Saturday, April 18, 2026
Blog

மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா! பிரதமர் கடும் விமர்சனம்!!

களிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது” என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில் கடுமையாக விமர்சனம் செய்தார்.

நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் நேற்று மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறைக்கான மசோதாக்கள் எதிர்க்கட்சிகளால் தோற்கடிக்கப்பட்டன. இதையடுத்து இன்று இரவு 8.30 மணிக்கு பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதாக அறிவித்தார். அதன்படி 8.30 மணிக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:

மகளிருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்தோம். எங்களின் மிகச்சிறந்த முயற்சிகளுக்கு மத்தியிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நசுக்கப்பட்டு விட்டது. அனைத்து தாய்மார்களிடமும் நான் மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.

மகளிர் இடஒதுக்கீட்டுக்கான மசோதாவை காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருவிலேயே அழித்துவிட்டார்கள். காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி போன்ற கட்சிகளின் சுயநல அரசியல் காரணமாக பெண்களுக்கான அதிகாரம் கிடைக்காமல் போய் உள்ளது பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தோற்கடிக்கப்பட்டதை திமுக – காங்கிரஸ் கொண்டாடி வருகிறது. அவர்களுக்கு பெண்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இதன் விளைவுகளை காங்கிரஸ், திமுக உள்ளிட்டவை எதிர்காலத்தில் சந்திக்கும். மகளிருக்கு இழைக்கப்பட்ட அநீதியை நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சி, திமுக, திரிணாமுல் காங்கிரஸ், மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இத்தனை ஆண்டுகளாக ஒரே சாக்குப்போக்கையே கூறி வருகின்றன. ஏதோ ஒரு தொழில்நுட்ப சிக்கலை காரணம் காட்டி, அவர்கள் பெண்களின் உரிமைகளைப் பறித்துள்ளனர். அரசியலின் இந்த இழிவான போக்கை நாடே உணர்ந்துகொண்டுள்ளது. அதன் பின்னணி பற்றியும் நாடு புரிந்து வைத்துள்ளது.

நேற்று நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீட்டை எதிர்த்த எதிர்க்கட்சிகளிடம் நான் ஒன்றை மிகத்தெளிவாக சொல்லிக்கொள்கிறேன். அவர்கள் பெண்களின் சக்தியைச் சாதாரணமாகக் கருதுகிறார்கள். 21ம் நூற்றாண்டின் பெண்கள் நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வையும் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறார்கள் என்பதை இவர்கள் மறந்துவிட்டார்கள். இவர்களின் உள்நோக்கங்களை அந்த பெண்கள் நன்கு புரிந்துகொண்டுள்ளனர். எல்லா உண்மையும் அவர்களுக்கு முழுமையாகத் தெரியும். எனவே, பெண்களுக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்ததன் மூலம் பாவம் இழைத்துள்ளனர். இந்த பாவத்துக்கு நிச்சயமாக தண்டிக்கப்படுவார்கள்” என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

 

‘என்ன பத்தி தெரியாது’…’எனக்கு இன்னொரு முகம் இருக்கு’!!

ரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் அதிமுக வேட்பாளர் பிரபுவை ஆதரித்து கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியது: “அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் கோபிச்செட்டிப்பாளையம் தொகுதியில் பிரபு வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார். நல்லவர், கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருபவர். இப்போது இருக்கும் எம்எல்ஏ மாதிரி திமிர் பிடித்தவர் இல்லை. இதுவரை அடிமையாக இருந்தீர்கள், இனிமேல் சுதந்திரக் காற்றை சுவாசிப்பீர்கள். இரட்டை இலைக்கு வாக்களியுங்கள்.

இங்கு எம்.எல்.ஏ.வாக இருப்பவர் பற்றி பேச வேண்டிய அவசியம் இருக்கிறது. அவர், தானாக எம்எல்ஏ ஆகவில்லை. அதிமுக நிர்வாகிகள் உழைப்பால் எம்எல்ஏ ஆனார். ஆனால் சுயநலம், திமிர், அகங்காரத்தால் வெளியேற்றும் சூழ்நிலை உருவாகிவிட்டது, கட்சிக் கட்டுப்பாட்டை மீறினால், யாராக இருந்தாலும் பரவாயில்லை என்று அம்மா பாணியைக் கடைப்பிடித்தோம்.

கோபிச்செட்டிப்பாளையத்தில் இருந்து ஒருவரைக் கூட என்னைப் பார்க்க விட மாட்டார். மோசமான குணம் படைத்தவர். பிறர் நல்ல சட்டை போட்டுக்கொண்டால் கூட பிடிக்காது, பொறுக்காது. செங்கோட்டையன் இருக்கும்வரை யாராவது நிம்மதியாக வாழ முடிந்ததா? சிந்து ரவிச்சந்திரனை பொட்டிகட்டி அனுப்பினார். மாவட்ட சேர்மன் ஒருவரும் இவரால் கட்சியை விட்டுப் போய்விட்டார். மரியாதை இல்லாத மனிதர்.

