மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நடிகர் விவேக் இன்று (ஏப்.17) காலை 4.35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 59.
சென்னையில் வசித்து வந்த நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று (ஏப்.16) காலை 11 மணியளவில் சென்னை வடபழனியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு மருத்துவமனையில் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை 4.35 மணியளவில் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து அவரின் உடல் விருகம்பாக்கத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு நண்பர்கள், திரைத்துறை பிரபலங்கள், நடிகர், நடிகைகள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
சமூகத்தின் மீது தீரா நேசம் கொண்ட நண்பர் விவேக்கின் பிரிவு, வார்த்தைகளில் சொல்ல முடியாத துயர் – இயக்குநர் பார்த்திபன்
எல்லோர் இதயங்களிலும் நீங்கள் வாழ்வீர்கள் விவேக் சார், திரை உலகம் உள்ளவரை உங்கள் புகழ் இருக்கும் – இயக்குநர் சேரன்
இந்நிலையில், மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.