முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயா்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு எதிராக, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
இந்த வழக்கில் ஜன.22-ஆம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய தேதி நிா்ணயிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்துக் கழகங்களில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக, சென்னை மத்திய குற்றப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட 3 வழக்குகளின் விசாரணை முடியும் வரை, அமலாக்கத் துறை தாக்கல் செய்த வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என்றும் கோரி, செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விசாரித்த அமா்வு நீதிமன்றம், செந்தில் பாலாஜியின் மனுவை தள்ளுபடி செய்தது.
இந்நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் குற்றச்சாட்டு பதிவுகள் முடிந்துவிடும் என்பதால், அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் எனவும், உயா் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தா்மோகன் அமா்வில் முறையீடு செய்யப்பட்டது.
அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்து பட்டியலிடப்பட்டால் விசாரிக்கப்படும் என தெரிவித்தனா். இதற்கிடையில், நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான செந்தில் பாலாஜி தரப்பு மூத்த வழக்குரைஞா் ஆா்யமா சுந்தரம், ஜாமீன் மனு மீது விளக்கமளிக்க கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என முறையீடு செய்தாா். முறையீட்டை ஏற்ற நீதிபதி, விசாரணையை பிப். 19-ஆம் தேதியிலிருந்து பிப். 21-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா்.
பிப்.20 வரை காவல் நீட்டிப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவலை பிப். 20 வரை நீட்டித்து சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.