திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் லோன் அப்ளிக்கேஷன் மூலமாக 3000 ரூபாய் கடன் பெற்றுள்ளார். லோன் ஆப்பில் இருந்து சிலர் தொடர்புகொண்டு வாங்கிய பணத்தை 5 நாட்களுக்குள் வட்டியுடன் திரும்ப செலுத்த வேண்டும். பணத்தை செலுத்த தவறினால் உன் போட்டோவை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் உடனடியாக மிரட்டல் தொடர்பாக திருப்பூர் சைபர் க்ரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த திருப்பூர் போலீஸார் தொடர் விசாரணையை மேற்கொண்டனர். இதில் பெண்ணை மிரட்டிய கும்பல் வெளிநாட்டு தொடர்புடன் செயல்பட்டு இருப்பது தெரியவந்தது. கூகுள் ப்ளே ஸ்டோரில் வரக்கூடிய நான்கு தனியார் அப்ளிகேஷன் மூலம் கடன் கொடுப்பதாகவும் கடன் கொடுத்துவிட்டு மீண்டும் கடனை வசூலிப்பதற்காக கடன் பெற்றவரை தொடர்புகொண்டு தரக்குறைவக பேசுவது மிரட்டுவது தெரியவந்தது.
இது மட்டுமல்லாமல் கடனை திருப்பி செலுத்த தவறுபவர்களின் படங்களை ஆபாசமாக சித்தரித்து அந்த படங்களை ஆபாச வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு ஒரு நாளைக்கு 3500-க்கும் மேற்பட்டோரை தொடர்புகொண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.
இந்த கும்பல் திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பதுங்கி இருந்து கால் செண்டர் போல் அலுவலகம் அமைத்து இந்த குற்றச்செயலில் ஈடுபட்டு வந்துள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளை பயன்படுத்தி தினமும் 3000-க்கும் மேற்பட்ட நபர்களை தொடர்புகொண்டு மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அந்த அலுவலகத்தை சுற்றி வளைத்த போலீசார் அங்கிருந்த 5 நபர்களை கைது செய்தனர்.
மேலும் வெளிநாட்டு தொடர்பு எண் கொண்ட சிம் கார்டுகளை உள்ளூர் எண்ணில் மாற்றக்கூடிய சிம்கார்டு பாக்ஸ்கள், அதிவேக இன்டர்நெட் வழங்கக்கூடிய மோடம், ஏடிஎம் கார்டுகள், சிம்கார்டுகள் என பல்வேறு கருவிகளை பறிமுதல் செய்திருக்கிறார்கள். மேலும் இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்குமாறு திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் தெரிவித்து இருக்கிறார்.