அனைவரது மனைவியும் கணவன் நன்றாக இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போது அமைச்சராக இருந்த செங்கோட்டையனின் மனைவியும், மகனும் தலைமைச் செயலகம் வந்து புகார் கொடுத்தார்கள். அது, கேவலமான புகார். என்ன புகார் என்று தெரியும் உங்களுக்கு.

நான் அப்போது கீழேதான் இருந்தேன், ஜெயலலிதாவிடம் அவர்கள் பேசினார்கள். படிக்கட்டில் இருந்து கீழே இறங்கியதும் அவர் பதவியை விட்டு இறக்கிவிட்டார். நகர, ஒன்றியச் செயலாளரோ, கட்சியினரோ புகார் அளிக்கவில்லை, அவரது மனைவி, மகன் புகார் அளித்தனர். அந்த புகாரைச் சொல்வது என் பதவிக்கு சரியாக இருக்காது. பிறகு என்னை அழைத்து இப்படிப்பட்ட ஆளை கட்சியில் வைத்திருப்பதே தப்பா போச்சு என்றார் ஜெயலலிதா.

இதுவரை யாருடைய குடும்பத்தினரும் என்னிடம் இப்படி புகார் கொடுத்ததில்லை, இவரெல்லாம் மோசமான மனிதர் என்றார் ஜெயலலிதா. அப்படிப்பட்ட ஆளை நான் முதல்வராக இருந்தபோது அமைச்சராக்கினது எனது தப்பு. என்னுடைய அமைச்சரவையில் வந்து கெஞ்சிக் கண்ணீர் விட்டார் மனுஷன், இப்போது வாய்க்கொழுப்பில் பேசுகிறார். நீங்கள் வடித்த கண்ணீர் தெரியாதா?

நீங்கள் முதல்வராக இருக்கும்போது நீங்களே எனக்கு வாய்ப்புக் கொடுக்கவில்லை என்றால் யார் கொடுப்பார்கள் என்று கெஞ்சினார். ஒரு காலத்தில் எனது நண்பராகத்தான் இருந்தார், இவரைப் போல எனக்கு பொய் பேச வேண்டிய அவசியமில்லை. நான் நட்பின் அடிப்படையில் கொடுத்தேன், அந்த மரியாதை உங்களுக்கு இருக்கிறதா?

அத்திக்கடவு அவிநாசி திட்டத்துக்கு 66 ஆண்டு காலம் போராடுகிறீர்கள். விவசாயத்திற்கும் குடிக்கவும் நீர் வேண்டும். முதல்வராக ஜெயலலிதா இருக்கும்போதே கொண்டுவர நினைத்தார், நானும் ஒரு விவசாயி. அதனால் முழுக்க மாநில அரசு நிதியைக் கொண்டு 1,652 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டத்தை நிறைவேற்றினோம், கரோனா காலத்தில் தடைபட்டது, ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் முதல்வர் ஸ்டாலின் திறந்துவைத்தார். அதற்கு விவசாய அமைப்புகள் கட்சி பாகுபாடு இல்லாமல், திமுக காங்கிரஸ் கம்யூனிஸ்ட் எல்லோரும் சேர்ந்து நன்றி செலுத்தினார்கள்.

அதற்கு ஜெயலலிதா, எம்ஜிஆர் படம் இல்லை என்று சொல்லி இந்த தொகுதி எம்எல்ஏ செங்கோட்டையன் வர மறுத்துவிட்டார். இப்படி பொறாமை பிடித்த ஆள் தேவையா? யார் ஏற்பாடு..? எதிர்க்கட்சிகள் செய்கிறார்கள், அவருக்கு இருக்கும் உணர்வு கூட உங்களுக்கு இல்லையே? ஓட்டுப்போட்ட மக்கள் செழிக்கத்தான் இந்த திட்டம்.

நீங்கள் ஜெயலலிதாவை மதிப்பது உண்மையா…? இதை பாருங்கள், (போட்டோ காட்டுகிறார்) ஸ்டாலின், கருணாநிதி படம் இருக்கும் சைக்கிள் வழங்கும் விழாவில் கலந்துகொண்டார். அப்போதே பி டீமாக போய்விட்டார், திமுகவின் உளவாளி என்று கண்டுபிடித்தாகிவிட்டது. நீங்கள் சரியான ஆளில்லை, அதிமுக விசுவாசி இல்லை, குழிதோண்டிப் பறிக்கும் உளவாளி என்று கண்டுபிடித்துவிட்டோம்.

சட்டப்பேரவையில் ஒரு வார்த்தை கூட திமுகவை எதிர்த்துப் பேசியது கிடையாது. இவரை வைத்திருக்கலாமா? இவர் மன்னிக்க முடியாத நபர். வாக்களித்த உங்களுக்கு அவர் விசுவாசமாக இல்லை. கேவலம், அங்கே போய் துண்டு வாங்குகிறார். யார் போட்டோவை பையில் வைத்திருக்கிறார்..? இப்படிப்பட்ட நபர் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுகிறார். 100 நாட்கள் ஜெயிலில் இருந்துவிட்டு வந்திருக்கும் நீங்கள் நல்லவரா..?

