நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வேப்பங்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (36). ரிக் நிறு வனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்த இவர், விவசாயமும் மேற்கொண்டு வந்தார். இவரது மனைவி பாரதி (26), மகள்கள் பிரக்திஷாஸ்ரீ (10), ரித்திகாஸ்ரீ (7), தேவாஸ்ரீ (6), மகன் அக்னீஸ் வரன் (1).
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 3 பெண் குழந்தைகளும் கோவிந்தராஜுடன் உறங்கினர். மற்றொரு அறையில் பாரதி, அக்னீஸ்வரனுடன் உறங்கினார். நேற்று அதிகாலை குழந்தைகளின் அலறல் சப்தம் கேட்டுள்ளது. திடுக்கிட்டு எழுந்த பாரதி அறையில் இருந்து வெளியே வர முற்பட்டுள்ளார்.
ஆனால், அறைக் கதவு வெளியே தாழிடப்பட்டு இருந்தது. கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்தபோது 3 குழந்தைகளும் கழுத்து அறுபட்ட நிலையில் இறந்து கிடந்தன. கணவர் கோவிந்தராஜ் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்துள்ளார்.
தகவலறிந்து வந்த மங்களபுரம் காவல் துறையினர் 4 பேரின் உடல்களையும் மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், கோவிந்தராஜ் ரூ.20 லட்சம் கடனை கட்ட முடியாத விரக்தியில் பெண் குழந்தைகளை கொலை செய்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது தொடர்பாக மங்களபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

















