திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி அருகே உள்ள அம்பாத்துரை ஊராட்சிக்குட்பட்ட மேலக்கோட்டை பகுதியில் சாலையோரத்தில் கால்நடைகளுக்கு பயன்படுத்திய மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டுள்ளளது. சாலையோரத்தில் கால்நடைகளுக்கு போடப்பட்ட ஊசி மருந்துகள் மற்றும் மருத்துவ கழிவுகள் என அனைத்தும் திறந்த வெளியிலேயே கொட்டப்படுவதை ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்வதில்லையென இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றர்.
இதுகுறித்து அம்பாத்துரை கால்நடை மருத்துவமனைக்கு விசாரிக்கச் சென்றபோது மருத்துவமனையில் மருத்துவர் இல்லை மருந்தாளுநர் மட்டுமே இருந்தார். அவரிடம் இது குறித்து கேட்டபோது, தனியாக வீடுகளில் கால்நடைகளுக்கு மருத்துவம் பார்ப்பவர்கள் இந்த மருத்துவ கழிவுகளை கொட்டி சென்றிருக்கலாம் என மருந்தாளுநர் தெரிவித்தார்.
அம்பாத்துரை அரசு கால்நடை மருத்துவமனை இருந்தபோதிலும் மருத்துவர் சரியாக வராத காரணத்தால் கால்நடை மருத்துவம் தெரியாத நபர்கள் 10-க்கும் மேற்பட்டோர் இந்தப்பகுதியில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாகவும் அம்பாத்துரை கால்நடை மருத்துவமனை பணியாளர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது இரவு நேரங்களில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் இதுபோன்று சாலையோரங்களில் மருத்துவ கழிவுகளை கொட்டி செல்கின்றனர். பத்து நாட்கள் வரை மருத்துவக் கழிவுகள் கண்ட இடங்களில் குவிந்து கிடக்கின்றன ஊராட்சி நிர்வாகம் இதற்கு எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். அம்பாத்துரை ஊராட்சியில் கண்ட இடங்களில் கட்டப்பட்டுள்ள மருத்துவ கழிவுகளை அகற்ற மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.