்பில் அவன்’ படத்திற்குப் பிறகு, தற்போது ‘கொம்பன்’ புகழ் இயக்குநர் முத்தையா இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் ‘இருளன்’ திரைப்படத்தில் கதிர்பாலு நடித்து வருகிறார்.

மாறுபட்ட களத்தில் உருவாகும் இப்படத்தில் அவரது கதாபாத்திரம் குறித்த எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. அவரது தங்கை இயக்குநர் கவிதாபாலு இயக்கும் ‘ஆதாரம்’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கும் இந்தத் திரைப்படத்தில் பிரபாகரன் என்ற வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் கதிர்பாலு நடித்துள்ளார். தங்கை கவிதா பாலு இயக்கத்தில் அண்ணன் கதிர் பாலு நடிக்கும் இந்தக் கூட்டணி, குடும்ப உறவையும் கலைப் பயணத்தையும் இணைக்கும் ஒரு சுவாரஸ்யமான திரை முயற்சியாக அமைந்துள்ளது.

36 ஆண்டுகளைக் கடந்த கலைப்பயணம்!

1990ஆம் ஆண்டு உதவி இயக்குநராகத் தொடங்கிய பயணம்… அதன்பின் நடிகர், 1998 முதல் டப்பிங் கலைஞர், தமிழ்நாடு அரசு விருதுகளைப் பெற்ற பின்னணிக் குரல் கலைஞர், டப்பிங் யூனியனில் நிர்வாகப் பொறுப்புகளை வகித்தவர், மேடை நாடகக் கலைஞர், வெப் சீரிஸ் நடிகர், தொடர்ந்து திரைப்படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் நடிகர் என திரைத்துறையின் பல்வேறு தளங்களில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பயணித்து வருகிறார் கதிர் என்கிற கதிர்பாலு.

கதாநாயகன் என்ற ஒரே இலக்கை நோக்கிப் பயணிப்பதைவிட, கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து, தனக்கான இடத்தை உருவாக்கிக் கொண்டு பயணிப்பதே தனது பலம் என்பதை அவரது திரைப்பயணம் வெளிப்படுத்துகிறது. ஏற்கனவே ‘ரிவால்வர் ரீட்டா’, ‘அன்பில் அவன்’ ‘அன்பில் அவன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்து, நடிகர் கதிர் பாலு ‘இருளன்’ ‘ஆதாரம்’ என அடுத்தடுத்த படைப்புகளில் வெவ்வேறு கதாபாத்திரங்களில் பயணிக்கும் நடிகர் கதிர்பாலுவுக்கு, இனிவரும் காலங்களில் இன்னும் அழுத்தமான, வித்தியாசமான கதாபாத்திரங்கள் அமையட்டும்.

‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ ரசிகர்கள் ஆர்வம்

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகின் மிகவும் விரும்பப்படும் கற்பனை உலகங்களில் ஒன்றான ‘நார்னியா’வை, கிரெட்டா கெர்விக் தனது தனித்துவமான பார்வையில் எப்படி அணுகியுள்ளார் என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. சி. எஸ். லூயிஸ் 1955-ல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம், மர்மம், வியப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு மாயாஜால சாகசத்தை வழங்குகிறது. மேலும், நார்னியா உலகம் உருவான கதையையும் இது விவரிக்கிறது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ் (Netflix) நிறுவனம் தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (Sony Pictures Releasing International) நிறுவனம் விநியோகம் செய்கிறது.
 
இந்த டிரெய்லர் பார்வையாளர்களை நார்னியா உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இதில் இளம் டிகோரி கிர்க்கே (Digory Kirke) கதாபாத்திரத்தில் டேவிட் மெக்கென்னாவும், பாலி பிளம்மர் (Polly Plummer) கதாபாத்திரத்தில் பீட்ரிஸ் கேம்ப்பெல்லும் நடித்துள்ளனர். இவர்களது பயணம் நார்னியா எனும் மாயாஜால உலகிற்குள் இவர்களை அழைத்துச் செல்கிறது. இவர்களுடன், இளம் ஜாடிஸ் (Jadis) – அதாவது பிற்காலத்தில் ‘வெள்ளை சூனியக்காரி’யாக (White Witch) மாறப்போகும் கதாபாத்திரத்தில் எம்மா மேக்கியும், ஆண்ட்ரூ மாமா (Uncle Andrew) கதாபாத்திரத்தில் டேனியல் கிரெய்க்கும் நடித்துள்ளனர். மேலும், கேரி முல்லிகன், கோப்னா ஹோல்ட்ப்ரூக் ஸ்மித் மற்றும் மெரில் ஸ்ட்ரீப் ஆகியோரும் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இளம் திறமையாளர்களும் அனுபவம் வாய்ந்த நட்சத்திரங்களும் இணைந்து, இந்த புதிய கற்பனை சாகசத்தை ஒரு மறக்க முடியாத படைப்பாக மாற்றியுள்ளனர்.
 
உலக அளவில் பெரும் வெற்றி பெற்ற ‘பார்பி’ (Barbie) திரைப்படத்தை இயக்கிய கிரெட்டா கெர்விக், சி. எஸ். லூயிஸின் இந்த அற்புதமான கற்பனை உலகிற்கு தனது படைப்பாற்றலைக் கொண்டு வந்துள்ளார். முன்னதாக, சோனி பிக்சர்ஸ் மற்றும் நெட்ஃபிக்ஸ் இணைந்து இப்படத்தின் முதல் பார்வையை (First Look) வெளியிட்டிருந்தன. அதில், ஜாடிஸ், டிகோரி மற்றும் பாலி ஆகியோர் சிவப்பு நிறம் கலந்த ஒரு மாயாஜால சூழலில் காட்சியளித்தனர். தற்போது வெளியாகியுள்ள இந்த டிரெய்லர், அந்த மாயாஜால உலகத்தைப் பற்றிய கூடுதல் காட்சிகளை ரசிகர்களுக்கு வழங்குகிறது. புதிய டிரெய்லரின் மூலம், நர்னியாவின் இந்தப் புதிய அத்தியாயத்திற்காக கெர்விக் உருவாக்கியுள்ள கதாபாத்திரங்களையும் உலகத்தையும் பார்வையாளர்கள் இப்போது இன்னும் நெருக்கமாகப் பார்க்க முடியும்.
 
‘தி மேஜிசியன்ஸ் நெஃப்யூ’ என்பது லூயிஸின் ‘குரோனிகல்ஸ் ஆஃப் நர்னியா’ தொடரில் வெளியீட்டு வரிசைப்படி ஆறாவது புத்தகமாகும், இருப்பினும் இது காலவரிசைப்படி ‘தி லயன், தி விட்ச் அண்ட் தி வார்ட்ரோப்’ நிகழ்வுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கதை நர்னியாவின் தோற்றத்தை ஆராய்வதோடு, அந்த மாயாஜால உலகம் உருவாவதற்கு வழிவகுத்த நிகழ்வுகளையும் அறிமுகப்படுத்துகிறது.
 
நெட்ஃபிலிக்ஸால் தயாரிக்கப்பட்டு, சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனலால் விநியோகிக்கப்படும் ‘நர்னியா: தி மேஜிசியன்ஸ் நெஃப்யூ’, இந்தியாவில் 2027 பிப்ரவரி 12 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.