தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் 749 போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் (621 ஆண்கள், 128 பெண்கள்) காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு இன்றும், நாளையும் (சனி, ஞாயிறு) தமிழ்நாடு முழுவதும் நடக்கிறது.
அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் இத்தேர்வானது விழுப்புரம் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.ஆர்.பி. மேல்நிலைப்பள்ளி, அரசூர் வி.ஆர்.எஸ். பொறியியல் கல்லூரி, விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி ஆகிய 5 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.
இதில் இன்று காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை நடைபெற உள்ள தேர்வை 4,834 ஆண்களும், 1,368 பெண்களும் என மொத்தம் 6,202 பேரும், மாலை 3.30 மணி முதல் 5.10 மணி வரை நடைபெற உள்ள தமிழ் தேர்வை 5,323 ஆண்களும், 1,467 பெண்களும் என மொத்தம் 6,790 பேரும் எழுத உள்ளனர்.
இதேபோல் காவல்துறையில் 5 ஆண்டுகள் பணி முடித்த 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நாளை காலை 10 மணி முதல் பகல் 12.30 மணி வரை விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி தேர்வு மையத்தில் தேர்வு நடக்கிறது. இத்தேர்வை 756 ஆண்களும், 158 பெண்களும் என மொத்தம் 914 போலீசார் எழுத உள்ளனர்.
இத்தேர்வையொட்டி தேர்வு பாதுகாப்பு பணிகள் மற்றும் தேர்வு மைய கண்காணிப்பு பணி, தேர்வு அறை காவலர்கள் என கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் முதல் போலீசார் வரை 1,031 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இத்தேர்வுகளுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தேர்வுக்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து தேர்வுப்பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று விழுப்புரம்- சென்னை நெடுஞ்சாலையில் உள்ள ஆனந்தா திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் தலைமை தாங்கினார். விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. ஜியாவுல்ஹக் கலந்துகொண்டு தேர்வுப்பணியில் ஈடுபட உள்ள போலீசாருக்கு தேர்வு மையங்களின் பணிகள் குறித்த பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.