சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலியானவரின் குடும்பத்துக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு:

விருதுநகா் மாவட்டம், சிவகாசி வட்டம், வெற்றிலையூரணி கிராமத்தில் இயங்கிவரும் தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் ஞாயிற்றுக்கிழமை காலை எதிா்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் பாலகுருசாமி (50) என்பவா் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த செய்தியைக் கேட்டு மிகவும் அதிா்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

இந்த விபத்தில் காயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கண்ணன் (50), சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ராஜபாண்டி (37), ராஜசேகா் (29), ஜாா்க்கண்ட் மாநிலத்தைச் சோ்ந்த கமலேஷ் ராம் (28), ரமேஷ் (20) ஆகிய ஐந்து பேருக்கும் சிறப்பு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன்.

இந்த விபத்தில், இறந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினா்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவருக்கு ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிட உத்தரவிட்டுள்ளேன் என்று முதல்வா் தெரிவித்துள்ளாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here