வேலூர் மாவட்டம் ஒடுகத்தூரை அடுத்த ராமநாயினி குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர் (வயது 36). இவருக்கு காந்திமதி என்ற மனைவியும், யாகேஷ் என்ற 2 வயது ஆண் குழந்தையும் உள்ளனர்.

ராஜசேகர் ராமநாயனி குப்பம் ஊராட்சியில் கடந்த 13 ஆண்டுகளாக ஊராட்சி செயலாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று இரவு தனது அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைப்பார்த்த அவரது பெற்றோர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ராஜசேகர் தற்கொலை செய்வதற்கு முன்பு ஒருகடிதம் எழுதி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் எனது சாவுக்கு தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அரி என்பவர் தான் காரணம். என் தம்பி பிரவீன் குமாருக்கு ரேஷன் கடையில் வேலை வாங்கித் தருகிறேன் எனக் கூறி என்னிடம் ரூ.2 ½ லட்சத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.

மேலும் என்னை மிரட்டி அவர் செய்த வேலைக்கான பணத்தை வங்கியில் எடுத்து தரும்படி ரூ.3 லட்சத்து 65 ஆயிரத்தை பெற்றுக் கொண்டு என்னை மிரட்டினார். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் சொல்லி ஊராட்சி செயலர் பதவியில் இருந்து தூக்கி விட்டு துணைத் தலைவரின் மகனை இந்த வேலையில் அமர்த்த போவதாகவும் என்னை மிரட்டி வந்தார். தொடர்ந்து எனக்கு போன் செய்து என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்துள்ளார். என் சாவுக்கு உறவினர்களோ, நண்பர்களோ, அரசு அதிகாரிகளோ காரணமில்லை. ஒன்றிய கவுன்சிலரின் சூழ்ச்சியே காரணம் என குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி தகவல் அறிந்ததும் வேப்பங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் ராஜசேகர் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த கடிதத்தின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில் ராஜசேகரின் தற்கொலைக்கு காரணமான தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அரியை கைது செய்யக் கோரி உறவினர்கள் வேப்பங்குப்பம் போலீஸ் நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அங்கு வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த வாகனங்கள் பாதை மாற்றி விடப்பட்டது. வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேரில் வந்து உயிரிழந்த ராஜசேகரின் மனைவி கோமதி மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

தனது கணவர் தற்கொலைக்கு காரணமாக தி.மு.க. கவுன்சிலரை கைது செய்ய வேண்டும். அவரை கைது செய்யும் வரை எனது கணவர் உடலை வாங்க மாட்டோம் என அவர் கூறினார்.

இது குறித்து கோமதி கண்ணீர் மல்க கூறுகையில்:-

எனது கணவர் உயிரோடு இருந்த போது தி.மு.க.கவுன்சிலர் அரி அடிக்கடி வீட்டிற்கு வந்து தொல்லை கொடுத்தார். எனது மைத்துனர் வேலைக்காக 2 1/2 லட்சம் கடன் வாங்கி கொடுத்துள்ளார். அதனை திரும்பி கேட்ட போதும் மிரட்டினார்.

இது தொடர்பாக வேப்பங்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒடுகத்தூர் பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து தி.மு.க. கவுன்சிலர் அரி மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கவுன்சிலர் அரியை போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here