சென்னை மாதவரம் நான்கு வழிச் சாலை ரவுண்டானா அருகே இன்று முற்பகல், மஞ்சம்பாக்கம் டோல்கேட்டில் இருந்து கோயம்பேடு நோக்கிச் செல்லும் வழியில் வந்த சரக்கு லாரி, ஸ்கூட்டி மீது மோதியதில் லாரியின் முன் சக்கரத்தில் சிக்கிய ஸ்கூட்டியில் வந்த கணவன், மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.

விபத்தை ஏற்படுத்திய லாரி ஓட்டுநர், விபத்து நடந்ததை அறிந்ததும் அங்கிருந்து தப்பி ஓட்டம் பிடித்தார்.பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இதே போன்று சம்பவம், இரண்டு நாட்களுக்கு முன்பு அதே இடத்தில் நிகழ்ந்துள்ளது, இருசக்கர வாகனத்தில் சென்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வத்தின் மனைவி இரண்டு கால்களை இழந்த நிலையில் அவரது தோழி, கண்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவம் அச்சாலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று மேலும் இரண்டு பேர் பலியாகியிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.

மாதவரம் மேம்பாலம் அருகே போக்குவரத்து நெரிசல் தொடர்வதால், ரவுண்டானாவில் பாதையை மாற்றி அமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மாதவரம் மேம்பாலம் ரவுண்டானா சந்திப்பில் மூலக்கடை, கொசப்பூர், புழல், ரெட்டேரி ஆகிய 4 புறங்களில் இருந்தும் தனியார் மற்றும் மாநகரப் பேருந்து, லாரி, கார், பைக் என ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்கின்றன.

இவ்வாறு அதிகப்படியான வாகனங்கள் பயன்படுத்தக்கூடிய இந்த ரவுண்டானா பகுதியில் வாகனங்கள் செல்ல போதிய இடவசதி இல்லாததால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமப்படுகின்றனர். இந்த வாகன நெரிசலை சீரமைக்க தினம்தோறும் போக்குவரத்து போலீசார் அவதிப்பட்டு வருகின்றனர்.

ஆனாலும் இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சனை தொடர் கதையாக உள்ளது. இதனால் அவசரத்திற்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ், ஆட்டோ போன்ற வாகனங்களும் இந்த போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றன. இந்த போக்குவரத்து நெரிசலை குறைக்க தேசிய நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ரவுண்டானாவில் போக்குவரத்து பாதைகளில் மாற்றம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

 – எமது நிருபர் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here