பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களுக்கு, இந்தியாவில் நாளை முதல் தடை விதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக தளங்களில் நாட்டின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பரப்பப்படுவதாக மத்திய அரசு குற்றம்சாட்டி வருகிறது. இதையடுத்து, இந்த சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு கடுமையான விதிமுறைகளை கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி அறிவித்தது.
அதன்படி, சர்ச்சைக்குரிய கருத்து என மத்திய அரசு சார்பில் சுட்டிக் காட்டப்படும் பதிவுகளை 36 மணி நேரத்திற்குள்ளாக சமூக ஊடக நிறுவனங்கள் நீக்க வேண்டும் என்றும், புகார் ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படுவது தொடர்பாக 3 மாத காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என பேஸ்புக்,. ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்த அவகாசமானது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் நாளை முதல் மத்திய அரசின் புதிய சமூக ஊடக விதிகளுக்கு பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்கள் கட்டுப்பட வில்லை என்றால் இந்திய சட்டங்களின்படி சமூக ஊடக நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க கூடும் என்றும் அந்த சமூக வலைத் தள நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்படக் கூடும் என்றும் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்தியாவின் புதிய விதிகளை ஏற்பது குறித்து தங்கள் தலைமையகத்தில் இருந்து உத்தரவு வர காத்திருப்பதாக கூறி பேஸ்புக், ட்விட்டர் ஆகியன அவகாசம் கோர கூடும் என்றும் கூறப்படுகிறது.