Friday, November 7, 2025
Blog

‘தடை அதை உடை’ விமர்சனம்

குணாபாபு தனது நண்பர்களுடன் இணைந்து குறும்படம் தயாரிக்கிறார். அந்த குறும்படத்தை சரியில்லை என்று கூறி தயாரிப்பாளர் நிராகரிக்கிறார். சோகத்தில் தனது நண்பர்களுடன் உலா வரும் குணாபாபு, அந்தவழியாக காரில் செல்லும் ஒருவரிடம் லிப்ட் கேட்டு செல்கிறார். அவரிடம் தனது குறும்படத்தின் கதையை சோகத்துடன் சொல்கிறார்.

அவர் சொல்லும் கதையில் ஆதிக்க வர்க்கத்தினர் ஏகப்பட்ட இடையூறுகளையும், தடைகளையும் தாண்டி ஒரு சிறுவன் பள்ளிக்கூட வாசலை மிதிக்கிறான் என்பது போல குறிப்பிடப்படுகிறது. இதில் அங்காடித்தெரு மகேஷ் உள்ளிட்டோர் இடம்பெறுகிறார்கள். ‘யூ-டியூப்’ மோகத்தால் மக்கள் சந்திக்கும் அவலம் சொல்லப்படுகிறது. இரண்டு கதைகளும் இணையும் இடத்தில் சில திருப்பங்களும் உண்டாகின்றன. அவை என்ன? என்ன நடந்தது? என்பதே கதை…

அங்காடி தெரு மகேஷ், திருக்குறள் குணா பாபு, கே.எம்.பாரிவள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது என முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களில் ஒரு சிலர் சில படங்களில் நடித்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் புதுமுகங்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அந்த அடையாளம் தெரியாதபடி அனைவரும் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். பல வருடங்களுக்கு பிறகு திரைக்கு வந்துள்ள ‘அங்காடித்தெரு’ மகேஷ் நடிப்பு கவனிக்க வைக்கிறது. சமூக ஊடகங்கள் மூலம் ஏற்படும் சமூக சீர்கேடுகள் மற்றும் அதன் பேராபத்துகளையும் படம் சொல்லுகிறது. 

மைனஸ்: கதையை தெளிவாக சொல்லவில்லை…. இசையில் கூடுதல் கவனம் தேவை….

மொத்தத்தில் இந்த ’தடை அதை உடை’ குழப்பம்.

‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா!

ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரிப்பில், இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் கௌஷிக் ஸ்ரீ ராம், பிரதீபா நடிப்பில் மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் வழங்கும் ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் இயக்குநர்கள் எஸ்.ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா, ‘பிக்பாஸ்’ பிரபலங்கள் விஷ்ணு, சிபி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

அறிமுக இயக்குநர் எஸ்.ஜே.என். அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கிறிஸ்டினா கதிர்வேலன்’ திரைப்படத்தில் கௌஷிக் ராம், பிரதீபா, சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, ஜெயக்குமார், அருள் டி. சங்கர், டி எஸ் ஆர், ‘சில்மிஷம்’ சிவா, ஜனனி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பிரஹத் முனியசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார். கிராமத்து காதல் கதையாக தயாராகி இருக்கும் இப்படத்தை ஸ்ரீ லட்சுமி ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி தயாரித்திருக்கிறார். மிஸ்டர் டெல்டா கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் கார்த்திக் வீரப்பன் இணை தயாரிப்பாளராக பணியாற்றி இருக்கிறார்.

நவம்பர் 7ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இயக்குநர்கள் எஸ். ஆர். பிரபாகரன், விஜய் ஸ்ரீ, மைக்கேல் கே. ராஜா ஆகியோர் படத்தின் இசையை வெளியிட, படக் குழுவினர் பெற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் டாக்டர் ஆர். பிரபாகர் ஸ்தபதி பேசுகையில், ”இப்படத்தில் பணியாற்றிய கலைஞர்கள் புதியவர்கள் என்பதால் அனுபவம் புதிதாக இருந்தது. தரமான படைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பன் பேசுகையில், “தமிழ் திரை உலகில் சமீபகாலமாக கிராமிய பின்னணியிலான காதல் கதைகள் வெளியாவது குறைவாக இருந்தது. அந்த குறையை கிறிஸ்டினா கதிர்வேலன் போக்கும் என நம்புகிறோம். இந்தப் படத்தின் கதை நம் வீட்டில் இயல்பாக நடக்கும் சம்பவங்களைப் போல் இருக்கும். ஆனால் வலி நிறைந்த யதார்த்தமானதாக இருக்கும். இதனை அடுத்த தலைமுறையினருக்கு எப்படி சொல்லப்பட வேண்டும் என்பதை இயக்குநர் அழகாக சொல்லி இருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி பேசுகையில், ”இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் இயக்கத்தில் வெளியான குறும்படம் ஒன்றில் ஆறாண்டுகளுக்கு முன் பணியாற்றினேன். அதற்காக அவரிடம் இருந்து முதல்முறையாக 1500 ரூபாயை சம்பளமாக பெற்றுக் கொண்டேன். அப்போது நான் படம் இயக்கினால் நீங்கள்தான் ஒளிப்பதிவாளர் என வாக்குறுதி அளித்தார். அதன் பிறகு இரண்டு ஆண்டு காலம் கழித்து அவருடன் பயணித்து ஏராளமான லொகேஷன்களை பார்வையிட்டோம். மூன்று ஆண்டுகள் வரை இந்த பணி தொடர்ந்தது. அங்கு சென்று இந்தந்த காட்சிகளை இந்த இடங்களில் படப்பிடிப்பு நடத்தலாம் என விவாதித்தோம். படப்பிடிப்பில் சந்தோஷமாக பணியாற்றினோம். உச்சகட்ட காட்சியை படமாக்கும் போது எங்களுக்கும் எமோஷனலாக இருந்தது. படம் சிறப்பாக வந்திருப்பதாக நம்புகிறோம். இந்தப் படத்திற்காக இசையமைப்பாளர் ரகுநந்தன் அற்புதமாக பணியாற்றியிருக்கிறார்,” என்றார்.

இயக்குநர் மைக்கேல் கே. ராஜா பேசுகையில், ”சின்ன சின்ன படங்களை இயக்கி தான் எண்பது சதவீதத்திற்கும் அதிகமான இயக்குநர்கள் இங்கு வெற்றி பெற்று இருக்கிறார்கள். படத்தின் பாடல் காட்சிகள், முன்னோட்டத்தை பார்த்தவரை அனைத்து நடிகர்களும், நடிகைகளும் இயல்பாக நடித்திருக்கிறார்கள். படத்தின் நாயகனான கௌஷிக் ராம் நேரில் பார்க்கும்போது ஸ்மார்ட் ஆக இருக்கிறார். இவர் எப்படி அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்க முடியும் என்று தோன்றியது. ஆனால் திரையில் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் சிறந்த எதிர்காலம் இருக்கிறது. வாழ்த்துக்கள். நாயகி பிரதீபாவும் நன்றாக நடித்திருக்கிறார். அவருக்கும் என் வாழ்த்துக்கள். படத்தின் இயக்குநரின் பெயர் அலெக்ஸ் பாண்டியன். அந்த பெயரிலேயே கம்பீரம் இருக்கிறது. படமும் அதே அளவு இருக்கும் என்று நம்புகிறோம். பாடல்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. அதிலும் உருமி.. பாடல் நல்லதொரு அதிர்வை ஏற்படுத்தியது. படம் வெற்றி பெற படத்தில் பணியாற்றிய படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.

இயக்குநர் விஜய் ஸ்ரீ பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து எனக்கு எல்லா  விஷயங்களும் தெரியும். காரணம் இயக்குநர் அலெக்ஸ் பாண்டியன் என்னுடைய உதவியாளர். ‘பவுடர்’ படத்தில் அவர் என்னுடன் பணியாற்றும்போது தான் ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி அறிமுகமானார். அவர் நான் இயக்கிய ‘ஹரா’ படத்திற்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றினார். படத்திற்கு ஹீரோவாக ஒரு புதுமுகம் வேண்டும் என்று தேடிய போது ‘ஹரா’ படத்தில் சிறிய வேடத்தில் நடித்திருந்த கௌஷிக் ராம் தேர்வானார்.

படத்தை உருவாக்கும் போது நிறைய சவால்கள் இருக்கும். அதனை இயக்குநர் அலெக்ஸ் எதிர்கொண்டார். இதற்கு அவரது பெயரில் இருக்கும் பாண்டியன் என்ற ஒரு நண்பர் உதவி புரிந்தார். அவர் தான் அலெக்ஸை இந்த மேடையில் அமர வைத்திருக்கிறார். அதனால் அலெக்ஸ் பாண்டியன் இருவரையும் வெற்றி பெற மனதார வாழ்த்துகிறேன்,” என்றார்.

‘பிக்பாஸ்’ பிரபலம் நடிகர் சிபி பேசுகையில், ”இந்தப் படத்தின் பாடல்களையும், முன்னோட்டத்தையும் பார்க்கும்போது இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியான ‘காதல்’ படத்தை பார்க்கும் போது ஏற்பட்ட உணர்வு உண்டாகிறது. ஏனென்று தெரியவில்லை, அந்தப் படத்தை பார்க்கும் போதும் இதே போன்றதொரு ஃபீல் இருந்தது. இந்தப் படத்திற்கு இசை மிகப் பெரிய பலம். ரகுநந்தன் அற்புதமாக பாடல்களை வழங்கி இருக்கிறார். பின்னணி இசையும் நன்றாக வழங்கி இருப்பார். காதல் திரைப்படம் எப்படி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோ, அதேபோல் இந்த திரைப்படமும் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.

நடிகர் விஷ்ணு பேசுகையில், ”இந்தப் படத்தை சின்னப் படம் என்று சொன்னார்கள். இந்த கதையை இயக்குநர் எத்தனையோ தயாரிப்பாளரிடம் சொல்லி, அவர்களால் நிராகரிக்கப்பட்டு இறுதியாக இந்த தயாரிப்பாளர் தயாரிக்க ஒப்புக் கொண்டிருப்பார். அதனால் முதலில் தயாரிப்பாளருக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். அந்த வகையில் இயக்குநருக்கு தயாரிப்பாளர் வாய்ப்பை வழங்கியிருக்கிறார். இந்த படம் நன்றாக இருக்கிறது. திரையரங்கில் நன்றாக ஓடக்கூடும் என்றும் தெரிகிறது. படக்குழுவினர் அனைவரும் உற்சாகத்துடன் உள்ளனர். படத்தின் நாயகியான பிரதிபாவின் ரீல்ஸ்களை பார்த்திருக்கிறேன். அதில் அவர்கள் எனர்ஜியுடன் நடனம் ஆடியிருப்பார்கள். அவர் ராப்பும் பாடியிருப்பார். மிகுந்த திறமைசாலி. அவர் திரைப்படத்தில் நடிகையாக நடிப்பார் என்று எதிர்பார்த்து இருந்தேன். அது இன்று நடந்தேறி இருக்கிறது. அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கதையின் நாயகனான கௌஷிக் ராமிக்கும் என் வாழ்த்துக்கள். நன்றாக நடித்திருக்கிறார். ஹீரோ வெள்ளையாக இருக்கிறாரே, இவர் எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் என்று என்னிடம் கேட்டனர். இதே விமர்சனத்தை நானும் எதிர்கொண்டேன். வெள்ளையாக பிறந்தது எங்களுடைய தப்பா? அதே தருணத்தில் சிலர் பார்த்தவுடன் ஸ்மார்ட்டாக இருக்கிறாய் என்றும் சொல்வார்கள். வெள்ளையாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் அவர் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்திற்கு அவர் எவ்வளவு தூரம் நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார் என்பதை மட்டும் பார்த்து ரசிக்க வேண்டும்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் அளவற்ற நகைச்சுவை உணர்வு கொண்டவர். அவருடன் பழகியவர்களுக்கு இது தெரியும். அவருடைய ‘ட்ரேட்மார்க்’ சிரிப்பு தனித்துவமானது. அவர் இயக்குநர்களுக்கு பிரியமான இசையமைப்பாளர். இயக்குநர்கள் எதை கேட்கிறார்களோ, அதை தரக்கூடிய திறமை மிக்கவர்.

இந்த திரைப்படத்திற்கு அதிக  திரையரங்குகளும், காட்சிகளும் கிடைக்க வேண்டும் என இறைவனை பிரார்த்தித்துக் கொள்கிறேன்,” என்றார்.

இசையமைப்பாளர் ரகுநந்தன் பேசுகையில், ”என்னிடம் இசையமைப்பதற்காக வரும் படங்கள் அனைத்தும் படப்பிடிப்பு நிறைவு செய்த பிறகு தான் வருகின்றன. கிறிஸ்டினா கதிர்வேலன் படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்த பிறகு தான் படத்தை காண்பித்தார்கள். படத்தில் நிறைய வேரியேஷன்ஸ் இருந்தது. ஒரு கிராமத்தில் தொடங்கி, கல்லூரியில் பயணித்து, அதன் பிறகு வேறு ஒரு ஜோடி திரைக்கதையில் அறிமுகம் ஆகிறார்கள். இப்படி இருந்ததால் இதற்கு பின்னணி இசை தாமதமாகும் என இயக்குநரிடம் தெரிவித்திருந்தேன். இயக்குநரோ  முதலில் பாடலை உருவாக்கி விடலாம் என்றார்.‌ நிறைய மாண்டேஜ் காட்சிகளை படமாக்கி இருந்தார். அதை வைத்து காதல் பாட்டை முதலில் உருவாக்கினோம். அந்த வகையில் ‘செல்லாட்டி..’ என்ற பாடலை உருவாக்கினோம். அந்தப் பாடலுக்காக ஒரே ஒரு டியூன் மட்டும் தான் அமைத்தேன். இயக்குநர் அதைக் கேட்டு விட்டு ஓகே சொன்னார். அவர் பாடல்கள் அனைத்தும் எனர்ஜிட்டிக்காக இருக்க வேண்டும். எங்கும் போர் அடிக்கக் கூடாது என்ற அவரது விருப்பத்தை தெரிவித்தார். அதே போல் எல்லா பாடல்களையும் ஒரே ஒரு டியூனில் ஓகே சொன்னார். இப்படத்திற்கான பின்னணி இசை எனக்கு சவாலாக இருந்தது. ‘தென்மேற்கு பருவக்காற்று ‘ படத்தைப் போலவே இதிலும் சவாலாக பணியாற்றினேன். அதிலும் குறிப்பாக உச்சகட்ட காட்சியில் இயக்குநரின் மெனக்கடல் வியக்க வைத்தது. இதை நீங்கள் படம் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தின் ஒலி அமைப்பு தொடர்பாக நான் கூறிய பல ஆலோசனைகளை இயக்குநர் ஏற்றுக்கொண்டார்.

இந்த படம் நிறைய விஷயங்களை பேசுகிறது. இளைய தலைமுறையினருக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கிறது. உச்சகட்ட காட்சியை பார்த்துவிட்டு நீங்களே அது தொடர்பாக பேசுவீர்கள். இந்தப் படத்தில் மிகப்பெரிய அளவில் கருணை இருக்கிறது. ‘அயோத்தி’ படத்தைப் பற்றி இதே மேடையில் தான் சிலாகித்து பாராட்டினேன். இதற்கும் ஊடகங்கள் பேராதரவு தெரிவிக்க வேண்டும்.

நான் படத்தை பார்க்கும் போது நடிகர்கள் எங்கேயும் செயற்கையாக நடித்திருக்கிறார்களா என்பதைத்தான் உன்னிப்பாக கவனிப்பேன். இந்தப் படத்தில் நடிகர், நடிகைகள் அனைவரும் மிக இயல்பாக நடித்திருந்தார்கள். அதனால் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்,” என்றார்.

நடிகை பிரதீபா பேசுகையில், ” கிறிஸ்டினா கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்து வாய்ப்பளித்ததற்காக இயக்குநருக்கு நன்றி. ‘நீர்ப்பறவைசி படத்திலிருந்து நான் இசையமைப்பாளர் ரகுநந்தனின் ரசிகை. அவருடன் இந்த படத்தில் இணைந்து பணியாற்றியது பெருமிதமாக இருக்கிறது.

கிராமிய பின்னணியிலான கல்லூரி காதல் கதையாக உருவாகி இருக்கிறது. இந்தப் படம் ‘பருத்திவீரன்’, ‘மைனா’ படங்கள் ஏற்படுத்திய பாதிப்பை போல் ரசிகர்களுக்கு ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். படத்தில் இயக்குநர் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். அதாவது இந்த படம் பார்க்கிற அனைத்து
ஆண்களுக்கும் ஒரு கேள்வியாக அந்தக் கருத்து தோன்றும். அதற்குரிய விடை என்ன என்பது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். நவம்பர் 7ம் தேதி அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் பார்த்து ஆதரவு தர வேண்டும்,” என்றார்.

