சென்னை பெரம்பூர் லோகோ பிரிட்ஜ் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ். இவர் தனது பகுதியில் கரும்பு ஜூஸ் கடை நடத்தி வருகிறார். இவருடைய 20 வயது மகன் கல்லூரி மாணவன் சாம், கடந்த திங்கட்கிழமை ஜூஸ் கடையில் தனது தந்தைக்கு உதவியாக வேலை செய்து கொண்டிருந்தார்.
 
அப்போது, எதிர்பாராத விதமாக கரும்பு ஜூஸ் பிழியும் மிஷினில் சாமின் கை சிக்கியதில், அவரது விரலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை அருகில் இருந்த தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்துள்ளனர்.  பின்னர், அங்குள்ள மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலத்தில் உள்ள சவீதா மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக சாமை அனுமதித்தனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சாமிற்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, காயமடைந்த ஒரு விரலை துண்டிக்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
காலை வேளையிலேயே அறுவை சிகிச்சை செய்யப்படும் என்று கூறப்பட்ட நிலையில், கால தாமதமாக மாலையில்தான் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு விரலை மட்டுமே துண்டிப்பதாகக் கூறிவிட்டு, இரண்டு விரல்களை துண்டித்து விட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் சாமின் உடல்நிலை திடீரென மோசமடைந்து, கிட்னி உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் பாதிக்கப்பட்டதாகக் கூறிய மருத்துவர்கள், தீவிர சிகிச்சை அளித்து மீட்டெடுத்து விடுவதாகப் பெற்றோரிடம் உறுதி அளித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை சுமார் 7 மணி அளவில் சாம் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சியும் அதிர்வும் அடைந்த சாமின் பெற்றோரும் உறவினர்களும் ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் கண்ணீர் மல்கப் புகார் அளித்தனர்.
 
சவீதா மருத்துவமனையில் போதிய அனுபவமிக்க மருத்துவர்கள் இல்லை என்றும், மருத்துவப் பயிற்சி மாணவர்களே சிகிச்சையில் ஈடுபட்டதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர். தவறான மருந்துகள் மற்றும் கவனக்குறைவான சிகிச்சையே சாமின் உயிரிழப்பிற்கு முக்கியக் காரணம் எனக் குறிப்பிட்ட உறவினர்கள், அலட்சியமாகச் செயல்பட்ட சவீதா மருத்துவமனை நிர்வாகத்தின் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேதனையுடன் வலியுறுத்தியுள்ளனர்.
 
புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அங்குப் பணியாற்றும் இரண்டு மருத்துவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். அலட்சியமாகச் செயல்பட்டு வாலிபரின் உயிரிழப்பிற்குக் காரணமான மருத்துவர்கள் ரோஷன், சூர்யா ராவ் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் மீது ஸ்ரீபெரும்புதூர் காவல் ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
 
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
 
– எமது இறுதி தீர்ப்பு நிருபர் குழு
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here