தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார் விஜய். இதனிடையே, அவரது நடிப்பில் வெளியாகி உள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் அவரது கடைசிப் படம் எனக் கூறப்படுவதால், இனி அவரைத் திரையில் பார்க்க முடியாதோ என்ற கவலையில் ரசிகர்கள் இருக்கின்றனர். இந்நிலையில், விஜய்யின் வாழ்க்கை வரலாற்றை (பயோபிக்) திரைப்படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அட்லீ இயக்கும் பான்-இந்தியா திரைப்படம்?
விஜய்க்கு ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்’ எனத் தொடர்ந்து மூன்று பாக்ஸ் ஆஃபிஸ் படங்களை கொடுத்த இயக்குநர் அட்லீ, விஜயின் பயோபிக் திரைப்படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. மிகப்பிரம்மாண்டமான முறையில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாக்கத் திட்டமிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், விஜய்யின் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் கேள்வியும் சினிமா வட்டாரங்களில் எழுந்துள்ளது.
‘நாளைய தீர்ப்பு’ முதல் முதலமைச்சர் வரை
‘நாளைய தீர்ப்பு’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்துள்ள விஜய்யின் திரையுலக மற்றும் அரசியல் பயணத்தை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகவுள்ளதாகக் கூறப்படும் செய்தி அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது. இருப்பினும், விஜய்யின் பயோபிக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்து முதல்வர் விஜய் யின் வாழ்க்கை படமா?!
கர்நாடகம் போக வேண்டாம்! மு.க ஸ்டாலின் வேண்டுகோள்!!
கர்நாடகா – தமிழ்நாடு இரண்டு மாநிலங்களுக்கு இடையே காவிரி நதிநீர்ப் பிரச்னை என்பது பல ஆண்டு காலமாகவே இருந்து வருகிறது. இந்தசூழலில்தான், முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரின் போது, கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து இந்த தீர்மானம் ஒருமனதாகவும் நிறைவேறியிருந்தது.
அதேசமயம், அண்மையில் நடைபெற்ற காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்களில் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கிடைக்க வேண்டிய நீரை கர்நாடகா உடனடியாக திறந்துவிட வேண்டும் எனத் தமிழ்நாடு அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால், குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் இருப்பதாகவும், மழைப் பொழிவு குறைவாக இருப்பதால் தமிழகத்திற்குத் தண்ணீர் திறக்க இயலாது என்றும் கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.
இந்தசூழலில் தான், மேகதாது அணை மற்றும் காவிரி நதி நீர்ப் பிரச்னை குறித்து நேரடிப் பேச்சுவார்த்தை நடத்த ஆகஸ்ட் 3-ஆம் தேதி பெங்களூருவுக்கு தமிழக முதலமைச்சர் விஜய் செல்லவுள்ளதாக வேளாண் துறை அமைச்சர் ஆர்.வினோத் தெரிவித்திருக்கிறார். அதன்படி, கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமாருடன் தமிழ்நாடு முதல்வர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் தான், மேகதாது அணை தொடர்பாக கர்நாடக முதல்வருடனான பேச்சுவார்த்தைக்கு முதல்வர் விஜய் செல்வதை கைவிட வேண்டும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”காவிரி நீருக்காகக் கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை எனும் சதிவலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சிக்கக் கூடாது. வேண்டாம் இந்த விஷப் பரீட்சை! நாம் பல்லாண்டுகள் சட்டப்பூர்வமாகப் போராடிப் பெற்ற உரிமைகளைச் சிதைப்பதாகவே பேச்சுவார்த்தை முயற்சிகள் அமையும். நீதிமன்றத்தில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.
இதனால்தான், கடந்த காலங்களில் இந்த யோசனை முன்வைக்கப்பட்ட போதெல்லாம் உறுதியாக அதனை நிராகரித்தது தி.மு.க.! கூட்டணி மயக்கத்தில் தமிழ்நாட்டின் காவிரி உரிமை பணயமாகிடக் கூடாது என்பதே டெல்டா விவசாயிகளின் ஒருமித்த குரல். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி; விவசாயச் சங்கத்தினருடன் பேசி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்! பேச்சுவார்த்தைக்காகக் கர்நாடகம் செல்லும் முடிவை முதல்வர் கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில் டிஸ்மிஸ் செய்யப்பட்ட நபர்! எப்படி வேலை பார்க்கிறார்?!