என் மீதும் கேஸ் போட்டனர், வழக்கை வாபஸ் பெறுவதாகச் சொன்னார்கள், ஆனால், நான் வழக்கை நடத்துவேன் என்று சொல்லி நடத்தி, நிரபராதி என்று உங்கள் முன்பு நிற்கிறேன். செங்கோட்டையன் சிந்திக்க வேண்டும். அசிங்கமாகப் பேசினால், நாக்கு இருக்கிறது என்று பேசினால் சாலையில் நடக்க முடியாது. அத்தனை ஆதாரம் வைத்திருக்கிறேன்.

நீங்கள் போட்ட ஆட்டமெல்லாம் தெரியும். நான் முதல்வராக இருக்கும்போதே எடுத்து வைத்துவிட்டேன். நீங்கள் எப்படியும் அதிமுகவை வீழ்த்த திமுகவுடன் சேர்ந்து சதி செய்வீர்கள் என்று தெரியும். ஆட்சி மாறும், காட்சி மாறும், நீங்கள் எப்படிப்பட்ட ஆள் என்று தெரியும், யாராவது சவுண்ட் விட்டுப் பேசினால் கிட்டேயே போகமாட்டார்.

நான் அதிமுகவில், என் ஏரியாவில் இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் 45 ஆயிரம் ஓட்டுகள் கூடுதல் பெற்றேன். சட்டப்பேரவை தேர்தலில் 10வது முறை நின்றேன். 94 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயித்தேன், இந்த தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிப்பேன், நீங்கள் சவால் விட முடியுமா?

என் தொகுதி மக்கள், குடும்பத்தில் ஒருவனாக என்னைப் பார்க்கிறார்கள். எனக்கு வாய்ப்புக் கொடுக்கிறார்கள். என் மக்களை நீதிபதி அந்தஸ்தில் பார்க்கிறேன். நீங்கள் தொகுதி மக்களை அடிமையாகப் பார்க்கிறீர்கள். இனி ஒன்றியச் செயலாளர்கள் அனைவரும் சுதந்திரமாக செயல்படுவார்கள்.

ஒரு ஒன்றியச் செயலாளர் இப்போதுதான் உங்களுடன் ஒரு போட்டோ எடுக்கிறேன் என்று சொன்னார். எப்படி கட்சியை வைத்திருக்கிறார் என்று பாருங்கள். மிகவும் மோசமான ஆள், பச்சையாகப் பேச ஆரம்பித்துவிடுவேன், எனது பதவி மதிப்புக்காக அடக்கி வாசிக்கிறேன்.

நான் எப்படிப்பட்டவன் என்பது தெரியாது. எனது முகம் ஒரு பக்கம் தான் பார்த்திருக்கிறீர்கள், இன்னொரு பக்கத்தைப் பார்த்ததில்லை. நான் எதுக்கும் துணிந்தவன். ஸ்டாலின் கண்ணிலே விரல் விட்டு ஆட்டியவன் நான். என் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் அவரே தடுமாறுகிறார். ஸ்டாலினுக்கு நீங்கள் துணை போனது தெரிந்தும் நான் பக்கத்தில் வைத்திருந்தேன்.

நல்ல பண்பு இருக்கவேண்டும். வாய்க்கு வந்தமாதிரி பேசக்கூடாது. பல கோடி ரூபாய்க்கு எனக்கு மில் இருக்கிறதாம். அது என் சம்பந்தி ஃபேக்டரி. அதில் சண்டை உண்டாக்க வேண்டாம். அவர் 1997-ம் ஆண்டிலே கட்டி வைத்திருக்கிறார், இன்னொன்று என் மகனின் சகலை. அவர் 1996ம் ஆண்டு கட்டி ஓடிக்கொண்டு இருக்கிறது. எங்களுக்கும் அவருக்கும் தொடர்பில்லை.

30 ஏக்கரில் கதிர் காலேஜ் எப்படி வந்தது..? வயதுக்கு ஏத்த மாதிரி பேச்சு தேவை, விசிலடிக்கும் இடத்துக்குச் சென்றால் அப்படித்தான் பேச்சுவரும். அவ்வளவு பணம் மிஞ்சியிருக்கிறது. ஆனால், ஒருத்தனுக்கும் ஒரு பைசா கொடுக்க மாட்டார். இவர் யாராவது ஒருத்தரையாவது கட்சியில் சேர்த்திருக்கிறாரா?

இவரால் வெளியேறியவர்கள்தான் அதிகம். முத்துசாமி, சிந்து ரவிச்சந்திரன், மாவட்டச் சேர்மன், தோப்பு வெங்கடாசலம் என்று பலரை வெளியேற்றினார். யாரையும் வளர விட மாட்டார். இந்த தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் முக்கியமானது, மக்களை உதாசீனப்படுத்தும் மனிதர் போட்டியிடுகிறார், அவருக்கு வாக்களிப்பீர்களா? 10 முறை நின்று என்ன செய்தார்?

