காரைக்குடி:
காரைக்குடி சாக்கோட்டை அருகே உள்ள பெத்தனேந்தலை சேர்ந்தவர் குப்பன் மகன் சின்னதம்பி 73. இவர் வேங்க வயலைச் சேர்ந்த கண்ணன் என்பவரிடம் நாட்டி வெடி தயாரிக்கும் வேலை செய்து வந்தார். அப்போது வெடிமருந்து சிலவற்றை பெத்தனேந்தலில் உள்ள ஆளில்லாத வீட்டில் வைத்துள்ளார். கண்ணன் இறந்து போனதால் சின்னத்தம்பி வேலைக்கு செல்வத்தை நிறுத்திவிட்டார்.
ஆளில்லாத வீட்டில் வெடி மருந்து பல மாதங்களாக வைத்தபடியே இருந்துள்ளது. இந்நிலையில், பெத்தனேந்தலைச் சேர்ந்தவர் வீரசேகர் மகன்கள் லட்சுதன் 11,ஹர்சன் 9 ஆகிய இருவரும் நேற்று மாலை குளத்தில் குளிக்க செல்வதாக கூறிச் சென்றுள்ளனர். சிறுவர்கள் இருவரும் ஆளில்லாத வீட்டில் இருந்த வெடி மருந்தை எடுத்து தீ வைத்துள்ளனர். இதில் சிறுவர்கள் இருவரும் படுகாயம் அடைந்தனர். மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சிறுவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் தாயார் சுபா கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் சின்ன தம்பியை கைது செய்தனர்.