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் ஊழியர்களிடம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், புகாரின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அவரை பணிநீக்கம் செய்துள்ளார். இந்நிலையில் பணிநீக்கம் செய்தபின்னரும் தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அவர் மீண்டும் கணினியில் வேலை பார்த்துள்ளார்.
அப்போது அங்கு வந்த சத்துணவு ஊழியர்கள் சுதர்சனை பார்த்து “நீ ஏன் இங்கு வந்து வேலை பார்க்கிறாய் என கேட்டபோது ஊழியர்களுக்குள் வாய்தகராறு ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்பட்ட சுதர்சனுக்கு ஆதரவாக உடனிருந்த சக ஊழியர்களும் பேசியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக வீடியோ வெளியாகி வைரலானது.
இதுகுறித்து தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன், தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணியாற்றிய சுதர்சன், இவர் ஊழியர்களிடம் பணம் பெறுவது உள்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதால், அவரை மாவட்ட ஆட்சியர் கடந்த 6-ம் தேதி பணிநீக்கம் செய்தார்.
ஆனால், சுதர்சன் அலுவலகத்தில் கணினியில் வேலை பார்த்து கொண்டிருந்தார். அவரிடம் கேட்டால் முறையாக பதில் அளிக்காமல், எங்களிடம் தகராறுக்கு வருகிறார். அலுவலகத்தில் மேலாளர், உதவியாளர்கள் என பலரது முன்னிலையில் அவர் பணியாற்றி வருகிறார். மேலாளரிடம் கேட்டால், சத்துணவு ஊழியர்களுக்கு சம்பளம் போட வேண்டும் எனவே தான் சுதர்சன் வேலை பார்க்கிறார் என கூறுகின்றனர். தஞ்சாவூர் ஒன்றியத்தில் உள்ள 131 சத்துணவு ஊழியர்களின் குடும்ப விவரங்கள், பணி தொடர்பான விவரங்கள் அனைத்தும் கணினியில் உள்ளது.
பணிநீக்கம் செய்யப்பட்ட ஒருவரை எப்படி வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் அனுமதித்தனர் எனத் தெரியவில்லை. இது தொடர்பாக விளக்கம் கேட்டால், எங்களையே சுதர்சன் தாக்க வருகிறார். இந்த விவகாரத்தை நாங்கள் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட உள்ளோம். எங்களது தகவல்கள் கணினியில் பாதுகாப்பில்லாமல் இருப்பதால், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
‘மனதின் குரலில்’ பிரதமர்
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, ‘மனதின் குரல்’ (மன் கீ பாத்) என்ற தலைப்பில் மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் நாட்டு மக்களிடம் வானொலியில் உரையாற்றி வருகிறார். அதன்படி, 136-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்களே, இந்த மாதம் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் விஞ்ஞானிகள், தொலைதூரம் செல்லக்கூடிய பினாகா ராக்கெட் சோதனையை வெற்றிகரமாக மேற்கொண்டனர். இந்த வெற்றி நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி.
அதேபோல குஷா என்ற பெயரில் அதிநவீன ஏவுகணை கவசத்தையும் டிஆர்டிஓ உருவாக்கியது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மகேந்திரகிரி போர்க்கப்பல் கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. தற்சார்பு இந்தியாவை நோக்கிய பயணத்துக்கு வலு சேர்க்கும் வகையில் இது அமைந்துள்ளது. இன்று பாதுகாப்பு உற்பத்தி மற்றும் ஏற்றுமதி, நட்பு நாடுகள் உடனான அரசியல் ரீதியான உறவு உள்ளிட்டவை புதிய உயரத்தை தேசம் எட்டியுள்ளன.
இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியா பயணம் மேற்கொண்டிருந்தேன். அப்போது பிரம்மோஸ் ஏவுகணை சார்ந்த முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்திய பாதுகாப்பு உபகரணம் மற்றும் தொழில்நுட்பத்தின் மீது உலக நாடுகள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகரித்து வருவதை இது காட்டுகிறது. இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.
தொடர் அமளி! சபாநாயகர் ஒத்திவைப்பு!!
நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அடுத்தடுத்து பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. மக்களவை 12 மணிக்கு பின்னர் மீண்டும் கூடியபோதும் அமளி நீடித்ததால், நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவை மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 5-ம் நாளான இன்று காலை 11 மணிக்கு வழக்கம் போல இரு அவைகளும் கூடின. சபாநாயகர் ஓம் பிர்லா தலைமையில் மக்களவை கூடியதும், கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு, கார்கில் போரில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் வீரத்தைப் போற்றும் வகையில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. இதையடுத்து, கேள்வி நேரம் தொடங்குவதாக ஓம் பிர்லா அறிவித்தார்.
எனினும், நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை சமாதானப்படுத்த ஓம் பிர்லா தொடர்ந்து முயன்றார். “கேள்வி நேரத்துக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு உங்களை வேண்டி கேட்டுக்கொள்கிறேன். எந்த விஷயம் தொடர்பாக விவாதிக்க நீங்கள் விரும்பினாலும் அதற்கான அனுமதி உங்களுக்கு வழங்கப்படும்.
நேற்றும்கூட இதை நான் தெரிவித்தேன். அவையின் செயல்பாடுக்கு இடையூறு விளைவிக்காதீர்கள். என ஓம் பிர்லா வேண்டுகோள் விடுத்தார். எனினும், எதிர்க்கட்சி எம்பிக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால், அவை தொடர்ந்து நடக்க நீங்கள் விரும்பவில்லை என்பதால் அவையை பகல் 12 மணி வரை ஒத்திவைக்கிறேன்” என அறிவித்தார்.
நீட் தேர்வு போராட்டம்! சென்னை மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு!!
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என டெல்லியில் இளைஞர்கள் போராடி வருகின்றனர். அதன்படி அவர்களுக்கு ஆதரவாக சென்னை மெரினா கடற்கரையிலும் இளைஞர்கள் போராட்டம் மேற்கொள்ள உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவல்களின் அடிப்படையில் நேற்று சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அதன்படி அனைத்து இணைப்பு சாலைகளிலும் தடுப்புகள் அமைத்து வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு உள்ளே செல்ல தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்றயை தினம் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் வழக்கம் போல் நடைபயிற்சி மேற்கொண்டனர். நேற்று போல இன்றும் காலை 10 மணி பிறகு கடற்கரை பகுதிக்கு செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட வாய்ப்புள்ளது என காவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மெரினா கடற்கரை இணைப்பு சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