நடிகர் கௌஷிக் ராம் பேசுகையில், ”இந்த படத்தில் நடிப்பதற்காக வாய்ப்பளித்த இயக்குநருக்கும் அதற்கு காரணமாக இருந்த நிகில் முருகனுக்கும் நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் சுவாரசியமானதாக இருந்தது.‌ கும்பகோணத்தில் தங்கி அங்குள்ள மக்களுடன் பழகி இப்படத்தில் நடித்தேன். எனக்கு சொந்த ஊர் மயிலாடுதுறை தான். ஆனால் கும்பகோணத்திற்கு பயணித்ததில்லை. அங்குள்ள மக்களின் பாசமும், அன்பும் என்னை வியக்க வைத்தது.  

இந்த படத்தில் லேயர் லேயராக பணியாற்றி இருக்கிறோம்.‌ இது கிராமத்து காதல் கதை. அதிலும் ஒன் சைட் லவ் ஸ்டோரி. ஒரு காதலன் தன் காதலை சொல்வதற்கு எப்படி தவிக்கிறான், எப்படி அதனை தனக்குள்ளேயே வைத்துக் கொள்கிறான். இதனை இந்த படத்தில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்துடன் சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களையும் இயக்குநர் சொல்லி இருக்கிறார். அதனால் இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்.  

இந்தப் படத்தில் எந்த சினிமா பின்புலமும் இல்லாத புதிய இளம் திறமைசாலிகள் பணியாற்றிருக்கிறார்கள். இதை நான் மிகப்பெரிய விஷயமாக பார்க்கிறேன். 2019ம் ஆண்டிலிருந்து நான் வாய்ப்புகளை தேடிக் கொண்டிருக்கிறேன். இந்தப் படத்தின் மூலம் பல விஷயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்.

இயக்குநர் S J N அலெக்ஸ் பாண்டியன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் என்ற பெயர் வைத்து விட்டு படத்தின் பணிகள் தொடங்கி இதுவரையிலான பயணம் என்பது விமானத்தின் மேற்கூரை பகுதியில் அமர்ந்து பயணிப்பது போன்றதொரு பயணமாக எனக்கு இருந்தது. இரண்டு ஆண்டு காலம் இதற்காக உழைத்திருக்கிறோம். இத்தனைக்கும் தயாரிப்பாளர்கள் தங்கமானவர்கள்.

தயாரிப்பாளர் பிரபாகர் ஸ்தபதி உலக புகழ்பெற்ற ஸ்தபதி. அவருக்கும் இந்த துறைக்கும் தொடர்பே இல்லை. அவரை இத்துறைக்கு அழைத்து வந்திருக்கிறோம். ஒவ்வொரு முறை அவர்களின் வீட்டிற்கு செல்லும் போது அவர்களின் விருந்தோம்பல் பண்பு எங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அவர்கள் எங்களை கொண்டாடுவார்கள்.

தயாரிப்பாளர் என்னிடம் பணத்தை கொடுத்து விட்டு என்ன ஏது என்று கூட கேட்க மாட்டார். அதேபோல் இணை தயாரிப்பாளர் கார்த்திக் வீரப்பனும் பிரச்சனை என்று அவரிடம் செல்லும்போது எல்லாம் அவரும் பணம் கொடுத்து உதவினார்.‌ இருந்தாலும் இந்த திரைப்படத்தை உருவாக்கி இந்த நிலைக்கு எடுத்து வருவதற்கு எனக்கு இரண்டு ஆண்டுகள் ஆனது. ஏனெனில் தமிழ் சினிமா அத்தகைய நிலையில் தான் இன்று இருக்கிறது.  

புதுமுகமாக இருக்கும் கௌஷிக் ராமை தேர்வு செய்தேன்.‌ அவரும்  எங்களுக்கு எல்லா வகையிலும் முழு ஒத்துழைப்பை வழங்கினார்.‌

பிரதீபா அவர்களிடம் கதையை சொன்ன போது கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ஏராளமான கேள்விகளை கேட்டார். அத்துடன் சம்பளம் எனக்கு முக்கியமில்லை. கதை நன்றாக இருக்கிறது நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அவரிடம் ஏராளமான திறமைகள் கொட்டி கிடக்கிறது. அவரும் எதிர்காலத்தில் மிகப்பெரும் கதாநாயகியாக வருவார்கள். அவருக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஒளிப்பதிவாளர் பிரஹத் முனியசாமி நான் பார்க்கும் போது அவருக்கு 15,16 வயது தான் இருக்கும். அப்போதே அவர்  40 குறும்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் இயக்குநர் மற்றும் திரைக்கதை எழுதுதல் குறித்த பயிற்சி பெற்றேன். என்னுடைய திட்டமே தாமதமாக இயக்குநராக வேண்டும் என்பதுதான்.

இப்படத்தின் இருபது நிமிட காட்சிகளை செல்போனில் தான் எனது நண்பரும், இப்படத்தின் இணை தயாரிப்பாளருமான கார்த்திக் வீரப்பனிடம் காண்பித்தேன். அதை பார்த்துவிட்டு எமோஷனலாகி இப்படத்திற்கு தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்காக மதுரையில் நடைபெற்ற விளம்பரப்படுத்தும் நிகழ்வை மிக சிறப்பாக நடத்திக் காட்டினார். தொடர்ந்து நேரு கல்லூரியிலும் பிரம்மாண்டமான விளம்பரப்படுத்தும் நிகழ்வை நடத்திக் காட்டினார். அவருடைய உழைப்பு சாதாரணமானது இல்லை. அதற்காக அவருக்கு இந்த தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

நான் இந்தப் படத்திற்கான திரைக்கதையை எழுதி முடித்தவுடன் நான் எழுதிய முதல் தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் என். ஆர். ரகுநந்தன். நான் ‘நீர்ப்பறவை’ எனும் படத்தை பார்த்தேன். அந்தப் படத்தின் பின்னணி இசையை பார்த்தவுடன் இவர் தான் என் முதல் படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். இந்தப் படத்தில் அவருடைய அற்புதமான திறமையை பார்க்கலாம். அதிலும் 25 நிமிடம் கொண்ட உச்சகட்ட காட்சியில் அவருடைய பின்னணி இசை நிச்சயமாக பேசப்படும்.‌ அந்த வகையில் இது சின்ன படம் அல்ல. பெரிய படம்தான். ஒலி அமைப்புக்காக அவர் நிறைய உழைத்திருக்கிறார். அத்துடன் இந்தப் படத்திற்கான வியாபாரத்திலும் அவர் தன்னுடைய பங்களிப்பை வழங்கியிருக்கிறார்.

என்னுடைய குருநாதர் விஜய் ஸ்ரீ. நான் திரைப்பட பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றாலும் கிடைத்த இடைவெளியில் அவரின் அறிமுகம் கிடைத்து அவருடன் பவுடர் படத்தில் உதவியாளராக பணியாற்றினேன். ‘பவுடர்’, ‘ஹரா’ ஆகிய இரண்டு படத்தின் வெளியீட்டின் போதும் அவருடன் இருந்தேன். அதனால் படத்தை வெளியிடுவதற்கான திரையரங்க ஒருங்கிணைப்பு விசயத்தைப் பற்றிய வழிமுறையை  தெரிந்து கொண்டேன். அதனால் இந்த திரைப்படம் தமிழகத்தில் அதிக அளவில் நல்லபடியான திரையரங்குகளில் வெளியாகிறது. அத்துடன் கேரளாவில் 20 திரையரங்குகளில் வெளியாகிறது. கர்நாடகாவிலும் இப்படத்தை வெளியிடுவதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கான வாய்ப்புகளை என் ஆர் ரகுநந்தன் உருவாக்கி தந்தார். எந்த ஒரு சின்ன படத்திற்கும் இத்தகைய வரவேற்பு இருக்காது. அதனால் இது சின்ன படம் இல்லை பெரிய படம்தான்.‌ இதற்கு ஊடகங்களும் ஆதரவு தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்தப் படத்தில் நடித்த நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் எஸ். ஆர். பிரபாகரன் பேசுகையில், ”கிறிஸ்டினா கதிர்வேலன் அழகான தலைப்பு. இது நான் இயக்கிய இது கதிர்வேலன் காதல் என்ற படத்தை நினைவு படுத்தியது. இப்படத்தை தயாரித்த தயாரிப்பாளருக்கும், இயக்கிய இயக்குநருக்கும் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

தயாரிப்பாளர் ஸ்தபதி என்றார்கள். சிற்பி நல்ல கதையை தான் தேர்ந்தெடுத்து இருப்பார். அதனால் இந்த படம் மிகச்சிறந்த படமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன் இசையில் வெளியான ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘நீர்ப்பறவை’, ‘சுந்தரபாண்டியன்’ ஆகிய படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ஆல்பமாக வெற்றி பெற்றவை. சமீபத்தில் ‘அயோத்தி’ படத்தில் கூட ‘காற்று ஒரு பட்டம் போல..’ பாடலை வெற்றி பெற வைத்தார். இந்தப் பாடலை அண்மையில் கேட்டேன். உடனே தொடர்பு கொண்டு ஒரு மணி நேரம் அந்தப் பாடலைப் பற்றி அவருடன் பேசினேன்.‌ மிகுந்த இசைஞானம் உள்ளவர்களால் தான் இது போன்ற பாடல்களை உருவாக்க முடியும். அவருக்குள்ள திறமைக்கு அவர் செல்ல வேண்டிய உயரம் இன்னும் அதிகம். இந்தப் படத்தில் இடம்பெற்ற திருவிழா பாடல் சிறப்பாக இருக்கிறது.

இந்தப் படத்தின் தலைப்பை பார்த்தவுடன் ஒரு கிறிஸ்தவ பெண்ணிற்கும், ஒரு இந்து பையனுக்கும் இடையே ஏற்பட்ட காதலாக தோன்றுகிறது. பொதுவாக ஒரு எழுத்தாளர் கதையை எழுதும்போது சமூகம் சார்ந்து சாதி சார்ந்து மதம் சார்ந்து கதை எழுதும்போது சாதாரண கதையை எழுதுவதை விட கூடுதல் பொறுப்புணர்வுடன் எழுத வேண்டி இருக்கும்.

காதலைப் பற்றி எழுதும் தருணத்தில் காதலர்களின் பெற்றோர்களை பற்றி எழுத தவறி விடுவோம். எங்கு கைத்தட்டல்கள் கிடைக்குமோ அதைத்தான் எழுதுவோம்.‌ அதே தருணத்தில் சமூகம் சார்ந்து மதம் சார்ந்து சாதி சார்ந்து கதை எழுதும் போது ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போல் சமமாக இருக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அப்படித்தான் இந்த படத்தின் கதை இருக்கும் என்று நம்புகிறேன். அனைவருக்கும் பிடித்த நியாயமான தீர்வும் இதில் இருந்தால் நிச்சயமாக வெற்றிப்படமாக இருக்கும்.‌ இந்த மேடையில் படத்தில் இடம்பெறும் உச்சகட்ட காட்சியை பற்றி பேசும்போது எமோஷனலாக பேசினார்கள். இது படம் பார்க்கும் ரசிகர்களையும் பாதிக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இந்த படம் பெரிய வெற்றியை பெற வாழ்த்துக்கள்,” என்றார்.

சென்னை- காவேரி மருத்துவமனையில் 4½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம்!

சென்னை:

பல குடும்பங்களுக்கு பக்கவாதம் / ஸ்ட்ரோக், எவ்வித முன்னெச்சரிக்கை இல்லாமல் நடத்தப்படும் தாக்குதலாகவே இருக்கிறது; சில நிமிடங்களில் வாழ்க்கையையே புரட்டிப்போட்டு விடுகிறது. ஆனால், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான நபர்களுக்கு சென்னை, காவேரி மருத்துவமனையில் உரிய நேரத்தில் வழங்கப்பட்ட சிகிச்சையானது அவர்களின் வாழ்க்கைக் கதையை மாற்றி மேம்படுத்தி புதிய அத்தியாயத்தை எழுதியிருக்கிறது.

உலக பக்கவாத தினம் 2025 – ஐயொட்டி நடத்தப்பட்ட வெற்றி பெருமித நிகழ்வின்போது தனது 4 ½ மணி நேர பக்கவாத மீட்சித் திட்டம் வழங்கியிருக்கும் நம்பிக்கை தரும் விளைவுகளை இம்மருத்துவமனை பகிர்ந்து கொண்டது; பக்கவாத அறிகுறிகள் தோன்றிய பிறகு மிக முக்கியமான ஆரம்ப மணி நேரங்களுக்குள் அந்நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது மீது சிறப்பு கவனம் செலுத்தும் ஒரு தனிச்சிறப்பான முன்னெடுப்பு திட்டமாக இது உருவாக்கப்பட்டிருக்கிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், காவேரி மருத்துவமனையின் பக்கவாத சிகிச்சைக் குழுக்கள், சென்னையில் 956 பக்கவாத நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்திருக்கிறது.  இவர்களுள், 120+ நோயாளிகள் முதல் அறிகுறி தோன்றியதிலிருந்து 4 ½ மணி நேரங்களுக்குள் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருக்கின்றனர்.  இவர்களுள் 82+ நபர்களுக்கு பக்கவாதத்திலிருந்து முழுமையான மீட்சி கிடைத்திருக்கிறது.  நிரந்தர சேதம் ஏற்படாமல் தடுப்பதற்கு உகந்த நேரத்திற்குள் மூளைக்கு இரத்தஓட்டம் மீண்டும் இந்நபர்களுக்கு நிலைநாட்டப்பட்டது என்பதையே இது உணர்த்துகிறது. 

வடபழனி, காவேரி மருத்துவமனையின் இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். பெரியகருப்பன் பேசுகையில், “பக்கவாதம் / ஸ்ட்ரோக் ஏற்படும்போது ஒவ்வொரு நிமிடமும் மிக முக்கியமானது.  கடந்து செல்லும் ஒவ்வொரு கணமும், மூளையிலுள்ள ஆயிரக்கணக்கான செல்கள் இழக்கப்படுகின்றன.  ஆனால், நோயாளிகள் மிக விரைவாக மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருகிறபோது அவர்களது உயிரைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், பேசவும், நடமாடவும் மற்றும் சுதந்திரமாக வாழவும், நடமாடவும் அவர்களது அவசியமான திறனை சேதமின்றி பாதுகாத்து எங்களால் காப்பாற்ற முடியும்.  இத்தகைய பெரிய பாதிப்பு நிகழ்விற்குப் பிறகு, மருத்துவமனையிலிருந்து முழுமையான மீட்சி பெற்று, இத்தகைய நோயாளிகள் நலமுடன் நடந்து செல்வதை பார்ப்பதே எங்களுக்கு ஒவ்வொரு நாளும் இன்னும் சிறப்பாக செயல்பட உத்வேகம் அளிக்கிறது.” என்று கூறினார்.

உரிய நேரத்திற்குள் சிகிச்சைப் பெறுவது ஏன் முக்கியமானது:

மூளையின் ஒரு பகுதிக்கு செல்லும் இரத்தஓட்டம் தடுக்கப்படும்போது அல்லது உறையும்போது மூளையின் திசுவிற்கு ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால் பக்கவாதம் நிகழ்கிறது.  உடனடி சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன.  இதனால் ஏற்படும் இழப்பும், சேதமும் நிரந்தரமானதாக இருக்கக்கூடும்.

பக்கவாதத்தின் அறிகுறிகள் வெளிப்பட்டதிலிருந்து முதல் 4 ½ மணி நேரங்கள், “தங்கமான நேரம்” “golden window” என அழைக்கப்படுகிறது.  பக்கவாதத்தை ஏற்படுத்துகின்ற இரத்தஉறைவு கட்டிகளை அகற்ற அல்லது கரைக்க மருத்துவர்களால் சிகிச்சை அளிக்கக்கூடிய காலஅளவாக இது இருக்கிறது.  இந்த சாளர காலஅளவிற்குள் துரிதமாக செயல்படுவதில் தான், ஆயுட்காலம் முழுவதும் நீடிக்கின்ற திறனிழப்பிற்கும் மற்றும் முழுமையான மீட்சிக்கும் இடையிலான வேறுபாட்டை ஏற்படுத்தக்கூடும்.

