கோயம்பேட்டில் விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை குறிவைத்து திருடும் மர்ம கும்பலால் அந்த பகுதி மக்களிடையே அச்சம் நிலவி வருகிறது. இந்த வழக்கில் தெளிவாக சிசிடிவி காட்சிகள் இருந்தும் போலீசார் குற்றவாளிகளை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
கோயம்பேடு அடுத்த நெற்குன்றம், பகுதியில் வசித்து வருபவர் ஜாபர்(24). இவர் கடந்த இரு தினங்களுக்கு முன்பு வேலையை முடித்து விட்டு தனது இருசக்கர வாகனத்தை கொண்டு வந்து தனது வீட்டு வாசலில் முன் நிறுத்திவிட்டு இரவு தூங்க சென்றுள்ளார்.
பின்னர் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வரும் மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த இருசக்கர வாகனத்தை நோட்டமிட்டு சர்வ சாதாரணமாக காலால் வாகனத்தின் லாக்கை உடைத்து பின்னர் அங்கிருந்து வாகனத்தை எடுத்து செல்கின்றனர்.
ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் சர்வ சாதாரணமாக இளைஞர்கள் சிலர் வந்து இருசக்கர வாகனத்தை திருடி எடுத்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இச்சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் மிக தெளிவாக பதிவாகி இருந்தும் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் கோயம்பேடு போலீசார் திணறி வருகின்றனர். மேலும் அதே பகுதியில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு விலை உயர்ந்த இருசக்கர வாகனங்கள் திருடு போயிருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.