வேலூர் மாவட்டம் குடியாத்தம்-பரதராமி சாலையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 24 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. இதில் கல்லப்பாடி ஊராட்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு டெண்டர் எடுத்த ஒப்பந்ததாரர் சரியாக பணியை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல இடங்களில் சாலைகள் பழுதாகி பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வந்தனர்.
பொதுமக்கள் பலமுறை சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தியும் இன்னும் சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளது. கடந்த வாரமும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையால் கல்லப்பாடி பஸ் நிறுத்தம் மற்றும் அப்பகுதியில் பள்ளங்கள் ஏற்பட்டு போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலையாக மாறியது.
இதனால் மண்கொட்டி சமன் செய்யப்பட்டது. தொடர்ந்து இரவில் பெய்த மழையால் சேறும் சகதியுமாக மாறி அதில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் குடியாத்தம்-பரதராமி சாலை வழியாக சித்தூர் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் அதிகாலை முதல் பல மணி நேரம் நீண்ட தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனை தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினர் உதவியுடன் சாலையை சீரமைத்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினர்.
காலை நேரத்திலேயே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். எனவே போர்க்கால அடிப்படையில் சாலையை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.