சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏவும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி, இன்று காலை ஆளுநர் மாளிகையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவியேற்றார். அமைச்சராக புதிய பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், தமிழகத்தில் அரசியல் திசை வழியைத் தொடங்கிவைத்த முன்னோர்கள் அடியொற்றி, திராவிட நிலத்தில் திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பளித்த கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி.
நூற்றாண்டு கண்ட திராவிடக் கொள்கை ஆழ வேரூன்றி, ஆல்போல் தழைத்து தமிழகத்தைக் காத்து நிற்கிறது. இந்த மரத்தைத் தாங்கி நிற்கும் விழுதாக, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் மாபெரும் இயக்கம் தமிழ்நிலத்தில் வேரோடி மக்கள் வாழ்க்கையை முன்னேற்றி வருகிறது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமான பேராசிரியர் எனக் கழக முன்னோடிகள் வரிசையில், களம்பல கண்ட போராளியான கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய வழிகாட்டலின் கீழ் தமிழ்நாடு அமைச்சரவையில் இன்று இணைகிறேன். 2019 – ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஜூலை 4-ஆம் நாள் கழக இளைஞர் அணி செயலாளராகத் தலைவர் என்னை நியமித்தார்கள்.
தலைவர் உருவாக்கிய அணி, தாய்க் கழகத்தின் முன்னணிப் படையணியாக இளைஞர் அணியைத் தலைவர் உருவாக்கி வைத்திருந்தார். அதற்கு, என்னை நியமித்தபோதும், இன்று நான் எதிர்கொள்ளும் விமர்சனங்களை, அழுத்தத்தை அன்றும் உணர்ந்திருந்தேன். ‘நம்மை நம்பி தலைவர் அவர்கள் வழங்கிய பொறுப்பு. அதற்கு உண்மையாக வேலை பார்க்க வேண்டும்’ என்பதை உணர்ந்து இளைஞர் அணி சகோதரர்களுடன் இணைந்து உழைக்கத் தொடங்கினோம்.
கழகம் ஆட்சியில் இல்லாதபோதும், இளைஞர் அணியினரைக் கொண்டு பல்வேறு மக்கள் பணிகளைச் செய்யத் தொடங்கினோம். மாநிலம் முழுவதும் தூர்ந்து கிடந்த நீர்நிலைகளைத் தூர்வாரினோம். நூற்றுக்கணக்கான ஏரி குளங்கள் கழக இளைஞர் அணியினால் தூர்வாரப்பட்டு, மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டன.
ஊரடங்கு காலத்தில், மத்திய அரசும், அப்போதைய மாநில அரசும் செயலற்று நின்ற நேரத்தில், கழகத்தின் இளைஞர் அணி சார்பில் களப்பணிகளைச் செய்தோம். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்களுக்கு ஊரடங்கு நாட்களில், மருந்து, உணவுப் பொருட்களை இல்லந்தேடிச் சென்று வழங்கினோம்.
நீட் எதிர்ப்பு போராட்டங்கள். குடியுரிமைத் திருத்தச் சட்ட மசோதா, அண்ணா பல்கலைக்கழகப் பிரிப்புக்கு எதிரான போராட்டங்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு எனக் கழக போராட்டங்களில் இளைஞர்-மாணவர்களை முன்னின்று வழி நடத்தி இருக்கிறோம். இளைஞர் அணியில் தொகுதிக்கு தலா 10 ஆயிரம் பேர் எனத் தமிழகம் முழுவதும் 25 லட்சம் புதிய உறுப்பினர்களைச் சேர்த்தோம். அவர்களிலிருந்து தகுதியின் அடிப்படையில் 3.5 லட்சம் பேரை ஒன்றிய கிளைகளிலும் பகுதி-நகர-பேரூர் வார்டுகளிலும் நிர்வாகிகளாக நியமித்தோம். அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் உற்சாகத்துடன் ஆற்றிய பணி, கழகத்துக்கு மேலும் புத்துயிர் ஊட்டுவதாக அமைந்திருந்தது.
இளைஞர் அணி செயலாளராக நியமிக்கப்பட்டபோது, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டபோது எதிர்கொண்ட அதே விமர்சனக் கணைகளை, அமைச்சர் அறிவிப்பின்போதும் எதிர்கொள்கிறேன். ‘விமர்சனங்களை என் செயலால் எதிர்கொள்வேன்’ என்று அன்று பதிலளித்து இருந்தேன். அமைச்சர் பொறுப்பிலும் என் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்ல முயல்வேன்.