நேற்றைய தினம் போல் இன்றும் காலை 10 மணிக்கு பிறகாக சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை உள்ள இணைப்பு சாலைகள் மூடப்படும் என அறிவித்த நிலையில் எந்த நுழைவாயில்களும் மூடாமல் அனைத்து நுழைவாயில்களும் திறக்கப்பட்டுள்ளது. ஆனாலும் மெரினா கடற்கரை பகுதிகளில் உள்ள இணைப்பு சாலைகளில் காவலர்கள் ஆங்காங்கே பாதுகாப்பு பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய கோரி டெல்லியில் இளைஞர்கள் போராடி வரும் நிலையில் சென்னை மெரினா கடற்கரையிலும் மாணவர்கள் போராட்டம் மேற்கொள்ளவார்கள் என்பதால் நேற்று மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இன்று மெரினா கடற்கரை பகுதிகளில் வழக்கமாக பொதுமக்களும் வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
ஜனநாயகன் விமர்சனம் RATING 2.9/5
ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல், பிரகாஷ்ராஜ், பிரியாமணி, நரேன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விமர்சனம்:
கைதியாக சிறையில் இருக்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான் (விஜய்). காவல்துறைக்கு அவர் செய்யும் உதவிக்கு கைமாறாக, மரண தருவாயில் இருக்கும் அவரது தாயை சந்திக்க ஏற்பாடு செய்கிறார் அதிகாரி ஸ்ரீகாந்த் (கௌதம் வாசுதேவ் மேனன்). அதனால் அவர் சஸ்பெண்ட் ஆகிறார். விபத்தில் ஸ்ரீகாந்த் இறந்துவிட, அவரது மகள் விஜியை தனது மகளாக எடுத்து வளர்க்கிறார் தளபதி வெற்றிக் கொண்டான். விஜியை ராணுவத்தில் சேர்க்க வேண்டும் என்ற அவரது தந்தையின் கனவை நனவாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் தளபதி. இதனிடையே அரசியல்வாதிகளுடன் சேர்ந்து தன் சுயலாபத்துக்காக தமிழ்நாட்டை அழிக்க நினைக்கிறார் சர்வதேச குற்றவாளி ஜான் ஹிம்லர் (பாபி தியோல்). இப்படியான சூழலில், அவர்களின் சதித்திட்டத்தை முறியடித்து, தமிழகத்தை தளபதி வெற்றிக் கொண்டான் எப்படி மீட்டார்…? விஜி ராணுவ அதிகாரி ஆனாரா? இல்லையா? என்பது தான் படத்தின் கதை….
விஜயின் கடைசி படத்தை தன்னால் முடிந்த அளவுக்கு மாஸ் தருணங்களை நிரப்பி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்திருக்கிறார் ஹெச்.வினோத். மகளாக குறும்புத்தனங்களுடனும், இறுதியில் ஆக்ஷன் காட்சிகளிலும் கவனம் ஈர்க்கிறார் மமிதா பைஜூ. பூஜா ஹெக்டேவுக்கு சொல்லிக்கொள்ளும்படி காட்சிகள் இல்லை. சர்வதேச வில்லனாக முரட்டுத்தனத்தில் மிரட்டுகிறார் பாபி தியோல். பிரகாஷ்ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், நரேன், ஸ்ரீநாத் தேவையான நடிப்பை வழங்குகின்றனர். தனது வழக்கமான முக பாவனைகள், உடல்மொழிகள், ரசிக்க வைக்கும் சின்ன சின்ன ரியாக்ஷன்களால் கவரும் விஜய், ‘ஒன் லாஸ்ட் டான்ஸ்’ என நடனத்தில் மிரட்டுகிறார். எம்ஜிஆர் புகைப்படத்துடன் விஜய்க்கு கொடுக்கும் இன்ட்ரோ, மாஸான இன்டர்வல் காட்சி, ‘நான் ஆணையிட்டால்’ பாணியில் சாட்டை சுழற்றும் காட்சி, பஞ்ச் வசனங்கள், ஆக்ஷன் என தெறிக்கவிடுகிறார் விஜய்.
பகவந்த் கேசரி படத்தின் மைய சரடையும், பல காட்சிகளையும் சேர்த்து தன்னுடைய கற்பனையையும், அரசியலையும் கலந்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் ஹெச்.வினோத். சூப்பர் மார்க்கெட்டில், பூஜா ஹெக்டேவை சந்தித்து ஆன்டி என நக்கலடிக்கும் காட்சி, மமிதாவுக்கான ராணுவ பயிற்சி, காவல்துறை அதிகாரியின் தவறான நடத்தை, சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிரான வசனம், பெண்களை மட்டுப்படுத்தும் காட்சிகள் பகவந்த் கேசரியின் ரீமேக். “பொண்ணுங்களுக்கு பயம் இருக்க கூடாது..”, “புலி மாதிரி வளர்க்கணும்..” என பெண்கள் முன்னேற்றம் குறித்து பேசுகிறது படம்.
மைனஸ்: லாஜிக் இல்லாத கிளைமேக்ஸ் காட்சிகள்…. காதல் காட்சிகள் ஒன்னும் இல்லை….