புறவழிச்சாலை நான் கொடுக்கிறேன் என்று சொன்னேன், அவர் செய்யவில்லை. அதிமுக ஆட்சி வந்தால் கோபிச்செட்டிப்பாளையம் பிரமாண்ட பகுதியாக்குவேன், நான் சொன்னதைச் செய்வேன். அவர் பணக்காரரைப் பார்த்தால் பேசுவார், சாதாரண ஆட்களைப் பார்த்தால் பேச மாட்டார். எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்பார். ஆனால், ஓட்டுப்போட்ட மக்கள், நிர்வாகிகள் பற்றி வாயைத் திறந்ததில்லை.

அரசியல் ரீதியாகப் பேசுவதை விட்டுவிட்டு தனிபட்ட முறையில் பேசினால் நிறைய இருக்கிறது, டிவியில் போட்டுவிடுவேன். பிறகு கோபியில் நடமாட முடியாது, காறித் துப்பிவிடுவார்கள். நான் முதல்வராக இருக்கும்போதே என்னவெல்லாம் செய்தீர்கள், அதுக்கு முன்பு என்னவெல்லாம் ஆட்டம் போட்டீர்கள் என்று அத்தனையும் இருக்கிறது. ஜாக்கிரதையா பேசுங்கள், அரசியல் ரீதியாகப் பேசுங்கள்.

அதிமுக ஆட்சிக்கு வந்ததும், அத்திக்கடவு அவிநாசி திட்டத்தில் விடுபட்ட அனைத்துப் பகுதியும் சேர்த்துக்கொள்ளப்படும். விவசாயிகள் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். தேவையான திட்டம் நிறைவேற்றுவோம் எப்போதும் என்னை நேரில் வந்து பார்க்கலாம். அதிமுக வலிமையானது, கூட்டணி வலிமையானது” என்றார் பழனிசாமி.

வால்பாறை மலைப் பாதையில் வாகன விபத்து!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறை மலைப் பாதையில், 13-வது கொண்டை ஊசி வளைவில் உள்ள தடுப்புச் சுவரில், நேற்று மாலை சுற்றுலா வேன் மோதி 800 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணித்த 9 பேர் உயிரிழந்தனர்.

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரிந்தல்மன்னா நகரைச் சேர்ந்தவர்கள், கோடை விடுமுறையையொட்டி, கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள வால்பாறைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தனர். அதைத் தொடர்ந்து அதேப் பகுதியைச் சேர்ந்த டெம்போ டிராவலர் சுற்றுலா வேன் மூலம் இவர்கள் கேரளாவில் இருந்து வால்பாறைக்கு புறப்பட்டனர்.

வேனை முகமது பாசித் (21) என்பவர் ஓட்டினார். இந்த வேனில் ஓட்டுநர் உட்பட 13 பேர் இருந்தனர். இவர்கள் இரு நாட்களுக்கு முன்னர் வால்பாறைக்கு வந்தனர். வால்பாறையின் பல்வேறு இடங்களில் சுற்றிப் பார்த்தனர். அதைத் தொடர்ந்து கோவை வழியாக மீண்டும் கேரளாவுக்கு செல்ல முடிவு செய்தனர். தொடர்ந்து இன்று மதியம் வால்பாறையில் இருந்து வேன் மூலம் கோவை நோக்கி 13 பேரும் புறப்பட்டனர்.

அப்போது வால்பாறை மலைப்பாதையில் உள்ள, 13-வது கொண்டை ஊசி வளைவு அருகே வேன் வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது. சாலையில் தாறுமாறாக சென்ற வேன், அங்குள்ள தடுப்புச் சுவரில் மோதி, 800 அடி கீழே உள்ள பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

வேனில் இருந்த சுற்றுலா பயணிகள் அலறித் துடித்தனர். அவர்களது அலறல் சத்தத்தை கேட்ட அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், விபத்து ஏற்பட்டதை அறிந்து வேனில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீஸாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

இதில் ஒரு ஆண், ஒரு சிறுவன் மற்றும் 7 பெண்கள் என 9 பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 17 மற்றும் 18 வயதுடைய இரண்டு பேர், ஓட்டுநர் முகமது பாசித் உள்ளிட்டவர்கள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். அவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்தில் சுற்றுலா வேன் முழுவதும் அப்பளம் போல் நொறுங்கியது. காடம்பாறை போலீஸார் இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

MR X விமர்சனம்

MR X திரைப்பட விமர்சனம் விரைவில்…..

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் விடுமுறை!

சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-


தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தல் 2026, வாக்குப்பதிவு நாள் 23.04.2026 (வியாழக்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு வாக்குப்பதிவு நாளான 23.04.2026 அன்று ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்கப்பட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 


பிரிவு 135-B-ன் முக்கிய விதிமுறைகள்:


1.வணிக வர்த்தக, தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களில் பணிபுரிந்து வாக்காளராக பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை பெறுவதற்கு உரிமை உடையவர்.
2.விடுமுறை நாளை காரணமாகக் கொண்டு எந்த ஒரு பணியாளரின் ஊதியத்திலிருந்தும் எந்தவித பிடித்தமும் செய்யக்கூடாது.
3.சுழற்சி முறையில் பணிபுரியும் பணியாளர்கள் உட்பட அனைத்து பணியாளர்களுக்கும் இந்த விடுமுறை பொருந்தும்.
4.தினக்கூலி / தற்காலிக தொழிலாளர்களும் வாக்குப்பதிவு நாளில் விடுமுறை மற்றும் ஊதியம் பெறுவதற்கு தகுதியுடையவர்கள்.
5.தேர்தல் நடைபெறும் தொகுதிக்கு வெளியே பணிபுரியும் வாக்காளர்களும் இந்த சட்டப் பிரிவின் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறைக்கு தகுதியுடையவர்கள்.
6.இந்த விதிமுறைகளை மீறும் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும்.


எனவே சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேற்குறிப்பிட்ட சட்ட விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி வாக்குப்பதிவு நாளான 23.04.2026 (வியாழக்கிழமை) அன்று தங்கள் அனைத்துப் பணியாளர்களுக்கும் ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்குமாறு மாவட்ட ஆணையரும் சென்னை பெருநகர மாநகராட்சி தேர்தல் அலுவலருமான ஜெ.குமரகுருபரன், தெரிவித்துள்ளார்.

 ‘குற்றம் கடிதல் 2′

2014ஆம் ஆண்டு வெளியான குற்றம் கடிதல் திரைப்படம், இயக்குநர் பிரம்மா G இயக்கத்தில், JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகி, ஆசிரியர்–மாணவர் உறவை மையமாகக் கொண்ட ஆழமான கதை மூலம் தேசிய விருதுகளை வென்று தனித்துவமான இடத்தைப் பெற்றது. விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்த படம், இந்திய மற்றும் சர்வதேச அளவில் பாராட்டுகளைப் பெற்றது.
 
இப்போது, அதன் தொடர்ச்சியாக  குற்றம் கடிதல் 2, இயக்குநர் S. K. ஜீவா இயக்கத்தில், மீண்டும் JSK சதிஷ் குமார் தயாரிப்பில் உருவாகிறது. இவரே இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார். குற்றம் கடிதல் முதல் பாகம் சமூக அவலம் பற்றிப் பேசியது. ஆனால் இந்த படம் அத்தன்மையிலிருந்து விலகி, ஒரு சமூக த்ரில்லர் வகையில் உருவாகி, அதே சமயம் பள்ளிக்கூடப் பின்னணியைத் தக்க வைத்துள்ளது.
 
நடிகர் பாண்டியராஜன் தான் இதுவரை நடித்த கதாபாத்திரங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு புதிய தோற்றத்தில் நடித்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்த உள்ளார்.
 
படத்தின் காட்சிகளைப் பார்த்தவர்கள், அதன் சிறப்பான தயாரிப்பையும், சுவாரஸ்யமான கதை சொல்லலையும் பெரிதும் பாராட்டி வருகின்றனர். படத்தின் வெளியீட்டு தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. மேலும், இந்தப் படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களிலும் திரையிடப்பட உள்ளது.
 
குற்றம் கடிதல் 2 திரைப்படம் கொடைக்கானல் , திண்டுக்கல், நாகர்கோயில் மற்றும் சென்னை ஆகிய சுற்றுப்புறங்களில் அழகாக படமாக்கப்பட்டுள்ளது.
படத்தில் பாண்டியராஜன், அப்புக்குட்டி, பாலாஜி முருகதாஸ் , தீபக், பாவல், பத்மன், P. L. தேனப்பன், சாந்தினி தமிழரசன், கீர்த்தி சாவ்லா, விஜி சந்திரசேகர், லவ்லின் , ஜோவிதா லிவிங்ஸ்டன் , ரோஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
திரைக்கதை S. K. ஜீவா மற்றும் JSK சதிஷ் குமார் இணைந்து எழுதியுள்ளனர்.
 
தொழில்நுட்பக் குழு:
 
இசை: DK
 
எடிட்டிங்: C. S. பிரேம் குமார் 
 
ஒளிப்பதிவு: சதிஷ் G
 
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ 
 
நடனம்: மானஸ் 
 
பாடல் வரிகள்: ராஜா குருசாமி 
 
தயாரிப்பு நிர்வாகம்: P. ஆறுமுகம் 
 
டிசைன்: பவன் குமார் G
 
போஸ்டர்கள்: நந்தா 
 
கலர் கிரேடிங்: R. நந்தகுமார் 
 
DI & VFX: வர்ணா Digital Studio
 
ஆடியோ: ராஜா நல்லய்யா 
 
PRO: ரேகா
 
மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி வரும் குற்றம் கடிதல் 2, சமூக த்ரில்லர் வகையில் ஒரு வித்தியாசமான மற்றும் சிந்திக்க வைக்கும் திரையரங்கு அனுபவமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

‘மனிதன் தெய்வமாகலாம்’ விமர்சனம் RATING 2.9/5

டென்னிஸ் மஞ்சுநாத் அவர்களின் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, ஆர் எஸ் சதீஷ், கெளசல்யா, மைம் கோபி, ஒய் ஜி மகேந்திரன், லிர்திகா, சேலம் தீபக் உள்ளிட்ட நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகி வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் “மனிதன் தெய்வமாகலாம்”.

