உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர் சங்கமும், பிரெஸ்டிஜ் பெல்லா விஸ்டா தமிழ்ச்சங்கமும் இணைந்து நடத்திய எழுத்துக்கு மரியாதை நிகழ்ச்சி சென்னையில் மயிலாப்பூர் TAG தட்சிணாமூர்த்தி கலையரங்கத்தில் முனைவர் பாலசாண்டில்யன் அவர்களின்    தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

சென்னையில் உள்ள  சோகா இகெதா கலை அறிவியல் மகளிர்கல்லூரி மாணவி செல்வி. ரா.வசுதா “வெள்ளைத்தாமரைப் பூவிலிருப்பாள்” என்ற பாரதி பாடலையும், ஸ்ரீ ஷங்கர்லால் சுந்தர்பாய் ஷகன் ஜெயின் மகளிர்   கல்லூரி மாணவி செல்வி.பா.ஐஷ்வர்யா  ” மனதிலுறுதி வேண்டும்” என்ற பாரதி பாடலையும் அருமையாக பாடினர்.

தபம்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் முனைவர் திரு.பா.மேகநாதன் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரமுகர்களின் சிறப்பினைக் கூறி அறிமுக உரை நிகழ்த்தினார். உரத்தசிந்தனை சங்கத்தின் தலைவர் திருமதி.பத்மினி பட்டாபிராமன் நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவரையும் இனிமையாக வரவேற்றார்.

எழுத்தாளரும் சிறந்த சொற்பொழிவாளருமான திரு.இந்திரா சௌந்தரராஜன் தலைமையேற்றார். முனைவர் மிருதன்பாலா எழுதிய “தனிமையின் தடயங்கள்” கவிதை நூலை திரைப்பட இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன்  வெளியிட முதல் பிரதியினை திரைப்பட நடிகர் கலைமாமணி திரு.டெல்லி கணேஷ் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து திரைப்பட நடிகர் திரு.காத்தாடி ராமமூர்த்தி, எழுத்தாளர் திரு. பட்டுக்கோட்டை பிரபாகர், CBSE முன்னாள் இயக்குனர் கல்வியியல் ஆலோசகர் திரு.க. பாலசுப்பிரமணியன், மனிதவள மேம்பாட்டு பயிற்சி யாளர் திரு.பிரசன்ன வெங்கடேசன், ஆகியோர் இந்த நூலை மேடையில் பெற்று பெருமை சேர்த்தனர்.

திரைப்பட நடிகர் திரு.டில்லி கணேஷ்  “தனிமையின் தடயங்கள்” நூலின் சில கவிதைகளின் சிறப்பை எடுத்துரைத்து நகைச்சுவை ததும்ப பேசி மகிழ்வித்தார். CBSE முன்னாள் இயக்குனர், கல்வியியல் ஆலோசகர்  திரு.க.பாலசுப்பிரமணியன் இந்த நூலைப் போற்றி  கவிதை எழுதி இனியும் “தேடல்கள் தொடரட்டும், தடயங்கள் கிடைக்கட்டும்” என்று நூலின்  சிறப்பைக்கூறி வாழ்த்துரை வழங்கினார். மனிதவளமேம்பாட்டு பயிற்சியாளர் திரு.பிரசன்ன வெங்கடேசன்  தான் தேடலுடன் சுவைத்துப்படித்ததாய் நூலில் உள்ள கவிதைகள் “வேரில் பழுத்த பலா ” என்று கூறிப்புகழ்ந்தார்.

திரைப்பட இயக்குனர்  திரு.எஸ்.பி.முத்துராமன் பேசுகையில்:

ஒவ்வொருவரும் இரவு  உறங்கப்போவதற்கு முன்னர் அன்றாடம் என்ன தவறுகள் செய்ததை நினைவுகூர்ந்து இனிமேல் அவற்றைச் செய்யக்கூடாது என்று முடிவு எடுத்துக்கொண்டு நல்லவற்றையே நாளைமுதல் செய்யவேண்டும் என்று தீர்மானம் எடுக்கவேண்டும் என்றார். கவிஞர் மிருதன்பாலா இந்த புத்தகத்தில் மனிதநேயம் மிகுந்த கவிதைகள் படைத்துள்ளார் என்று கூறி நாட்டுக்கு நன்மை பயக்கும் கவிதைகள் இனிவரும் காலத்தில் படைக்கவேண்டும்என்று வாழ்த்துரை வழங்கினார்.

உரத்தசிந்தனை இதழில் வெளிவந்த வெண்பாக்களில் சிறந்தவற்றைத் தேர்வுசெய்த நூற்கவிக்கோ திரு.மா.வரதராசன் அவர்கள் பரிசுத்தொகை வழங்கிய முனைவர்.அமுதா பாலகிருஷ்ணன் அவர்களின் சேவையைப் போற்றினார். மரபுக்கவிதைகளின் இலக்கணத்தை உரத்தசிந்தனை இதழின் மூலம் அதன் வாசகர்களுக்கு பயன்படும்படி கற்றுத்தருவதற்கு விருப்பத்தை தெரிவித்தார். 

எழுத்தாளர், முனைவர் திரு.அமுதா பாலகிருஷ்ணன்அவர்கள், கோவை கவிஞர். திரு.கே,பி.பத்மநாபன், திருச்சியைச் சேர்ந்த மேலை திரு.தமிழ்க்குமரன் ஆகியோருக்கு வெண்பா வேந்தர் பரிசுத்தொகை வழங்கி வாழ்த்துரை வழங்கினார். 

எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தரராஜன்  விருதுகள் வழங்கியபின் தனது சிறப்புரையில்:

உலகில் உள்ள அனைவருக்கும் பயன்படும்படியாக திருவள்ளுவர் இரண்டு வரியில் குறள் வெண்பா கவிதையில் தந்தார் என்றால் நமது அனைவரின் பாட்டியான ஔவையார் ஒற்றைவரியில் “அறஞ்செய விரும்பு “, என்று ஒற்றை வரியில் ஆத்திசூடி எழுதினார். கவிஞர் மிருதன்பாலா  இந்த நூலில் உள்ள ‘புத்தனின் பௌர்ணமி’ , ‘பிறவிப்பயன்’ ஆகிய தலைப்புகளில் உள்ள கவிதைகளின் சிறப்பைக்கூறி அவருடைய   கவிதைகளால் நல்ல உயர்ந்த கருத்துக்களை விதைத்துள்ளார் என்றார். 

உரத்தசிந்தனை செயலாளர் திரு.உதயம்ராம் நேர்த்தியாக நிகழ்ச்சியை  ஒருங்கிணைத்து ஒவ்வொரு பேச்சாளரின் பெருமையை எடுத்துரைத்தார். நிறைவாக  கவிஞர் திரு.மிருதன்பாலா அவர்கள் தனது கவிதை நூல் வெளிவர உதவிய அனைவருக்கும் உளமாற நன்றிகூறி சிறப்பான  ஏற்புரையுடன் உரத்தசிந்தனை அமைப்பாளர்களுக்கும் நன்றி கூறி மகிழ்ந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here