சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது தண்டவாள டிராக் சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார்.
இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது தண்டவாளம் விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், ராமாபுரம் – பூந்தமல்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் இருந்து பூந்தமல்லியை இணைக்கும் வகையில் மெட்ரோ கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கத்திபாரா மேம்பாலத்தில் இருந்து ராமாபுரம் – போரூர் – அய்யப்பன்தாங்கல் வழியாக பூந்தமல்லி வரை மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தூண்கள் அமைக்கப்பட்டு, அதனை இணைக்கும் வகையில் தண்டவாளப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ராமாபுரத்தில் உள்ள டி.எல்.எஃப் தொழில்நுட்பப் பூங்கா மற்றும் எல்&டி நிறுவனங்களுக்கு இடையே நடைபெற்று வந்த மெட்ரோ ரயில் பாலத்தின் கட்டுமானப் பணியின்போது இரு தூண்களுக்கு இடையே அமைக்கப்படும் தண்டவாள டிராக் விழுந்து இன்று விபத்துக்குள்ளானது.
20 அடி உயரத்தில் இருந்து தண்டவாளம் சரிந்து விழுந்ததில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற ஒருவர் உயிரிழந்ததாகத் தெரிகிறது. விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை முதலே பரவலாக மழை பெய்த நிலையில், ராமாபுரம் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து நேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.