ரேடியல் சாலை, காவேரி மருத்துவமனையின் இடையீடு;டு கதிர்வீச்சியல் (நரம்பியல்) துறையின் முதுநிலை நிபுணர் டாக்டர். ஜி. சதீஷ் இது குறித்து கூறியதாவது: “பக்கவாதத்திற்கான சிகிச்சை என்பது, அறிவியல், துல்லியம் மற்றும் குழுவாக இணைந்து செயல்படுவது என்பவற்றின் ஒருங்கிணைந்த கலவையாகும்.  உரிய நேரத்திற்குள் மருத்துவமனைக்கு சிகிச்சை பெற நோயாளிகள் வந்து சேரும்போது, அவர்களுக்கு சிகிச்சையினால் கிடைக்கும் விளைவுகள் உண்மையிலேயே வியக்க வைக்கின்றன.  அவர்களது பேச்சுத் திறனையும், ஆற்றலையும் மற்றும் நம்பிக்கையையும் அவர்கள் மிக வேகமாகவே திரும்பப் பெறுகின்றனர்.  விதியை தீர்மானிப்பதாக நிமிடங்கள் இருக்கின்ற பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய நோய்களுள் ஒன்றாக பக்கவாதம் இருக்கிறது.”

கடந்த பத்து ஆண்டுகளில், பக்கவாதத்திற்கான சிகிச்சையில் புரட்சிகரமான பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  சிரை ஊடாக செலுத்தப்படும் “இரத்த உறைவுக் கட்டியை” (க்ளாட் பஸ்டர்) உடைக்கும் மருந்துகள் மற்றும் இயந்திர வழி இரத்தக்கட்டி நீக்கம் என்பவை நவீன சிகிச்சை உத்திகளுள் சிலவாகும். 

சென்னை மாநகரில், ஆழ்வார்பேட்டை, வடபழனி மற்றும் ரேடியல் சாலை ஆகிய அமைவிடங்களில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையின் பக்கவாத மீட்பு சிகிச்சைப் பிரிவுகள் 24 மணி நேரமும் செயல்படுகின்றன.  மிக நவீன இமேஜிங் சாதனங்கள், இடையீட்டு சிகிச்சை செயல்முறைகளுக்கான அறைகள் மற்றும் தீவிர பக்கவாத சிகிச்சை மேலாண்மைக்காக பயிற்சி பெற்ற பல்வேறு துறைகள் சார்ந்த நிபுணர்கள் குழு ஆகியவை ஒருங்கிணைந்து, சிறப்பான சிகிச்சை விளைவுகளை சாத்தியமாக்குகின்றன.

“பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மீண்டும் இயல்பாக நடப்பதையும், பேசுவதையும் மற்றும் தங்கள் பணி வாழ்க்கைக்கும், குடும்பங்களுக்கும் மீண்டும் திரும்புவதையும் நாங்கள் கண்கூடாகப் பார்த்திருக்கிறோம்.  பாதிப்பு அறிகுறிகள் தோன்றியவுடன் விரைவாகவே சிகிச்சைக்கு எங்களிடம் அவர்கள் வந்து சேர்ந்ததே இதற்கு முக்கிய காரணம்.  “திரும்பவும் விரைவாக இயல்பான நபராக நான் உணர்கிறேன் என்று ஒரு நோயாளி புன்னகையோடும், மகிழ்ச்சியோடும் சொல்லும் தருணம் தான் எந்தவொரு மருத்துவரும் கிடைக்க வேண்டும் என்று விரும்புகின்ற மிகப்பெரிய சிகிச்சை விளைவாக இருக்கிறது.” என்று ஆழ்வார்பேட்டை, காவேரி மருத்துவமனையின், இடையீட்டு கதிர்வீச்சியல் நிபுணர் டாக்டர். சத்ய நாராயணன் கூறினார்.

பொதுமக்களை தொடர்புகொள்ளும் நிகழ்ச்சிகள் வழியாகவும் மற்றும் பக்கவாதத்தின் அறிகுறிகள் மற்றும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி மக்களின் புரிதலை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட கூட்டாண்மைகள் வழியாகவும், இது குறித்த விழிப்புணர்வை வலுவாக்கும் பணியை இம்மருத்துவமனை தொடர்ந்து செய்து வருகிறது.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் செயலாக்க இயக்குனர் டாக்டர். அரவிந்தன் செல்வராஜ்  பேசுகையில், “விரைவாக செயல்படுவது, சரியான சிகிச்சை அளிப்பது மற்றும் வாழ்க்கையை திரும்ப வழங்குவது என்பதே சென்னை வாழ் மக்களுக்கு நாங்கள் வழங்கும் வாக்குறுதியாக இருக்கிறது.  பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிப்பது மட்டும் எமது இலக்கு அல்ல. இந்த மாநகரில், அதற்கான பதில்வினையான சிகிச்சை வழிமுறைகளை மேம்பட மாற்றுவது எமது நோக்கமாகும்.  பக்கவாத தாக்குதலின் அறிகுறிகளை குடிமக்கள் ஒவ்வொருவரும் அடையாளம் காண இயலுமானால் மற்றும் உடனடியாகவே பக்கவாதத்திற்கு சிகிச்சை அளிக்க முழுத்திறன் கொண்ட மருத்துவமனையை அணுகுவார்கள் என்றால், எண்ணற்ற உயிர்களை நம்மால் காப்பாற்ற முடியும் மற்றும் ஆயிரக்கணக்கான நபர்களுக்கு ஏற்படும் திறனிழப்புகள் நிகழாமல் தடுக்க முடியும்.” என்று கூறினார்.

‘வள்ளுவன்’ இசை வெளியீட்டு விழா!

சென்னை:
 
ஆறுபடை புரொடக்சன்ஸ் சார்பில் ஷைல்குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘வள்ளுவன்’. சங்கர் சாரதி இயக்கியுள்ளார். ஜென்டில்மேன்-2 உள்ளிட்ட படங்களில் நடித்த, தெலுங்கில் இளம் முன்னணி நடிகராக வலம் வரும் சேத்தன் சீனு இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களில் கதாநாயகியாக நடித்த ஆஸ்னா சவேரி இதில் கதாநாயகியாக நடிக்கிறார்.
 
மனோபாலா, சாய் தீனா, தீபா, ராமச்சந்திரன் (ராம்ஸ்) கராத்தே ராஜா, ராஜசிம்மன், மீசை ராஜேந்திரன், சில்மிஷம் சிவா மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். அஸ்வத் இசையமைக்க, ஒளிப்பதிவை சுரேஷ் பாலா மேற்கொள்ள படத்தொகுப்பை ஷான் லோகேஷ் கவனித்துள்ளார்.
 
விரைவில் இந்த படம் ரிலீஸுக்குத் தயாராகி வரும் நிலையில்,இந்த படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி, இயக்குநர்கள் ஆர்.வி உதயகுமார், பேரரசு, தயாரிப்பாளர் கே ராஜன், நடிகை கோமல் சர்மா, நடிகர் விஜய் விஷ்வா உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
 
இந்த நிகழ்வில்
 
*இயக்குநர் சங்கர் சாரதி பேசும்போது*,
 
“கொலையிற் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்” என்கிற இந்த திருக்குறளை மையப்படுத்தி தான் கமர்சியல் கிரைம் த்ரில்லர் படமாக இதை உருவாக்கி இருக்கிறேன். அப்பாவிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் அண்ணல் அம்பேத்கர் சட்டங்களை  இயற்றினார். ஆனால் சட்டங்களில் உள்ள நல்ல விஷயங்களை ஒதுக்கி விட்டு அதில் உள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி தப்பிக்கும் வழி வகைகளைத் தான் இன்று தேடுகிறார்கள். மக்களைப் பாதுகாக்க யாரிடம் இந்த சட்டங்களை ஒப்படைத்தார்களோ அவர்கள் தான் இன்று நாட்டைச் சீரழித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
இப்படி சட்டத்தைக் கையில் வைத்துக் கொண்டிருப்பவர்கள் தவறு செய்தால் யார் தண்டனை கொடுப்பது ?  இதனால் பாதிக்கப்பட்ட ஒருவரின் வலியையும், வேதனையையும் தான் வள்ளுவன் படமாக உருவாக்கி இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நம் குடும்பத்தில் பலரும் சந்தித்த வலிகளைத் தான் ஸ்கிரிப்ட் ஆக மாற்றி இருக்கிறேன்.  
 
“இந்த கதை நடிகர் பரத்திற்காகவே உருவாக்கப்பட்டது. அவரிடம் சென்று கூறினேன். கதை பிடித்திருந்தாலும் அப்போது அவர் வேறு படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால் எனக்கு தேதி கிடைக்கவில்லை. 
 
இப்போது இந்த படத்தை பாராட்ட அவரே மேடையில் வந்து இருப்பது அமர்ந்திருப்பதை கடவுள் செயல் என்றே நினைக்கிறேன்” என்று பேசினார்.
 
*இணை தயாரிப்பாளர் பாலச்சந்தர் பேசும்போது,*
 
இந்த படத்தை ஆரம்பிக்கும்போது இது முடியுமா? என்று யோசித்தோம். ஆனால் இப்போது இங்கு கூடியிருக்கும் கூட்டத்தைப்  பார்க்கும்போது பாதி ஜெயித்து விட்டோம் என நினைக்கிறேன். இந்த உற்சாகத்தால் அடுத்தடுத்து படங்களை எடுப்போம். தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காகத் தான் வந்திருக்கிறோம். முதலில் கன்னடத்தில் தான் படம் எடுக்க நினைத்தோம். ஆனால் இங்கே தமிழில் செல்வமணி சார் போன்ற ஜாம்பவான்கள் முன்னால் பெப்சி தொழிலாளர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தான் இங்கே படம் எடுத்தோம்” என்று பேசினார்.
 
*இசையமைப்பாளர் அஸ்வத் பேசும்போது,*
 
“படத்தின் நாயகன் சேத்தன் சீனு மூலமாகத்தான் இந்த படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. தயாரிப்பாளர்கள் திறமையான நிறைய புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று உற்சாகப்படுத்தினார்கள். அந்தவகையில் இந்த படத்தில் நிறைய பாடகர்கள், கவிஞர்கள் என புதியவர்கள் பலரை அறிமுகப்படுத்த முடிந்தது” என்று பேசினார்.
 
*நடிகர் விஜய் விஷ்வா பேசும்போது,*
 
“இயக்குநர் சங்கர் சாரதி இந்த படத்தை பல சிரமங்களுக்கு இடையே பார்த்து பார்த்து உருவாக்கினார். இன்று இந்த டிரைலரை பார்க்கும்போது அவர் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் ஒரு விடிவு கிடைத்தது போல இருக்கிறது. கதாநாயகி எங்கள் தமிழ்நாட்டு ஐஸ்வர்யா ராய் என்று சொல்லலாம். தயாரிப்பாளர்களைப் பொருத்தவரை, படம் எப்படி வேண்டுமானாலும் எடுங்கள்.. வந்தவர்கள் யாருக்கும் சாப்பாட்டில் குறை வைத்து விடாதீர்கள் என்று தான் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருப்பார்கள். சம்பளம் சரியான நேரத்தில் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்து மிஸ் ஆனது. இவர்களின் அடுத்தடுத்த படங்களில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.
 
*தயாரிப்பாளர் கே.ராஜன் பேசும்போது,*
 
“இந்த படத்திற்கு வள்ளுவன் என தலைப்பு வைத்து அவரது குறளை மையமாக வைத்து படத்தையும் எடுத்துள்ளார் இயக்குநர் சங்கர் சாரதி.. அதேசமயம் கெட்டது செய்தவனுக்கு நல்லது செய் என்று எழுதிய வள்ளுவன் பெயரை வைத்து கொலைகாரன் படம் எடுத்துள்ளார். கடந்த இரண்டு வருடங்களில் கிட்டத்தட்ட 75 சதவீத படங்களில் ஆங்கில டைட்டில் தான் இருக்கிறது. இது தமிழ்நாடா என்கிற கேள்வியே வந்து விட்டது. இந்த சமயத்தில் இப்படி வள்ளுவன் என தலைப்பு வைத்திருப்பதால் இயக்குநர் சங்கர் சாரதியை பாராட்டுகிறேன். பணம் இருந்தால் நீதியையே இப்போது விலைக்கு வாங்கி விடலாம். நீதிபதிகள் பலர் இப்போது பாதிபதிகளாகி விட்டார்கள்” இன்று பேசினார்.
 
*இயக்குநர் ஆர்.வி உதயகுமார் பேசும்போது,*
 
தவறு செய்தவர்களை கண்டித்து திருத்த வேண்டும் என்கிற கருத்தைச் சொல்ல வள்ளுவரை உதாரணமாக இயக்குநர் சங்கர் சாரதி எடுத்துக் கொண்டுள்ளார். இதனாலேயே இவர் சென்சாரில் தப்பித்து விட்டார். அந்த வகையில் எங்கள் இயக்குநர் சங்கத்திலிருந்து வள்ளுவன் என்கிற டைட்டிலுடன் அவர் கையில் எழுத்தாணிக்கு பதிலாக கத்தியை கொடுத்து ஒருவர் துணிச்சலாக படம் எடுத்துள்ளார். இந்தப் படத்தை அவர் இயக்கிய டெக்னிக் நன்றாக இருந்தது. கதாநாயகன் சிரிக்கும்போது சின்ன மோகன்லால் போல இருக்கிறார். அவர் நன்றாக வரவேண்டும்” என்று பேசினார்
 
*நடிகர் மீசை ராஜேந்திரன் பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடிக்க இயக்குநர் சாரதி என்னை அழைத்தபோது முதலில் வர மறுத்துவிட்டேன். அவர் சரியாக 2023 அக்டோபர் 25ஆம் தேதி என்னை அழைத்தார். அன்று கேப்டனின் பிறந்த நாள். மீண்டும் என்னை வற்புறுத்தி அழைத்ததால் கேப்டனிடம் சென்று அனுமதி பெற்று, ஆசி பெற்று மதியத்திற்கு மேல் படப்பிடிப்பில் சென்று கலந்து கொண்டேன். அந்த வகையில் என் வாழ்க்கையில் இந்த படம் மறக்கவே முடியாது. சினிமாவில் நான் இருப்பதே கடவுள் கொடுத்த கொடுப்பினை. இப்போதுள்ள இயக்குநர்கள் ஒரு குறும்படத்தை எடுத்து விட்டு வந்து சினிமா வாய்ப்பை பெற்றுக்கொண்டு சினிமா கலாச்சாரத்தை மாற்றுகிறார்கள். தமிழ் சினிமாவுக்கு என்று ஒரு மதிப்பு உள்ளது. தயவு செய்து அந்த கலாச்சாரத்தை மாற்றாதீர்கள்” என்று பேசினார்
 
*நடிகர் பரத் பேசும்போது,*
 
“சினிமாவில் நாம் இருப்பதே ஒரு பெரிய வரம் தான். அப்படிப்பட்ட சினிமாவில் எந்தவித பின்புலமும் இல்லாமல் நாமாகவே பிடித்து முன்னேறுவது என்பது எவ்வளவு சிரமம் என்று அப்படி வந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும். நல்ல வலுவான அரசியல் கலந்த ஒரு கருத்து இந்த படத்தின் டைட்டில் துவங்கும்போதே ஆரம்பிக்கிறது. கதையை இயக்குநர் என்னிடம் சொன்னாலும் அந்த சமயத்தில் என்னுடைய வேறு சில கமிட்மென்ட்களால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. நடிகர் சேத்தன் சீனு தெலுங்கு, தமிழ் என இரண்டு மொழிகளிலும் மாறி மாறி நடிக்கிறார். அவருக்கு தமிழில் இது மிகப்பெரிய பிரேக்காக அமையும். இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுரேஷ் பாலா என்னுடன் காளிதாஸ், காளிதாஸ் 2, மிரல் என மூன்று படங்களில் வேலை பார்த்தவர்” என்று கூறினார்.
 
*நடிகர் கராத்தே ராஜா பேசும்போது,*
 
“இந்த வள்ளுவன் படத்தில் எனக்கு ஒரு மிகப்பெரிய கதாபாத்திரம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் சங்கர் சாரதி. இதில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நான் பல கிராமங்களில், சிறிய நகரங்களில் உள்ள திரையரங்குகளில் திங்கள், செவ்வாய் போன்ற கிழமைகளில் காலை, மதிய காட்சிகள் படம் பார்க்க செல்லும் போது வெறும் ஐந்து பேர், பத்து பேர் மட்டும் இருப்பதை பார்க்கும்போது மனம் பதறும். பல இடங்களில் திரையரங்குகளை எடுத்துவிட்டு மண்டபம், மால் கட்ட ஆரம்பித்து விட்டார்கள். சமீபத்தில் மூணாறுக்கு சுற்றுலா சென்று இருந்தேன்.. அவ்வளவு பெரிய சுற்றுலா தளம்.. ஆனால் அவ்வளவு பெரிய ஊரில் ஒரு தியேட்டர் கூட இல்லை. அதேபோல பொதுமக்களிடம் ஏன் திரையரங்குகளுக்கு செல்வதில்லை என நான் பேசியபோது பலரும் நாங்களே வெளியில் இருந்து தின்பண்டம் கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கேட்பதை பார்க்க முடிந்தது. திரையரங்குகளில் அதிக கட்டணத்தில் தின்பண்டங்களை விற்பது ஒரு பக்கம் விற்றுக் கொள்ளட்டும். ஆனால் வெளியில் இருந்து இப்படி கொண்டு வருபவர்களையும் அனுமதிக்கட்டும். அதில் என்ன சிக்கல் இருக்கிறது என்பதை பார்த்து அதை களைய முயற்சி எடுத்தால் அந்த ஜனங்களும் திரையரங்கிற்கு சென்று நமது படத்தை பார்ப்பார்கள். அப்படி வெளியிலிருந்து தின்பண்டங்களை அனுமதிக்கவில்லை என்றால் திரையரங்குகளில் விற்கும் பொருட்களை எம்.ஆர்.பி விலைக்கே விற்க வழி வகுக்க வேண்டும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை செய்தாலும் எனக்கு சந்தோசம்” என்று பேசினார்.
 