விமர்சனம்:

சிறையில் தூக்கு தண்டனை கைதியாக இருக்கும் செல்வராகவனை காப்பாற்ற முயற்சிக்கும் எம்எல்ஏ ஒய்.ஜி.மகேந்திரன், அவரது முன்கதையை கேட்கிறார். பொன்வயல் கிராமத்தில் மனைவி குஷி ரவியுடன் எளிய வாழ்க்கை மேற்கொண்டு வருகிறார், செல்வராகவன். அவரது அக்கா கவுசல்யாவுக்கு அடாவடி ஆசாமி மைம் கோபி வட்டி பணம் கேட்டு குடைச்சல் கொடுக்க, கவுசல்யாவுக்கு உதவ சென்ற குஷி ரவியின் வாழ்க்கையில் மைம் கோபி விளையாட, சாதுவாக இருந்த செல்வராகவன் கையில் கத்தி எடுக்கிறார். பிறகு என்ன நடக்கிறது? தூக்கு தண்டனையில் இருந்து செல்வராகவன் தப்பித்தாரா? என்பது மீதி கதை….

கதைக்கான நாயகனாக செல்வராகவன் வாழ்ந்திருப்பது மகிழ்ச்சி. நாயகி குஷி ரவி கதைக்கு ஏற்ற நாயகியாக பொருந்தியிருந்தார். கெளசல்யாவின் கதாபாத்திரமும் வலுவானது தான். அதையும் சரியாகவே கையாண்டிருக்கிறார். முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த சதீஷும் இயல்பான நடிப்பைக் கொடுத்திருந்தார்.கே.ரவிவர்மாவின் ஒளிப்பதிவும், ஏ.கே.பிரியனின் பின்னணி இசையும் காட்சிகளை நகர்த்த உதவி செய்துள்ளன.

மைனஸ்: கதை பெரிய அளவில் ஈர்க்கவில்லை…. ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் தேவை….

‘மனிதன் தெய்வமாகலாம்’- தலைப்பு உண்மை, ஆனால் கதை சோர்வு.

வெளியானது ‘ஏறி வந்தோம் ஐயப்பா’ பாடல்!

ன்னிதானம் பிஓ படக்குழுவினர் படத்தின் முதல் பாடலான ஏறி வந்தோம் ஐயப்பா பாடலை வெளியிட்டுள்ளனர். சபரிமலை யாத்திரையுடன் தொடர்புடைய நம்பிக்கை மற்றும் பக்தியின் சாரத்தை அழகாக படம்பிடித்துக் காட்டும் வகையிலும், மனதை உருக்கும் பக்தி பாடலாகவும் இது அமைந்துள்ளது. அபிஷேக் ராஜு மற்றும் விஷ்ணு ராம் ஆகியோரின் ஆழமான குரலில் உணர்வுபூர்வமாக பாடப்பட்டுள்ள இந்த பாடல், மோகன் ராஜனின் மனதை தொடும் வரிகளாலும், ஏ.ஜி.ஆர்-ன் மெய்சிலிர்க்க வைக்கும் இசையாலும் மெருகேற்றப்பட்டுள்ளது. இது படத்தின் உணர்ச்சிகரமான மற்றும் ஆன்மீக பயணத்திற்கு சரியான அடித்தளத்தை அமைத்துள்ளது.

புகழ்பெற்ற இயக்குநர் சேரன் மற்றும் பிரபல நடிகை மஞ்சு வாரியர் ஆகியோரால் வெளியிடப்பட்ட இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை தூண்டிய நிலையில், தற்போது தனித்துவமான திரையனுபவத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பாடல் மேலும் அதிகரித்துள்ளது. சர்வதா சினி கரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ள சன்னிதானம் பிஓ திரைப்படத்தை அமுத சாரதி இயக்கியுள்ளார். அவரே படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார். இப்படத்தை மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் மற்றும் ராமசாமி வேலு ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.

யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி மற்றும் வர்ஷா விஸ்வநாத் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தில், பல்வேறு திரையுலகங்களை சேர்ந்த திறமையான கலைஞர்கள் ஒன்றிணைந்துள்ளனர். இவர்களுடன் மூத்த கலைஞர்களான சித்தாரா, பிரமோத் ஷெட்டி, முன்னார் ரமேஷ், கஜராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சபரிமலை, பம்பை, எருமேலி, சென்னை மற்றும் பொள்ளாச்சி போன்ற ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் இடங்களில் படமாக்கப்பட்டுள்ள இந்த படம், பார்வையாளர்களுக்கு உண்மையான மற்றும் கதையோடு ஒன்றிப்போக செய்யும் பின்னணியை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சன்னிதானம் பிஓ படத்தின் மையக்கரு ஆழமான மனித உணர்வுகளை அடிப்படையாக கொண்டது. ஐயப்ப பக்தர்கள் சந்திக்கும் ஓர் எதிர்பாராத சம்பவத்தையும், அதனை தொடர்ந்து அவர்களின் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களையும் சுற்றியே இதன் கதை நகர்கிறது. நம்பிக்கை, மன உறுதி மற்றும் மனித உறவுகளில் வேரூன்றிய இந்த திரைப்படம், மனதை ஆழமாக தொடும் ஒரு திரையனுபவத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இப்படத்தின் கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுதியுள்ளார். வினோத் பாரதி ஒளிப்பதிவு செய்ய, பி.கே  படத்தொகுப்பை கையாண்டுள்ளார். தொழில்நுட்ப குழுவில் விஜய் தென்னரசு (கலை இயக்குநர்), மெட்ரோ மகேஷ் (சண்டைப் பயிற்சி), ஜாய் மதி (நடன அமைப்பு), நடராஜ் (ஆடை வடிவமைப்பு) மற்றும் மோகன் ராஜன் (பாடல் வரிகள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஏறி வந்தோம் ஐயப்பா பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின் பயணம் ஒரு சிறப்பான ஆன்மீக உணர்வுடன் தொடங்கியுள்ளது; வரும் நாட்களில் படம் குறித்த பல சுவாரஸ்யமான அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பான்-இந்தியா திரைப்படமாக உருவாகியுள்ள சன்னிதானம் பிஓ மே மாதம் திரைக்கு வர உள்ளது. படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும்.

நடிகர்கள்:

யோகி பாபு, ரூபேஷ் ஷெட்டி, சித்தாரா, பிரமோத் ஷெட்டி, வர்ஷா விஸ்வநாத், முன்னார் ரமேஷ், கஜராஜ், ராஜா ருத்ரகோடி, சாத்விக், அஸ்வின் ஹாசன், வினோத் சாகர், கல்கி ராஜா, விஷாலினி, தஷ்மிகா லக்ஷ்மண், மதுசூதன் ராவ்.

தொழில்நுட்பக் குழு:

 வசனம் & இயக்கம்: அமுத சாரதி
 கதை & திரைக்கதை: அஜினு ஐயப்பன்
 தயாரிப்பாளர்கள்: மதுசூதன் ராவ், வி. விவேகானந்தன் & ராமசாமி வேலு
 இணை தயாரிப்பாளர்: ஷபீர் பதான்
 தயாரிப்பு நிறுவனங்கள்: சர்வதா சினி கரேஜ் & ஷிமோகா கிரியேஷன்ஸ்
 ஒளிப்பதிவு: வினோத் பாரதி
 இசை: ஏ.ஜி.ஆர்
 படத்தொகுப்பு: பி.கே
 கலை இயக்குநர்: விஜய் தென்னரசு
 சண்டைப்பயிற்சி: மெட்ரோ மகேஷ்
 பாடலாசிரியர்: மோகன் ராஜன்
 நடன அமைப்பு: ஜாய் மதி
 ஆடை வடிவமைப்பாளர்: நடராஜ்
 ஒப்பனை: சி. சிபுகுமார்
 புரொடக்‌ஷன் கண்ட்ரோலர்கள்: ரிச்சர்ட் & டி. முருகன்
 நிர்வாகத் தயாரிப்பாளர்: விலோக் ஷெட்டி
 இணை இயக்குநர்கள்: ஷக்கி அசோக் & சுஜேஷ் ஆனி ஈப்பன்
 அசோசியேட் இயக்குநர்கள்: முத்து விஜயன், ராஜா சபாபதி, ராஜா ராம்
 உதவி இயக்குநர்கள்: அக்னி மகேந்திரன், சரவணன் ஜீவா
 பப்ளிசிட்டி டிசைனர்: வி.எம். சிவகுமார்
 புகைப்படங்கள்: ரெனி மோன்
 மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத் & பாரஸ் ரியாஸ்
 ஆடியோ லேபில்: ட்ரெண்ட் மியூசிக்

ரூ.8,000 இல்லத்தரசி கூப்பன்! நடந்தது என்ன?!

