அறிமுக இயக்குநர் வெங்கட கிருஷ்ணரோகாந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’. இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், இயக்குநர்கள் மோகன்ராஜா, மகிழ் திருமேனி, கரு.பழனியப்பன், நடிகைகள் மேகா ஆகாஷ், ரித்விகா, கனிகா, விவேக், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இப்படம் தடைகளை தாண்டி 2 ஆண்டுகளுக்குப் பின் மே 19 ஆம் தேதி வெளியானது.
அகதியான புனிதன்(விஜய் சேதுபதி), தன் உண்மையான அடையாளத்தை மறைத்துவிடுகிறார். கொடைக்கானலில் இருக்கும் கேரட் ஃபார்மில் வேலை செய்யும் கனகராணி( கனிகா) என்பவரை தேடிச் செல்கிறார். வழியில் மெடில்டாவை(மேகா ஆகாஷ்) சந்திக்கிறார். உள்ளூரில் இருக்கும் தேவாலயத்தில் தன் திறமையை வெளிப்படுத்தும் இசை கலைஞர் மெடில்டா. இசை மீதான ஆர்வத்தால் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்படுகிறது. மெடில்டா மற்றும் இன்னொரு இசை கலைஞரான ஜெசி ஆகியோர் புனிதனின் உண்மையான அடையாளத்தை கண்டுபிடிக்கிறார்கள்.
அவர் புனிதன் அல்ல கிருபாநிதி என்கிற அகதி என்பதை கண்டுபிடிக்கிறார்கள். இதனால் மெடில்டா, புனிதன் இடையேயான உறவு பாதிக்கப்படுகிறது. இதற்கு காரணம் என்ன? இலக்கை அடைய ஒரு அகதியாக விஜய் சேதுபதி என்ன சிக்கல்களை எதிர்கொள்கிறார்? என்பதே படத்தின் மீதி கதை….
முதல் பாதி மெதுவாக சென்றாலும் இரண்டாம் பாதியில் அதை சரி செய்துவிடுகிறார்கள். தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. மறைந்த நடிகர் விவேக் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படத்தின் 2 ஆம் பாதி தான் உயிர் என்னும் போது அதனை இன்னும் அழுத்தமாக காட்சிகளின் வழியே சொல்ல முயற்சித்திருக்கலாம்.
குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸ் காட்சி மிகச்சிறப்பாக பேசப்பட்டுள்ளது. அதில் விஜய் சேதுபதி பேசும் வசனம் சபாஷ்..! நாடு மறந்து, குடும்பம் துறந்து அகதிகளாக இருக்கும் மக்களின் வலிகளை படம் பார்ப்பவர்களின் கண்கள் கலங்கும்படி செய்து விடும் என்பது நிச்சயம்.
சொல்லப்போனால் அகதிகள் என்றாலும் அவர்களும் இந்நாட்டு மன்னர்கள் தானே என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. படத்திற்கு பாடல்கள் பெரிய அளவில் தேவைப்படாத ஒன்றாகவே உள்ளது.