*நடிகர் ராஜசிம்மன் பேசும்போது,*
 
இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்தபோது பல கஷ்டங்களுக்கு இடையே தான் நடைபெற்றது. தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநருக்கும் எங்களைப் போன்ற நடிகர்களாகட்டும் அவரவர் தரப்பில் சில கஷ்டங்கள் இருந்தன. அப்படி கஷ்டங்களுக்கு இடையே தான் இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை பார்க்கும்போது எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. வெளிப்படையாக சொன்னால் இந்த படம் இப்படி இந்த அளவுக்கு வரும் என நான் எதிர்பார்க்கவே இல்லை. தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவை வாழ வைப்பதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் என்று சொன்னது தவறான அர்த்தத்தில் இல்லை. தமிழில் நல்ல படங்களை எடுக்க வேண்டும் என்கிற ஆர்வத்தை தான் அப்படி அவர்கள் வெளிப்படுத்தினார்கள். யாரும் அதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். நடிகர்கள் எல்லாம் நன்றாகத் தான் இருக்கிறார்கள் என இங்கே சிலர் பேசினார்கள். எல்லோருக்கும் அப்படி அல்ல.. கொரோனா காலகட்டத்தில் நான் கோயம்பேடு மார்க்கெட்டில் நடத்தி வந்த ஹோட்டலில் பாத்திரங்களை கழுவிக் கொண்டிருந்தேன். என் காது படவே சில பேர் அதை விமர்சித்து பேசுவார்கள். அதனால் பொத்தாம் பொதுவாக நடிகர்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என சொல்ல வேண்டாம். அவர்களுக்கும் அவர்களுக்கு ஏற்ற மாதிரி பிரச்சனைகள் இருக்கிறது. நான் இங்கே இல்லாதவர்களுக்கு உணவு வழங்குவதில் கூட சிக்கல் இருக்கிறது. அதையும் நான் எதிர்கொண்டு செய்துதான் வருகிறேன்” என்று பேசினார்.
 
*நடிகர் பிரேம்குமார் பேசும்போது,*
 
“படத்தின் இயக்குநர் என்னிடம் இந்த கதையை சொல்ல வந்தபோது இந்த படம் ஒரு க்ரைம் திரில்லர்.. இந்த படத்திற்கு வள்ளுவன் என்று டைட்டில் வைத்திருக்கிறேன் என்று சொன்னபோதே நான் இதில் நடிக்க ஓகே சொல்லி விட்டேன். இந்த படத்தில் ஒரு அழுத்தமான செய்தி இருக்கிறது. படம் பார்த்துவிட்டு வரும்போது ஒரு தாக்கம் இருக்கும். அதிகாரத்தை கையில் வைத்திருப்பவர்கள் எவ்வாறு தவறு செய்கிறார்கள், அதை எப்படி தட்டிக் கேட்பது என அதற்கான தீர்வுகளும் இதில் சொல்லப்பட்டிருக்கிறது” என்று பேசினார்.
 
*நாயகி ஆஸ்னா சவேரி பேசும்போது,*
 
“இந்தப் படத்தில் நடித்தது எனக்கு ரொம்பவே சந்தோஷம். வள்ளுவன் படத்தில் எமோஷன், ஃப்ரண்ட்ஷிப், சஸ்பென்ஸ், திரில்லர், நிறைய டுவிஸ்ட் என எல்லாமே இருக்கிறது. நீங்கள் செலவழிக்கும் நேரத்திற்கும் பணத்திற்கும் நிச்சயம் ஒர்த் ஆக இந்த படம் இருக்கும்” என்று பேசினார்.
 
*இயக்குநரும் பெப்சி தலைவருமான ஆர்.கே செல்வமணி பேசும்போது,*
 
“படத்தின் அழைப்பிதழ் கொடுத்து என்னை அழைத்தபோது அதைப்  பார்த்ததும் இது ஒரு டாக்குமெண்டரி படம் போல இருக்கிறதே என்று தான் எனக்கு தோன்றியது. ஆனால் டிரைலரைப் பார்த்ததும் ஒரு பிரம்மாண்ட ஆக்சன் படத்தை பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது. எனக்கே இந்த படம் குறித்து ஆரம்பத்தில் ஒரு சந்தேகம் ஏற்பட்டது இல்லையா ? அதனால் இந்த படத்தை பற்றி மீடியா புரமோஷன்களில் பேசும்போது, இது எந்த மாதிரியான படம் என்பதை தெளிவாக ரசிகர்களுக்கு கொண்டு செல்ல வேண்டும். அப்படி என்றால் தான் அந்த தரப்பு ரசிகர்கள் இந்த படத்தைப் பார்க்க தேடி வருவார்கள். இன்று தமிழ் சினிமாவை வாழ வைப்பவர்கள் புதிய தயாரிப்பாளர்கள் தான். 
 
கடந்த 10 ஆண்டுகளில் ஏறக்குறைய 2500 திரைப்படங்கள் வந்திருக்கின்றன. இதில் 2100 பேர் புதிய திரைப்பட தயாரிப்பாளர்கள் தான். அவர்கள் தான் எங்களுக்கு சோறு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இத்தனை வருடங்களில் அப்படி முதல் படம் எடுத்த 2000 பேர் அப்படியே போய் விட்டார்கள். வெறும் 400 பேர் தான் மீண்டும் படம் எடுக்கத் திரும்பி வருகிறார்கள். 
 
ஒரு மரம் நட்டால் வளர்ந்து பிறகு பல வகைகளில் பலன் தரும்.. எதுவுமே இல்லை என்றாலும் நிழல் தரும் வேலையையாவது செய்யும். இசையமைப்பாளர்களுக்கு கூட அவர்களின் மறைவுக்குப் பின்னால் அவர்கள் குடும்பத்திற்கும் செல்லும் விதமாக ராயல்டி பணம் வந்து கொண்டிருக்கும்.. ஆனால் தயாரிப்பாளர்களின் நிலை அப்படி அல்ல.. நன்றாக சம்பாதிக்கும் ஹீரோக்கள் தங்களது சம்பளத்தில் ஐந்து அல்லது பத்து சதவீதம் தொகையைத் தங்களை ஆளாக்கிய தயாரிப்பாளர்களுக்குத்  தர வேண்டும் என ஒரு சிஸ்டம் கொண்டு வந்தால் தயாரிப்பாளர்கள் குறைந்தபட்சம் நன்றாக இருப்பார்கள். 
 
இன்றைய சூழலில் வெட்கம், மானம் இல்லாமல் அடுத்தவர்களுக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்களுக்கு வள்ளுவர் சொன்னதைப்போல இன்னா செய்தவருக்கு இனியவை செய்ய முடியாது. திருப்பி இன்னா தான் செய்ய முடியும். மற்ற பல நாடுகளுக்குச்  செல்லும்போது எல்லா பொது மக்களையும் ராஜா போல நடத்துவார்கள். குற்றவாளிகளை கிரிமினல்களாக நடத்துவார்கள். ஆனால் இங்கே சாதாரண பொது மக்களைக் கூட குற்றவாளி போல நடத்தும் சூழல் இருக்கிறது. ஆனால் குற்றவாளி வந்தால் அவனை ராஜா போல பார்க்கிறார்கள். நம்முடைய சிஸ்டம் அப்படி இருக்கிறது. 
 
நான் ஒரு படத்திற்காக சிறைச்சாலை சென்று கைதிகளை சந்தித்தபோது, ஒரு கொலைக் கைதியிடம் திட்டமிட்டுக் கொலை செய்தாயா? என்று கேட்டேன். அதற்கு அவன் திட்டமிட்டு கொலை செய்தால் அவர்கள் வெளியே இருக்கலாம் உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்பவர்கள் தான் இங்கே உள்ளேயே இருக்கிறார்கள்   என்று சொன்னார். அதைத்தான் இந்த படத்தில் அழகான கருவாக எடுத்து இருக்கிறார்கள்.
 
சமீபகாலமாக ஏஐ மூலம் நடிகைகளை ரொம்பவே ஆபாசமாக சித்தரிக்கும் போக்கு இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்த இந்த அரசு என்ன செய்யப்போகிறது ? அமெரிக்காவில் என்னுடைய மகள் தற்போது ஏஐ தான் படித்துக் கொண்டிருக்கிறாள். அவள் என்னிடம் மனித குலத்திற்கே எதிரான ஒரு விஷயத்தைத் தான் எங்களுக்கு கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொன்னாள். ஒரு கட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால் எல்லோர் கையிலும் கத்தி இருக்கும். அவனுக்கான நீதியை அவனே தேடிக் கொள்ளும் சூழலுக்கு நாடு தள்ளப்படும். இந்த படத்தில் அதைத்தான் சொல்கிறார்கள். இங்கு யாரும் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வாங்குவதில்லை. கொஞ்சம் பிரபலம் ஆகும்போது பிளாக் மெயில் செய்து உயர்வான ஊதியத்தை பெறுகிற சூழல் தான் இங்கே இருக்கிறது” என்று பேசினார்
 
*இயக்குநர் ராதா பாரதி பேசும்போது,*
 
“இந்த படத்தை நான் பார்த்துவிட்டேன். இந்த படத்தில் நடித்துள்ள இந்த நடிகர்களை அந்த கதாபாத்திரங்களாக நீங்கள் பார்க்கும் போது, ரொம்பவே பெருமைப்படுவீர்கள். குறிப்பாக கதாநாயகியைப் பார்த்து பயப்படுவீர்கள். இயக்குநர் சங்கர் சாரதி என்னுடைய சீடன் தான். யாருக்கும் தெரியாத விஷயம், அவர் ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டவர். தேவாரம், திருப்புகழ், திருப்பாவை எல்லாம் தெளிவாகப் பாடக்கூடியவர். என் தந்தை அவரை ஆழ்வார் என்று தான் அழைப்பார். அவ்வளவு பக்திமான். அதேசமயம்  என்னிடம் சமூகம் சார்ந்த சீர்திருத்த கருத்துக்கள் பற்றி எப்போதும் பேசிக் கொண்டிருப்பார். பரிமேலழகர், கலைஞர் போன்றவர்கள் திருக்குறளுக்கு தெளிவுரை எழுதினார்கள்.
 
 இயக்குநர் சங்கர் சாரதி திருக்குறளுக்கு திரைக்கதை எழுதியுள்ளார்” என்று பேசினார்.
 
*நடிகை கோமல் சர்மா பேசும்போது*,
 
“2000 வருடத்திற்கு முன்பு உலகமே இருளில் சூழ்ந்து இருந்தபோது 1330 குறள்கள் மூலம் வெளிச்சம் கொடுத்தவர் வள்ளுவர். நமது குழந்தைகள் மாதத்திற்கு 10 குறள்களாவது படித்தால் அவர்கள் சிறந்த மனிதர்களாக மட்டுமல்ல, உயர்வான தலைவர்களாகவும் மாறுவார்கள். திருக்குறள் ஒரு இலக்கியம் மட்டுமல்ல.. அது வாழ்க்கையை எப்படி வாழ்வது என்பதையும் கற்றுக் கொடுக்கிறது. தினசரி பள்ளிகளில் பிரார்த்தனை நேரத்தின் போது ஒரு திருக்குறளையும் சேர்த்துக் கொள்ளலாம். திருக்குறள் உலகத்திற்கு எப்போதுமே ஒரு வழிகாட்டியாக இருந்திருக்கிறது. அதை நான் முழுமையாக நம்புகிறேன். இளைஞர்கள் திருக்குறளை மனதில் சுமந்தால் அவர்களுக்கு பேராசையோ,  கெட்ட எண்ணமோ மனதில் தோன்றாது. சமூகத்தின் தலையெழுத்தையே அவர்களால் மாற்ற முடியும்” என்று பேசினார்.
 
*நாயகன் சேத்தன் சீனு பேசும்போது,*
 
“கடந்த 15 வருடங்களாக திரையுலகில் ஒரு முக்கிய இடத்திற்காக போராடி வருகிறேன். இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இயக்குநர் மு.களஞ்சியம் இயக்கிய கருங்காலி படத்தில் என்னை கதாநாயகனாக அறிமுகப்படுத்தினார். இதே இடத்தில் தான் இயக்குநர்கள் பாலுமகேந்திரா, அமீர், நாயகன் ஜெயம் ரவி என பல பிரபலங்கள் கலந்து கொண்டு அரங்கமே நிறைந்து இருந்தது. அதன் பிறகு நான் சிவப்பு மனிதன் சக்சஸ் மீட்டை இங்கேதான் கொண்டாடினோம். தற்போது கே.டி குஞ்சுமோனின் ஜென்டில்மேன்-2 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அதன் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கருங்காலி படத்தில் நடித்து முடித்த பிறகு விஜய் அண்ணா வீட்டிலிருந்து, தல அஜித் வீடு வரை எத்தனை கம்பெனிகள் இருக்கின்றனவோ அத்தனையும் ஏறி இறங்கிவிட்டேன். ஆனால் நீங்கள் வெள்ளையாக இருக்கிறீர்கள். தமிழுக்கு செட் ஆக மாட்டீர்கள் என்று சொன்னபோது, எனக்கு மனதுக்குள் பயம் வந்தது. ஆனால் புரட்சித்தலைவர் எம்ஜிஆர், கமல்ஹாசன், அஜித் எல்லோரும் வெள்ளை நிறம் தான். இங்கே கலர் என்பது ஒரு பிரச்சனை இல்லை. திறமையை மட்டும் தான் பார்க்க வேண்டும்.
 
நான் ஜென்டில்மேன் 2 படத்தில் நடிக்க ஒப்புக்கொள்வதற்கு முன்பே இந்த படத்தின் கதையை சங்கர் சாரதி என்னிடம் சொன்னார். கதையைக் கேட்டதுமே ஷங்கருக்கு எப்படி ஜென்டில்மேன் படம் ஒரு பிராண்ட் நேம் ஆகியதோ அதேபோல இந்த வள்ளுவன் திரைப்படம் இந்த சங்கர் சாரதிக்கு ஒரு பிராண்ட் ஆகும் என்று  கூறினேன். அதன் பிறகு தான் ஜென்டில்மேன் 2 படத்தில் ஒப்பந்தம் ஆனேன். அந்த வகையில் யூனிவர்ஸ் நம்மைக் கவனித்துக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். உயிரைக் கொடுத்து நடித்தோம் என்று சிலர் சொல்வார்கள். கிட்டத்தட்ட அப்படித்தான் இந்த படத்தில் நான் நடித்தேன். என்னால் உள்ளே நுழைய முடியாத ஒரு ட்ரம்முக்குள் என்னை அமர வைத்து அதற்குள் புகையையும் போட்டுவிட்டார்கள். கிட்டத்தட்ட உயிர் போய்விட்டது என்று தான் நினைத்தேன். சிக்மகளூர் தாண்டி ஒரு பாடல் காட்சிக்காக அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது நானும் கதாநாயகி ஆஸ்னா சவேரியும் வழி தெரியாமல் மாட்டிக் கொண்டோம். பின்னர் தான் தெரிய வந்தது அது புலிகள் அதிகம் உலாவும் இடம் என்று. அப்போதும் உயிர் தப்பித்து வந்தோம். ஒரு சின்ன படமாக ஆரம்பித்து இதை பெரிய படமாக கொடுத்திருக்கிறார்கள்.. நிச்சயம் உங்களை ஏமாற்றாது” என்று பேசினார்.
 
*தயாரிப்பாளர் பி.எல் தேனப்பன் பேசும்போது,*
 
“நான் தயாரிப்பாளர் சங்கச் செயலாளர் ஆன சமயத்தில் தான் இதே போன்று பீட்சா படத்திற்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தேன். அந்தப் படத்தில் நடித்த விஜய் சேதுபதி உள்ளிட்ட எல்லோருமே பெரிய ஆட்களாக மாறிவிட்டார்கள். அதேபோலத்தான் இந்த வள்ளுவன் திரைப்படத்தில் நடித்த அனைவருக்கும் அதேபோன்று பெயரும் புகழும் கிடைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்று கூறினார்.
 