மொத்தத்தில் இந்த ‘ஜனநாயகன்’ ஒரு போராட்டக்காரன்.
EEMAGINE 2026
சென்னை:
‘ஈவென்ட்ஸ் அண்ட் என்டர்டெயின்மென்ட் மேனேஜ்மென்ட் அசோசியேஷன்’ (EEMA) தனது முதன்மை வருடாந்திர மாநாடான ‘EEMAGINE 2026’-க்கு முன்னதாக, சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தனது ‘விஷன் 2030’ வரைபடத்தை இன்று வெளியிட்டது. நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், குறிப்பிட்ட இடங்களைத் தேர்ந்தெடுத்து நடத்தப்படும் திருமணங்கள் (destination weddings), வணிக நிகழ்வுகள், கண்காட்சிகள் மற்றும் கலாச்சாரச் சுற்றுலா ஆகியவற்றிற்கான தேவை அதிகரித்து வருவதால், இந்தியாவின் அனுபவச் சார்ந்த பொருளாதாரம் நாட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும் துறைகளில் ஒன்றாக உருவெடுத்து வரும் வேளையில் இந்த வரைபடம் வெளியிடப்பட்டுள்ளது.
“இந்தியாவை உலகின் ‘அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தின் தலைநகராக’ (Experience Capital of the World) நிலைநிறுத்துவதே எங்கள் நோக்கம்,” என்று EEMA-வின் தலைவர் சமித் கார்க் கூறினார். “இந்தியா எப்போதும் கதைகள், கொண்டாட்டங்கள் மற்றும் மறக்க முடியாத அனுபவங்களின் பூமியாகத் திகழ்ந்து வருகிறது. இன்று, அந்த வலிமைகள் ஒரு சக்திவாய்ந்த பொருளாதார வாய்ப்பாக உருவெடுத்துள்ளன. அனுபவச் சார்ந்த பொருளாதாரம் என்பது இனி வெறும் பொழுதுபோக்கு சார்ந்தது மட்டுமல்ல; அது சுற்றுலா, தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் இட மேம்பாடு ஆகியவற்றை முன்னெடுத்துச் செல்கிறது. உலகின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 18 சதவீதத்தைக் கொண்டிருந்தாலும், உலகளாவிய அனுபவச் சார்ந்த பொருளாதாரத்தில் இந்தியா வெறும் 2 முதல் 4 சதவீத பங்களிப்பை மட்டுமே கொண்டுள்ளது; இதுவே நமக்கு முன்னால் உள்ள மிகப்பெரிய வாய்ப்பை எடுத்துக்காட்டுகிறது.”
EEMA வின் முதன்மை வருடாந்திர மாநாடான ‘EEMAGINE 2026’, இந்த ஆண்டு ஆகஸ்ட் 7 முதல் 9 வரை சென்னையில் உள்ள ‘ஐடிசி கிராண்ட் சோலா’ (ITC Grand Chola) ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டிற்காகச் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டதே ‘விஷன் 2030’ திட்டத்தின் ஒரு பகுதியாகும். சங்கத்தின் கூற்றுப்படி, இது வெறும் ஒரு நிகழ்விடமாக மட்டும் தேர்ந்தெடுக்கப்படவில்லை; மாறாக, ‘விஷன் 2030’ தேசிய அளவில் முன்மொழிந்துள்ள அதே மாற்றத்தை, தமிழ்நாடு மாநில அளவில் ஏற்கனவே செயல்படுத்திக் காட்டி வருவதாலேயே இச்சிறப்புமிக்க இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
சென்னை ‘EEMAGINE 2026’ நிகழ்வை நடத்தவிருப்பது குறித்து கருத்து தெரிவித்த EEMA-வின் தெற்கு மண்டல துணைத் தலைவர் வினோத் கோபால், “சென்னையில் முதன்முறையாக ‘EEMAGINE’ நிகழ்வை நடத்துவது இப்பகுதியின் நிகழ்வுத் துறை சார்ந்த சூழலமைப்பிற்கு (events ecosystem) ஒரு முக்கிய மைல்கல்லாகும். உலகத்தரம் வாய்ந்த நிகழ்வுகளை நடத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பு, படைப்பாற்றல் மிக்க திறமையாளர்கள் மற்றும் கலாச்சாரச் செழுமை ஆகியவற்றைத் தமிழ்நாடு கொண்டுள்ளது. 