டி.ராஜேந்தர் இயக்கத்தில் நளினி நாயகியாக அறிமுகமான படம், ‘உயிருள்ளவரை உஷா’. கங்கா, ராதா ரவி, எஸ்.எஸ்.சந்திரன், கவுண்டமணி, சரிதா உள்பட பலர் நடித்திருந்தனர். 1983-ம் ஆண்டு வெளியான இப்படம் சூப்பர் ஹிட்டானது. படத்தில் இடம் பெற்ற இந்திரலோகத்து சுந்தரி, வைகைகரை காற்றே நில்லு, இதயமதை கோவிலென்றேன் உள்பட அனைத்து பாடல்களும் வெற்றி பெற்றன. இந்நிலையில், இப்படம் 43 வருடங்களுக்குப் பிறகு 4K டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் 2026-பிப்.13-ம் தேதி நேற்று வெளியானது.
விமர்சனம்:
நாயகன் கங்கா, நாயகி நளினி இருவரும், அம்மா, அப்பா இல்லாதவர்கள். இருவரும் ஒரே காலேஜில் ஒரே வகுப்பில் படிக்கிறார்கள். இருவரது வீடுகளும் அருகருகே இருக்கிறது. நாயகன் அத்தை வீட்டில் வளர்கிறான். நாயகி அக்காவின் பராமரிப்பில் வளர்கிறாள், நாயகிக்கு ஒரு அண்ணனும் உண்டு. காலேஜில் நாயகன், நாயகியை அடிக்கடி கிண்டல் பண்ணுவதும், கேலி பேசுவதுமாக இருக்கிறான். இது நாயகிக்குப்பிடிக்கவில்லை. நாயகனைக் கண்டாலே நாயகிக்கு வெறுப்பு.
ஒரு சமயம் நாயகன், நாயகியை எல்லை மீறிப்பேச கோபம் ஆன நாயகி, நாயகன் எழுதிக்கொடுத்ததாக ஒரு பொய்யான லவ் லெட்டரை ரெடி பண்ணி காலேஜ் பிரின்சிபாலிடம் தருகிறாள். இதனால் நாயகனுக்கு காலேஜில் கெட்ட பெயர். காலேஜில் நடக்கும் ஒரு நாடகத்தில் நாயகனுக்கு துச்சாதனன் வேடம், நாயகிக்குப் பாஞ்சாலி வேடம். பொய்யான குற்றச்சாட்டு வைத்த நாயகியைப் பழி வாங்க நாயகன், நாயகியை முத்தம் இட்டு விடுகிறான். நாயகியின் அண்ணன் நாயகனை அடி வெளுத்து விடுகிறான். காயம்பட்ட நாயகனைப் பார்த்து நாயகிக்குக் காதல் வருகிறது. நாயகியின் அண்ணன் தான் இவர்களது காதலுக்கும், திரைக்கதைக்கும் வில்லன். இவர்களது காதல் வெற்றி அடைந்ததா? இல்லையா? என்பதே மீதி கதை…
பாடல்கள் எழுதி, இசையமைத்து, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி இருப்பவர் டி ராஜேந்தர். செயின் ஜெயபால் என்னும் கேரக்டரில் டி ராஜேந்தர் வருகிறார். காதலர்களை சேர்த்து வைக்கும் கேரக்டர். வில்லனாக ராதாரவி, காமெடி செய்யும்போது எம். ஆர். ராதா குரலிலு , வில்லத்தனம் செய்யும் பொது எம். ஆர். வாசு குரலிலும் பேசுகிறார்.
எஸ் எஸ் சந்திரன், கவுண்டமணி இருவரும் வில்லனுக்கு அல்லக்கைகளாக வருகிறார்கள். காலேஜ் புரொபஸராக வெண்ணிற ஆடை மூர்த்தி காமெடி செய்கிறார். இவர் எழுப்பும் விசித்திர ஒலிகளுக்கு என ஒரு ரசிகர் கூட்டமே உண்டு. நாயகியின் அக்காவாக சரிதா குணச்சித்திர ரோல். வாழாவெட்டியாக இருக்கும் தன்னைப்பற்றி அடிக்கடி சுய இரங்கல் கவிதை வாசிப்பது கச்சிதம்.
நாயகனின் அத்தையாக காந்திமதி இயல்பான கிராமத்து நடிப்பு. ராணிகாந்த், நாகை சோமன் இருவரும் இணைந்து ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்கள். நாயகியின் க்ளோஸ்-அப் ஷாட்களில் இவர்களது கை வண்ணம் தெரிகிறது.
உயிருள்ளவரை உஷா- ‘காதல் துடிப்பு’

