*வள்ளுவன் படத்தின் தயாரிப்பாளர் ஷைல் குமார் பேசும்போது,*
 
“நான் இந்த படத்தை தயாரிக்க உறுதுணையாக இருந்தது என்னுடைய தாய் தந்தை தான். அதேபோல நான் வெளிநாட்டில் இருந்தாலும் கூட  படத்தின் வேலைகள் தடைபடாமல் இங்கிருந்து என்னுடைய நண்பரான பாஸ்கரன் பார்த்துக் கொண்டார். அவர்களுக்கு நன்றி” என்று கூறினார்.
 
*இயக்குநர் பேரரசு பேசும்போது,*
 
“வள்ளுவன் என இந்த படத்திற்கு டைட்டில் வைத்திருக்கும் இயக்குநர் சங்கர் சாரதி ஒரு ஆன்மீகவாதி. அப்படி இருப்பதால்தான் இப்படி ஒரு துணிச்சலான டைட்டிலை அவரால் வைக்க முடிந்திருக்கிறது. வள்ளுவர் கையில் உள்ள எழுத்தாணியை எடுத்துவிட்டு கத்தியை கொடுத்திருக்கிறார். இப்போதுள்ள சூழ்நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால் அவர் கத்தியை அல்ல துப்பாக்கியைத்தான் எடுத்து இருப்பார். இந்த அளவுக்கு எங்கு பார்த்தாலும் அநியாயம், அக்கிரமம்.. கொலை, கற்பழிப்பு.. வள்ளுவன் என டைட்டில் வைத்ததற்கே உங்களை பாராட்டவேண்டும்.. ஏனென்றால் இப்போது இளைஞர்களுக்காக, டிரெண்டுக்காக வைக்கிறேன் என ஏதோ ஒன்றை வாந்தி எடுக்காமல் தமிழ் பற்றோடு ஒரு டைட்டிலுடன் படத்தை எடுத்திருக்கிறீர்கள்.
 
ஒவ்வொரு காலகட்டத்திலும் ஆட்சி மாறும்போது வேறு எதில் மாற்றம் வருகிறதோ இல்லையா பேருந்து கலர்கள் தான் உடனடியாக மாற்றப்படும். முந்தைய தலைவர்களின் பெயர்களில் இருக்கும் ஊர்களின் பெயர்கள் சுருக்கப்படும். வள்ளுவரை மட்டும்தான் விட்டு வைத்திருந்தார்கள். ஒரு ஆட்சி வந்ததும் அவர் நெற்றியில் இருந்த பட்டையை முதலில் அழித்தது. இன்னொரு ஆட்சி வந்ததும் அவருக்கு காவி கலர் வேட்டியை உடுத்தியது. அரசியல் திருவள்ளுவரையும் விட்டு வைக்கவில்லை. திருவள்ளுவர் இப்போது வந்தால் இயக்குநர்  கத்தியைக் கொடுக்கத்  தேவையில்லை. அவரே துப்பாக்கியைத் தூக்கி விடுவார்.. நாடு அப்படி இருக்கிறது. என்னிடம் பதவி இருக்கிறது, பணம் இருக்கிறது, என்னிடம் சட்ட நுணுக்கம் இருக்கிறது, நாம் இருவரும் சேர்ந்தால் சட்டத்தையே விலைக்கு வாங்கலாம்.. ஏன் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என இந்த காலகட்டத்தில் இந்த வசனத்தை சொல்வதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும். நீதிபதியை விமர்சித்தாலே தூக்கி உள்ளே வைத்து விடுகிறார்கள். நீதிபதி என்ன கடவுளா ? அரசனே தவறு செய்கிறான்.. ஆண்டவனே தவறு செய்கிறான்..
 
நான் சிவகாசி படம் எடுத்த போது வக்கீல்களை கிண்டல் செய்வதாக என் மீது தமிழ்நாட்டில் உள்ள பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில் நடித்ததற்காக விஜய் மீதும், தயாரிப்பாளர் மீதும் கூட வழக்கு தொடர்ந்தார்கள். அப்படி ஒரு வக்கீலை நான் குறைவாக காட்டியதற்காக எங்கள் மூன்று பேர் மீது வழக்கு போட்டார்கள் என்றால் இப்போது இயக்குநர் சங்கர் சார்பில் இந்த படத்தில் ஒரு வக்கீல் நீதிபதியையே விலைக்கு வாங்கலாம் என்று சொல்கிறார் என்றால் உண்மையிலேயே இவர் 100 பேரரசுக்கு சமம். ஒரு இயக்குநருக்கு மக்கள் மீது அக்கறை, நாட்டுப்பற்று இருக்க வேண்டும்.. நீங்கள் ஆக்சன், காமெடி, ஃபேமிலி, ஜாதி, திரில்லர் என எந்த படம் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் நோக்கம் நன்றாக இருக்க வேண்டும். நல்ல கருத்தைச் சொல்ல வேண்டும். கலாச்சாரத்தை சீரழித்து படம் எடுப்பவர்களை விட ஆபாச படம் எவ்வளவோ மேல்.. பணம் சம்பாதிப்பதற்கு எத்தனையோ தொழில் இருக்கிறது. அந்த வகையில் இயக்குநர் சங்கர் சாரதியை நான் ரொம்பவே பாராட்டுகிறேன். ஆன்மீகவாதி என்பதால் நிச்சயம் நல்ல விஷயத்தைத் தான் சொல்லுவார் என்கிற நம்பிக்கை இருக்கிறது” என்று பேசினார்.

பைக் திருடர்கள் கைது!

ருசக்கர வாக​னத்தை திருடி அதில் சென்று திருட்​டில் ஈடு​பட்ட இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். புழல் ஆசிரியர் காலனியில் வசித்து வருபவர் சிதம்​பரம் (23). இவரது விலை உயர்ந்த பைக் கடந்த 19-ம் தேதி திருடு​போனது.

இது குறித்து புழல் போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரித்​தனர். இதில் பைக் திருட்​டில் ஈடு​பட்​டது ஐயப்​பன்​தாங்​கல் தண்​டலம் பகு​தி​யைச் சேர்ந்த சூர்யா என்ற சூர்​யமூர்த்தி (19), செங்​குன்​றம் காந்தி நகரைச் சேர்ந்த மணி​கண்​டன் என்ற காரைக்​கால் மணி (20) என்​பது தெரிய​வந்​தது. இவர்​கள் இரு​வரை​யும் போலீ​ஸார் நேற்று முன்​தினம் கைது செய்​தனர்.

விசா​ரணை​யில் இரு​வரும் திருடிய வாக​னத்​தில் சென்று மேலும் சில இருசக்கர வாக​னங்​களை திருடியதோடு, புழல் சக்​திவேல் நகரில் உள்ள கோயில் உண்​டியலை உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்​றது தெரிய​வந்​தது. மேலும், நடத்​தப்​பட்ட விசா​ரணை​யில் சூர்​யமூர்த்தி மீது 20 திருட்டு வழக்​கு​களும், மணி​கண்​டன் மீது 13 திருட்டு வழக்​கு​களும் ஏற்கெனவே பல்வேறு காவல் நிலையங்களில் இருப்பது தெரிய​வந்​தது.

 

மோந்தா புயல் : ரெயில்கள் தாமதம்!

‘மோந்தா’ புயல் அக். 28-இல் கரையைக் கடக்கவுள்ள நிலையில், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை சென்ட்ரல் செல்லும் ரயில்கள் 12 மணி நேரம் தாமதமாகப் புறப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

  • அதன்படி, ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் அதிவிரைவு ரயில்(22825) ஷாலிமர் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 12.10 மணிக்குப் பதிலாக நள்ளிரவு 12.10 மணிக்குப் புறப்படும்.

  • ஹௌரா – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ்(12841) ஹௌரா ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 3.10 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 3.10 மணிக்குப் புறப்படும்.

  • சந்திரகாசி – சென்னை சென்ட்ரல் எக்ஸ்பிரஸ்(22807) சந்திரகாசி ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) மாலை 5.55 மணிக்குப் பதிலாக நாளை(அக். 29) அதிகாலை 5.55 மணிக்குப் புறப்படும்.

  • தான்பாத் – ஆலப்புழா எக்ஸ்பிரஸ்(13351) தான்பாத் ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) பகல் 11.35 மணிக்குப் பதிலாக 7 மணி நேரம் தாமதமாக இன்று மாலை 6.35 மணிக்குப் புறப்படும்.

  • எஸ்எம்விடி பெங்களூரு – டானாபூர் எக்ஸ்பிரஸ்(03252) எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்திலிருந்து இன்று(அக். 28) இரவு 11.50 மணிக்குப் பதிலாக 6 மணி 40 நிமிஷங்கள் தாமதமாக நாளை(அக். 29) காலை 6.30 மணிக்குப் புறப்படும்.

மோந்தா புயல்!

மோந்தா புயல் நகரும் வேகம் 10 கி.மீட்டரில் இருந்து தற்போது 15 கி. மீட்டர் வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்கு மோந்தா புயல் உருவானது.

மோந்தா புயல் தற்போது ஆந்திரத்தை நோக்கி வரும் நிலையில், மசூலிப்பட்டினத்தில் 93 கி.மீ வேகத்தில் காற்று வீசுகிறது. ஆந்திர மாநிலம் மச்சிலிப்பட்டினத்திலிருந்து தெற்கு-தென்கிழக்கே 70 கி.மீ. தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது.

காக்கிநாடாவிலிருந்து தெற்கு-தென்கிழக்கே 82 கி.மீ. வேகத்தில் காற்று வீசிவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கொண்டுள்ளது. தற்போது தீவிரப் புயலாக வலுப்பெற்று வடக்கு-வடமேற்கு திசையில் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்துவரும் மோந்தா, ஆந்திர கடலோர பகுதிகளில், மசூலிப்பட்டினம் – கலிங்கப்பட்டினத்திற்கு இடையே காக்கிநாடாவிற்கு அருகில் இன்று மாலை அல்லது இரவு நேரத்தில் கரையைக் கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

புயல் பாதிப்பை எதிர்கொள்ள ஒடிசா அரசும், ஆந்திர அரசும் தயாராக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகத்தை பொருத்தவரை இன்று (அக். 28) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வடதமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை & காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

 

‘தி டார்க் ஹெவன்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா!

கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தில்  

சித்து, தர்ஷிகா, ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன், விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி  இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர்.

இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது. படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது,

“ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று  படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள் சென்று படப்பிடிப்பு நடத்தினோம். 

நல்ல விஷூவலுக்காக அவர் மிகவும் கடினமாக உழைத்தார். அதனால்தான் 

இப்படி அனைத்தையும் சிரமப்பட்டு எடுத்துக் கொண்டு போய் படபிடிப்பு நடத்தினோம். இதற்காக பத்து உதவி இயக்குநர்கள் கடுமையாக உழைத்தார்கள்.

படப்பிடிப்புக்கு முந்திய முன் தயாரிப்பும் சிறப்பாக இருந்தது ” என்றார்.

படத்தொகுப்பாளர் ராஜா ஆறுமுகம் பேசும் போது,

“இந்தத் திரில்லர் படத்துக் கதையின் பெரும்பகுதி இரவில் நடக்கிறது. பார்வையாளர்கள் தங்களை தொடர்புப் படுத்திக் கொள்ள முடியும் வகையில் இந்தப் படம் இருக்கும் . ‘டி 3’ படக் குழுவே இதிலும் இணைந்துள்ளது” என்றார்.

இசையமைப்பாளர் சக்தி பாலாஜி பேசும்போது,

” இயக்குநர்  பாலாஜி அவரது முதல் படம் ‘டி3’ மூலம்  பழக்கம். அவர் சொன்ன ஒரு வரிக்கதை பிடித்தது . முழு ஸ்கிரிப்ட் கேட்டேன் தர முடியாது என்றார் .எடுக்கப்பட்ட காட்சிகளைக் காட்டுகிறேன் அதையெல்லாம், பார்த்து பின்னணி இசையமையுங்கள் என்றார். அப்படிப்பட்ட காட்சிகள் சிறப்பாக இருந்தன. அதற்கேற்றபடி பின்னணி  இசையமைத்தோம். எப்போது இயக்குநர் என்னைப் பார்க்க வந்தாலும் உதவி இயக்குநர் குழுவோடு தான் வருவார்.

இந்தப் படத்திற்குப் பெரிய நட்சத்திரங்களுக்கான படம் போல் ஊடகங்கள்  ஆதரவு தர வேண்டும்” என்றார்.

நடிகர் ஜெயக்குமார் பேசும்போது, 

“இந்தப் படத்தில் பாலாஜி உடன் பணியாற்றியது முதல் ஏதோ ஒரு குடும்ப பந்தம் போல் ஏற்பட்டு விட்டது .அவர் எவ்வளவு பிரச்சினைகளைச் சமாளித்துக் கடந்து வந்திருக்கிறார் என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

 நேரில் பார்த்தபோது அவரது பிரச்சினைகளை உணர்ந்து கொண்டேன்.அவர் சாப்பிட்டு நான் பார்த்ததில்லை. எல்லா ஆணின் வெற்றிக்குப் பிறகும் ஒரு பெண் இருக்கிறாள் என்பார்கள். இவரின் மனைவி இவருக்குப் பக்கபலமாக இருக்கிறார். இப்படி எல்லாருக்கும் மனைவி அமைந்தால் அவர்கள் எங்கேயோ சென்று விடுவார்கள்.இயக்குநர் பாலாஜியை  எனது தம்பியாக நான் பார்க்கிறேன் “என்றார்.

நாயகி தர்ஷிகா பேசும்போது,

“இது என் ஒரு கனவின் முதல் மேடை. இங்கே உள்ள ஒவ்வொருவரது கனவாகவும் இந்தப் படம் இருக்கிறது. அதற்கு தகுந்த மாதிரி  அனைவரும் உழைத்தார்கள்.

பிக் பாஸில் வந்து விட்டால் மட்டுமே வாய்ப்பு  கிடைத்துவிடாது.சினிமாவில் தாகத்தோடு வருபவர்கள் கண்டிப்பாக அந்த இடத்தை அடையலாம்.பிக் பாஸில் இருந்து வந்து விட்டோம் படம் பண்ண போகிறோம் என்று நான் நினைக்கவில்லை. அது ஒரு பிளாட்பார்ம், இது ஒரு பிளாட்பார்ம் அவ்வளவுதான் . நம்பிக்கையோடு இந்தத் தளத்திற்கு வந்திருக்கிறேன்.வெற்றி பெறுவேன் என்று நினைக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை வாய்ப்பு கதவை தட்டாது, நாம் தேடிப் போனால் தான் வரும் என்று நான்  நம்புகிறேன். இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொண்டேன்.படத்தில் நடித்தவர்கள் அனைவரும் திறமைசாலிகள். அவர்கள் மூலம் நிறைய கற்றுக் கொண்டேன். சித்து எதார்த்தமான மனிதர். நான் இதில் உமையாள் என்கிற பாத்திரத்தில் நடித்திருக்கிறேன். நல்ல தமிழ்ப் பெயர் .அந்தப் பெயரை எனக்குப் பிடிக்கும். அனைவரும் இந்த படத்திற்காக உழைத்தார்கள். அனைவரது கனவும் இதில் இருக்கிறது.படம் வெற்றி பெறும்  என்று நம்புகிறேன்” என்றார்.

நிர்வாகத் தயாரிப்பாளர் மனோஜ் பேசும்போது,

“இந்தப் படத்திற்காக வேறொரு கதாநாயகனை வைத்து எடுத்தோம் 60 முதல்  70% முடித்து விட்டோம்.அவர் கொடுத்த  பிரச்சினைகள் தாங்க முடியவில்லை. அதையும் தாண்டி எடுத்தோம். ஒரு கட்டத்தில் தொடர முடியாத நிலை ஏற்பட்டு விட்டது. எனவே  கைவிட்டு விட்டோம்.என்ன காரணம்? ஒரு நடிகர் டூப் போட்டு நடிக்க வரலாம், ‘டோப்’ போட்டு வந்து நடிக்கக் கூடாது.

அதனால் அதை கைவிட்டு விட்டோம். ஒரு பிரசவம் ஆகிற போது கருக்கலைந்தது மாதிரியான ஒரு வலி மிகுந்த அனுபவம். இதனால் இயக்குநரும், தயாரிப்பாளரும் மிகவும் மனச்சோர்வடைந்து விட்டார்கள்.

மீண்டும் அதை எடுக்கிற போது முதலில் எடுத்த செலவுகளும்  பட்ஜெட்டில் சேர்ந்து கொள்ளும் .எனவே செலவுத்தொகை இரட்டிப்பாகும் .அதை நாங்கள் ஈடு கட்டுவதற்காக அனைவரும் பல நாட்கள் உடலை வருத்திக்கொண்டு உழைத்தோம்.  இரண்டு கால் ஷீட் இரண்டரை கால் ஷீட் என்றும் 48 மணி நேரம் கூட தொடர்ந்து பணியாற்றியும் படப்பிடிப்பு நடத்தினோம் . இப்படி இழப்புகளை உழைப்பின் மூலம் ஈடு கட்டினோம்.

