திருவள்ளூர் :
போலி பத்திரப்பதிவு செய்ததாக திருவள்ளூர் சார் – பதிவாளரை, பத்திரப்பதிவு ஐ.ஜி., ‘சஸ்பெண்ட்’ செய்து உத்தரவிட்டு உள்ளார்.திருவள்ளூர் தாலுகா அலுவலக வளாகத்தில், சார் – பதிவாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. சார் – பதிவாளராக சுமதி என்பவர் பணியாற்றி வருகிறார்.இந்த அலுவலகத்தில், ஆவடி வட்டம், மோரை கிராமத்தில் உள்ள ஒருவரின் நிலத்திற்கு போலி ஆவணம் தயாரித்து, பத்திரப்பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், போலி ஆவணம் வாயிலாக அதிகளவில் பத்திரப்பதிவு மற்றும் திருமணம் செய்து வைப்பதாகவும், சென்னை பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.க்கு புகார்கள் சென்றன. இதையடுத்து, திருவள்ளூர் சார் – பதிவாளர் சுமதியை தற்காலிக பணிநீக்கம் செய்து, பத்திரப் பதிவு ஐ.ஜி. சிவன் அருள் உத்தரவிட்டார். இதை அறியாமல் சுமதி காலை வழக்கம் போல் பணிக்கு வந்தார். அப்போது, அவரிடம் அலுவலர்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட தகவலை தெரிவித்தனர்.
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி சார் – பதிவாளர் மாரியப்பன். போலி ஆவணங்கள் வாயிலாக பத்திரப்பதிவு செய்தது உள்ளிட்ட மூன்று வழக்குகள், இவர் மீது இருந்தன. இவற்றில் குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து, அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.