வேலூர் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் (லாட்ஜ்) விபசாரம் நடைபெறுவதாக வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து அரியூர் பகுதியில் உள்ள அனைத்து தங்கும் விடுதிகளிலும் அதிரடியாக சோதனை செய்யும்படி போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ்கண்ணன் உத்தரவிட்டார்.
அதன் பேரில் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் 10 ஆயுதப்படை போலீசார் அடங்கிய குழுவினர் அரியூரில் உள்ள தங்கும் விடுதிகளில் அதிரடியாக சோதனை செய்தனர்.
முதற்கட்டமாக போலீசார் தங்கும் விடுதியின் வரவேற்பு பகுதியில் பராமரிக்கப்படும் பதிவேட்டை பார்வையிட்டனர். அதில் அங்கு தங்கியிருக்கும் நபர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை கேட்டறிந்தனர். பின்னர் ஒவ்வொரு அறை, அறையாக சென்று போலீசார் சோதனை நடத்தினர்.
அங்கு தங்கியிருந்த நபர்களிடம் பெயர், முகவரி மற்றும் விடுதியில் தங்கியிருப்பதன் காரணம் உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர். ஒரே அறையில் இருந்த ஆண், பெண்ணிடம் அவர்களின் உறவுமுறையை போலீசார் கேட்டறிந்து, அதற்கான ஆதாரத்தை பார்வையிட்டு உறுதி செய்தனர். இதில் 6 பெண்கள் விபசாரத்தில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 6 பெண்கள் மற்றும் 6 ஆண்களையும் கடுமையாக போலீசார் எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.