நான் சாமி கும்பிடுவேன் என்றாலும் எனக்கு ஒரு சந்தேகம் இருக்கும். உண்மையிலே இருக்கிறதா இல்லையா?ஆனால் இந்தப் படத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்த்து கடவுள் இருக்கிறார் என்று எனக்கு நம்பிக்கை வந்தது.

கதாநாயகன் வராத போது அவர் இல்லாத காட்சிகளை நாங்கள் காட்டுப் பகுதியில் எடுத்தோம் . காட்சிப்படி ஒரு வர் சாமி ஆட வேண்டும். அவர் இயக்குநர் கட் சொன்ன பிறகும் ஆடினார் ஆடினார், ஒரு மணி நேரம் ஆடிக்கொண்டே இருந்தார். அவருக்கு உண்மையிலேயே சாமி வந்துவிட்டது.இது மேக்கிங் வீடியோவில் இருக்கிறது.

மூன்று மாதம் இடைவெளி வந்தது . அந்த வீடியோவை அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்தேன்.

பிறகுதான் சித்து இந்தப் படத்தில் இணைந்தார் .ஆனால் அவர் குரலைக் கேட்டபோது எங்கேயோ கேட்ட மாதிரி இருந்தது. பிறகு தான் தெரிந்தது அந்த மேக்கிங் வீடியோவில் கடைசி 30 வினாடிகளில் அவரது குரல் இருந்தது. அந்த சாமியாடும் வீடியோ எடுத்த போது யாரோ சித்து பேசுவதை மொபைல் போனில் ஒலிக்க விட்டிருந்தார்கள். இதன்படி அந்த நடிகருக்குப் பிறகு சித்து  தான்  தொடர்வார் என்கிற குறிப்பு அந்த மேக்கிங் வீடியோவில் இருந்தது பெரிய ஆச்சரியமாக இருந்தது.

அப்போதுதான் கடவுள் இருக்கிறார் என்று நம்பிக்கை வந்தது.இது ஒரு ஆன்மீக அனுபவம்.

 நான் இங்கே ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும் பெரிய கதாநாயகர் இருந்தால் அந்த படத்திற்கு நல்ல ஓபனிங் கிடைக்கும். தியேட்டர்கள் நிறைய  கிடைக்கும். திரையரங்கு உரிமையாளர்கள் ஒன்றை இங்கே பரிசீலனை செய்து கவனத்தில் கொள்ள வேண்டும். ரீ ரிலீஸ் செய்யப்படும் மறு வெளியீட்டுப் படங்களுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று டிக்கெட் போடுவது போல் எங்களை போல நல்ல கதையுள்ள கொண்ட கன்டென்ட் பேஸ்டு  படங்களுக்கு முதல் ஷோவுக்கு 50 ரூபாய் 100 ரூபாய் என்று போட்டால் வருகிறவர்களின் மவுத் டாக் மூலம் படம் பற்றி மக்களிடம் சென்றடையும்.இல்லாவிட்டால் முதல் ஷோவுக்கு 50 பேர் 100 பேர் தான் வருவார்கள் .ஆனால் 50 ரூபாய் 100 ரூபாய் 75 ரூபாய் என்று டிக்கெட் போட்டால் 200 பேருக்கு மேல் வருவார்கள். வாய் இருந்தால் தானே,வாய் வழியாக பேசப்படும். எனவே அப்படி கட்டணத்தைக் குறைத்து அமல் படுத்தினால் நன்றாக இருக்கும்.

நிறைய படங்கள் வருவதாகச் சொல்கிறார்கள். ஆனால் அதனால் என்ன பயன்?வாராவாரம் வருகிற ஆறு – ஏழு படங்களில் எத்தனை உருப்படியாக உள்ளன? நிறைய உப்புமா படங்கள் வருவதால் தான் சினிமாவில் பிரச்சனையே வருகிறது நீங்கள் படத்தின் தரத்தைப் பார்த்து வடிகட்டி இந்த  வாய்ப்பைக் கொடுக்கலாம். முதல் 100 டிக்கெட் 50 ரூபாய் 75 ரூபாய் என்றாவது நீங்கள் கொடுக்கலாம்.

ஒரு காலத்தில் சிவாஜி எம்ஜிஆர் படங்கள், பிறகு ரஜினி கமல் படங்கள், விஜய் அஜித் படங்கள் என்று இரண்டு வகையான படங்களுக்கு தான் வரவேற்பு இருந்தது. அவை ஹீரோ கண்டன்ட் உள்ள படங்கள் என்று சொல்லலாம். இப்போது இரண்டு வகையான படங்கள் மட்டுமே வருகின்றன. ஒன்று ஹீரோ கண்டன்ட் படங்கள், அடுத்தது ஸ்டோரி கண்டன்ட் படங்கள். அதாவது கதாநாயகன் உள்ள படங்கள், கதையுள்ள படங்கள். இந்த இரண்டு வகை மட்டுமே இப்போது உள்ளன.

இப்படிக் கதையை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். அப்படிப்பட்ட படமாக தான் இந்தப் படம் வந்திருக்கிறது” என்றார்.

சிறப்பு விருந்தினராக வந்த இயக்குநர் மித்ரன் ஆர் ஜவஹர் பேசும்போது,

“நான் டீசர் பார்த்தேன் நன்றாக உள்ளது.

இந்தப் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள். இயக்குநர் அமைதியாக இருப்பார்,பேசமாட்டார் என்று சொன்னார்கள்.  ஆனால் தனது படம் பேசட்டும் என்று இருக்கிறார். அவரது படம் பேசும். 

எனது இயக்குநர் செல்வராகவன் கூறுவார், படத்தில் எவ்வளவு உழைப்பு காட்டுகிறோமோ அது பலனாகத் திரும்ப வரும் என்பார் .அப்படி இந்த படத்திற்காக அனைவரும் உழைத்துள்ளார்கள். அதற்குரிய பலன் கிடைக்கும் எனக்கு தனுஷ் எவ்வளவு பிடிக்கு மோ அவ்வளவு சித்துவைப் பிடிக்கும். அப்படிப்பட்ட திறமை கொண்ட இவருக்கு நல்ல எதிர்காலம் உள்ளது.படக்குழுவினருக்கு  வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,

“இது ஒரு உணர்ச்சிகரமான மேடை .ஒரு முடிவிலிருந்து மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம். முடிவு என்கிற நிலையில் இருந்து மீண்டும் வந்து இங்கே நிற்கிறோம். இதற்காகப் பலரும் என்னுடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். அந்த ஆதரவுகளின் பலம்தான் என்னை நடத்தி வந்து இருக்கிறது.

நான் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு சிறு கிராமத்தில் சினிமாவை அனுமதிக்காத குடும்பத்திலிருந்து இங்கே வந்தவன்.இங்கே வந்த பிறகுதான் சினிமாவில் உள்ள பிரச்சினைகள் தெரிந்தன.

யாருமே இப்படி ஒரு முடிவிலிருந்து துடைத்தெறியப்பட்டதிலிருந்து மீண்டு எழுந்து வர மாட்டார்கள். நாங்கள் மறுபடியும் தொடங்கி இந்த அளவுக்குக் கொண்டு வந்திருக்கிறோம். உடன் நின்று உழைத்த மனிதர்களின் ஆதரவும் ஊக்கமும்  தட்டிக் கொடுக்கும் நம்பிக்கையும்தான்   எங்களை  இவ்வளவு தூரம் இப்படிக் கொண்டு வந்து நிறுத்திருக்கிறது. முதல் ஹீரோ செய்த பாதிப்பு பற்றிக் கவலைப்படாமல் சித்து ஒப்புக்கொண்டது பெரிய விஷயம். இப்படி நடிக்க ஒப்புக்கொள்வது சிரமம். ஆனால் சித்து சமரசம் செய்து நடிக்க வந்தார். அவருக்கு நல்ல பெயர் கிடைக்கும். தர்ஷிகாவுக்கும் நல்ல படமாக இருக்கும். இந்தப் படத்தில் நடித்துள்ள ஜெயக்குமார் சாரை பல இரவுகள் நான் கொடுமைப்படுத்தி இருக்கிறேன். என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் சார்.

படத்தில் ஆங்கிலத் தலைப்பு வைத்தது பற்றி கேட்கிறார்கள். எனக்குச் சரியாக இருக்கும் என்று தோன்றியதால் அப்படி வைத்தேன் .பொருத்தமாக இருக்கிறது.அந்த மலைக் கிராமத்தில்  ஒவ்வொரு ஏழு  ஆண்டுக்குப் பிறகு வருகிற ஜூன் மாதத்தில் ஆண்கள் எல்லாம் இறந்து போவார்கள் என்பது நம்பிக்கை. இதை அடிப்படையாக வைத்துத்தான் டார்க் அந்தத் தலைப்பை வைத்தோம்.

எனக்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பும் ஊக்கமும் கொடுத்த என் தேவதை  செந்தில்குமாரிக்கு என் நன்றி” என்றார் .

படத்தின் நாயகன் சித்து பேசும்போது,

“எனது வாழ்க்கையை தொடங்கி வைத்து எனக்கு ஒரு நல்ல அறிமுகம் தந்த இயக்குநர் மித்ரன் ஜவஹர் சார் இங்கே வந்திருக்கிறார். அவருக்கு மிகவும் நன்றி. அவர் அறிமுகத்தால் தான் இந்த வண்டி இன்று வரை ஓடிக்கொண்டிருக்கிறது. என்னுடைய குடும்பமாக அவர் இருக்கிறார். எப்போதும் அமைதியாக இருப்பவர்.எப்படிப்பட்ட விஷயத்தையும் அவர் எளிதாகக் கையாள்வார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும்.இது அனைவருக்கும் தேவை. நான் எதுவாக இருந்தாலும் அதிகமாக சிந்தித்து மனதில் போட்டு குழப்பிக் கொள்வேன்.நான் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டேன்.

எனது மனைவி  ஷ்ரேயா எனக்குப் பக்கபலமாக இருக்கிறார்.அவர் இல்லை என்றால் நான் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது.

பொதுவாக இன்ஸ்டாகிராம் பார்த்து நான் பதற்றம் அடைவேன் .இன்ஸ்டாகிராமில் எதுவுமே நேர்நிலையாக வருவதில்லை .அங்கு அது நடந்தது, இங்கே இது நடந்தது என்று எதிர்மறையாகவே வருகின்றன. பார்க்கவே பயமாக இருக்கும்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக எனக்கு பயங்கரமான ஒரு கெட்ட நேரம் என்று தோன்றியது. அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை பல பிரச்சினைகள் என்று இருந்தன.மிகவும் மன அழுத்தத்திலிருந்து  கொண்டிருந்தேன்.அடுத்த கட்டம் என்ன என்று புரியாமல் இருந்தேன், நிறைய யோசித்தேன். நமக்கு நேரம் சரியில்லையோ, ஒரு ராசி சரியில்லையோ என்று யூட்யூபில் பார்க்கும்போது மேலும் மன அழுத்தம் அதிகமானது. தலைப்புகளைப் பார்க்கும் போதே மோசமாக இருக்கும். ஏனென்றால் ஒவ்வொன்றும் நம்மை பயமுறுத்துவது போலவே இருக்கும்.வயது வரம்பைக் கடந்து நடக்கப் போகிறது, வாழ்க்கை தலைகீழாக மாறப்போகிறது,இந்தத் தேதியில் இது நடந்தே தீரும் என்று எல்லாம் பயமுறுத்தினார்கள். இது வேலைக்காகாது என்று அதைப் பார்ப்பதை விட்டு விட்டேன். 

அப்போதெல்லாம் நான்வருத்தமாக மன அழுத்தத்தில் இருந்தாலும் அதை கூல் கூல் என்று கூறி தணிப்பது என் மனைவி ஷ்ரேயா தான். 

எல்லாரையும் போலவே நல்ல படம் நல்ல பாத்திரம் செய்ய வேண்டும் என்று ஆசை இருந்தது.

ஒரு நாள் என்னை இயக்குநர் பாலாஜி தொலைபேசியில் அழைத்தார். சந்திக்க வேண்டும் என்றார்.அப்பொழுது எனக்கு நல்ல நேரம் தொடங்கி விட்டது என்று நினைத்தேன்.நான் ‘டி3 ‘படம் பார்த்ததில்லை. இருந்தாலும் தொழில் நுப்ப ரீதியாக ட்ரெய்லர் டீசர் எல்லாம் நன்றாக இருந்தன. பிறகு நானே அழைத்தேன் போய்ச் சந்தித்தேன், கதை கூறினார் நன்றாக இருந்தது.போலீஸ் வேடம் என்றபோது எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது. புதிதாகவும் இருக்கும் சவாலாகவும் இருக்கும் என்று தோன்றியது. அவர் நல்ல திறமைசாலி. அவர் திறமைக்கு பெரிய இடத்துக்கு செல்வார் .யாரையும் ஆளைப் பார்த்து எடை போடாதீர்கள்.அவர் அப்படிப்பட்ட நேர்த்தியான வேலைக்காரர்.

இந்தப் படத்தில் அவர் எடுத்திருக்கும் காட்சிகளைப் பார்க்கும்போது எந்தக் குறையும் சொல்ல முடியாது. எவ்வளவுதான் பார்த்துப் பார்த்து எடுத்திருந்தாலும் அதைப் போட்டு பார்க்கும் போது இன்னும் நன்றாக  செய்திருக்கலாம் என்றுதான் பலருக்கும் தோன்றும். ஆனால் அவர் எடுத்து இருக்கும் காட்சிகளைப் பார்த்தால் ஒரு திருத்தம் கூட சொல்ல முடியாது. திருத்தத்துக்கு வேலை இருக்காது. அவ்வளவு சரியாக செய்வார். நள்ளிரவு இரண்டு மணிக்குப்  படப்பிடிப்பு நடக்கும். இருந்தாலும் அவர் அசராமல் இருப்பார்.

வேலை பார்க்காமலே உடல் வலி இருக்கும் அளவிற்கு நாங்கள் படப்பிடிப்பு இடத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.அதற்குப் பிறகு போய் படப்பிடிப்பு நடத்தினோம். படக்குழுவினர் அத்தனை பேரும் அவ்வளவு உழைத்தார்கள்.

இன்ஸ்டாகிராமைப் பார்த்து நமது நண்பர்களைப் பற்றி அறிய முடிந்தது .இன்ஸ்டாகிராமில் நாம் சிரமத்தில் இருக்கும் போது ஆறுதலாகசொல்வார்கள் என்று போஸ்ட் போடும்போது ஆறுதலாக கமெண்ட்ஸ்கள் வரும்.ஆனால் சற்று முன்னேறி நல்ல விஷயத்திற்காக வாழ்த்துக்கள் எதிர்பார்த்து போடும்போது வராது.

முகம் தெரியாதவர்கள் கூட ஆதரவு தந்து வாழ்த்தியிருந்தார்கள். ஆனால் அருகில் இருக்கும் நண்பர்களுக்கு வாழ்த்த மனதில்லை. அப்போது ‘டாடா’ படத்தில் வரும் கவின் பேசும் வசனம் தான் என் நினைவுக்கு வந்தது. ‘நாம் நல்லா இருக்கலாம் . ஆனா உங்களைவிட நான் நல்லா இருந்திடக் கூடாது’ என்று தான் நினைப்பார்கள்.அப்படி பல நண்பர்களை அடையாளம் கண்டு கொண்டேன். இந்தப்படம் நன்றாக வந்து இருக்கிறது அனைவரும் திரையரங்கில் சென்று பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும் “என்றார்.

நடிகர் சித்துவின் மனைவி  ஷ்ரேயா பேசும்போது,

“மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .சித்துவின் படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது. இதுவரை அவரது கடின உழைப்பால் தான் வந்திருக்கிறார்.எனக்குப் பெருமையாக இருக்கிறது. இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

மருதம் விமர்சனம் RATING 3/5

விமர்சனம்:

விவசாயத்தை மட்டுமே நம்பியிருக்கும் விதார்த், வாங்காத கடனுக்காக அவரது நிலத்தை வங்கி ஒன்று ஏலம் விட்டு விடுகிறது. விசயம் அறிந்து வங்கியில் முறையிடும் விதார்த்துக்கு, அவரது தந்தையின் பெயரில் கடன் வாங்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அதற்கும் வாய்ப்பில்லை என்பதில் உறுதியாக இருக்கும் விதார்த், இதில் ஏதோ மோசடி இருக்கிறது, என்பதை உணர்கிறார். பிறகு விதார்த் வங்கியிடம் இருந்து தன நிலத்தை மீட்டாரா? இல்லையா? என்பதே கதை…

விதார்த் நிலத்தை இழந்துவிட்டு வருந்துவது, அதே நிலத்தை மீட்க சட்ட ரீதியிலான போராட்டம் என்று பாதிக்கப்பட்டவர்களை பிரதிபலிக்கும் வகையில் நடித்திருக்கிறார். நகைச்சுவை கதாபாத்திரமாக அறிமுகமாகி சில இடங்களில் சிரிக்க வைக்கும் மாறனின் இறுதி முடிவு அதிர்ச்சியளிக்கும் வகையில் இருக்கிறது.

