சென்னையில் உள்ள பிரபல வங்கியில் 500 கோடி ரூபாய் கருப்பு பணத்தைக் கொள்ளையடிக்க ஒரு குரூப் திட்டமிட்டு அதை துப்பாக்கி முனையில் செயல்படுத்துகிறது. வங்கியில் உள்ள மக்களோடு சேர்த்து சர்வதேச கேங்ஸ்டரான அஜித்தும் வங்கிக்குள் சிக்குகிறார். சிறிது நேரத்திலேயே அஜித் இவர்களையெல்லாம் அடித்து துவம்சம் செய்து வங்கியைத் தான்தான் கொள்ளையடிக்க வந்துள்ளதாகக் கூறி மொத்த பேரையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார். கொள்ளையர்களைப் பிடிக்க போலீஸ் கமிஷனர் சமுத்திரகனி தலைமையில் ஒரு பெரிய போலீஸ் படை அமைக்கப்பட்டு வங்கியைச் சுற்றி வளைத்து கொள்ளைக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. இதையடுத்து அஜித் ஏன் இந்த பேங்க்கை கொள்ளையடிக்க வர வேண்டும்? வங்கிக்குள் நுழைந்த மற்ற கொள்ளையர்கள் யார்? உண்மையில் மக்களின் பணத்தை யார் கொள்ளை அடிக்கிறார்கள்? என்பதே துணிவு படத்தின் மீதிக் கதை.
போலீஸ் கமிஷனராக நடித்திருக்கும் சமுத்திரகனி விரைப்பான போலீஸர் ஆபீஸராக நடித்து ரசிக்க வைத்திருக்கிறார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு மகாநதி சங்கர் அஜித்தோடு இணைந்து கலகலப்பான காட்சிகளில் நடித்து ரசிக்க வைத்துள்ளார். பத்திரிகையாளராக வரும் மோகனசுந்தரம் அடிக்கும் ஒவ்வொரு பன்ச் வசனங்களும் தியேட்டரை கைதட்டல்களால் அதிரச் செய்கிறது. இவரது மெல்லிய காமெடி காட்சிகள் அஜித்தை தாண்டி படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
இவர்களுடன் பேங்க் மேனேஜர், ஜி.எம் சுந்தர், பேங்க் சேர்மேன் ஜான் கொகேன், டிவி சேனல் ஓனர் மமதி சாரி, விஜய் டிவி புகழ் பாவணி ஆமீர், இன்ஸ்பெக்டர் பகவதி பெருமாள், போலீஸ் பக்ஸ் ஆகியோர் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்க பலமாக அமைந்து படத்தை கரை சேர்க்க உதவி இருக்கிறார்கள். இப்படம் கடைசி வரை அதே அதிரடியுடன் முடிவடைந்து பார்ப்பவர்களுக்கு நிறைவான அனுபவத்தைக் கொடுத்து பொங்கல் ரேசில் வெற்றி பெற்றிருக்கிறது.
சில குறைகள்…….
ஹெலிகாப்டர் வெடிப்பது, பாம் பிளாஸ்ட் காட்சிகளில் சிஜி குளறுபடிகள் உள்ளன. இரண்டாம் பாதியில் கருத்து சொல்ல நினைத்த இயக்குநர் மீண்டும் படத்தை கொஞ்சம் ஸ்லோ டவுன் செய்துள்ளது படத்தின் பலவீனமாக மாறியது. மத்திய ஆயுதப்படைகள் அதிகாரியிடம், “ரவீந்தர் இது தமிழ்நாடு” என சமுத்திரக்கனி எச்சரிக்கும் இடத்தில் தியேட்டர் அதிர்கிறது. ஆனால், அபத்தமான ‘வடக்கன்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, வட மாநில தொழிலாளர் ஒருவரை, ‘உங்க ஊருக்கு போடா’ எனத் தமிழர் ஒருவர் அடிக்கும் காட்சி முற்றிலுமாக அரசியலற்று இருக்கிறது. உழைக்கும் மக்களையே உழைக்கும் மக்களுக்கு எதிரியாகச் சித்திரிக்கும் இந்தக் காட்சி திரையரங்குகளில் கைத்தட்டலைப் பெறுவது, சமூகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை இயக்குநர் சிந்திக்காமல் போனது வருத்தம்.
மொத்தத்தில் இந்த ‘துணிவு’ ஏமாற்றும் வங்கிகளுக்கு ஆப்பு…..
Thunivu Rating 4/5