தமிழகத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுவதையொட்டி இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நேற்று பல்வேறு இடங்களில் டாஸ்மாக் கடைகளில் கூட்டம் அலைமோதியது.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், திருவானைக்காவல், மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட திருச்சி மாநகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மதுபான கடைகளில் மதுப்பிரியர்களின் கூட்டம் அலைமோதியது. அரசு அறிவித்த சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவது போன்றவை கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறந்தன. கொரானா பயமின்றி மது பிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு மதுபானங்களை வாங்கியது பார்ப்பவர்களுக்கு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியது.
திருப்பூரில் குமரன் சாலையில் அமைந்துள்ள டாஸ்மாக் எலைட் கடையில் 100 க்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்திருந்து மது வாங்கிச் சென்றனர். இதேபோன்று கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபான விற்பனை களைகட்டியது.
கடலூர் மத்திய பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுப்பிரியர்கள் தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். டாஸ்மாக் கடைகளில் வழக்கத்தை விட கூட்டம் குவிந்ததால், அசம்பாவிதத்தை தவிர்க்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மாலை முதலே மதுப்பிரியர்கள் அதிகளவில் மதுவாங்கி சென்றனர். இந்நிலையில் நேற்று ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் ரூ.160 கோடிக்கு மது விற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் முடிவு வெளியாகும் மே 2-ம் தேதியும் மதுபானக்கடைகள் விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.