நாயகியாக நடித்திருக்கும் ரக்‌ஷனா, தோற்றத்திற்கு பொருந்ததாத வேடமாக இருந்தாலும், வசன உச்சரிப்பு, உடல் மொழி மூலம் தனது கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருப்பவர், பல காட்சிகளை மிக சாதாரணமாக கையாண்டிருக்கிறார். இசை ஓகே தான். விவசாயிகள் வங்கியில் ஏமாறும் வலியை பற்றி படம் சொல்லுகிறது.

மைனஸ்: கதையை இன்னும் சுவாரஸ்யமாக கொண்டு சென்று அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

மொத்தத்தில் இந்த ‘மருதம்’ வங்கி மோசடி விழிப்புணர்வு.

‘மைலாஞ்சி’ படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீடு!

ஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா பாடல்களை எழுதி இசையமைக்க இயக்குநர் வெற்றிமாறன் வழங்குகிறார்.

இந்நிகழ்வில் திருமதி அகிலா பாலுமகேந்திரா மற்றும் இசைக்கலைஞர் கங்கை அமரன் ஆகியோர் இசை மற்றும் டீசரை வெளியிட, சிறப்பு விருந்தினர்களாக படக்குழுவினருடன் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மீரா கதிரவன், காவல்துறை உயரதிகாரி தினகரன் (ஏடிஜிபி) ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

எழுத்தாளரும், தமிழ் இலக்கிய சிந்தனையாளருமான அஜயன் பாலா இயக்குநராக அறிமுகமாகும் ‘மைலாஞ்சி’ திரைப்படத்தில் ‘கன்னி மாடம்’ பட புகழ் நடிகர் ஸ்ரீராம் கார்த்திக் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை க்ருஷா குரூப் நடித்திருக்கிறார். இவர்களுடன் முனீஷ்காந்த், சிங்கம் புலி, தங்கதுரை உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மேதை செழியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சிம்பொனி செல்வன் இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். உன்னதமான காதல் உணர்வை போற்றும் வகையில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் ப. அர்ஜுன் தயாரித்திருக்கிறார்.

திரையரங்குகளில் விரைவில் வெளியாகவுள்ள‌ இந்த திரைப்படத்தின் இசை மற்றும் டீசரை வெளியிடுவதற்காக‌ சென்னையில் நடைபெற்ற விழாவில் படக்குழுவினருடன் திருமதி அகிலா பாலு மகேந்திரா, கங்கை அமரன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் ஆர். வி. உதயகுமார், பேரரசு, ஏ. எல். விஜய், மிஷ்கின், மீரா கதிரவன், தயாரிப்பாளர் தனஞ்செயன், காவல்துறை உயரதிகாரி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். டிரென்ட் மியூசிக் நிறுவனம் ‘மைலாஞ்சி’ பாடல்களை வெளியிட்டுள்ளது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ப. அர்ஜுன் பேசுகையில், “இது நெகிழ்ச்சியான மேடை. உலகம் பெரியது, ஆனால் என்னுடைய உலகம் மிக சிறியது. மேற்குத் தொடர்ச்சி மலையில் அடிவாரத்தில் உள்ள சிறிய கிராமத்தில் மனநல மருத்துவராக பணியாற்றி வருகிறேன். அன்னை இல்லம் என்ற ஒரு கூட்டு இல்லம் தான் என்னுடைய உலகம். எனக்கு வெளி உலகம் தெரியாது. நோய்களைப் பற்றி, அதுவும் மனநலம் சார்ந்த நோய்களைப் பற்றியும் நோயாளிகள் குறித்தும் கண்டறிந்த நான் இந்த வெளி உலகத்தை பார்க்கவில்லை.

சினிமா தயாரிக்க போகிறேன் என்று சொன்னவுடன் என்னுடைய உறவுகளும் நண்பர்களும் பதட்ட‌ம் அடைந்தனர். வியப்பாகவும் பார்த்தனர், சிலர் வருத்தமும் அடைந்தனர். ஆனால் ‘மைலாஞ்சி’ திரைப்படம் எனக்கு ஏராளமான அனுபவங்களை கற்றுத் தந்திருக்கிறது. அனுபவ பாடங்களில் நல்லவற்றை எடுத்துக் கொள்ளுங்கள், தீயவற்றை விட்டு விடுங்கள். அடுத்த நாள் காலையில் நாம் இருப்போமா என்று உறுதியாக தெரியாது. மனித வாழ்க்கை நிலைத்தன்மை அற்றது.

கதை சொல்வதற்காக என்னுடைய ஹீரோ, இயக்குநர் அஜயன் பாலாவை எனக்கு அறிமுகப்படுத்துகிறார். நான்கு கதைகளை அவர் சொல்கிறார், அனைத்தையும் மௌனமாக கேட்டுக் கொண்டிருக்கிறேன்.‌ எந்த கதைக்கும் எதிர்வினை ஆற்றாததால் ஹீரோவும்,  இயக்குநரும் என்னை பார்த்துக் கொண்டே இருந்தனர்.‌ நான் அடிப்படையில் மனநல மருத்துவன் என்பதால் எதிர்வினை ஆற்றாமல் இருப்பது என்னுடைய பழக்கமாகிவிட்டது.‌ அதன் பிறகு அவர்களிடம் வேறு ஏதேனும் கதை இருக்கிறதா எனக் கேட்டேன்.  

இயக்குநர்களில் பீம்சிங், ஸ்ரீதர், மகேந்திரன், பாலு மகேந்திரா, பாலச்சந்தர், பாரதிராஜா உள்ளிட்டவ‌ர்களை எனக்கு பிடிக்கும். இவர்கள் மனித உணர்வுகளை ரசிகர்களுக்கு கடத்துவார்கள். சினிமா பொழுதுபோக்கு ஊடகம் என்பதை கடந்து அதற்குள் மனித உணர்வுகளை கடத்தக்கூடிய அளவிற்கு கதையை சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டேன்.‌

அதன் பிறகு ஐந்தே நிமிடத்தில் ஒரு கதையை சொன்னார்.‌ அந்த கதை தான் ‘மைலாஞ்சி’. உணர்வுகள் எதுவும் புதிதில்லை, எல்லா மனிதர்களுக்கும் உணர்வுகள் ஒன்றுதான். இந்த பூமி அழியும் வரை காதல் ஒரு உன்னதமான நெகிழ்வான ஒரு உணர்வு. காதல் எனும் உணர்வு பழையதாக இருந்தாலும், அதை கொடுக்கும் விதம் புதிதாக இருக்க வேண்டும்.

இந்தத் திரைப்படம் எனக்கு நட்பை கற்றுக் கொடுத்திருக்கிறது. நட்பிற்குரிய மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டிருக்கிறது என்று நாம் பேசிக் கொண்டே இருக்கிறோம். அது இல்லை என்பதை இந்த படத்தில் நான் கற்றுக் கொண்டேன். நட்பின் காரணமாக ஒளிப்பதிவாளர் செழியன் இந்த குழுவுடன் இணைந்தார்.

காதல் என்ற உணர்வை மென்மையாக சொல்லக்கூடிய இந்த கதைக்கு இசைஞானி இளையராஜா தான் வேண்டும் என கேட்டேன். செழியனின் நட்பிற்காக இளையராஜா இதில் பணியாற்ற ஒப்புக்கொண்டார். செழியனின் நட்பிற்காக படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் இந்த குழுவுடன் இணைந்தார். வெற்றிமாறன் இந்தப் படத்தை வழங்குவதற்கும் நட்புதான் காரணம். மிஷ்கின் அவர்களும் நட்பின் காரணமாகவே இங்கு வாழ்த்த வருகை தந்திருக்கிறார். அண்ணன் சீமானுக்கும் எனக்கும் இடையே உள்ள நட்பின் காரணமாகவே அவரும் இங்கு வருகை தந்திருக்கிறார். திரைப்பட விழாக்களில் கலந்து கொள்வதில் ஆர்வம் காட்டாத என்னுடைய பால்ய கால வகுப்புத் தோழர் ஏடிஜிபி தினகரனையும் மற்றும் நட்பின் காரணமாக இங்கு வருகை தந்திருக்கும் அனைவரையும் வரவேற்கிறேன். அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொள்கிறேன்.

காதல் தற்போது வேறு விதமாக சென்று கொண்டிருக்கும் தருணத்தில், காதல் வேறுவிதமானதல்ல, காதல் என்றைக்கும் காதல் தான், உண்மையான காதல் என்பது எப்போதும் காதலாகவே இருக்க வேண்டும் என்பதை சொல்வதற்காகவே மைலாஞ்சியை உருவாக்கி இருக்கிறோம். இதனை இந்த இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்ள வேண்டும் என விரும்புகிறேன்,” என்றார்.

ஒளிப்பதிவாளர் செழியன் பேசுகையில், “அஜயன் பாலா எனக்கு நண்பன். 2000ம் ஆண்டில் நான் பி. சி. ஸ்ரீராமின் உதவியாளராக பணியாற்றியபோது, அஜயன் பாலா மற்றொரு இயக்குநரிடம் உதவியாளராக பணியாற்றிய போது நண்பர்களாக அறிமுகமானோம். அப்போது நடைபெற்ற உரையாடலில், ‘நான் முதலில் படத்தை இயக்கினால் அதற்கு நீதான் ஒளிப்பதிவு செய்ய வேண்டும்’ என என்னிடம் கேட்டுக் கொண்டார். கேட்டுக் கொண்டதுடன் மட்டும் இல்லாமல் அவருடைய பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து, ‘ இதுதான் உனக்கான அட்வான்ஸ்’ என்றார்.‌ அதற்குப் பிறகு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன‌. ஒரு நாள் திடீரென்று அலுவலகத்திற்கு வந்து படத்தில் பணியாற்ற சம்மதமா எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘நீ கொடுத்த அட்வான்ஸ் அப்படியே இருக்கிறது. வா படப்பிடிப்புக்கு செல்லலாம்’ என்றேன்.

ஒவ்வொரு படத்திலும் பணியாற்றும்போது யாரேனும் இருவர் எனக்கு நெருக்கமான நண்பர்களாக மாறிவிடுவார்கள். அந்த வகையில் இந்த படத்தில் நாயகனாக நடித்த ஸ்ரீராம் கார்த்திக் எனக்கு நெருங்கிய நண்பராகிவிட்டார். இந்த படத்திற்காக தன்னுடைய முழு உழைப்பையும் வழங்கி இருக்கிறார். தமிழில் முக்கியமான நடிகராக அவர் வரவேண்டும் என்று வாழ்த்துகிறேன். தயாரிப்பாளர் அர்ஜுன் கடந்த இரண்டு ஆண்டுகளாக பழகி, அவரும் நெருக்கமான நண்பராக மாறிவிட்டார்.‌

ஊட்டி என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது பாலுமகேந்திரா தான். அவர் காட்சிப்படுத்தாத லொகேஷன்களை தேடித் தேடி இந்த படத்திற்காக பதிவு செய்திருக்கிறோம். இருபது ஆண்டுகள் கழித்து கலர்ஃபுல்லாக க்ளாஸியாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறேன். இப்படி ஒரு வாய்ப்பை அளித்த நண்பர் அஜயன் பாலாவிற்கு நன்றி. நான் பெரிதும் மதிக்கும் பாலு மகேந்திராவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த படத்தை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்,” என்றார்.

நடிகர் சிங்கம் புலி பேசுகையில், “இந்தப் படத்தின் தயாரிப்பாளர் மருத்துவர் அர்ஜுன் எனக்கு மாமா. எனக்கு சொந்த ஊர் சேத்தூர்.‌ நாங்கள் கால சூழலில் இடம் மாறி விட்டோம். ஆனால் அதே ஊரில் தான் இருப்பேன் என்று சொல்லி இன்றும் அங்கேயே இருக்கிறார் அர்ஜுன். அவருடைய அப்பா ஒரு அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர். இவர் படித்து மருத்துவராகி இருக்கிறார்.  

இப்போதும் அவர் காசு வாங்காமல் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வருகிறார். அப்பா, அம்மா, பாரதியார், வள்ளுவர், கம்பர்… இதுதான் அவருடைய உலகம். அவர் எந்த ஹோட்டலிலும் சாப்பிட மாட்டார். வெளியிடங்களில் தண்ணீர் கூட குடிக்க மாட்டார். குளிர்சாதன வசதி உள்ள அறையில் அதிக நேரம் இருக்க மாட்டார். தனி மனித ஒழுக்கத்தில் உயர்ந்த நிலையில் இருப்பவர்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு நான் என்னுடைய குலதெய்வத்தை வணங்குவதற்காக செல்லும்போது இவரை சந்திக்கிறேன். அப்போது என்னிடம் ஒரு படத்தை தயாரிப்பதற்கு எவ்வளவு செலவாகும் எனக் கேட்டுவிட்டு, ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என அவருடைய விருப்பத்தை சொன்னார். அவர் சில கதைகளையும் சொன்னார்.

சில ஆண்டுகளுக்குப் பிறகு இயக்குநர் அஜயன் பாலா அவரை சந்தித்து கதை சொன்ன போது, அந்த கதை பிடித்து, இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன். அஜயன் பாலா, செழியன், லால்குடி இளையராஜா, ஸ்ரீகர் பிரசாத், இசைஞானி ஆகியோர் இப்படத்தில் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் தயாரிப்பாளர் சினிமாவை எவ்வளவு தூரம் நேசித்திருக்கிறார் என்பது புரியும்.  சினிமாவைப் பற்றி என்னிடம் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசுவார்,” என்றார்.  

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “இயக்குநர் அஜயன் பாலா பேரன்பு மிக்கவர். என்னுடைய சினிமா ஆய்வை, அறிவை உரசி பார்க்கக்கூடியவர். எப்போதும் சினிமாவைப் பற்றி ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பவர்.‌ நான் சினிமாவில் வந்ததற்கு அஜயன் பாலாவும் ஒரு காரணம். அன்பான மனிதர், பண்பான மனிதர். அதனால் அவருக்கு சினிமா வாய்ப்பு எளிதாக கிடைக்கவில்லை. சினிமாவில் தேவையில்லாமல் ரொம்ப நல்லவர்கள் சில பேர் இருப்பார்கள். அதில் மீரா கதிரவனை போல் அஜயன் பாலாவும் ஒருவர். உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு முன்னால், வெற்றிமாறனுக்கு முன்னால், அஜயன் பாலா இயக்குநராகி இருக்க வேண்டும்.‌

இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த விஷ‌யம் இசைஞானி இளையராஜாவை இணைத்துக் கொண்டது தான். இந்தப் படத்தின் பாடல்களை கேட்டேன், பார்த்தேன். சில இடங்களில் அவருடைய தனித்துவம் தெரிந்தது.‌

தயாரிப்பாளர் நட்பை பற்றி குறிப்பிட்டார் வேறு துறையில் நட்பு இருக்கிறதா, இல்லையா என எனக்குத் தெரியாது. ஆனால் சினிமா துறை போல் நட்பை போற்றும் ஒரு துறை கிடையாது.  

தான் கண்டறிந்த விஷ‌யத்தை சமூகத்துடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு படைப்பாளியின் ஆசை. தான் கஷ்டப்பட்டு சிறுக சேகரித்த ஒரு விசயத்தை மக்களிடம் திருப்பி தர வேண்டும் என்பது ஒரு தயாரிப்பாளரின் ஆசை. சினிமாவை எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அது ஆக சிறந்ததாகவே இருக்கிறது. இதற்கு நட்புதான் அடித்தளம். சினிமா என்பது மிகப்பெரிய நட்பு சமுத்திரம்.

இந்தத் திரைப்படம் மிக முக்கியமான படம். கதாசிரியனும் இந்த சமூகத்திற்கான மனநல மருத்துவன் தான். நல்ல படங்கள் இந்த சமூகத்திற்கு ஒரு தெரபி, சமூகத்திற்காக இப்படி சிந்திக்கும் தெரபிஸ்ட்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை.

கடந்த 30 வருடமாக இந்த சினிமாவில் நான் புரிந்து கொண்ட விஷ‌யத்தை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் முக்கோணம் என்ற ஒரு வடிவத்தை பற்றி தெரிந்திருக்கும். அதில் ஐந்து வகையான முக்கோணங்கள் இருக்கிறது என்பார்கள், மூன்று பக்கமும் ஒரே அளவுள்ள முக்கோணம் தான் தனித்துவமானது. அதேபோன்றுதான் இந்த சினிமா. தயாரிப்பாளர் –  கதாசிரியர் ‍& இயக்குநர் – தொழில்நுட்பக் கலைஞர்கள்-  என இந்த மூவரும் சமமாக இருந்தால் படைப்பு நன்றாக இருக்கும்.