800-க்கும் மேற்பட்ட நிகழ்வுத் துறை வல்லுநர்கள், துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் முடிவெடுப்பவர்களை இந்நகருக்கு அழைத்து வருவதன் மூலம், சென்னையின் திறன்களை வெளிப்படுத்தவும், புதிய கூட்டு முயற்சிகளை ஊக்குவிக்கவும், உள்ளூர் வணிகங்கள் மற்றும் நிகழ்வுத் துறை வல்லுநர்களுக்கு நீண்டகால வாய்ப்புகளை உருவாக்கவும் நாங்கள் விரும்புகிறோம்,” என்று கூறினார்.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாடு குறித்துப் பேசிய EEMA-வின் நிறுவன உறுப்பினரான சித்தார்த் கனரிவாலா, “இந்தியாவின் ‘அனுபவப் பொருளாதாரத்தின்’ (experience economy) எதிர்காலத்தை துறை சார்ந்த தலைவர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் உலகளாவிய நிபுணர்கள் ஒன்றிணைந்து வடிவமைக்கும் ஒரு தளமாக ‘EEMAGINE 2026’ உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாநாடு வணிக வளர்ச்சி, கொள்கை, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI), நிலைத்தன்மை, திறன் மேம்பாடு மற்றும் உலகளாவிய சிறந்த நடைமுறைகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்; அதேவேளையில், இத்துறை எவ்வாறு பொறுப்புடன் வளர்ச்சியை எட்டலாம் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கலாம் என்பது குறித்த அர்த்தமுள்ள கலந்துரையாடல்களுக்கும் இது வழிவகுக்கும்,” என்று தெரிவித்தார்.
மகளிர் உலக கோப்பை ஹாக்கி பட்டியல்!
உலக ஹாக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் 16-வது எஃப்ஐஎச் (FIH) மகளிர் உலகக்கோப்பை ஹாக்கி தொடர், வரும் ஆகஸ்ட் 15 முதல் 30-ஆம் தேதி வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற உள்ளது. 16 நாடுகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடருக்கான 20 பேர் கொண்ட இந்திய மகளிர் ஹாக்கி அணியை ஹாக்கி இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சலிமா டெடிக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு
இந்திய அணியை அனுபவம் வாய்ந்த நடுகள வீராங்கனை சலிமா டெடி வழிநடத்த உள்ளார். அணியின் துணை கேப்டனாக மூத்த கோல்கீப்பர் சவிதா நியமிக்கப்பட்டுள்ளார். தலைமைப் பயிற்சியாளர் ஸ்ஜோர்ட் மரிஜ்னே தலைமையில் இந்திய அணி பெங்களூருவில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.
பெரிய மாற்றம் இல்லை… அதே கூட்டணிக்கு நம்பிக்கை
உலகக்கோப்பைக்காக அறிவிக்கப்பட்டுள்ள அணியில் பெரிய மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக தேர்வு செய்யப்பட்ட அதே வீராங்கனைகளுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற FIH நேஷன்ஸ் கோப்பையை வென்ற அணியின் பெரும்பாலான வீராங்கனைகள் இந்த உலகக்கோப்பை அணியிலும் இடம்பெற்றுள்ளனர்.
இந்திய அணியில் இடம்பெற்றுள்ள 20 வீராங்கனைகள்
கோல்கீப்பர்கள்:
சவிதா, பிச்சுதேவி கரிபாம்
டிஃபெண்டர்கள்:
இஷிகா சவுத்ரி, சுஷிலா சானு, லால்தன்ட்லுவாங்கி
ஜோதி, ஷில்பி தபாஸ்
மிட்ஃபீல்டர்கள்:
நிக்கி பிரதான், சாக்ஷி ராணா, சுனேலிதா டாப்போ, சலிமா டெடி (கேப்டன்)
நேஹா, தீபிகா சோரெங்
ஃபார்வேர்டுகள்:
லால்ரெம்சியாமி, ருதுஜா தாதாசோ பிசல், நவ்னீத் கவுர்
தீபிகா, இஷிகா, பல்ஜீத் கவுர், பியூட்டி டங்டங்
இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் எது?
