வேலூர் மாநகராட்சியில் இருந்து அரியலூருக்கு அனுப்புவது 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டதால், 500 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்படாமல் தேக்கமடைந்துள்ளது. இதனால் திடக்கழிவுமேலாண்மை மையங்களும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் திணறி வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை அகற்றி மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை அரியலூர் சிமென்ட் கம்பெனிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு தொழில்கள் முடங்கியது. இதில் சிமென்ட் கம்பெனிகளும் பாதிக்கப்பட்டது. இதனால் மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்களிலும் சேகரிக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் கழிவுகள், கண்ணாடி பாட்டில்கள் கடந்த 2 ஆண்டுகளாக அரியலூர் சிமென்ட் கம்பெனிக்கு அனுப்பவில்லை.
இதனால் மாநகராட்சி முழுவதும் சுமார் 500 டன் வரையில் பிளாஸ்டிக் குப்பைகள் தேக்கமடைந்துள்ளது. இதன்காரணமாக மாநகராட்சியில் தினசரி சேகரிக்கும் குப்பைகளில் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என்று தரம் பிரிக்க முடியாமலும், குப்பைகள் வைக்க திடக்கழிவு மேலாண்மை மையங்களில் இடமின்றி உள்ளது. இதனால் திடக்கழிவு மேலாண்மை மைமயங்கள் அனைத்தும் திணறி வருகிறது. குப்பைகளை கையாள முடியாமல் அதிகாரிகளும் திணறி வருகின்றனர். எனவே பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி மாற்று வழி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வேலூர் மாநகராட்சியில் மக்கும், மக்காத குப்பைகளை தவிர்த்து, வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கோரை பாய்கள், காலணிகள், கால்வாய்களில் வீசப்படும் கழிவுகள், இறைச்சி கழிவுகள் அகற்ற மாநகராட்சியில் தற்போது வரையில் எந்த திட்டமும் இல்லை. இந்த கழிவுகளை அகற்ற 2 கோடியில் நவீன இயந்திரங்கள் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த நவீன இயந்திரம் வந்தால் தான் கால்வாய்களில் இருந்து அகற்றப்படும் குப்பைகள், வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பைகள் அகற்ற தீர்வு கிடைக்கும் என்று மாநகராட்சி அதிகாரிகளே தெரிவிக்கின்றனர்.