மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரைச் சேர்ந்தவர் சமீரா பாத்திமா. 35 வயதான இவர் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு, கடந்த 2022 ஆம் ஆண்டு குலாம் பதான் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக சென்ற நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு புயல் வீசியுள்ளது. அப்போது, குலாம் பதான் தன்னை தாக்கி துன்புறுத்துவதாக சமீரா பாத்திமா கூறியுள்ளார்.
அத்துடன், குடும்ப வன்முறை புகார் அளிப்பேன் என்று மிரட்டி 10 லட்சம் ரூபாய் பறித்துக்கொண்டு எஸ்கேப் ஆகியுள்ளார். இதையடுத்து, தான் நம்ப வைத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குலாம் பதான் போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் சமீராவை பிடித்தனர். ஆனால், 8 மாத கர்ப்பமாக இருந்த அவர், அதைக் காட்டி போலீசிடம் இருந்து தப்பியுள்ளார்.
தொடர்ந்து போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் கைக் குழந்தையுடன் சமீரா சிக்கியுள்ளார். அவரிடம் நடத்திய விசாரணையில் சினிமாவை விஞ்சும் அளவிற்கு கிரைம் ஸ்டோரி அம்பலமாகியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியையான சமீரா பாத்திமாவுக்கு, ஏற்கனவே 12 வயதில் ஒரு குழந்தை உள்ளது. இவர், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், மேட்ரிமோனி மூலம் இரண்டாவது திருமணத்திற்கு வரன் தேடும் ஆண்களை டார்கெட் செய்து காய் நகர்த்தியுள்ளார்
குறிப்பாக பணம் படைத்தவர்கள், வசதி வாய்ப்புடன் இருக்கும் இஸ்லாமிய ஆண்களுக்கு வலை வீசியுள்ளார். இவரின், மாய வலையில் விழும் அப்பாவி ஆண்களிடம், தான் கணவனை இழந்து குழந்தையுடன் பரிதவித்து வருவதாக கூறியுள்ளார். அவரின் பேச்சைக் கேட்டு செவி சாய்க்கும் இளைஞர்களிடம் தேனாய் பேசி, தனது மோசடியை அரங்கேற்றியுள்ளார். பின்னர், முறைப்படி திருமணம் நடைபெற்றதும் சிறிது நாட்களில், தனது நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
அப்போது, சம்பந்தப்பட்ட ஆணுக்கு எதிராக பாலியல் மற்றும் துன்புறுத்தல் புகார்களை போலியாக உருவாக்கியுள்ளார். வேண்டுமென்றே குடும்ப வன்முறைக்கு ஆளானதாக போலி ஆதாரங்களை திரட்டி போலீசில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகார்களை திரும்பப் பெற வேண்டும் என்றால் லட்சக்கணக்கில் பணம் தர வேண்டும் என மிரட்டி பணம் மற்றும் நகைகளை பறித்துக் கொண்டு சிட்டாய் பறந்துள்ளார்.
இதுபோன்று, ஒருவரிடம் 50 லட்சமும், மற்றவர்களிடம் 15 லட்சம், 10 லட்சம் என சுருட்டியுள்ளார். கடந்த 15 ஆண்டுகளில் இதுபோன்று, ரிசர்வ் வங்கி அதிகாரி உட்பட 8 பேரிடம் மோசடி செய்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சினிமாவில் ஏட்டு ஏகாம்பரத்திடம் பஞ்சாயத்துக்காக வருபவர்கள் போன்று, அடுத்தடுத்து சமீரா பாத்திமாவிடம் ஏமாந்தவர்கள் புகார் கொடுத்துள்ளனர். இதில், கடைசியாக குலாம் பதான் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த நிலையில், நாக்பூரில் பிரபலமாக திகழும் ‘டோலி கி டாப்ரி’ என்ற டீக்கடையில் ஒருவரை சந்திக்க சமீரா வந்துள்ளார். அங்கு, போலீசார் சுற்றிவளைத்தபோது, அவர் ஒன்பதாவது திருமணத்திற்காக ஒருவரை சந்தித்து காய் நகர்த்தியது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், கையும் களவுமாக சிக்கிய சமீரா பாத்திமாவுக்கு, போலீசார் செக் வைத்து கைது செய்தனர்.
அவர், 8 பேரைத் தான் ஏமாற்றினாரா? அல்லது வேறு யாரும் ஏமாந்துள்ளனரா என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரிசர்வ் பேங்க் அதிகாரி உட்பட 8 பேரை ஏமாற்றி திருமண மோசடி செய்து, கோடிக்கணக்கில் சுருட்டிய கல்யாண ராணி கையும் களவுமாக கைது செய்யப்பட்ட சம்பவம் மகாராஷ்டிராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.