சென்னை, செங்குன்றத்தை அடுத்த புத்தகரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் அதே பகுதியில் யோககுடில் என்ற பெயரில் ஆசிரமம் ஒன்று நடத்தி வருகிறார். அதே போல், வல்லரசு என்ற பெயரில் கட்சி ஒன்றும் நடத்தி வருகிறார். யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வரும் சாமியார் சிவகுமார் சாதி, மதத்திற்கு எதிரான கருத்துக்களைக் கார சாரமாகப் பேசி பதிவிட்டு இணைய வெளியில் சர்ச்சைக்குப் பேர் போனவராக மாறினார். இந்து மதம், கிறிஸ்துவம், இஸ்லாம் என அனைத்து மதக் கடவுள்கள் மற்றும் மத குருமார்களை அருவருக்கத்தக்க வகையில் ஆபாசமாகத் திட்டித்தீர்த்துத் தொடர்ந்து வீடியோ பதிவிட்டு வருகிறார்.

‘மதம் மறப்போம்..மனிதம் வளர்ப்போம்!’ என்ற போர்வையில் சிவகுமார் பதிவிடும் கருத்துக்கள் அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் இருப்பதாக இவர் மீது ஏற்கெனவே பலரும் பல்வேறு காவல் நிலையங்களில் புகாரளித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு பொன்னேரி காவல்நிலையத்தில் இவர் மீது அளிக்கப்பட்ட புகார் ஒன்றின் பேரில், பொன்னேரி காவல்துறையினர் இவரைக் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கடந்த சில வாரங்களுக்கு முன் ஜாமீன் பெற்று யோககுடில் சிவகுமார் வெளியில் வந்தார். 

ஆனால் , சிவகுமார் அதற்கு பிறகும் தொடர்ந்து அனைத்து மதத்தினரையும் இழிவுபடுத்தும் வகையில் வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு வந்தார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம் புதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவர் யோககுடில் சிவகுமார் மீது திருச்சி உறையூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார் . மணிகண்டன் தனது புகாரில், மெய்வழி மதத்தை இழிவுப்படுத்துவது மற்றும் “அனைத்து மதத்தினரும், சாதியினரும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகத்தில் நபிகள் நாயகம் , இயேசு, சிவபெருமான் என அனைத்து மத கடவுள்களின் வரலாற்றைக் கொச்சைப்படுத்தி ஆபாசமாகப் பேசி வீடியோ பதிவிட்டு வருகிறார். அனைத்து மதத்தினரின் உணர்வுகளையும் புண்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகப் பேசி வரும் சிவகுமார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறியிருந்தார்.

மணிகண்டனின் புகார் மனுவினை பெற்றுக்கொண்ட உறையூர் போலீஸார், உறையூர் காவல்நிலையத்தில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு சிவகுமாருக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பினர். ஆனால், சிவகுமார் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்நிலையில், அவரின் யூடியூப் சேனல் குறித்தும், ஆபாச பேச்சுக்கள் குறித்தும் வெவ்வேறு மாவட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட புகார்கள் குவிந்ததை அடுத்து யோககுடில் சிவகுமார் கடந்த சில நாள்களுக்கு முன்பு, தனது ஆதரவாளர்கள் 20-க்கும் மேற்பட்டோருடன் கட்சிக் கொடியுடன் கழுத்தில் மாலை, கூலிங் கிளாஸ் என சிறிதும் பயமில்லாமல் உறையூர் காவல்நிலையத்தில் ஆஜராகினார்.

இந்நிலையில் இஸ்லாமிய தொழுகை முறை பற்றியும், நபிகள் நாயகம் பற்றியும் கொச்சையாக பேசியதால் சாதிக் பாஷா என்பவர் புழல் காவல் நிலையத்தில் சிவகுமார் மீது புகார் அளித்துள்ளார். SDPI அமைப்பினர் சென்ட்ரல் ரெயில் நிலையம் அருகில் சிவகுமாரை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தினர். போலீசார் சிவகுமாரை அழைத்து விசாரணை செய்து 9 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து  பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர். தற்போது பெண்களை கொச்சை வார்த்தையால் பேசியதால் பதாதைகள் ஏந்தி ராஜேஸ்வரி அவர்கள்  மற்றும்  பெண்கள் ஒன்று சேர்ந்து சிவகுமாரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரி சென்னை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அதில் பெண்களின் உறுப்புகளை அசிங்கபடுத்தி பேசுதல், பாலியல் எண்ணத்தை தூண்டுதல், பெண்களை தவறாக பேசி வருதல் போன்ற குற்றசாட்டுகளை ஆதாரத்துடன் வழங்கியுள்ளார். சிவகுமார் வெளியிட்ட வீடியோ அனைத்தையும் புலனாய்வு செய்த போலீசார் பேசியது அனைத்தும் இவர் என்று கண்டறிந்து பின்னர்  சென்னை மாநகர ஆணையர் சங்கர் ஜிவால் சிவகுமாரை குண்டர் சட்டத்தில் அடைக்க உத்தரவிட்டார். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here