சென்னையில் போதை பொருள் கடத்தல், பதுக்கல் மற்றும் விற்பனையை தடுக்க அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் போதை பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாரும் ஒருங்கிணைந்து கண்காணித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, வானகரம் போலீஸார் கடந்த 18ம் தேதி போரூர் டோல் கேட், சர்வீஸ் சாலையில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். இதில், பிடிபட்டவர்கள் ஐயப்பன் தாங்கல் பகுதி சேர்ந்த சரண் ராஜ் (36), போரூரை சேர்ந்த ரெக்ஜின் மோன் (23), நூம்மல் ஜமுனா குமார் (27) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து மெத்தம்பெட்டமைன் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் சென்னை ஆழ்வார் திருநகரைச் சேர்ந்த பவன்குமார் (38), நெற்குன்றம், வடவென்னி அம்மன் நகரைச் சேர்ந்த ஹாசிக் பாஷா (30), அதே பகுதி பட்டேல் சாலையை சேர்ந்த ஆறுமுகம் (42), வடபழனி ஆற்காடு சாலை பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (35) ஆகிய 4 பேரையும் போலீஸார் இன்று கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். முன்னதாக அவர்களிடம் இருந்து மெத்தம்பெட்டமைன் பறிமுதல் செய்யப்பட்டது.
சிறையில் அடைக்கப்பட்ட பிரபாகரன் சினிமா உதவி இயக்குநராகவும், சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்கும் சினிமா நடிகராகவும் உள்ளார். விரைவில் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதுபோல் நண்பர்களுடன் சேர்ந்து போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டார் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. பிரபாகரன் மெத்தம்பெட்டமைனை சினிமா துறையைச் சேர்ந்த வேறு யாருக்கேனும் விற்பனை செய்துள்ளாரா ? என்ற கோணத்திலும் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.