சிவகங்கையில் ரூ.8,000-க்கான மாதிரி கூப்பன் விநியோகித்த 2 பேரை பிடித்து தேர்தல் அதிகாரிகளிடம் அதிமுகவினர் ஒப்படைத்தனர். அவர்களை அதிகாரிகள் விடுவித்ததால் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அதிமுக, திமுகவினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. சிவகங்கை சட்டப்பேரவைத் தொகுதியில் திமுக சார்பில் கருணாஸ், அதிமுக சார்பில் பி.ஆர்.செந்தில்நாதன் போட்டி யிடுகின்றனர். சிவகங்கை 5-வது வார்டில் திமுகவினர் சிலர் வீடு வீடாகச் சென்று ரூ.8,000-க் கான மாதிரி கூப்பன் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அதிமுக, பாஜகவினர் அங்கு சென்று 2 பேரை கூப்ப னுடன் பிடித்து துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மரிய ஆரோக்கிய ரூபல்லா தலைமையிலான தேர்தல் நிலையான கண்காணிப்புக் குழுவினரிடம் ஒப்படைத்தனர். 

மேலும், அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து பிடிபட்ட இருவரையும் நகர் போலீஸாரிடம் தேர்தல் அதிகாரிகள் ஒப்படைத்தனர். ஆனால், சிறிது நேரத்தில் இருவரையும் போலீஸார் விடுவித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அதிமுக நகரச் செயலாளர் என்.எம்.ராஜா, பாஜக நகரத் தலைவர் உதயா தலைமையிலான அதிமுகவினர் சிவகங்கை நகர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். அதேநேரம் நகராட்சித் தலைவர் சி.எம்.துரை ஆனந்த் தலைமையிலான திமுகவினர் அங்கு வந்தனர். மாதிரி கூப்பன் கொடுப்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

ரூ.8,000 மாதிரி கூப்பன் குறித்து விளம்பரம் செய்வதற்குத்தான் ஆணையம் அனுமதி கொடுத்துள்ளது. கூப்பனை வாக்காளர்களிடம் விநியோகிக்கக் கூடாது என்று அதிமுகவினர் கூறினர். இதனால், இரு தரப்பினர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டிஎஸ்பி அமலா அட்வின் தலைமையிலான போலீஸார் இரு தரப்பினரையும் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். அதைத்தொடர்ந்து அதிமுகவினர் புகார் மனு கொடுத்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் கேட்டபோது, ‘மாதிரி கூப்பன் கொடுத்ததில் விதிமீறல் இருக்கிறதா என்பது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் விளக்கம் பெற்று, தவறு இருந்தால் வழக்குப் பதிந்து விசாரிக்கப்படும்’ என்றனர்.

அதிமுகவினர் கூறுகையில், ‘கூப்பன் விநியோகம் செய்த நபர்களை பிடித்து அதிகாரிகளிடம் ஒப்படைத்தோம். பறிமுதல் செய்த கூப்பன்களை வாங்கிக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறினர். ஆனால் நடவடிக்கை எடுக்காமல் இருவரையும் தப்பவிட்டனர். தேர்தல் அதிகாரிகளும், போலீஸாரும் ஆளும்கட்சிக்கு ஆதரவாக உள்ளனர்’ என்று கூறினர்.

 

மசோதா நகலை எரித்து முதல்வர் ஸ்டாலின் போராட்டம்!

நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நிறைவேற்ற திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வீடுகள் தோறும் கருப்புக் கொடியேற்றி எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என திமுக தலைவர் முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதன்பேரில் மாநிலம் முழுவதும் திமுகவினர் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தியும், வீடுகளின் முன் கருப்புக் கொடி கட்டியும், கோலமிட்டும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இச்சூழலில் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் ஸ்டாலின் சேலத்தில் இருந்து நாமக்கல்லுக்கு நேற்று இரவு வந்தார். நாமக்கல் நல்லிபாளையத்தில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் முதல்வர் ஸ்டாலின் தங்கினார். தொடர்ந்து இன்று காலை நாமக்கல் நல்லிபாளையத்திற்கு கருப்பு உடை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்தார். இதனையடுத்துஅங்கு செல்லப்பன் என்பவரது வீட்டின் முன் உள்ள கொடிக் கம்பத்தில் தொகுதி மறுவரை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியேற்றினார். மேலும், மசோதா நகலை தீயிட்டு எரித்தார்.

முன்னதாக தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும், வெல்வோம் எனவும் தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நாமக்கல் உழவர் சந்தைக்கு வந்த முதல்வர் ஸ்டாலின் அங்கு விவசாயிகள், மக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது நாமக்கல் தொகுதி திமுக வேட்பாளர் ராணி, கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

முதல்வர் ஸ்டாலின் பதிவு:

தொடர்ந்து, இன்று நடைபெற்ற போராட்டம் குறித்து தமிழக முதல்வர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத்தீ பரவட்டும், பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும். அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது. இன்று, தமிழரைச் சொந்த நாட்டில் அகதிகளாக்கும் கருப்புச் சட்டத்தின் நகலை எரித்து மற்றுமொரு தீயினைப் பற்ற வைத்திருக்கிறேன்.

இத்தீயும் திராவிட நாடெங்கும் பரவும். பாஜக.வின் ஆணவத்தை அடக்கிக் காட்டும். “தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய் – இன்பத் தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ” எனத் தெரிவித்துள்ளார்.