இந்திய அணி ‘பூல் டி’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. இதில் சீனா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இந்தியா மோதவுள்ளது.
இந்தியாவின் லீக் போட்டி அட்டவணை
- ஆகஸ்ட் 16 – இந்தியா vs சீனா
- ஆகஸ்ட் 18 – இந்தியா vs தென்னாப்பிரிக்கா
- ஆகஸ்ட் 20 – இந்தியா vs இங்கிலாந்து
இந்த அனைத்து போட்டிகளும் நெதர்லாந்தின் ஆம்ஸ்டெல்வீனில் உள்ள வாகேனர் ஹாக்கி மைதானத்தில் நடைபெற உள்ளன.
இந்தியாவின் இலக்கு என்ன?
சமீபத்தில் FIH நேஷன்ஸ் கோப்பையை கைப்பற்றி சிறப்பான ஃபார்மில் இருக்கும் இந்திய மகளிர் அணி, அதே உத்வேகத்துடன் உலகக்கோப்பையிலும் சிறப்பாக செயல்பட்டு பதக்கம் வெல்லும் இலக்குடன் களமிறங்குகிறது. அனுபவம் மற்றும் இளமை கலந்த இந்த அணி உலகின் முன்னணி அணிகளுக்கு கடும் சவால் அளிக்கும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
விண்ணில் பாய்ந்த ராக்கெட் ‘விக்ரம்-1’!
இந்தியாவின் விண்வெளித் துறையில் இன்று வரலாற்று சிறப்புமிக்க நாள். இதுவரை விண்வெளிக்கு ராக்கெட்டுகளை அனுப்பும் பணியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக ஒரு இந்திய தனியார் நிறுவனம் உருவாக்கிய ஆர்பிட்டல் ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் விண்வெளி வரலாற்றில் புதிய அத்தியாயம் எழுதப்பட்டுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) நிறுவனம் உருவாக்கிய ‘விக்ரம்-1’ ராக்கெட், ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று நண்பகல் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இந்த ஏவுதலுக்கு ‘மிஷன் ஆகமன்’ (Mission Aagaman) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவின் முதல் தனியார் ஆர்பிட்டல் ராக்கெட் ஏவுதல் என்பதால் உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
35 நிமிட பதற்றம்… பின்னர் கிடைத்த வெற்றி!
முதலில் காலை 11.30 மணிக்கு ராக்கெட்டை ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இறுதிக்கட்ட தொழில்நுட்ப பரிசோதனையின் போது வழிசெலுத்தல் (Navigation) அமைப்பில் சில விஷயங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டியிருந்ததால் கவுண்டவுன் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 35 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டது.
இதனால் சில நிமிடங்கள் பதற்றம் ஏற்பட்டாலும், அனைத்து சோதனைகளும் வெற்றிகரமாக முடிந்ததைத் தொடர்ந்து நண்பகல் 12.06 மணிக்கு விக்ரம்-1 ராக்கெட் விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. ஏவுதளத்தில் இருந்த விஞ்ஞானிகளும், பொறியாளர்களும் கைத்தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
என்ன சிறப்பு இந்த ‘விக்ரம்-1’ ராக்கெட்டில்?
இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை டாக்டர் விக்ரம் சாராபாய் நினைவாக இந்த ராக்கெட்டுக்கு ‘விக்ரம்-1’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்த ராக்கெட்டின் முக்கிய அம்சங்கள்:
- சுமார் 24 மீட்டர் உயரம் (7 மாடி கட்டட உயரம்)
- 4 நிலைகளைக் கொண்ட (Four-stage) ராக்கெட்
- கார்பன் காம்போசிட் தொழில்நுட்பத்தில்
உருவாக்கப்பட்டது - 3D பிரிண்டிங் மூலம் தயாரிக்கப்பட்ட இன்ஜின்கள்
- 350 கிலோ வரை எடையுள்ள சிறிய செயற்கைக்கோள்களை 450 கி.மீ. உயரத்தில் உள்ள குறைந்த புவி சுற்றுப்பாதையில் (LEO) நிலைநிறுத்தும் திறன் கொண்டது.
இந்த ராக்கெட்டில் என்னென்ன அனுப்பப்பட்டது? விக்ரம்-1 வெறும் சோதனை ராக்கெட் மட்டுமல்ல. இதில் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பல தொழில்நுட்ப பேலோடுகள் (Payloads) இடம்பெற்றுள்ளன.
அவற்றில் முக்கியமானவை:
- Skyroot நிறுவனத்தின் SCOPE செயற்கைக்கோள்
- Grahaa Space நிறுவனத்தின் நானோ செயற்கைக்கோள்
- விண்வெளி குப்பைகளை அகற்றும் தொழில்நுட்பத்தை சோதிக்கும் Cosmoserve நிறுவனத்தின் பேலோடு
- ஜெர்மனி நிறுவனமான DCUBED-ன் தொழில்நுட்ப சாதனம்
- பிரதமர் நரேந்திர மோடி தனது கைப்பட எழுதிய “வந்தே மாதரம்” அஞ்சல் அட்டையும் இந்த ராக்கெட்டில் விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
ஏன் இந்த சாதனை இந்தியாவுக்கு முக்கியம்? இதுவரை இந்தியாவில் இருந்து ஆர்பிட்டல் ராக்கெட்டை உருவாக்கி விண்ணில் செலுத்துவது ISRO-வின் பொறுப்பாக இருந்தது. ஆனால், தற்போது தனியார் நிறுவனமும் அந்த திறனை நிரூபித்துள்ளது. இதன் மூலம்,
- இந்திய விண்வெளித் துறையில் தனியார் நிறுவனங்களின் பங்கு அதிகரிக்கும்.
- உலக நாடுகளின் சிறிய செயற்கைக்கோள்களை இந்தியாவில் இருந்து ஏவும் வாய்ப்பு உருவாகும்.
- இந்தியாவின் விண்வெளி வர்த்தக சந்தை வேகமாக வளர வாய்ப்புள்ளது.
- உலக விண்வெளி சந்தையில் இந்தியாவின் போட்டித்திறன் மேலும் உயரும்.
5 ஆண்டுகளின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி! 2018-ஆம் ஆண்டு முன்னாள் ISRO விஞ்ஞானிகள் பவன் குமார் சந்தனா மற்றும் நாகா பரத் தாகா ஆகியோர் Skyroot Aerospace நிறுவனத்தை தொடங்கினர். பல ஆண்டுகள் ஆராய்ச்சி, ஆயிரத்திற்கும் மேற்பட்டோரின் உழைப்பு மற்றும் நூற்றுக்கணக்கான நிறுவனங்களின் ஒத்துழைப்பின் பலனாக இன்று விக்ரம்-1 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்துள்ளது.
பிரதமர் மோடி வாழ்த்து: இந்த வெற்றிக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “இந்தியாவின் விண்வெளிப் பயணத்தில் இது ஒரு புதிய வரலாற்று எல்லை. இளைஞர்களின் திறமைக்கும், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் இது மிகப்பெரிய எடுத்துக்காட்டு” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த இலக்கு என்ன? விக்ரம்-1 வெற்றி பெற்றதன் மூலம், எதிர்காலத்தில் வணிக ரீதியாக பல நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியாவில் இருந்து விண்ணில் செலுத்தும் திட்டத்தில் Skyroot நிறுவனம் கவனம் செலுத்தவுள்ளது. இதன் மூலம் விண்வெளித் துறையில் இந்தியா உலகின் முக்கிய மையங்களில் ஒன்றாக உருவாகும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

















