வேலூர் அருகே 14 வயது சிறுமியை மிரட்டி 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்த செங்கல் சூளை தொழிலாளி மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து போலீசார் தேடி வருகிறார்கள். சிறுமி 6 மாத கர்ப்பம் வேலூரை அடுத்த கணியம்பாடி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. குடும்ப சூழ்நிலை காரணமாக அந்த பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக சிறுமி அடிக்கடி வயிறு வலிக்கிறது என்று கூறி உள்ளார். அவரின் பெற்றோர் அதற்கான மருந்து, மாத்திரைகள் வாங்கி கொடுத்தனர். ஆனாலும் வயிறுவலி குணமடையவில்லை. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமியை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். அங்கு சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்தனர்.
அதில், 6 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் உடனடியாக இதுகுறித்து வேலூர் அனைத்து மகளிர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். வாலிபருக்கு வலைவீச்சு அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சியாமளா தலைமையிலான போலீசார் அங்கு சென்று சிறுமியிடம் விசாரித்தனர். அதில், செங்கல் சூளையில் உடன் பணிபுரியும் கணியம்பாடி அருகே உள்ள புதூர் கிராமத்தை சேர்ந்த தமிழ்செல்வன் (வயது 30) கடந்த 6 மாதங்களுக்கு முன்பு செங்கல் சூளையில் தனியாக இருந்தபோது மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததும், பின்னர் இதுபற்றி யாரிடமும் வெளியே தெரிவிக்க கூடாது என்று கூறி தொடர்ந்து 6 மாதங்களாக பலாத்காரத்தில் ஈடுபட்டதும் தெரிய வந்தது.
இது குறித்து போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து தமிழ்செல்வனை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.