பாலின மோசடியில் ஈடுபட்ட ஆண்களுக்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதிக்கும்போது அது பரபரப்புச் செய்தியாகும். அதை விடவும் பரபரப்பாகியிருக்கிறது, பாலினம் சார்ந்த ஒரு வழக்கில் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பு.
கடலூர் மாவட்டம் சிறுபாக்கத்தைச் சேர்ந்தவர் சிங்காரம். இவரது பட்டதாரி மகன் செல்வத்துக்கு திட்டக்குடி அருகில் உள்ள வதிஸ்டபுரத்தைச் சேர்ந்த அன்புச்செல்வியை பெண் பார்த்தனர். பட்டதாரியான அன்புச்செல்வி, சென்னை கல்லூரி ஒன்றில் படித்துவந்தார். பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்றவர் அவர். எனவே, பெண் பிடித்துப்போக, 2013 செப்டம்பரில் செல்வம் – அன்புச்செல்வியின் திருமணம் சிறப்பாக நடந்திருக்கிறது.
இந்த நிலையில், திருநங்கையான அன்புச்செல்வி, தன்னைப் பெண் என்று ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், அதற்கு அவரது பெற்றோர் உடந்தையாக இருந்தார்கள் என்றும் நீதி கேட்டு நீதிமன்றத்தை அணுகினார் செல்வம்.
இந்த வழக்கு, விருத்தாசலம் முதலாவது கூடுதல் குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்துவந்த நிலையில் நீதிபதி ஆனந்த், தனது அதிரடித் தீர்ப்பை வழங்கி, நீதித்துறை வட்டாரத்தையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். அவர் அந்தத் தீர்ப்பில், “அன்புச்செல்வி, தாம்பத்திய உறவு வைத்துக்கொள்ள முடியாத நிலையில் உள்ள மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர் என்பது மருத்துவ சான்றிதழ்களின் அடிப்படையில் தெரிய வருகிறது.
எனவே செல்வத்தை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்ட அன்புச்செல்வி மற்றும் அதற்குத் துணைநின்ற அவரது பெற்றோர் அசோகன், செல்லம்மாள் ஆகிய மூவருக்கும் தலா மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா 1,500 ரூபாய் அபராதமும் விதிப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்தத் தீர்ப்பு பலத்த பரபரப்பை ஏற்படுத்திவரும் நிலையில், நாம் செல்வத்திடம், ‘உங்கள் வாழ்க்கையில் என்னதான் நடந்தது’ என்று விசாரித்தோம்.
விரிவாக விவரிக்க ஆரம்பித்த செல்வம், “எங்கள் திருமணம் நடந்தபோது, அன்புச்செல்வி கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தார். அதனால், அவரது படிப்பு முடியும்வரை எங்களுக்குள் தாம்பத்தியம் கூடாது என்று அவரது குடும்பத்தினர் சொன்னார்கள். நானும் பெருந்தன்மையாய் ஏற்றுக்கொண்டேன். ஆனால் படிப்பு முடிந்த பிறகும் என்னோடு தாம்பத்தியம் கொள்ள மறுத்தார் அன்புச்செல்வி. இதன் பின்னர்தான் அவர் ஒரு திருநங்கை என்பதும், அவர் பெண்ணாக நடித்து என்னை ஏமாற்றியிருக்கிறார் என்பதும் தெரியவந்தது.
அன்புச்செல்வியின் பெற்றோர், ‘இதை வெளியே சொன்னால் உன்னை உயிரோடு விடமாட்டோம்’ என்றும், ‘அவளோடு குடும்பம் நடத்தியே தீரவேண்டும்’ என்றும் மிரட்டினர். அதனால் மிரண்டுபோன நான், காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். போலீசார் எனது புகாரை வாங்க மறுத்து அலைக்கழித்ததால், எஸ்.பி.யிடம் புகார் கொடுத்தேன்.
அவர் உத்தரவின் பேரில் திட்டக்குடி காவல் நிலையத்தில் அன்புச்செல்வி மற்றும் அவரது பெற்றோர் மீது வழக்குப் பதிவுசெய்தனர். உடனே மூவரும் ஜாமீனில் வெளியே வந்துவிட்டனர். அதன்பிறகுதான் நீதிமன்றத்துக்குச் சென்றேன். இப்போது அன்புச்செல்வி தரப்புக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையைக் குறைவானதாகவே கருதுகிறேன்.
இன்னும் அதிகபட்ச தண்டனை அவர்களுக்குக் கிடைத்திருக்க வேண்டும். காரணம், இவர்களால் என் வாழ்க்கை கடந்த 7 ஆண்டுகளாக சீரழிந்துவிட்டது. இப்போது எனக்கு வயது 35. இனிமேல் பெண் பார்த்து நான் மீண்டும் திருமணம் செய்துகொண்டு வாழ்வது என்பது இயலுமா என்று தெரியாது.
இவர்கள் என்னை மட்டும் ஏமாற்றவில்லை, அரசாங்கத்தையும் பல அரசு அதிகாரிகளையும் ஏமாற்றியுள்ளார்கள். அன்புச்செல்வி படித்த பள்ளி, கல்லூரிகளின் சார்பில், அவர் கலந்துகொண்ட விளையாட்டுப் போட்டிகளில் எல்லாம் பெண் என்ற அடிப்படையிலும் கோட்டாவிலும்தான் அவர் கலந்துகொண்டிருக்கிறார். மூன்றாம் பாலினத்தவர்களுக்கு என்று தனி இடஒதுக்கீடு மற்றும் அரசு சலுகைகள் உள்ளன. தான் ஒரு திருநங்கை என்பதை வெளிப்படையாகக் கூறி, அதற்கான சான்றிதழைப் பெற்று, அதன் அடிப்படையில் இவர் படிப்பையும் விளையாட்டையும் அணுகியிருக்க வேண்டும்.
ஒரு பெண் என்று கூறி உண்மையான பெண் பிள்ளைகளுக்குச் சேர வேண்டிய பரிசுகளையும் பாராட்டுகளையும் இவர் தட்டிப் பறித்து ஏமாற்றியிருக்கிறார். எனவே இவர் தன்னை பெண்ணாகக் காட்டிக்கொண்டு பட்டம் படித்தது செல்லாது என்று அறிவிக்க வேண்டும். இவர் அரசுப் பணிகளின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளாமல் தடுக்க வேண்டும். அவர்கள் செய்தது அனைத்தும் சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்” என்கிறார் செல்வம்.
திருநங்கையைத் திருமணம் செய்துகொண்டு வாழ நினைக்கும் ஒரு சில இளைஞர்களுக்கு அவர்களின் பெற்றோர் தரப்பிலிருந்து எதிர்ப்பும் நெருக்கடியும் அதிகரித்து, தாக்குதல் வரை செல்வது ஒருபுறமென்றால், திருநங்கையைப் பெண் என்று சொல்லி பெற்றோரே திருமணம் செய்து வைத்து ஓர் இளைஞரை ஏமாற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.