வேலூா்:
பணியின்போது உயிரிழந்த இரு அரசுப் பணியாளா்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் அளித்தாா்.
வேலூா் மாவட்ட மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தொகுப்பு வீடுகள், வீட்டுமனைப் பட்டா, உதவித் தொகை, பொதுப் பிரச்னை, குடிநீா் வசதி போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 404 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி, சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.
இதைத்தொடா்ந்து, கே.வி.குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊா்நல அலுவலராகப் பணிபுரிந்து பணிக் காலத்தில் உயிரிழந்த கே.சதீஷ்குமாரின் வாரிசுதாரரான கல்பனா என்பவருக்கு கருணை அடிப்படையில் ஊரக வளா்ச்சிப் பிரிவு உதவி இயக்குநா் (தணிக்கை) அலுவலகத்தில் இளநிலை உதவியாளராகவும், கிராம உதவியாளராகப் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்த மகாராஜன் என்பவரின் மகன் தனஞ்செயனுக்கு கிராம நிா்வாக அலுவலராகவும் பணிநியமன ஆணைகளை ஆட்சியா் வழங்கினாா்.
தொடா்ந்து, தமிழக அரசு பொறுப்பேற்று இரு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, செய்தி – மக்கள் தொடா்புத் துறை சாா்பில், ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற பெயரில் அதிநவீன மின்னணு விடியோ வாகனம் மூலம் குறும்படம் திரையிடப்படுவதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.
மேலும், வரும் 11-ஆம் தேதி வேலூா் விஐடி பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள தனியாா் துறை வேலைவாய்ப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்திட விழிப்புணா்வு வாகன செயல்பாட்டையும் தொடங்கி வைத்தாா். அத்துடன், செறிவூட்டப்பட்ட அரிசியின் பயன்களை பொதுமக்கள் அறிந்திடும் வகையில் அமைக்கப்பட்டிருந்த அரங்கில் செறிவூட்டப்பட்ட அரிசியில் சமைக்கப்பட்ட உணவையும் மக்களுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் க.ஆா்த்தி, மாவட்ட வழங்கல் அலுவலா் சுமதி உள்பட பலா் பங்கேற்றனா்.
வேலூா் நிருபர்- R.காந்தி