வேலை தேடி அலையும் நான்கு இளைஞர்களுக்கு ஒரு தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிகியூட்டிவ் வேலை கிடைக்கிறது. வேலை கிடைத்த சந்தோஷத்தைவிட, வேலையைச் செய்யாமல் எப்படி சமாளிப்பது என்பதில்தான் அவர்களுக்கு அதிக ஆர்வம். நிறுவனத்தின் இலக்குகளைப் பற்றி பெரிதாகக் கவலைப்படாமல், தங்களுக்குத் தெரிந்த விதத்தில் பொழுதைக் கழிக்கும் இந்த நால்வருக்கும் ஒரு கட்டத்தில் பிரச்சினை காத்திருக்கிறது.
கொடுக்கப்பட்ட இலக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும் இல்லையென்றால் வேலையை இழக்க நேரிடும் என்ற நெருக்கடி உருவாகிறது. இதற்கிடையில் ஒரு பிரபல நிறுவனத்தைச் சேர்ந்த குடும்பத்துடன் தொடர்புடைய ஒரு சிறுவன் கடத்தப்படுவது கதையின் போக்கையே மாற்றுகிறது. அந்தக் கடத்தல் வழக்கின் நிழல் இந்த நான்கு இளைஞர்களின் மீதும் விழ, அதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே படத்தின் கதை.
சித்து மூலிமணி, சந்தோஷ், ஸ்ரீ வைஷ்ணவ், கிருஷ்ணா விஜய், பாலாஜி, ஸ்ரீகாந்த், அமிதா ரங்கநாதா, நிஷா ஹெக்டே, மேரி லிட்டி & கீர்த்தனா புல்கி தனக்கு கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். குறிப்பாக, சூழ்நிலையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவிக்கும் தருணங்களிலும், பிரச்சினையிலிருந்து தப்பிக்க முயலும் காட்சிகளிலும் இயல்பான நடிப்பு படத்திற்கு நகைச்சுவைத் தன்மையைச் சேர்க்கிறது. வேலை மீது அக்கறையில்லாமல் இருக்கும் இளைஞர்கள் தங்களால் சமாளிக்க முடியாத ஒரு பெரிய பிரச்சினைக்குள் சிக்கிக்கொள்ளும்போது ஏற்படும் குழப்பங்களே படத்தின் பிரதான பொழுதுபோக்கு.
படத்தின் மிக முக்கியமான பலம் அதன் பெங்களூரு களம். நகரத்தின் இயல்பான சூழலைப் பயன்படுத்தி கதை நகர்த்தப்பட்டிருப்பது படத்திற்கு தனித்துவமான தோற்றத்தைத் தருகிறது. குறிப்பாக, பெங்களூருவின் பன்மொழிச் சூழலைப் பிரதிபலிக்கும் வகையில் வெவ்வேறு மொழிப் பின்னணியைக் கொண்ட கதாபாத்திரங்களை உருவாக்கியிருப்பது ரசிக்க வைக்கிறது. இயக்குநர் தம்பிதுரை எத்துராஜ், கதையை நேரடியாகச் சொல்லாமல் கடந்த காலத்தையும் நிகழ்காலத்தையும் இணைத்து திரைக்கதையை நகர்த்தியிருக்கிறார்.
கோல்ட் கால்- டார்கெட் வலி.
















