தமிழக சட்டசபையில் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இதையொட்டி நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை, ஊரக வளர்ச்சித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதமும் நடைபெற்று வருகிறது.

இதில் நகராட்சி நிர்வாகத்துறையின் சார்பில் அமைச்சர் நேரு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி நகராட்சியாக உள்ள தாம்பரம் தற்போது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தாம்பரம், பல்லாவரம், செம்பாக்கம், பம்மல், அனகாபுத்தூர் ஆகிய நகராட்சிகளை இணைத்து இந்த தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படுகிறது.

அது போல் காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய 5 நகராட்சிகள் மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும் என்றும் திருச்சி, நாகர்கோவில், தஞ்சை , ஓசூர் உள்ளிட்ட மாநகராட்சிகள் விரிவுப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளப்பட்டி, திட்டக்குடி, சென்னை புறநகர் பகுதிகளான மாங்காடு , குன்றத்தூர், நந்திவரம், கூடுவாஞ்சேரி, திருநின்றவூர் உள்பட 28 பேரூராட்சிகள் நகராட்சிகளாக தரம் உயர்த்தப்படும்.

கரூர் மாவட்டம் புஞ்சை புகளூர், டிஎன்பிஎல் புகளூர் ஆகிய இரு பேரூராட்சிகளையும் இணைத்து புகளூர் நகராட்சி உருவாக்கப்படும். ஊராட்சி மன்றத் தலைவர்களுக்கான மதிப்பூதியம் ரூ 1000 திலிருந்து ரூ 2000 ஆக உயர்த்தப்படுவதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்துள்ளார். சுய உதவி குழுக்களை மேம்படுத்த ரூ 188 கோடி சமூகநிதி வழங்கப்படும்.

சுகாதாரத்தில் சிறப்பாக செயல்படும் கிராமங்களுக்கு முன்மாதிரி கிராம விருது வழங்கப்படும். 5,780 கி.மீ. தொலைவுக்கு ஊரக சாலைகள் மேம்படுத்தப்படும் என்றார் பெரியகருப்பன். ஏற்கெனவே தமிழகத்தில் மொத்தம் 15 மாநகராட்சிகள் உள்ளன. தற்போது தாம்பரம் 16 ஆவது நகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 15 மாநகராட்சிகள் எவை எவை:

சென்னை மதுரை கோவை திருச்சி சேலம் திருநெல்வேலி திருப்பூர் ஈரோடு வேலூர் தூத்துக்குடி தஞ்சை திண்டுக்கல் ஓசூர் நாகர்கோவில் ஆவடி ஆகிய 15 மாநகராட்சிகள் உள்ளன. இதில் ஓசூர், நாகர்கோவில், ஆவடி ஆகிய 3 மாநகராட்சிகளும் கடந்த 2019 ஆம் ஆண்டு தரம் உயர்த்தப்பட்டன. இதில் ஜெயலலிதா முதல்வராக இருந்த போது தஞ்சை, திண்டுக்கல் ஆகியவை 2014 இலும் திருச்சி, சேலம் ஆகியவையும் 1994 இலும் மாநகராட்சிகளாக தரம் உயர்ந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here