சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த முனுசாமி என்பவர் மேடவாக்கம்-வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள பிரபலமான உணவகத்தில் 3 சிக்கன் ரைஸ், ஆஃப் கிரில் சிக்கன் ஆகியவை ஆர்டர் செய்து பார்சல் வாங்கி கொண்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
வீட்டிற்கு சென்றதும் குழந்தைகளுடன் உணவு சாப்பிட்டிருக்கிறார். அப்பொழுது கிரில் சிக்கனை சாப்பிட்ட முனுசாமியின் மகன்கள் வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. கிரில் சிக்கனை முகர்ந்து பார்த்தபோது துர்நாற்றம் வீசி உள்ளது. இது குறித்து முனுசாமி பார்சல் வாங்கிவந்த அந்த உணவகத்திற்கு சென்று ஊழியர்களிடம் கேட்டபோது முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர்.
மேலும் எந்த பிரச்சனையும் வேண்டாம் இதற்காக பணத்தை திருப்பி தருவதாக ஊழியர்கள் தெரிவித்ததாக கூறப்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முனுசாமி இதுகுறித்து காவல் கட்டுப்பாட்டு அறை 100-க்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு வருவதை அறிந்த ஊழியர்கள் உணவகத்தில் ஃப்ரீசர் பாக்ஸ் இல் வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன இறைச்சிகளை குப்பை தொட்டியில் கொட்டி அப்புறப்படுத்த முயற்சித்துள்ளனர்.
பின்னர் பள்ளிக்கரணை போலீசார் உணவு பாதுகாப்பு ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது குறித்து முறையாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கும் பாதிக்கப்பட்ட முனுசாமி தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. வீட்டில் குழந்தைகள் ஆசையாக கேட்டதால் கிரில் சிக்கன் வாங்கி சென்ற நிலையில் கடையில் கெட்டுப்போன கறியை கொடுத்ததாக கூறி குழந்தையின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் கடையில் வாக்குவாதம் செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.