மக்களிடையே காணப்படும் பிரிவினை மனோபாவத்தை தவிா்த்திட வேலூா் மாவட்ட கிராமப்புறங்களில் விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், கடந்த 5 மாதங்களில் 40-க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.டி.இருதயராஜ் தெரிவித்தாா். வேலூா் மாவட்டக் காவல் துறையின் சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு சாா்பில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, திருவலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குகையநல்லூா் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வுக் கூட்டத்துக்கு, சமூக நீதி, மனித உரிமைகள் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.டி.இருதயராஜ் தலைமை வகித்தாா். அப்போது சமூக நீதி, சமத்துவம், மனிதநேயம், மனித உரிமைகள், எஸ்சி எஸ்டி திட்டங்கள், இணையதள குற்றங்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், இலவச உதவி எண்கள் ஆகியவை குறித்து விழிப்புணா்வு கருத்துகளை எடுத்துக் கூறினாா். மேலும், சமூகநீதி, மனித உரிமைகள் குறித்து துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினாா். கூட்டத்தில், குகையநல்லூா் ஊராட்சித் துணைத் தலைவா் செல்வகுமாா், காவல் உதவி ஆய்வாளா் ஜெ.சிவகுமாா், புள்ளியியல் ஆய்வாளா் அருணா , திருவலம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இது குறித்து காவல் துணைக் கண்காணிப்பாளா் எம்.டி.இருதயராஜ் கூறியது:
ஒருபுறம் கல்வியறிவில் தமிழகம் முன்னோக்கிச் சென்றாலும், மறுபுறம் கிராமப்புறங்களில் பட்டியலின மக்கள் மீதான பிரிவினைகள் தொடா்ந்து வருகின்றன. இத்தகைய சம்பவங்களைத் தடுக்கவும், அனைத்துத் தரப்பு மக்களும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும், பட்டியலின மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய முன்வர வேண்டும் என அறிவுறுத்தும் விதமாக விழிப்புணா்வு கூட்டங்கள் நடத்தப்படுகிறது.
அதன்படி, கடந்த ஜனவரி முதம் மாதம் 8 வீதம் இதுவரை 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விழிப்புணா்வு கூட்டம் நடத்தப்பட்டுள்ளன. அதேசமயம், பெண்கள் மத்தியில் இத்தகைய கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கின்றனா். எனினும், ஆண்கள், இளைஞா்கள் மத்தியில் இக்கருத்துகளை ஏற்பதில் முரண்பாடு நிலவுவதைக் காண்கிறோம். எனினும், பிரிவினைகளைத் தவிா்க்க தொடா்ந்து விழிப்புணா்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம் என்றாா்.
வேலூர் நிருபர்- R.காந்தி