அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரைஅடுத்து அவரது வீடு மற்றும் ஆதரவாளர்களின் வீடு என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில் பணம், நகை, வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் தெரிவித்தனர். மேலும், முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டு பின்புறத்தில் 551 யூனிட் மணல் பதுக்கி வைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் கே.சி.வீரமணி வங்கி கணக்கு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. அவரது லாக்கர்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகம் மற்றும் சாய்நாதபுரத்தைச் சேர்ந்த சம்பத் என்பவரது வீடு ஆகிய இடங்களில் வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
 
ஆவின் தலைவராக அ.தி.மு.க. வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் செயல்பட்டு வந்தார். இதனால் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி தொடர்பான ஆவணங்கள் ஆவின் அலுவலகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஆவின் தலைவர் வேலழகனுக்கு சம்பத் அறிமுகமானவர் என்று கூறப்படுகிறது.
 
அதனடிப்படையில் சோதனை நடத்தப்படுவதாக தெரிவித்தனர். காலை 10 மணி முதல் தொடர்ந்து மாலை 4 மணி வரை 6 மணி நேரம் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் ஆவினில் உள்ள தலைவர் அறை, மேலாளர் அறை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனை செய்ததாக கூறப்படுகிறது.
 
போலீசாரின் சோதனையின் போது ஆவின் அலுவலகத்திற்குள் யாரும் உள்ளே செல்ல முடியாதபடி கதவு மூடப்பட்டு பூட்டு போடப்பட்டது. சம்பத் வீட்டில் சோதனைக்காக போலீசார் பணம் எண்ணும் எந்திரம் கொண்டு சென்றனர். ஆனால் அங்கு பணம் ஏதும் பறிமுதல் செய்யப்படவில்லை. இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here