எங்கள் காலத்தில் சினிமா என்பது ஒரு கனவாகவே இருந்தது. ஆனால் இப்போது அப்படி அல்ல. 365 திரைப்படங்கள் உருவான இந்த தமிழ் சினிமாவில் தற்போது 35 திரைப்படங்கள் தான் உருவாகின்றன‌.‌ ஐந்து படங்கள் தான் வெற்றி பெறுகின்றன‌.  அடுத்த தலைமுறை சினிமாவிற்கு வரும் தயாரிப்பாளர்கள் ஒரு மூன்று படங்களை உருவாக்குவதற்கான திட்டமிடலுடன் வர வேண்டும். முதல் படம் அனுபவம். இரண்டாவது படம் எப்படி தோல்வி அடையாமல் படம் தயாரிப்பது, எப்படி வெற்றி பெறுவது என்று அனுபவத்தை தரும். மூன்றாவது படத்தில் பொருத்தமான நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் ஆகியோரை தேர்வு செய்து வெற்றி படத்தை எப்படி அளிக்க வேண்டும் என்ற அனுபவத்தை பெறுவார்கள்.‌ இது என்னுடைய கணிப்பு,” என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், “எழுத்தாளர் அஜயன் பாலாவின் பல வருட கனவு இயக்குநராக வேண்டும் என்பது. அது இன்று நனவாகி இருக்கிறது. அதற்காக அவருக்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் எழுதிய நிறைய புத்தகங்களை நான் வாசித்திருக்கிறேன். அஜயன் பாலா மீதான நட்பின் காரணமாகவே இங்கு அனைவரும் வருகை தந்திருக்கிறார்கள்.

இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலமாக இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் இருப்பதை நான் பார்க்கிறேன்.

அரசியலில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சீமான் திரைப்படங்களை பார்வையிட்டு தன் கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார். இது படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைகிறது. அதனால் அவரிடம் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன் ஊடகங்களால் நல்ல படைப்புகள் என பாராட்டப்படுவதை நீங்கள் அவசியம் பார்த்து உங்களுடைய கருத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். அதன் மூலமாக உங்களைப் பின்பற்றுபவர்கள் அந்த படத்தை பார்த்து வெற்றி பெறச் செய்வார்கள். அதனால் தொடர்ந்து சிறிய படங்களுக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இயக்குநர் ஆர். வி. உதயகுமார் பேசுகையில், “எட்டு மாதத்திற்கு முன்பு மயிலாஞ்சி என்று ஒரு படம் வந்தது. இது மைலாஞ்சி. நீண்ட நெடிய பயணத்திற்குப் பின் இயக்குநராகி இருக்கும் அஜயன் பாலாவிற்கு என்னுடைய வாழ்த்துக்கள்.  

1976ம் ஆண்டில் கோயம்புத்தூரில் நான் தான் முதல் மாணவன். எனக்கு கோவை மருத்துவக் கல்லூரியிலும், கோவை வேளாண்மை கல்லூரியிலும் படிப்பதற்கான இடம் கிடைத்தது. ஆனால் 4500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும். அதற்கு என் தந்தையிடம் பணம் இல்லாததால் என்னால் மருத்துவராக முடியவில்லை. இது தொடர்பாக எனது தந்தையிடம் பேசும் போது ‘நீ எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய்’ என்றார். என் அப்பா ஒரு கம்யூனிஸ்ட். அவரை கம்யூனிஸ்ட்டாக மாற்றியவர் பாவலர் வரதராஜன். அதன் பிறகு அவரிடம் உங்களால் எவ்வளவு கட்டணத்தை கட்ட முடியும் என கேட்டேன். அவர் 150 ரூபாய் என்று சொன்னதால், உடனே அரசு கல்லூரியில் 140 ரூபாய் செலுத்தி தாவரவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தேன்.

அஜயன் பாலாவிற்கு இந்தப் படத்தில் இயக்குநர் வாய்ப்பு அளித்த தயாரிப்பாளரை நான் மனதார பாராட்டுகிறேன். இயக்குநர் சங்கத்தின் சார்பாக நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார் என்று விளம்பரப்படுத்தினாலே படங்கள் வியாபாரம் ஆகிவிடும். அந்த அளவிற்கு இந்த திரைத் துறையில் ஆளுமை கொண்டவர் இசைஞானி இளையராஜா.‌ படத்திற்கு என்ன தேவையோ அதனை அவர் சரியாக கொடுத்திருப்பார். அவருக்கு பதிலாக அவருடைய சகோதரர் கங்கை அமரன் இங்கு வருகை தந்திருக்கிறார், அவருக்கும் நன்றி.

இயக்குநர் அஜயன் பாலா எப்போதோ வெற்றி பெற வேண்டியவர். லேட் பட் நெவர். இந்த திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி,” என்றார்.

ஏடிஜிபி தினகரன் பேசுகையில், “எனக்கு இந்த மேடைப் புதிது. சூழல் புதிது. ஆட்கள் புதிது. இதுதான் நான் கலந்து கொள்ளும் முதல் திரைத்துறை சார்ந்த விழா. இங்கு தயாரிப்பாளரின் நண்பனாக வருகை தந்திருக்கிறேன். அவருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

அர்ஜுனின் பள்ளிக்கூட தோழராக இருந்த நான் சொல்கிறேன், அவர் மருத்துவர் ஆவதற்கு கடுமையாக உழைத்தார். அவருடைய வீட்டிலிருந்து பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்றால் 15 கிலோ மீட்டர் நடந்து வர வேண்டும்.‌ அவரிடம் சைக்கிள் கிடையாது. நான்தான் அவரை சைக்கிளில் அழைத்துக் கொண்டு செல்வேன். இன்று நான் ஐபிஎஸ் அதிகாரி ஆகிவிட்டேன். அவர் மருத்துவராகி விட்டார்.  

சேத்தூர் என்ற சின்ன கிராமத்தில் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பவர், இன்றும் அவரது வீட்டில் ஒரு ஏசி கிடையாது, ஒரு பிரிட்ஜ் கிடையாது. இப்படி ஒரு வீட்டில் அவர் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய மனைவி மற்றும் மகன், மகள்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

‘மைலாஞ்சி’ படத்தை தயாரிப்பதற்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டார் என்பதும் எனக்குத் தெரியும்.‌ பள்ளியில் படிக்கும் போதே அவர் சினிமா மீது ஆர்வம் கொண்டவர்.

இசைஞானி இளையராஜாவை பற்றி நான் பல தருணங்களில் ஆச்சரியப்பட்டு இருக்கிறேன். காவல்துறையில் பணியாற்றும் எங்களுக்கு விடுமுறை இல்லை. ஃபோனை ஆஃப் கூட செய்ய முடியாது. வெளிநாடு சுற்றுலா செல்ல முடியாது. குடும்பத்துடன் செலவிட முடியாது. இது போன்ற சூழலில் எங்களுக்கு மிகப்பெரிய வடிகால் இசைஞானி இளையராஜாவின் பாடல்கள் தான்.‌

மிஷ்கின் எப்படி போலீஸ் போல் சிந்திக்கிறார் என ஆச்சரியப்படுவேன். எனக்கு அதிகாரம் இருந்தால் மிஷ்கினை சிபிசிஐடி ஆபிஸராக நியமித்து விடுவேன்.

சீமானை பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். பேச்சில் வேறு மொழி கலப்பில்லாமல் தமிழில் பேசக்கூடிய ஒரே தலைவர் அவர் தான். இதை நான் மகிழ்ச்சியுடன் சொல்கிறேன். தமிழை உணர்வோடு நேசிக்கக் கூடிய ஒருவராகவே சீமானை நான் பார்க்கிறேன்.‌

இந்தப் படத்தின் பாடல்கள் மற்றும் டீசரை பார்க்கும்போது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் நன்றாக இருக்கிறது. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,” என்றார்.‌

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசுகையில், “நாம் ஒருவரை சந்தித்தால் உடல்நிலை எப்படி இருக்கிறது என்று தான் கேட்கிறோம். மனநிலை எப்படி இருக்கிறது என்று யாரும் கேட்பதில்லை. எவ்வளவு பணம் இருந்தாலும் மனம் சரியில்லை என்றால் அது பயனற்று போகும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தான் அதன் அருமை தெரியும். அதனால் மருத்துவத்திலேயே மகத்தான மருத்துவம் மனநல மருத்துவம் தான்.  

மனநலத்தை சரி செய்யும் மருத்துவர் அர்ஜுன் இந்தப் படத்தை தயாரித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தன் மண்ணின் மக்களுக்காக தான் பயின்ற கல்வி பயன்பட வேண்டும் என்று அவர் சேத்துரிலேயே பணத்தை பெரிதாக எண்ணாமல், மனத்தை நலப்படுத்தி வரும் மகத்தான மருத்துவர் தான் தயாரிப்பாளர் அர்ஜுன்.

என் தம்பி அஜயன் பாலா தமிழ் திரை உலகில் சிறந்த படைப்பாளிகள் அனைவரையும் சந்தித்து இருப்பார். கேரளா போன்ற மாநிலங்களில் முதலில் எழுத்தாளர்களுக்கு தான் மரியாதை. அங்கு முதலில் கதையை வாங்கிய பிறகு தான் இயக்குநர், நடிகர் போன்றவற்றை தீர்மானிப்பார்கள். ஆனால் இங்கு அப்படி இல்லை. அஜயன் பாலா ஒரு சிறந்த எழுத்தாளர். நான் அவருடைய எழுத்தின் ரசிகன். பல தருணங்களில் நான் வாசிப்பதற்கு நேரம் இல்லாத போது தலைவர்களைப் பற்றிய சுருக்கமான எழுத்துகளை எழுதித் தருவார். தலைவர்களைப் பற்றி முன்னணி வார இதழில் கட்டுரையாக அவர் எழுதி இருக்கிறார்.

இன்றைய தலைமுறையினருக்கு அம்பேத்கர் என்றால் யார் என்று தெரிந்து கொள்வதற்கு அவர் எழுதிய புத்தகம் உதவும். அவருடைய எழுத்தில் ஒரு ஈர்ப்பு இருக்கும். புத்தகத்தை வாசிக்கத் தொடங்கினால் இறுதிப் பக்கம் வரை தொடர்ந்து வாசிப்பார்கள்.

எழுத்தாளரான அஜயன் பாலா திரைப் படைப்பாளியாக வருவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.  இலக்கியம் பொய் பேசலாம். புராணம் பொய் பேசலாம். வரலாறு உண்மையை மட்டும் தான் பேசும். அப்படி ஒரு வரலாற்று உண்மையை பதிவு செய்யக் கூடியவர் தான் அஜயன் பாலா.

இயக்குநர் வெற்றிமாறன் புதினங்களை திரைப்படமாக்குவார். ஆனால் இப்போது ஒரு எழுத்தாளனே திரைப் படைப்பாளியாக வந்திருக்கிறார். இந்த தலைமுறையில் இதுதான் தமிழ் திரையுலகத்தில் முதன்முறை.‌ இதற்காக அவரை பாராட்டுகிறேன்.

ஒளிப்பதிவாளர் செழியன், கலை இயக்குநர் லால்குடி இளையராஜா போன்ற எனக்கு நெருக்கமான உறவுகள் பலரும் இப்படத்தில் பணியாற்றி இருக்கிறார்கள்.

ஜப்பானில் நூறு வயது வரை வாழ்வது எப்படி என்று ஒரு உரையாடல் நடைபெற்ற போது, அங்குள்ளவர்கள் சிரித்திருக்கிறார்கள். ஏனென்றால் அவர்கள் அனைவரும் 110 வயது உள்ளவர்கள். அவர்களிடம் எப்படி இவ்வளவு நாள் வாழ்கிறீர்கள் என கேட்டபோது, முதலில் மொழி. அதனைத் தொடர்ந்து எங்களின் இயற்கை. மூன்றாவதாக மனமகிழ்ச்சி ஆகியவற்றை குறிப்பிட்டிருக்கிறார்கள்.

என் தம்பி சிங்கம்புலி அருகில் இருந்தால் போதும். உங்களுக்கு எந்த நோயும் வராது. ஏனெனில் அவன் உங்களை எப்போதும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பான்.  

‘வாழ்வே மாயம்’ என்பது ஒரு வாழ்க்கை தத்துவம். அந்தப் படத்தில் உச்சகட்ட காட்சியில் சண்டை காட்சி இல்லாமல் ஒரு பாடல் காட்சியை வைத்து, ஒரு படத்தை இசையமைப்பாளர் ஒருவர் வெற்றி பெற செய்திருக்கிறார் என்றால் அவர் கங்கை அமரன் மட்டும்தான். அதெல்லாம் மிகப் பெரும் சாதனை.‌

தாய்ப்பாலும், தண்ணீரும் மலிவாக கிடைப்பதால் தான் மனிதன் அதனை மதிப்பதில்லை. இதுபோன்ற கலைஞர்கள் நம் அருகே அமர்ந்திருப்பதால் அவர்களின் மகத்துவம் புரிவதில்லை. இதுதான் இங்கு சிக்கல். அந்த வகையில் இங்கு வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  

இந்த விழாவில் நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவது திருமதி அகிலா பாலு மகேந்திரா கலந்து கொண்டிருப்பதால் தான்.  அவர்களை இங்கு சந்திக்க வைத்ததற்காக தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

தென்னிந்திய சினிமாவின் சிறந்த படைப்பாளியாக சிலரை தேர்வு செய்தால் அதில் பரதன், மணிரத்னம் போன்றவர்கள் இருப்பார்கள். அனைத்து படைப்பாளிகளுக்கும் அவர்களின் முதல் படைப்பில் பாலுமகேந்திரா தான் ஒளிப்பதிவாளர். அவரிடம் இருந்துதான் ஏராளமான விஷ‌யங்களை கற்றுக் கொண்டிருக்கிறார்கள்.

இங்கு ‘சிம்பொனி செல்வன்’ என இளையராஜாவை குறிப்பிட்டு இருக்கிறார்கள். அவர் இசையமைத்த ஒவ்வொரு பாடலிலும், பாடல் வரிகளை தவிர்த்து விட்டு, இசையை மட்டும் கேட்டால் அவை ஒவ்வொன்றும் ஒரு சிம்பொனி தான். அதனால் நாங்கள் சொல்கிறோம் அவர் சிம்பொனி செல்வன் அல்ல, இசைஞானி அல்ல, இசை இறைவன். ஏன் இறைவன்? இறைவனிடம் என்ன கேட்டாலும் கொடுப்பார். எல்லோரையும் மனதார வாழ்த்துவார். அதனால்தான் அவர் இசை இறைவன்.

நான் சின்ன வயதில் படம் பார்க்கும்போது கதாநாயகனுக்கு கிடைக்காத கைத்தட்டல் இசைஞானி இளையராஜா என்று பெயர் போட்டதும் எழுந்தது. தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர் என பெயரை போட்டதும் கைத்தட்டல் எழுந்தது என்றால் அது இளையராஜாவிற்கு மட்டும்தான்.

என் நண்பர் மு. களஞ்சியம் இயக்கிய ‘பூமணி’ திரைப்படத்தை நண்பர்களுடன் திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தோம். வண்டியில் கதாநாயகியை உட்கார வைத்து கதாநாயகன் வண்டியை ஓட்டுகிறான். அந்த சூழலில் ‘என் பாட்டு என் பாட்டு’ எனத் தொடங்கும் பாடலை இடம்பெறச் செய்து ரசிகர்களை உற்சாகமடைய‌ செய்தவர் இளையராஜா. அதில் ‘நெஞ்சைத் துவைக்கிற ராகம் இது’ என்னும் வரிகள் கடந்ததும் திரையரங்கில் அனைவரும் எழுந்து ‘ஒன்ஸ்மோர்’ சொன்னபோது தான் இசையின் ஆக்கிரமிப்பை, இசையின் ஈர்ப்பை‌ நான் உணர்ந்தேன்.  

‘இசையால் அடைய முடியாத இன்பமும் இல்லை. இசையால் துடைக்க முடியாத துன்பமும் இல்லை’ என்கிறார்கள். எல்லா நோய்க்கும் ஒரு மருந்து இருக்கிறது என்றால் அது இசைதான். அதுபோன்றதொரு இசையை இந்த மண்ணுக்கு அளித்த மகத்தான மருத்துவர்தான் என் அப்பன் இளையராஜா. மனநல மருத்துவர் தயாரித்த இந்தத் திரைப்படத்தில் குணநல மருத்துவர் இளையராஜா இசையமைத்திருப்பது சிறப்பு. இந்தப் படம் மிகச்சிறந்த வெற்றியை பெறுவதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்,” என்றார்.