நாடு முழுவதும் கொரோனா பரவலின் 2-வது அலை வீச்சில் தினமும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள நோயாளிகளுக்கு சுவாசிக்க வென்டிலேட்டர் மூலம் ஆக்சிஜன் வழங்குவது இன்றியமையாத தேவையாக உள்ளது.

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், தலைநகர் டெல்லியில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வருகிறார்கள். தமிழகத்திலும் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தூத்துக்குடியில் மூடப்பட்டு கிடக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதித்தால், ஆக்சிஜன் தயாரித்து இலவசமாக வழங்குவதாக சுப்ரீம் கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் தெரிவித்தது.
 
தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க முடியாது என்று எதிர்ப்பு தெரிவித்தது. அதே நேரத்தில், மத்திய அரசு தரப்பில், ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசே கையகப்படுத்தி ஆக்சிஜன் தயாரிக்கலாம் என்று யோசனை வழங்கியது. சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதியும் இதே கருத்தை வலியுறுத்தினார்.
 
மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் விளக்கமாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று காலை 9.30 மணி அளவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில்  ஆக்சிஜன் தயாரிப்பு பணிக்காக தற்காலிகமாக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடிவு செய்யப்பட்டது. 
 
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று தமிழக அரசு தரப்பில் பிரமாணப்பத்திரமும் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆக்சிஜன் உற்பதிக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here